Author Topic: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~  (Read 4873 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #15 on: April 27, 2015, 02:16:37 PM »
கம்பு லட்டு



தேவையானவை:

கம்பு மாவு, பொடித்த சர்க்கரை - தலா ஒரு கப்,  முந்திரி - 10 (உடைத்துக்கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - தேவையான அளவு.

செய்முறை:

 வெறும் கடாயில் கம்பு மாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து, ஆறவைக்கவும். உடைத்த முந்திரியை நெய்யில் சிவக்க வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, பொடித்த சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, நெய்யை சூடாக்கி அதில் விட்டுக் கலந்து, உருண்டைகளாக உருட்டவும். கம்பு, உடலுக்கு குளுமை தரும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #16 on: April 27, 2015, 02:17:56 PM »
காக்ரா



தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப், ஓமம் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, தண்ணீர் - தேவையான அளவு, நெய் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

கோதுமை மாவில் உப்பு, ஓமம், மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறி, தண்ணீர் விட்டுப் பிசையவும். 20 நிமிடம் ஊறவிடவும். மாவை மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி. சூடான தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு, வெந்ததும், திருப்பி போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, அடி கனமான பாத்திரத்தால் சப்பாத்தியை அழுத்தியபடி, கரகரப்பாக ஆகும் வரை வேகவிட்டு எடுக்கவும். இது பிஸ்கட் போல இருக்கும்.
இதற்கு, ஊறுகாய் தொட்டு சாப்பிடலாம். காக்ரா செய்யும் மாவில் விருப்பத்துக்கு ஏற்றவாறு சீரகப் பொடி, ஆம்சூர் பவுடர், கஸூரி மேத்தி போன்றவற்றையும் கலந்து பிசையலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #17 on: April 27, 2015, 02:19:28 PM »
புல்கா



தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப், தண்ணீர் - தேவையான அளவு, எண்ணெய், நெய் - சிறிதளவு, உப்பு - 2 சிட்டிகை.

செய்முறை:

கோதுமை மாவில் முதலில் உப்பு சேர்த்துப் பிசிறி, சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் பிசையவும். பிசைந்த மாவின் மீது சில துளி எண்ணெய் தடவி நன்கு அடித்துப் பிசையவும். 3 மணிநேரம் ஊறவிடவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, மேலே சிறிதளவு மாவு தூவி  சப்பாத்தியாக இடவும். சூடான தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போடவும். அதன் மேல் சிறு கொப்புளங்கள் வரும்போது சட்டென்று திருப்பி போட்டு சில நொடிகள் வேகவிடவும். இதை ஒரு இடுக்கியில் எடுத்து நேரடியாக எரியும் தணலில் காட்டி, `புஸ்’ என்று உப்பி வந்ததும் எடுத்து, உலர்ந்த, மெல்லிய துணியில் போட்டு, தேவைப்பட்டால் நெய் தடவி மூடி, சேமித்து வைக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #18 on: April 27, 2015, 02:21:06 PM »
கோதுமை பரோட்டா



தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கோதுமை மாவில் உப்பு சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துப் பிசிறவும். இதனுடன்  தேவையான தண்ணீர் சேர்த்து, 10 நிமிடம் அழுத்தி பிசையவும். பிறகு, மாவை மூடி வைத்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் நெய்யை சேர்த்துக் குழைத்துக் கொள்ளவும்.

பிசைந்து வைத்த மாவை சப்பாத்திபோல் திரட்டி, அதன்மேல் அரிசி மாவு - நெய் கலவையை பரவலாக தடவி புடவை மடிப்புபோல முன் பின்னாக மடித்து அதனை வட்ட வடிவில் சுருட்டிக் கொள்ளவும். பிறகு,  இதனை பரோட்டாவாக இடவும். பரோட்டாவை சூடான தோசைக்கல்லில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நெய் விட்டு, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

நெய்க்குப் பதில் எண்ணெயும் உபயோகிக்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #19 on: April 27, 2015, 02:22:51 PM »
காரக் குழம்பு ரைஸ்



தேவையானவை:

உதிர் உதிராக வடித்த சாதம் - ஒரு கப், ஏதாவது ஒரு வற்றல் (வெண்டை, பாகற்காய் அல்லது மணத்தக்காளி) - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுகிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், கெட்டியான புளிக்கரைசல் - தேவை யான அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் (விருப்பப்பட்டால்) - சிறிதளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், எண் ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வற்றலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பிறகு, பூண்டையும் வறுத்து எடுத்து வைக்கவும்.  கடாயில் நல்லெண்ணெய் விட்டு, சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து... புளிக்கரைசலை சேர்க்கவும். உப்பு, மஞ்சள்தூள், வறுத்த பூண்டு,  சாம்பார் பொடி சேர்த்து.... வறுத்த வற்றலையும் போட்டு, பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கவும் (விருப்பப்பட்டால், சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கலாம்). குழம்பு ஆறியதும் உதிரான சாதத்தில் கலந்துகொள்ளவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #20 on: April 27, 2015, 02:24:18 PM »
ஸ்வீட் அண்ட் சோர் ஆப்பிள் ஜாம்



தேவையானவை:

 பழுத்த ஆப்பிள் (பெரியது) - ஒன்று, சர்க்கரை - கால் கிலோ, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஆப்பிளை தோல் சீவி, நடு பாகத்தில் இருக்கும் விதையை நீக்கி சிறு துண்டுகளாக்கி, அளவாக தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, 2 விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். வெந்த ஆப்பிளை நன்கு மசித்து அடிகனமான பாத்திரத்தில் போட்டு சர்க்கரை சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை நன்கு வெந்து சுருள வரும்போது இறக்கி, அத்துடன் எலுமிச்சைச் சாறு கலந்து, ஆறிய பிறகு காற்றுப்புகாத கன்டெய்னரில் சேமித்து வைக்கவும்.
பயணத்தின்போது சப்பாத்தி, பிரெட், இட்லிக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #21 on: April 27, 2015, 02:25:44 PM »
பாசிப்பருப்பு உருண்டை



தேவையானவை:

பாசிப் பருப்பு - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரி - 2 டேபிள்ஸ்பூன், நெய் - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் சிறிதளவு நெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பாசிப்பருப்பை சேர்த்து வறுத்து எடுத்து...மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். சர்க்கரையையும் நைஸாக பொடிக்கவும். முந்திரியை நெய்யில் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். நெய்யை சூடாக்கி இந்தக் கலவையில் விட்டுக் கிளறி, உருண்டைகளாகப் பிடிக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #22 on: April 27, 2015, 02:27:10 PM »
பகாளாபாத்



தேவையானவை:

அரிசி - ஒரு கப், தயிர் - கால் டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2 பெருங்காயத்தூள் - பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு, பால் - ஒன்றரை கப், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

அரிசியைக் களைந்து, தேவையான தண்ணீர் விட்டு குழைவாக சாதம் செய்து, அதனை சூட்டுடன் கரண்டியால் மசிக்கவும். பிறகு, உப்பு சேர்த்து, கால் டீஸ்பூன் தயிர் விட்டு, பால் சேர்த்து கரண்டியால் கிளறவும். கடாயில் எண்ணெய் விட்டு. கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி சாதத்தில் சேர்த்து, பயணத்தின்போது சாப்பிட எடுத்துச் செல்லலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #23 on: April 27, 2015, 02:28:42 PM »
டூ இன் ஒன் வேர்க்கடலைப் பொடி



தேவையானவை:

வறுத்த வேர்க்கடலை (தோலுரித்தது) - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), கட்டிப் பெருங்காயம் அல்லது பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை சிவக்க வறுக்கவும். பெருங்காயத்தை வறுக்கவும். உப்பையும் வறுக்கவும். வேர்க்கடலையை கடாயில் சூடு செய்யவும். ஆறியவுடன் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.

இதை பயணத்தின்போது எடுத்துச் சென்றால் இட்லி, தோசைக்குத் தொட்டு கொள்ளலாம். இந்தப் பொடியில் நீர் விட்டுக் கலக்கி சட்னியாகவும் பயன்படுத்தலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #24 on: April 27, 2015, 02:30:00 PM »
மிஸ்ரி ரொட்டி



தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப், கடலை மாவு - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவு, கடலை மாவு, சீரகம், ஓமம், பெருங்காயத்தூள், உப்பு, 2 டீஸ்பூன் நெய் ஆகியவற்றைக் கலந்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். மாவை உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக திரட்டி, தோசைக் கல்லில் போட்டு, நெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

சப்பாத்தியில் ஒரு பக்கம் நெய் தடவி பயணத்துக்கு எடுத்துச் செல்லலாம். சாப்பிடும்போது உள்ளே ஜாம் அல்லது ஊறுகாய் தடவி ரோல் செய்து சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #25 on: April 27, 2015, 02:31:25 PM »
கார சப்பாத்தி



தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப், மாங்காய் தொக்கு - சிறிதளவு, நெய் அல்லது எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

 கோதுமை மாவில் மாங்காய் தொக்கு சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேவையான தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, 15 நிமிடம் ஊறவிடவும். பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி, சிறிதளவு  மாவு தூவி, லேசான சப்பாத்தியாக திரட்டவும். சூடான தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு, சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

இதை ஜாம் உடன் பரிமாறலாம். தயிரில் சர்க்கரை கலந்து இந்த சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம். தயிரில் சிறிது ஜாம் சேர்த்து, மிளகாய்ப்பொடி தூவியும் தொட்டு சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #26 on: April 27, 2015, 02:33:18 PM »
புளி சாதம்



தேவையானவை:

உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப், கெட்டியான புளிக்கரைசல் - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் (விருப்பப்பட்டால்) - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - கால் கப், கடுகு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி (பொடிக்கவும்), வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க:

மல்லி (தனியா) - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4 ( இவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்).

செய்முறை:

 கடாயில் நல்லெண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு நன்கு வறுத்து, கடுகு சேர்த்து, பொரிந்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் சேர்த்து, சிவந்ததும் கறிவேப்பிலை, வேர்க்கடலை சேர்த்துக் கிளறி, கெட்டியான புளிக்கரைசலை சேர்க்கவும். உப்பு, மஞ்சள்தூள் போட்டு நன்றாக கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து, எண்ணெய் மேலே மிதந்து வரும்போது, விருப்பப்பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கவும் (பொடி போட்டு ரொம்ப நேரம் கொதிக்க வேண்டாம்). உதிரான சாதத்தில் முதலில் புளிக்காய்ச்சலில் உள்ள நல்லெண்ணெயை சிறிது விட்டு கலந்து... பிறகு, புளிக்காய்ச்சல் விட்டு நன்றாகக் கலக்கவும். புளிசாதம் ஊற ஊற சுவை அதிகரிக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #27 on: April 27, 2015, 02:34:44 PM »
எனர்ஜி லட்டு



தேவையானவை:

பாதாம் - ஒரு கப், முந்திரி - ஒரு கப், பேரீச்சம்பழம் - கால் கப், உலர்ந்த திராட்சை - கால் கப், பால் பவுடர் - ஒரு கப், பொடித்த வெல்லம் - சிறிதளவு, நெய் - தேவைக்கேற்ப, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, உலர் அத்திப்பழம் - ஒன்று.

செய்முறை:

பாதாம், முந்திரியை சிறிய துண்டுகளாக்கவும். பேரீச்சையை விதை நீக்கி சிறிய துண்டுகளாக செய்துகொள்ளவும். உலர் அத்திப்பழத்தையும் சிறிதாக வெட்டிக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் பாதாம், முந்திரி, பேரீச்சம்பழத் துண்டுகள், அத்திப்பழத் துண்டுகள், ஏலக்காய்த்தூள் உலர்ந்த திராட்சை, பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வெல்லத்தை பொடியாக்கி இந்தக் கலவையில் சேர்த்துக்  கலக்கவும். அடுப்பில் நெய்யை சூடாக்கி செய்து வைத்த கலவையில் சிறிது சிறிதாக விட்டு, உருண்டைகளாக உருட்டி பயன்படுத்தவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #28 on: April 27, 2015, 02:36:37 PM »
கோதுமை பிஸ்கட்



தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப், பொடித்த சர்க்கரை - 4 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

 பொடித்த சர்க்கரையை கோதுமை மாவில் சேர்த்துக் கலக்கி... பிறகு, தேவையான தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்துக்கு நன்கு பிசையவும். கையில் எண்ணெய் தொட்டு, மாவை எடுத்து, உருண்டைகளாக உருட்டி,  சப்பாத்தியாக திரட்டி, ஆங்காங்கே ஃபோர்க் கரண்டியால் குத்தவும். இதை கத்தியால் துண்டுகளாக வெட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #29 on: April 27, 2015, 02:38:35 PM »
ஸ்டஃப்டு பாகற்காய்



தேவையானவை:

பாகற்காய் (சிறிய  சைஸ்) - கால் கிலோ, பட்டை - சிறிய துண்டு, லவங் கம் - 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த் தூள் - தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன்,  எண்ணெய் - ஒரு கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

பாகற்காயின் நடுவில் நீளமாக கீறி, விதை எடுத்து, அரை வேக்காடு பதத்துக்கு வேகவிட்டு எடுத்து வைக்கவும் (கசப்பு நீங்க சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து வேகவிடலாம்). பட்டை, லவங்கத்தை தூளாக்கி, இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலா, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை பாகற்காய்களில் ஸ்டஃப் செய்ய வும். கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளித்து, ஸ்டஃப் செய்த பாகற்காயை சேர்த்து மூடி போடவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). அவ்வப்போது மூடியைத் திறந்து, மசாலா வெளியே வராதபடி கிளறவும். நன் றாக ரோஸ்ட் ஆனதும். எடுக்கவும். இதை ஃபாயில் பேப்பரில் வைத்து சுருட்டி பயணத்தின்போது எடுத்துச் செல்லலாம்.
இது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.