Author Topic: ~ 30 வகை கொழுக்கட்டை! ~  (Read 2529 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #15 on: August 28, 2014, 12:17:49 PM »
பல்லு கொழுக்கட்டை



தேவையானவை:
அரிசி மாவு - ஒரு கப், எண்ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
ஒன்றரை கப் நீரைக் கொதிக்கவிட்டு உப்பு, எண்ணெய் சேர்த்து, அரிசி மாவு சேர்த்துக் கிளறி... வெந்ததும், கையில் எண்ணெய் தடவி நீளநீளமாக உருட்டி முனையைத் தட்டி ஆவியில் 7-10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் சமயத்தில் இதைத் தருவார்கள்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #16 on: August 28, 2014, 12:19:01 PM »
கேரட் அல்வா கொழுக்கட்டை



தேவையானவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், துருவிய கேரட் - ஒரு கப், வறுத்த முந்திரிப் பருப்பு - 5, ஃபுட் கலர் (ஆரஞ்சு நிறம்) - ஒரு சிட்டிகை, காய்ச்சிய பால் - அரை டம்ளர், பொடித்த சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், நெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
கடாயில் நெய் விட்டு துருவிய கேரட்டை வதக்கி, காய்ச்சிய பால் விட்டு வேகவிடவும். அதனுடன் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பொடித்த சர்க்கரையைப் போட்டுக் கிளறி இறக்கவும். இதுதான் கேரட் அல்வா பூரணம்.
இரண்டு கப் நீருடன் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறி இறக்கவும். மாவை சொப்புகளாக செய்து, அதனுள் கேரட் அல்வா பூரணத்தை வைத்து மூடி,  5 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #17 on: August 28, 2014, 12:20:06 PM »
செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை



தேவையானவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:
ஒன்றரை கப் நீரை சூடாக்கி, கொதி வந்தவுடன் எண்ணெய் விட்டு, அரிசிமாவு சேர்த்துக் கிளறி வெந்ததும் விருப்பமான வடிவம் (அம்மி, குழவி, நட்சத்திரம், பிள்ளையார் போன்றவை) கொடுத்து ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இல்லத்தில் செல்வம் நிலைத்திருக்க வேண்டி ஆடி, மாசி, தை மாதங்களில் செவ்வாய்க்கிழமை அன்று மேற்கொள்ளப்படும் பிள்ளையார் வழிபாட்டின்போது இந்தக் கொழுக்கட்டையை செய்வார்கள். இதற்கு ஒளவையார் நோன்பு கொழுக்கட்டை என்ற பெயரும் உண்டு. இந்த வழிபாட்டில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. வீட்டு ஆண்கள்கூட கலந்துகொள்ளக்கூடாது. உப்பு போடாமல் செய்யப்பட்டு, விதவிதமான வடிவத்தில் கண்களைக் கவரும் இந்த கொழுக்கட்டைகளை தேங்காய்த் துருவலும், வெல்லத் துருவலும் தொட்டுகொண்டு சாப்பிடுவர்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #18 on: August 28, 2014, 01:33:10 PM »
சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொழுக்கட்டை



தேவையானவை:
மைதா மாவு - ஒரு கப், சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ஒன்று (வேகவைத்து, பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு  - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:
மைதாவுடன் உப்பு சேர்த்து, நீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்க¬ளைத் தாளித்து... பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து, வேகவைத்து பொடியாக நறுக்கிய வள்ளிக் கிழங்கு சேர்த்து, மஞ்சள்தூள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். இதுதான் பூரணம்.
மைதா மாவை சப்பாத்தி போல் இட்டு, அதன் நடுவே பூரணத்தை வைத்து, விருப்பமான வடிவம் கொடுத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #19 on: August 28, 2014, 01:34:51 PM »
மிட்டாய் கொழுக்கட்டை



தேவையானவை:
கேழ்வரகு மாவு - ஒரு கப், களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - அரை கப், சீரக மிட்டாய் - கால் கப், துருவிய வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் - தலா ஒரு சிட்டிகை.

செய்முறை:
கேழ்வரகு, அரிசி மாவை வெறும் கடாயில் வறுத்து வைக்கவும். வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும். மீண்டும் வெல்லக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு, பாகு காய்ச்சவும். அதில் ஏலக்காய்த்தூள், சீரக மிட்டாய் சேர்த்துக் கிளறி, பச்சை கற்பூரம் சேர்க்கவும். இதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவையும் சேர்த்துக் கிளறவும். மாவு வெந்ததும் விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டைகளாக செய்து, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #20 on: August 28, 2014, 01:36:03 PM »
திடீர் இடியாப்ப கொழுக்கட்டை



தேவையானவை:
திடீர் இடியாப்பம் (ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், எலுமிச்சம்பழம் - ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - அரை கப், கொத்தமல்லி, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெந்தயம், காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து, அரிசி மாவை சேர்த்துக் கிளறி விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டை தயார் செய்து, 7 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஒன்றரை கப் தண்ணீரை சூடுபடுத்தி, ரெடிமேட் இடியாப்பத்தை அதில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வறுத்துப் பொடித்த வெந்தயம் - மிளகாய், சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வெந்த இடியாப்பத்தையும், கொழுக் கட்டையும் சேர்த்துக் கிளறவும். இறக்கும்போது எலுமிச்சையை சாறு பிழிந்து, கொத்தமல்லி தூவிக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #21 on: August 28, 2014, 01:37:15 PM »
கொழுக்கட்டை பாயசம்



தேவையானவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, காய்ச்சிய பால் - 2 கப், எண்ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, குழையாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு கப் தண்ணீர் விட்டு, பொடித்த வெல்லம் சேர்த்து, பாகு பதம் வந்தவுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். இதில் வெந்த கடலைப் பருப்பு சேர்த்து, காய்ச்சிய பாலைக் கலந்துகொள்ளவும்.
இரண்டு கப் நீருடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாத வாறு, கைவிடாமல் கிளறி இறக்க வும். மாவை விருப்பமான வடிவத் தில் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதை வெல்லப் பாகு - கடலைப்பருப்பு கரைசலில் சேர்த்துக் கிளறினால்... கொழுக்கட்டை பாயசம் தயார்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #22 on: August 28, 2014, 01:38:16 PM »
பனீர் ராகி கொழுக்கட்டை



தேவையானவை:
கேழ்வரகு மாவு - ஒரு கப், பனீர் துருவல் - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், வறுத்த முந்திரிப் பருப்பு - 10, வறுத்த வேர்க்கடலை (உடைத்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
கேழ்வரகு மாவை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். மீண்டும் வெல்லக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு, பாகு பதம் வந்ததும் வறுத்த முந்திரி, வேர்க்கடலை சேர்த்து, நெய் ஊற்றிக் கிளறவும். இதனுடன் கேழ்வரகு மாவு, பனீர் துருவல் சேர்த்துக் கிளறி, வெந்ததும் இறக்கவும். மாவை விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டைகளாக பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #23 on: August 28, 2014, 01:39:30 PM »
கடலைப்பருப்பு கொழுக்கட்டை



தேவையானவை:
மேல் மாவுக்கு: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: கடலைப்பருப்பு, வெல்லம் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
குக்கரில் கடலைப்பருப்பை வேகவைத்து, நன்கு மசித்துக்கொள்ளவும். வெல்லத்தைப் பொடித்து, தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அந்தக் கரைசலை கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பை சேர்த்து சுருளக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளற... பூரணம் ரெடி!
கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு, தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக மாவை எடுத்து, சொப்பு போல செய்துகொள்ளவும். அதனுள்ளே பூரணத்தை வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #24 on: August 28, 2014, 01:40:37 PM »
சிவப்பு அவல் கொழுக்கட்டை



தேவையானவை:
சிவப்பு அவல் - ஒன்றரை கப், வேகவைத்த பாசிப்பருப்பு, வேகவைத்த கடலைப்பருப்பு - தலா கால் கப், தேங்காய்த் துருவல் - கால் கப், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:
சிவப்பு அவலை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, துருவிய இஞ்சி, உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து, வேகவைத்த பருப்புகளை சேர்த்துக் கிளறி, அவலையும் சேர்த்து நன்கு கிளறவும். கையில் சிறிது எண்ணெய் தடவி, அவல் கலவையை எடுத்து, விரும்பிய வடிவில் கொழுக்கட்டைகளாக செய்து, 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: இந்த கொழுக்கட்டைக்கு மேலே டிரை ஃப்ரூட்ஸ் தூவி பரிமாறலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #25 on: August 28, 2014, 01:41:49 PM »
பொரித்த மோதகம்



தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - அரை கப், வேகவைத்த கடலைப்பருப்பு - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பச்சைக் கற்பூரம் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, தேன், நெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கோதுமை மாவில், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், வேகவைத்த கடலைப்பருப்பு, பச்சைக் கற்பூரம், பொடித்த வெல்லம் சேர்த்துப் புரட்டினால்... பூரணம் தயார்.  பிசைந்த கோதுமை மாவை சப்பாத்தி போல் இட்டு, நடுவில் பூரணம் வைத்து மூடி மோதகம் தயார் செய்யவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, மோத கத்தைப் பொரித்தெடுக்கவும். மேலே தேன் ஊற்றிப் பரிமாறவும்.
« Last Edit: August 28, 2014, 01:43:54 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #26 on: August 28, 2014, 01:45:11 PM »
உப்புமா கொழுக்கட்டை



தேவையானவை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, பருப்பை தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, நீரை வடித்து, ஒன்று சேர்த்து சிறிதளவு உப்பு, 2 காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மீதமுள்ள 2 மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, கால் கப் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, அரைத்த அரிசி - பருப்புக் கலவையை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்துக் கிளறினால், பாதி வெந்துவிடும். இப்போது கீழே இறக்கி, கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, இந்தக் கலவையை விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டைகளாக பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இந்த கொழுக்கட்டைகளை மீதமுள்ள கால் கப் தேங்காய்த் துருவலில் போட்டு புரட்டி, பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #27 on: August 28, 2014, 01:46:18 PM »
பாஸ்தா மினி கொழுக்கட்டை



தேவையானவை:
சத்துமாவு - ஒரு கப் (கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும்), பாஸ்தா (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பச்சைப் பட்டாணி - கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை  - ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு பாஸ்தாவை அதில் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். கடாயில் 2 கப் நீர் ஊற்றி, கொதி வந்ததும் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து... சத்துமாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு கைவிடாமல் கிளறி இறக்கி, கொழுக்கட்டைகளாக பிடிக்கவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், வெங்காயத்தை வதக்கி, பச்சைப் பட்டாணி, சிறிதளவு உப்பு சேர்த்து, கொத்தமல்லித் தழை தூவி... வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்துப் புரட்டி, வெந்த பாஸ்தாவையும் சேர்க்கவும். ரெடியாக இருக்கும் கொழுக்கட்டையை இதனுடன் சேர்த்துக் கிளறி, பரிமாறவும். வித்தியாசமான, சுவையான, இந்த கொழுக்கட்டையை  குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #28 on: August 28, 2014, 01:47:30 PM »
மிக்ஸ்டு வெஜ் உசிலி கொழுக்கட்டை



தேவையானவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கி வேகவைத்த பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு - அரை கப், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு (சேர்த்து) - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு  - தேவையான அளவு. 

செய்முறை:
பருப்புகளுடன் மிளகாயை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து, ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், வேகவைத்த காய்கறி, வேகவிட்ட பருப்பு, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறி உசிலி தயார்.
இரண்டு கப் நீருடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறி இறக்கவும். மாவை சீடை போல் சிறிது, சிறிதாக உருட்டி, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இதை காய்கறி உசிலியில் போட்டு புரட்டி எடுத்து பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #29 on: August 28, 2014, 01:48:48 PM »
இலை கொழுக்கட்டை



தேவையானவை:
மேல் மாவுக்கு: பச்சரிசி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், வாழை இலை - 10 முதல் 15 துண்டுகள், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: தேங்காய் துருவல் - ஒரு கப், வெல்லம் - கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சி அதனுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும். பூரணம் ரெடி. தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, கழுவிய வாழை இலையில் பரப்பி, நடுவில் பூரணம் வைத்து, இலையோடு சேர்த்து மூடவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து ஆவியில் வேக விட்டு எடுக்க... வாழை இலை மணத்தோடு கொழுக்கட்டை தயார்! இதேபோல் பூவரசு இலையிலும் செய்யலாம். விருப்பத்துக்கு ஏற்ற பூரணம் வைத்து தயார் செய்யலாம்.