Author Topic: ~ 30 வகை கொழுக்கட்டை! ~  (Read 2528 times)

Offline MysteRy

~ 30 வகை கொழுக்கட்டை! ~
« on: August 28, 2014, 11:57:25 AM »


விநாயகர் சதுர்த்தி தினத்தில் கொழுக்கட்டைகள் செய்து, மோதகப் பிரியனான பிள்ளையாரை வழிபடுவது தொன்றுதொட்டு வரும் மரபு. இந்த இணைப்பிதழில் மிகமிக வித்தியாசமான சுவையுள்ள கொழுக்கட்டைகளை, வகை வகையாக செய்துகாட்டி, நம்மை ஆச்சர்யத்திலும், ஆனந்தத்திலும் ஆழ்த்துகிறார் சமையல்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.



''சுவை மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும் கருத்தில்கொண்டு... கற்பூரவல்லி கொழுக்கட்டை, சோளமுத்துக் கொழுக்கட்டை, கம்பு - நெல்லிக்காய் கொழுக்கட்டை உள்ளிட்ட 30 கொழுக்கட்டைகளை இந்த விநாயகர் சதுர்த்தி நேரத்தில் உங்களுக்காக செய்துகாட்டியுள்ளேன். வினை தீர்க்கும் விநாயகர் அருளால், உங்கள் வாழ்வில் இன்னல்கள் மறைந்து, இன்பம் கொடிகட்டிப் பறக்கட்டும்!'' என்று உள்ளம் நெகிழ வாழ்த்தும் சுதா, ''கொழுக்கட்டைக்கு மாவு செய்ய நேரம் இல்லாதவர்கள், கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் கொழுக்கட்டை மாவைப் பயன்படுத்தலாம்'' என்று கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #1 on: August 28, 2014, 11:59:31 AM »
பீட்ரூட் அம்மணி கொழுக்கட்டை



தேவையானவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், பீட்ரூட் பெரியது - ஒன்று (துருவவும்), மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 3, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூளை மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். இரண்டு கப் நீருடன் தேங்காய் எண்ணெய், சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறவும் (நான்-ஸ்டிக் வாணலியில் செய்வது எளிது). மாவு இறுகும்போது பச்சை மிளகாய் விழுதை சேர்த்துக் கிளறவும். மாவு வெந்ததும் இறக்கி, விருப்பமான வடிவம் (உருளை, உருண்டை) கொடுக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி மாவு உருளை/உருண்டையை அதில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், பீட்ரூட் துருவல், வெந்த கொழுக்கட்டையை போட்டு, சிறிது உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #2 on: August 28, 2014, 12:00:58 PM »
சத்துமாவு கொழுக்கட்டை



தேவையானவை:
சத்துமாவு (ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும்) - ஒன்றரை கப், தேங்காய்த் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், வெல்லத் துருவல் - ஒரு கப்.

செய்முறை:
வெறும் வாணலியில் சத்து மாவை வாச¬னை வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். மீண்டும் வெல்லக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், சத்து மாவு சேர்த்துக் கிளறி, வெந்ததும் எடுக்கவும். கையில் நெய் தடவிக் கொண்டு, இந்த மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து மூடி விரல்களால் அழுத்தி கொழுக்கட்டையாக பிடிக்கவும். நெய் தடவிய இட்லித் தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #3 on: August 28, 2014, 12:02:20 PM »
கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை



தேவையானவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.
மசாலா தயார் செய்ய: உடைத்த கறுப்பு உளுந்து - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன்,  தேங்காய்த் துருவல் - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி -  ஒரு டேபிள்ஸ்பூன், சோம்பு, மிளகுத்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கறுப்பு உளுந்தை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்து, வேகவைத்து, நீரை வடித்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், தனியாத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றைத் தாளித்து, உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி வெந்த கறுப்பு உளுந்தை சேர்த்துக் கிளறி இறக்கவும். மசாலா ரெடி.
இரண்டு கப் நீருடன் எண்ணெய், சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறி இறக்கவும். அந்த மாவில் விருப்பமான வடிவத்தில் சொப்பு செய்து, உளுந்து மசாலா பூரணத்தை உள்ளே வைத்து மூடி, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #4 on: August 28, 2014, 12:04:27 PM »
எள்ளு கொள்ளு கொழுக்கட்டை



தேவையானவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், கொள்ளு - ஒரு கப்,  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), கறுப்பு எள், இட்லி மிளகாய்ப்பொடி - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை:
கொள்ளை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாயை வதக்கி, வேகவைத்த கொள்ளு, இட்லி மிளகாய்ப்பொடி, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இரண்டு கப் நீருடன் சிறிதளவு உப்பு, சிறிதளவு எண்ணெய் மற்றும் கறுப்பு எள் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறி இறக்கவும். மாவை மோதக சொப்புகளாக செய்து பூரணத்தை உள்ளே வைத்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #5 on: August 28, 2014, 12:05:38 PM »
மோதகம்



தேவையானவை:
மேல் மாவுக்கு: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் - தலா 2 கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
பொடித்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி பாகாகக் காய்ச்சவும். வாசனை வந்ததும், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து சுருளக் கிளறவும். பூரணம் தயார்! 
கொழுக்கட்டைக்குத் தயார் செய்து வைத்துள்ள மேல் மாவை எடுத்து, கிண்ணம் போல் செய்து அதனுள் பூரணத்தை வைத்து, உருண்டைகளாகப் பிடிக்கவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து, ஆவியில் வேக வைத்து எடுக்க... மோதகம் ரெடி!

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #6 on: August 28, 2014, 12:06:46 PM »
துளசி கொழுக்கட்டை



தேவையானவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், துளசி - ஒரு கைப்பிடி அளவு, வெற்றிலை - 6, சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை ஃபுட் கலர் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
துளசி, வெற்றிலையை நீரில் அலசி, மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். ஒன்றரை கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அதில் உப்பு, எண்ணெய், சீரகம், பச்சை ஃபுட் கலர் சேர்த்துக் கிளறவும். துளசி - வெற்றிலை சாற்றையும் சேர்த்துக் கிளறவும். இப்போது அரிசி மாவை சேர்த்துக் கிளறி, வெந்ததும் இறக்கவும். மாவை விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டைகளாக தயார் செய்து, 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #7 on: August 28, 2014, 12:07:51 PM »
கற்பூரவல்லி கொழுக்கட்டை ரோல்



தேவையானவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், கற்பூரவல்லி இலை - 5, மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - கால் கப் (ஊறவைத்து, வேகவைக்கவும்), தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
கற்பூரவல்லி இலையை அரைத்து சாறு எடுக்கவும். ஒன்றரை கப் நீரைக் கொதிக்கவிட்டு, அதில் உப்பு, எண்ணெய், மிளகு - சீரகத்தூள், கற்பூரவல்லி சாறு கலந்து, அரிசி மாவை சேர்த்து கட்டித்தட்டாமல் கிளறி இறக்கவும். மாவை உருளை வடிவ கொழுக்கட்டைகளாக செய்து ஆவியில் 7-10 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்த கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறி, செய்துவைத்த கொழுக்கட்டைகளைப் போட்டு புரட்டி எடுத்து பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #8 on: August 28, 2014, 12:09:06 PM »
மிக்ஸ்டு ஃப்ரூட் கொழுக்கட்டை



தேவையானவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - அரை கப், நெய் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் - அரை கப், பழக்கலவை - ஒரு கப் (சீஸனுக்கு ஏற்றாற்போல் பப்பாளி, ஆப்பிள், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம் இவை அனைத்தும் சிறிதாக நறுக்கிப் போடலாம். அல்லது ஏதாவது ஒரு விருப்பமான பழத்தை நறுக்கிப் போடலாம்), நல்லெண்ணெய் - சிறிதளவு, உப்பு - அரை சிட்டிகை.

செய்முறை:
வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். மீண்டும் வெல்லக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு கம்பிப் பாகு பதம் வந்தவுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், நெய் சேர்த்து, நறுக்கிய பழங்களையும் சேர்த்து சுருள கிளறவும். பூரணம் ரெடி.
இரண்டு கப் நீருடன் நல்லெண்ணெய், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறி இறக்கவும். கையில் எண்ணெய் தொட்டு, மாவை கிண்ணம் போல் செய்து, ஒரு ஸ்பூன் பழ பூரணத்தை உள்ளே வைத்து மூடவும். கொழுக்கட்டைகளை இட்லித்தட்டில் வைத்து, 7-10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #9 on: August 28, 2014, 12:10:18 PM »
சோள ரவை கேசரி கொழுக்கட்டை



தேவையானவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், சோள ரவை - அரை கப், ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, நெய் - 2 டேபிள்ஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு - 5, சர்க்கரை - ஒரு கப், நல்லெண்ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
சோள ரவையை வெறும் கடாயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, கொதி வந்ததும் சோள ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறி, ஆரஞ்சு ஃபுட் கலர், நெய் சேர்த்து, சர்க்கரையையும் சேர்த்துக் கிளறி பூரணம் ரெடி செய்யவும். நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பை மேலே தூவவும்.
இரண்டு கப் நீருடன் நல்லெண்ணெய், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறி இறக்கவும்.  மாவை சொப்புகளாக செய்து, உள்ளே கேசரி பூரணத்தை வைத்து மூடி, 7 - 10 நிமிடம் ஆவியில் வேகவிடவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #10 on: August 28, 2014, 12:11:48 PM »
சம்பா ரவை பிடிகொழுக்கட்டை



தேவையானவை:
சம்பா ரவை - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சோம்பு  - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் கடாயில் ரவையைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், காய்ந்த மிளகாய், சோம்பு, இஞ்சித் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். அதில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, ரவையை மெதுவாகச் சேர்த்துக் கிளறவும். ஆறியதும், பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து... ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #11 on: August 28, 2014, 12:12:59 PM »
சோளமுத்து கொழுக்கட்டை



தேவையானவை:
வேகவைத்த சோளமுத்துக்கள் - ஒரு கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள், சாட் மசாலா - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - - ஒரு டீஸ்பூன், களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒன்றரை கப், எண்ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
இரண்டரை கப் நீரைக் கொதிக்க வைத்து அதில் உப்பு, எண்ணெய் சேர்த்து... மிளகுத்தூள், சாட் மசாலா, கொத்தமல்லித் தழை சேர்த்து வேகவிட்டு, சோளமுத்துக்     களை சேர்க்கவும். பிறகு, அரிசி மாவை சேர்த்துக் கிளறி, இறக்கும் முன் வெண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த கலவையை விருப்பமான வடிவில் கொழுக்கட்டைகளாக செய்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #12 on: August 28, 2014, 12:14:10 PM »
வேர்க்கடலை காரக்கொழுக்கட்டை



தேவையானவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், வேகவைத்த வேர்க்கடலை - அரை கப், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 3 (விழுதாக அரைக்கவும்), இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
கடாயில் 2 கப் நீர் ஊற்றி, கொதி வந்ததும் உப்பு, எண்ணெய் சேர்த்து... இஞ்சி விழுது, மிளகாய் விழுது, பெருங் காயத்தூள் சேர்க்கவும். இதில் கறிவேப் பிலையை கிள்ளிப் போட்டு, வேகவைத்த கடலையும் போட்டு, அரிசி மாவை சேர்த்துக் கிளறி வெந்ததும் இறக்கவும். மாவை ஆறவிட்டு, விருப்பமான வடிவம் தந்து 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #13 on: August 28, 2014, 12:15:21 PM »
கம்பு நெல்லிக்காய் கொழுக்கட்டை



தேவையானவை:
கம்பு மாவு - ஒரு கப், வேகவைத்து நறுக்கிய நெல்லிக்காய் - அரை கப், தேங்காய்ப் பால் - ஒன்றரை கப், காராமணி - கால் கப் (ஊறவைத்து, வேக வைத்தது), கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் கம்பு மாவை வாசனை வரும் வரை வறுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து, சுடுநீர் தெளித்துப் பிசிறி, 10 -15 நிமிடங்கள் தனியாக மூடி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கிளறி... வெந்த காராமணி, நறுக்கிய தேங்காய்ப் பல் சேர்த்துப் புரட்டவும். பிறகு உப்பு, கொத்தமல்லி சேர்த்து, தேங்காய்ப் பால் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் வேகவைத்த நெல்லிக்காயை சேர்க்கவும். இதில் பிசறிய கம்பு மாவும் சேர்த்துக் கிளறி, வெந்ததும் அடுப்பை நிறுத்தவும். இந்த மாவை விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டைகளாக செய்து, 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #14 on: August 28, 2014, 12:16:33 PM »
புரோட்டீன் விட்டமின் கொழுக்கட்டை



தேவையானவை:
முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய பச்சைப் பயறு, முளைகட்டிய பட்டாணி (சேர்த்து) - ஒரு கப், பெங்களூர் தக்காளி, வெள்ளரிக்காய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), தினை மாவு, கம்பு மாவு - தலா அரை கப் கப், சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - சிறிதளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:
முளைகட்டிய பயறு வகைகளை வேகவைத்து எடுக்கவும். ஒன்றரை கப் நீரில் உப்பு, எண்ணெய், சேர்த்துக் கொதிக்கவிட்டு, தினை, கம்பு மாவு சேர்த்து கட்டிதட்டாமல் கிளறி, வெந்ததும், சிறுசிறு உருண்டைகளாக்கி, 10 நிமிடம்  ஆவியில் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து... நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்துக் கிளறவும். இதனுடன் வேகவைத்து எடுத்த முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்துப் புரட்டவும். வெந்த தினை - கம்பு மாவு கொழுக்கட்டைகளையும் சேர்த்துப் புரட்டவும். கடைசியாக, வெள்ளரிக்காய் சேர்த்துப் பரிமாறவும்.