பண்டிகை மாதமென்பதால்
துண்டுவிழாத பட்ஜட் போட்டாக வேண்டிய
பதட்டத்தில் இருக்கிறார் அப்பா
அதிரசம், பூந்தி
முருக்கு, சீடையென
பலகாரங்கள் சுடும் பணியில்
பரபரப்பாக மூழ்கி கிடக்கிறாள் அம்மா
கிளிப், உதட்டு சாயம்
நக சாயம், பாதுகையென
எல்லாம் நாளைந்து புத்தாடையின்
நிறத்துக்கு ஒப்ப
வாங்கி சேர்த்து கொண்டிருக்கிறாள் தங்கை
பத்தா குறைக்கு
பக்கத்துவீட்டு வனித்தா போல
தனக்கும் நெத்திச்சுட்டி வேணும் எனும்
அவளின் கோரிக்கை வேறு
அப்பாவின் பட்ஜட் அறிக்கையில்
ஒப்புத்தலுக்காக காத்துக்கிடக்கிறது
130-ஷாட் ஸ்பார்க் டிவின்ஸ்
டபுள் டக்கர், ஸ்டார் டம்
லக்கி ஸ்பிரிங், யாஹூ
மேஜிக் பாட், பவர்பாயிண்ட்
சுஜி கிரீன், 32-ஷாட் த்ரில்லர்
ஜில்லி, சுமோ அவுட்
நீரா ஏஞ்சல், ஜாடு
240-ஷாட் என்ஜாய், ஹை-ஸ்கை
பட்டர்பிளை, டுவின் பிளையிங் வீல்
என இவ்வாண்டு அறிமுகமாகியுள்ள
புது ரக பட்டாசுகளாய் வாங்கி குவித்திருக்கிறான் தம்பி
இந்த தீபாவளிக்கு வெளிவரும்
எந்த புதுப்படத்துக்கு முன்பதிவு
செய்யலாம் எனும்
கலந்தாலோசனையில்
நண்பர்களுடன் நான்
அவரவரும் தீபாவளியின் கொண்டாட்டதுக்கு
தத்தமது ரசனைக்கும், விருப்பத்துக்கும் ஏற்ப
தயாராகி கொண்டிருக்கும் மும்முரத்தில்
மறந்தே போனோம்
2012 செப்படம்பர் ஐந்து அன்று நிகழ்ந்த
முதலிப்பட்டி
பட்டாசு தொழிற்சாலை விபத்தில்
உடற்கருகி இறந்த 38 பேரையும்
கோரமாய் காயமுண்ட 100 பேரையும்