Author Topic: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~  (Read 4872 times)

Offline MysteRy

~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« on: April 27, 2015, 01:50:55 PM »




வருடம் முழுவதும் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டு வேலை என்று செல்லும் ரொட்டீன் வாழ்க்கை அவ்வப்போது சலிப்பு ஏற்படுத்திவிடும். இதிலிருந்து சில நாட்கள் விடுபட்டு, உடலையும் உள்ளத்தையும் ரீ-சார்ஜ் செய்துகொள்ள உதவும் விஷயங்களில், விடுமுறைக் காலத்தில் மேற்கொள்ளும் சுற்றுலாவுக்கு சிறப்பு இடம் உண்டு. பயணம் செல்லும்போது வெளியே வாங்கிச் சாப்பிடும் உணவுகள் மிகவும் விலை அதிகமாக இருப்பதுடன், சிலசமயம் வயிற்று உபாதையையும் இலவச இணைப்பாக வழங்கிவிடுவது உண்டு. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, பயணம் செய்யும்போது எடுத்துச் செல்ல... சுவையில் அசத்தும் வெரைட்டி ரைஸ், சப்பாத்தி, சைட் டிஷ், நொறுக்ஸ் ஆகியவற்றுடன், உடல்  நலத்தை காக்கும் உணவுகளை உள்ளடக்கிய 30 வகை ‘டூர் ரெசிப்பி’க்களை இங்கே வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் தேவிகா காளியப்பன்.
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #1 on: April 27, 2015, 01:54:20 PM »
நெய் அப்பம்



தேவையானவை:

பச்சரிசி, பொடித்த வெல்லம்  - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வாழைப்பழம் - ஒன்று (மசித்துக்கொள்ளவும்), கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், தேங்காய் எண்ணெய் - தலா அரை கப்.

செய்முறை:

பச்சரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, விழுதாக அரைக்கவும். மாவுடன் வெல்லம், ஏலக்காய்த் தூள், மசித்த வாழைப்பழம், கோதுமை மாவு சேர்த்து சில நிமிடங்கள் அரைக்கவும். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். தேங்காய் எண்ணெய், நெய்யை ஒன் றாக சேர்க்கவும். இந்தக் கலவையை பணியார சட்டியின் குழிகளில் விட்டு, சூடானதும், கரண்டியால் மாவை எடுத்து ஊற்றி அப்பமாக சுட்டு எடுக்கவும். (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்).

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #2 on: April 27, 2015, 01:55:54 PM »
மசாலா பொரி



தேவையானவை:

அரிசிப் பொரி - 2 கப், பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கருவடகம் - 2 டீஸ்பூன், பூண்டு - 4 பல்  (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், மிளகு - 4, தனியா, சீரகம் - தலா கால் டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 2 (கிள்ளவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் , தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,  உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, மிளகு, தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் கருவடகம் சேர்த்து, சிவந்ததும் பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து, ஒரு முறை கிளறி, அரிசிப் பொரி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து  நன்றாகக் கலக்கி இறக்கவும்

கருவடகம் செய்முறை: உளுத்தம்பருப்பு ஒரு பங்கு, பாசிப்பருப்பு அரை பங்கு எடுத்து ஊறவைத்து வடித்து, 3 பங்கு சாம்பார் வெங்காய விழுது, உப்பு சேர்த்து அரைத்து, மாவைக் கிள்ளி எடுத்து, பிளாஸ்டிக் பேப்பரில் போட்டு, வெயிலில் வைத்து காயவைத்து எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #3 on: April 27, 2015, 01:57:20 PM »
டிரெயின் இட்லி



தேவையானவை:

 இட்லி - 5, இட்லி மிளகாய்ப்பொடி - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

இட்லி செய்த உடன் நன்றாக ஆறவிடவும். இட்லி மிளகாய்ப்பொடியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு கலக்கவும். இதில் இட்லியைப் போட்டு புரட்டி எடுக்கவும் (இட்லி மிளகாய்ப்பொடி இட்லி முழு வதும் படும்படி புரட்ட வேண்டும்). மிளகாய்ப்பொடியில் ஊறிய இட்லி, சுவையில் அள்ளும். சாப்பிடும் இடமே மணக்கும்.

இட்லி மிளகாய்ப்பொடி செய்முறை: கடலைப்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது காரத்துக்கேற்ப), கட்டிப் பெருங்காயம் - சிறிய நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய், கல்  உப்பு - தேவைக்கேற்ப, புளி - சிறிதளவு, வெள்ளை எள் (விருப்பப்பட்டால்) - 2 டீஸ்பூன். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கொடுக்கப்பட்டுள்ள வற்றை ஒவ்வொன்றாக சிவக்க வறுத்து ஆறவிடவும். பிறகு, கொரகொரப்பாக பொடிக்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு பொடித்த வெல்லம் சேர்த்து அரைக்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #4 on: April 27, 2015, 01:58:39 PM »
இஞ்சி - எலுமிச்சை சிரப்



தேவையானவை:

 எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சிச் சாறு - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு கப்.

செய்முறை:

சர்க்கரையுடன், அது முழுகும் அளவு தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். ஆறியதும் அதில் எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு சேர்த்து நன்றாக கலக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். எலுமிச்சை பழ சர்பத் தேவைப்படும்போது ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில் ஒன்று (அ) 2 ஸ்பூன் சிரப்பை விட்டுக் கலந்து பருகவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #5 on: April 27, 2015, 02:00:04 PM »
உப்பு நெல்லிக்காய்



தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் - 10, கல் உப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், தண்ணீர் - 2 கப்.

செய்முறை:

நெல்லிக்காய் மூழ்கும் அளவு தண்ணீர் எடுத்து, கல் உப்பு சேர்த்து, நன்றாக கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். அதில் முழு நெல்லிக்காயை போடவும். இதை பயணத்தின் போது காற்றுப்புகாத கன்டெய்னரில் எடுத்துச் செல்லவும்.  தயாரித்து, 5,6 நாட்களுக்குப் பிறகு  உபயோகித்தால்தான் நெல்லிக்காயில் உப்பு ஏறியிருக்கும். தேவைப்படும்போது உப்பு தண்ணீரிலிருந்து நெல்லிக்காயை எடுத்து  சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ள லாம்.
விட்டமின்-சி  நிறைந்த சத்தான ரெசிப்பி இது.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #6 on: April 27, 2015, 02:02:03 PM »
இஞ்சி, எலுமிச்சை மிக்ஸ்



தேவையானவை:

இளசான இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன் (தோல் சீவி பொடியாக நறுக்கியது), சீரகம் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

ஒரு கிண்ணத் தில் இஞ்சி, சீரகம், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கலக்கவும். இதனை 4 - 5 நாட்கள் வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து, சேமித்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு:

பயணத்தின்போது ஏற்படும் வயிற்றுப் பொருமல், அஜீரணம் ஆகியவற்றுக்கு இதனை சிறிது எடுத்து சாப்பிட லாம். நல்ல நிவாரணம் கிடைக் கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #7 on: April 27, 2015, 02:03:42 PM »
அவல் ஃப்ரை



தேவையானவை:

மெல்லிய அவல் - ஒரு கப், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2 (கிள்ளவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து... பொட்டுக்கடலை, மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இதனுடன் அவலையும் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அவல் மொறுமொறு என வரும் வரை வறுத்து எடுக்கவும். (தேவைப்பட்டால் மேலும் சிறிது எண்ணெய் சேர்க்கலாம்). ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் போட்டுவைத்து பயன்படுத்தவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #8 on: April 27, 2015, 02:05:50 PM »
தக்காளி தொக்கு



தேவையானவை:

பழுத்த  தக்காளி - 10, மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்  மஞ்சள்தூள், கடுகு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

நீரை சூடாக்கி, தக்காளியைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் தோலை எடுத்துவிட்டு, விழுதாக அரைக்கவும். அடி கனமான கடாயில்  எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்த தக்காளி விழுது, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில்வைத்து, மூடி போட்டு, அவ்வப்போது திறந்து, அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். தக்காளி கலவை நன்றாக சுருண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும் (விருப்பப்பட்டால் கடைசியில் மிகவும் சிறிதளவு சர்க்கரை (அ) வெல்லம் சேர்த்துக்  கிளறி இறக்கலாம்).

குறிப்பு:

இதை சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ளலாம். உப்பு குறைந்தால், தொக்கு சீக்கிரம் கெட்டுவிடும். தேவையான அளவு உப்பு போடவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #9 on: April 27, 2015, 02:07:04 PM »
உளுந்து தட்டை



தேவையானவை:

இட்லி புழுங்கல் அரிசி - இரண்டரை கப், பச்சரிசி - ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது காரத்துக்கேற்ப), உளுந்துப்பொடி (சலித்தது) - அரை கப், வெள்ளை எள் - அரை டீஸ்பூன், ஊறவைத்த கடலைப்பருப்பு  - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஒன்றாகச் சேர்த்துக் கழுவி, காய்ந்த மிளகாய் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். உளுந்துப் பொடியை, அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்துக் கலந்து... எள், ஊறவைத்த கடலைப்பருப்பு சேர்த்துக் கலக்கவும். கையில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு, மாவை எடுத்து, பிளாஸ்டிக் ஷீட் (அ) வாழை இலையில் மெல்லிய தட்டைகளாக தட்டி, உலர்ந்த துணியில் போடவும். 10 நிமிடத்துக்குப் பிறகு தட்டைகளை சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #10 on: April 27, 2015, 02:08:30 PM »
சத்துமாவு உருண்டை



தேவையானவை:

 கோதுமை மாவு - ஒரு கப், கேழ்வரகு மாவு -  அரை கப், பாதாம் - 4, முந்திரி - 10, பொட்டுக்கடலை - அரை கப், நெய், பொடித்த சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும். கேழ்வரகு மாவையும் வெறும் கடாயில் வறுக்கவும். பொட்டுக் கடலையை கடாயில் சிறிது சூடாகும் வரை வறுத்து, மிக்ஸியில் பொடித்து சலிக்கவும். பாதாம், முந்திரியை உடைத்து நெய்யில் வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து, பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யை சூடாக்கி இதில் நன்றாக கலந்து உருண்டைகளாக உருட்டவும்.
பயணத்தின்போது களைப்பை நீக்கி, சக்தி கொடுக்கும் சத்தான ரெசிப்பி இது. பொடித்த சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரையும் பயன் படுத்தலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #11 on: April 27, 2015, 02:10:27 PM »
ராகி தட்டை



தேவையானவை:

 கேழ்வரகு மாவு - ஒரு கப், பொடியாக  நறுக்கிய சின்ன வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

விழுதாக அரைக்க:

சாம்பார் வெங்காயம் - 10 (உரித்தது), காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். ஆறியதும் இதை கேழ்வரகு மாவில் சேர்த்து, நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் லேசான தட்டைகளாக தட்டி (கையில் எண்ணெய் தடவிக்கொள்ளவும்), உலர்ந்த துணியில் போடவும். 10 நிமிடத்துக்குப் பிறகு தட்டைகளை சூடான எண்ணெயில் போட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும். ஆறியவுடன் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #12 on: April 27, 2015, 02:12:00 PM »
மொறுமொறு மிக்ஸர்



தேவையானவை:

கடலை மாவு - 3 கப், அரிசி மாவு - ஒரு கப், ஓமம் - 2 டீஸ்பூன், பச்சை வேர்க்கடலை - ஒரு கப், கெட்டி அவல் கால் கப், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 ஒரு கப் கடலை மாவுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். மாவை பூந்தி கரண்டியில் விட்டு சூடான எண்ணெயில் முத்து முத்தாக விழும்படி தேய்த்து, பொன்னிறமாக எடுக்கவும். மீதமுள்ள 2 கப் கடலை மாவுடன் மீதமுள்ள அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு, ஓமத்தை அரைத்து வடித்த தண்ணீர் சேர்த்துப் பிசையவும். இந்த மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும்.
அவல், வேர்க்கடலை, கறிவேப்பிலை, முந்திரி ஆகியவற்றை பொரித்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை வறுத்து, உப்பு சேர்த்து பொடியாக்கிக்கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து... பெருங்காயத்தூள், சர்க்கரை சேர்த்து, ஆறவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #13 on: April 27, 2015, 02:13:52 PM »
லெமன் ரைஸ்



தேவையானவை:

 உதிர் உதிராக வடித்த சாதம் - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப), உடைத்த முந்திரி - 2 டீஸ்பூன் (வறுக்கவும்), தோல் நீக்கி, பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு,  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

சாதத்தை ஆறவைத்து, சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு கரண்டியால் கிளறிவிடவும். ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் போட்டுக் கலக்கி வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பெருங்காயத்தூள் போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து  சிவக்க வறுக்கவும். அதில் எலுமிச்சைச் சாறு - உப்பு - மஞ்சள்தூள் கலவையை சேர்த்துக் கிளறி, ஆறிய சாதம், வறுத்த முந்திரி சேர்த்துக் கலந்து, அடுப்பை நிறுத்தவும்.

குறிப்பு:

உபயோகிக்கும்போது கைபடாமல் கரண்டி, ஸ்பூன் பயன்படுத்தி உபயோகிக்கவும். இந்த லெமன் சாதம் உடலைக் குளுமைப்படுத்தும்; உடலுக்கு சக்தி கொடுக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #14 on: April 27, 2015, 02:15:10 PM »
பட்டர் முறுக்கு



தேவையானவை:

 இட்லி புழுங்கலரிசி - 4 கப், பொட்டுக்கடலை மாவு (சலித்தது) - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

 இட்லி புழுங்கல் அரிசியைக் கழுவி, காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும் (அரைக்கும் போது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்). அரைத்த மாவுடன் பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், எள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி நன்கு சூடாக்கவும். முள் முறுக்கு அச்சில் மாவை போட்டு, முறுக்குகளாக எண்ணெயில் பிழிந்து, பொன்நிறமாக சிவந்ததும் எடுக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.