Author Topic: வாருங்கள் கவிதைகள் பற்றி பேசலாம்...  (Read 9542 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
எந்த மொழியின் படைப்பிலக்கிய கர்த்தாவிடமும் போய், உன் மொழியின் செழுமையை அறிந்து கொள்ளும் இலக்கிய வடிவம் எது என்று வினவினாலும், அவன் கவிதையைத்தான் குறிப்பிடுவான்..

இலக்கியத்தில் இருக்கும் எந்த வடிவத்திற்கும் இல்லாத சிறப்பு கவிதைக்கு உண்டு, கவிதை என்பது ஒரு கதையாகவோ, ஒரு கோட்பாடாகவோ, ஒரு கட்டுரையாகவோ, ஒரு தத்துவமாகவோ, ஒரு மருத்துவக் குறிப்பாகவோ, ஒரு கணித வாய்ப்பாடாகவோ, ஒரு நாடகமாகவோ, ஒரு வர்ணனையாகவோ, ஒரு உரையாகவோ, ஒரு பதிலாகவோ, ஒரு கேள்வியாகவோ இருக்கலாம். ஒரு மொழியின் செழுமையை, வளமையை, வலிமையை, செறிவை கவிதையால் மட்டுமே எடுதியம்ப இயலும். ஒரு பெண்ணை கூட கவிதை மாதிரி அழகாய் இருக்கிறாள் என்று வர்ணிக்கலாம், இதுவே ஒரு கதை மாதிரி அழகாய் இருக்கிறாள் என்று சொல்ல முடியுமா ? கவிதை அத்தகையது..

இத்தனை சிறப்புக்குரிய இந்த வடிவத்தில், புது வடிவங்கள், புது பாணிகள், புது சொல்முறைகள், புது புனைவுகள், புது நுட்பங்கள் என்று புது புது முயற்சிகள் நாளும் நிகழ்கின்றன‌

பதினெண்கீழ்கணக்கு காலம் தொடங்கி நவீனம் நுழைத்து இசங்களில் வியாபிக்க ஆரம்பித்திருக்கிறது தமிழ் கவிதை

ஒவ்வொரு காலத்திலும் தனக்கான மொழி சொல்முறை வடிவம் கொண்டு தன்னை செறிவோடு வளப்படுத்திக் கொண்டு செழித்திருக்கிறது

இருண்ட காலத்தில் பக்தியிலக்கியங்கள் படிவில் மொழியை அடர்த்தியை பாதுகாத்ததும் கவிதைதான்

யாப்பென்னும் வேரை அகண்டு ஆழமாய் இறக்கி தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு புதுக்கவிதை நவீனம் இஸங்கள் என்னும் பல புது கிளைகளை மேல் நோக்கி பரப்பி விஸாலமாகவும் விரித்திருக்கிறது தமிழ் கவிதை

இத்தனை செழுமை வளமை செறிவு அடர்த்தி அடல்மை(இளமை) உள்ள தமிழ் கவிதை இன்னும் இன்னும் போக வேண்டிய தூரம் நெடியது உண்டு, அதனை புரிந்து கொண்டு பழைய வடிவங்களிலேயே கவிதை புனையாமல் புது புது சோதனைகளை முயன்று கவிதையை அடுத்த நகர்வுக்கு கொண்டு செல்ல வேண்டும்

கவிதை விஸாலமாக விரிந்திருந்தாலும், அதன் வடிவம் எப்போதும் ஒரு பெண்ணில் இடையை போல மெலிந்ததாகவே இருத்தல் கவின்மிக்கதாகவும், அகலம் ஆழம் விரிவு கொண்டதாகவும் இருக்கும்

கவிதையை பொருத்த மட்டில் அதன் தளங்கள் மூன்றாக இருக்கின்றன, முதல் தளம் கருத்தோடு எழுதப்படும் ஆரம்ப காலக்கவிதைகள், இரண்டாம் தளம் நடை, பாணி, புதுமை, உவமை, உருவகம், படிமம், குறியீடு, வடிவம் என்று கச்சிதமாய் வடிக்கப்பட்ட கவிதைகள், மூன்றாம் தளம் இதைத்தான் சொல்கின்றன, இன்ன கருத்து/கரு மீதுதான் எழுதப்பட்டது என்று ஒரு புள்ளியில் குற்றி நிறுத்த முடியாத படிக்கு பல திசைகளில் விரிவு கொள்ளும் கவிதைகள், என்ன சொல்ல போகிறோம் என்று தெளிவே இல்லாமல் எழுதப்படும் லெவல் ஸீரோ கவிதைகளும் அதிகம் இருக்கத்தான் செய்கின்றன‌

இந்த திரியில் எப்படி கவிதை எழுதுவது என்று பேசபோவதில்லை, எப்படி கவிதைகளை பகுத்தாராய்ந்து எப்படி கவிதைக்குள் இருக்கும் பல திசைகளை கண்டறிவது, எப்படி ஒரு புரியாத கவிதையை அணுகுவது, எப்படி ஒரு கவிதையில் ஒளிந்திருக்கும் அபத்ததை கண்டறிவது, என்பதனை பற்றித்தான் இங்கே பேசப்போகிறோம்

அதுமட்டுமல்லாது இடையிடையே பல இஸங்களை பற்றியும், ஹைகூ பற்றியும் பேசபோகிறோம்

முதலில் நவீன இலக்கியம் குறித்து ஒரு சிறு அறிமுகம்..



நவீனம் என்பது நம் அன்றாட வாழ்வில் ஆக்ரமிக்காத இடமே இல்லை, அது போல் அரசியல், தத்துவம், உளவியல், படைப்பியல், மருத்துவம், விஞ்ஞானம், கல்வி, நீதித்துறை, நிர்மாணம், தொழிற்துறை, நகர உருவாக்கம், குடும்ப அமைப்புமுறையென‌ அது வியாப்பிக்காத‌ தளமே இல்லை எனலாம்..

நம் பேச்சு வழக்கு கூட நவீனப்பட்டிருப்பது மறுக்க இயலா நிதர்சனம்..

கரிக்கொப்பான புத்தியை இன்று டியூப் லைட் என்றும், கற்பூர புத்தியை குண்டு பல்பூ என்றும் சொல்லுதல் சதார்ணமாகிவிட்டது, இந்த நவீன மொழிப் படிமங்களை கவிதையில் பேச்சுவழக்கோடு பதிவு செய்வதால் சுவைஞனானவன் படைப்பில் இருந்து தன்னை அயன்மைவுறுத்திக் கொள்ளாமல், படைப்பின் இயங்கு விசையோடு சேர்ந்து பயணிக்கத் துவங்குகிறான்..

படைப்பாளியும் சுவைஞனுக்கும் நடுவிலான உறவை படைப்பிலக்கியம் ஏற்படுத்தி தருவதால், படைப்பாளியோடு சுவைஞன் தன்னை சமனாக்கிக் கொள்கிறான்..

படைப்பில் சுவைஞனுக்கான வெளியை உருவாக்கித் தருதலின் மூலம், சுவைஞன் படைப்பை தன்னறிவின் இயங்கு தளம், தன் சூழல்வழி அனுபவித்தவைகள், தன் மனநிலைக்கு ஏற்ப படைப்புக்கான அர்த்ததை அவனே உருவாக்கி கொள்கிறான்..

இன்னும் படிமங்கள், குறியீடுகள், இசங்கள், என்று புதுப்புது கோட்பாடுகள், வடிவங்கள் கொடுத்து கவிதையின் அடுத்தக்கட்ட நகர்வை சிந்தித்து கொண்டிருக்கிறார்க‌ள் நவீனவாதிகள்..

நம்மால் சொல்லப்படுவது புரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆதங்கள் இன்றி, கவிதையை எதிர்திசையில் புரிந்து கொள்வதும் கவிதை உண்டாக்குகிற அனுபவம் என்பதை தீர்க்கமாய் நம்புபவன் நான்..

ஒரு கவிதை புரிவதும் புரியாமல் போவதும் நம் தப்பு இல்லை, புரியாமல் போவதால் நமக்கு உண்டாகிற கோபத்தின் வெளிப்பாடே நவீனத்துவத்தின் மீதான தூற்றல்கள்..

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதுதான் கணினி பற்றித் தெரியும் இன்று முதல்வகுப்பிலேயே அதை சொல்லிக் கொடுக்கிறார்கள், நாளையை தலைமுறைக்கு பள்ளி சேரும் முன்பே கணினி பற்றிய அறிமுகம் உண்டாகிவிடும்..

இன்று அலைபேசியை அழகாக இயக்க தெரிந்த குழந்தைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள், ஆனால் நாம் அலைபேசியை பார்த்தது ???

இவை யார் குற்றம் நம் குற்றமா ? இல்லவே இல்லை இது காலத்தின் நியதி..

நவீன இலக்கியங்களில் நடக்கிற முயற்சிகளை, சோதனைகளை, அடுத்த கட்ட நகர்வுகளை புரிந்து கொள்ளாமல், பழமையை நவீனம் நிராகரித்துவிட்டது என்றெல்லாம் சொல்வது ஏற்புடையதல்ல..

அந்த காலத்திலேயே இலக்கணங்களை உடைத்து கொண்டு பிறந்தவையும் உண்டு, சிலப்பதிகாரத்தில் நிறைய இலக்கண மீறல்களை காண இயலும், அன்று இளங்கோ எழுதிய போது இது கூட நவீனமாகத்தான் பலருக்கும் தெரிந்திருக்கும் இல்லையா ? ஆனால் இளங்கோ அடிகள் அன்று அந்த முயற்சியை மேற்கொள்ளுதலை மறுதளித்திருந்தால், காப்பியங்களுக்கான பாடல் வடிவ உருபெறல் தாமதப்பட்டிருக்கலாம்.....

இளங்கோவிற்கு பிறகு வந்த திருத்தக்க தேவன் விருத்த இலக்கணங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவன் செய்த தொண்டு அளப்பரியது, அதற்கு பின் வந்த கம்பன் விருந்தங்களை விருத்தியாக்கினான்..

அன்று காப்பியத்தில் நிகழ்ந்த சோதனை முயற்சிகள் தான் இன்று கவிதைகளில் புது புது பெயர்களில் நிகழ்கிறது, அதில் நவீன ஒரு மிக பெரிய வெளியாக இன்று ஸ்திரம் பெற்று விட்டது

நவீன இலக்கியவாதிகள் தம்மை பாரதி மரபினர் என்று, புது கவிதைவாதிகள் தங்களை பாரதிதாசன் மரபினர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்

தொடரும்..

அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
புத்திலக்கியம் மற்றும் நவீன இலக்கியங்களில் பரிட்சயம் பெற படிம, சங்கேத, குறியீட்டு மொழிகளை அணுக்கம் கொள்ள, திறக்க, அவிழ்க்க பிற்சியும், பிரயத்தனமும் அதிக அளவில் தேவை, வாசிப்பு தீவிரப்படும் போது அது சாத்தியமாகவிடுகிறது

இவைகளுக்குள் செல்வதற்கு முன்னே ஒரு எளிமையான கவிதையை பகுத்தாயலாம் என்று எண்ணினேன், எளிமையென்றாலே கவியரசரை தவிர வேறு யாரும் நினைவுக்கு வருவதில்லை எனக்கு

கவிஞர் எனக்கு இன்னொரு தாய் என்று சொல்லும் அவவிற்கு அவர் மீது அத்தனை ப்ரியம் எனக்கு

கண்ணே கலைமானே போல என்னை மிகவும் பாதித்தது கண்ணதாசின் இந்த பாடலும், படம் உயர்ந்த மனிதன்

பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய் ?

பல்லவி :

நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்த தலைவன் இல்லை சென்றுவா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

சரணம் 1:
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணமென்னும் மேடையில் பொன்மாலை சூடினான்
கன்னியழகை பாடவோ அவன் கவிஞனாகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்
கலைஞனாகினான்

சரணம் 2:
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணமேன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொள்வதேன்
மயக்கம் கொள்வதேன்

முதல் வரியையே படு அமர்க்களமாக ஆரம்பிக்கிறான் கவிஞன்

யார் பார்த்ததனால் இப்படி காமத்தால் கொதிக்கிறார் இது ஒரு அர்த்தம்

உன்ன இப்ப யார் பார்த்து ரசிக்கிறாங்கனு இப்படி பால் மாதிரி அழகா ஒளி வீசுற ?

நாளைக்கு என் தலைவன் வந்துடுவான் அப்போ என் தனிம தீர்ந்துடும், நாளைக்கு இந்நேரமா வா, போ

தென்றலே நீயும் நின்னு போய்டு, என் தனிமை கிளப்பிடும் வெம்மையில் உன் தீண்டல் இதமா இல்லை நெருப்பா சுடுது, போ நின்னு போ

காதல்ல இருக்கும் போது மனசு அலை மாதிரி எப்படி மேலும் கீழுமா அலையும் என்பதை இந்த பாடல் முழுக பார்க்க முடியும், அதை அப்பப்ப பார்ப்போம்

முதல் சரணத்த எப்படி ஆரம்பிக்கிறானு பாருங்க

வண்ண விழியில் வாசலில் என் தேவன் தோன்றினான்

கருப்பு வெள்ளையா இருக்குற விழி எப்படி வண்ண விழியாகும் ??

அவன பார்த்தும் முகம் மட்டுமில்ல விழியும் நாணத்தால் சிவந்திருச்சாம், இப்ப மூன்று வண்ணமாகிடுச்சு இல்ல, ஆனா பாருங்க கவிஞர் இங்க நம்மை ஒரு பட்டிமண்டபம் நடத்த வைக்குறார்

அவன் வரும் முன்னேடியே அவனுடைய வரவ அறிந்து விழி நாணத்தில் சிவந்துச்சா, இல்ல அவன பார்த்த பின்னாடி சிவந்துச்சா நு..


ஆனா அடுத்த வரியில எண்ணம் என்னும் மேடையில் நு வார்த்தைகள் வருவதை பார்த்தால், அவ தூங்காமலே அவன பற்றியே யோசிச்சு யோசிச்சு கண்கள் எப்பொழுதும் சிவந்த வண்ணமாய் இருப்பதால் அது வண்ண விழினு சொல்றாரோ நு தோணுது

எண்ணமென்னும் மேடையில் எனும் வார்த பல விசயத்தை யோசிக்க வைக்குது, அதாவது இவளுடைய எண்ணங்கள் மேன்மையானவை, இவளின் எண்ணங்களின் மீதிருப்பவன், இவளின் எண்ணங்களைவிட அவன் மேலானவன், அவன் உயர்ந்தவன்

இந்த தருணத்தில்

தாமரைத் த*ண்தாது ஊதி; மீமிசை
சாந்தில் தொடுத்த தீந்தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை

எனும் நற்றினை முதல் பாடல் ஞாபகத்துக்கு வராமல் இல்லை

அந்த காலப்படங்களில் எனக்கு பிடிக்காத விடயம், பெண்ணைவிட ஆண் மேலானவன் எனும் மறைமுகமாய் திணிக்கப்படும் கருத்து, அதாவது நாயகன் நாயகிக்கிட்ட போய் காதலை சொன்னா நாயகி பதில் சொல்லாம அத்தான்னு கால்ல விழுந்திடுவாங்க

எண்பதுகளில் வந்த படங்கள் அதைவிட கொடுமை, நாயகனும் நாயகியும் ஐ லவ் யூ நு லாங் ஸாட்டுல ஒரு கிலோமீட்டர் தூரத்துல இருந்து கத்திக்கிட்டே ஓடி வருவாங்க, பக்கத்துல வந்ததும் நாயகன் நாயகிய தூக்கி கரகரகரனு அந்த பொண்ணு தல சுத்தி, வாந்தி எடுத்து மயக்கம் போடுற அளவுக்கு சுத்துவாரு, இதில முக்கியமான விடயம் என்னனா, பக்கத்தூருக்கு கேக்குற அளவுக்கு ஐ லவ் யூ நு கத்துவாங்க அப்ப கூட ஒருத்தருக்கும் விடயம் தெரியாது அல்லது ஒருத்தரும் கண்டுக்க மாட்டாங்க, ஆனா பாருங்க எங்கையாவது ரகசியமா உட்காந்து பேசிட்டு இருப்பாங்க, அதை எவனாவது பார்த்துட்டு போய் வீட்டுல பத்தவச்சுடுவான், எதையோ பேச ஆரம்பிச்சு எங்கையோ போய்ட்டேன், ஹூம் நாம எண்ணமென்னும் மேடைக்கே வருவோம்

என் கற்பனையில் அவன் எனக்கு மாலை போட்டான் சொல்லும் அவள், அடுத்த வரியில் அவன் மாலை போட்ட தோடு மட்டும் நிற்க‌வில்லை என்று சொல்றா

அழகழகா பேசி என்னை ரம்மியமான மொழியால் என்னை மயங்க வச்சு, என் பெண்மையை அவன் கொண்டான்னு சொல்றா

இப்போ புரியுதா, நிலா மேலையும் தென்றல் மேலையும் ஏன் கோவம் நு

இரண்டாம் சரணத்தில்

அப்படி அவன் என் கூட இருக்கும் போது, அவன் கிட்ட நிறைய சொல்ல நினைச்சேன், ஆனால் இந்த நாணம் இருக்கே அது வந்து சொல்லவிடாம தடுத்திருச்சு சொல்றவ, நாணத்தை பொல்லாததுனு கடிந்து கொள்கிறாள்

இதுவரைக்கும் இந்த பாட்டுல நிலாவ திட்டியாச்சு, தென்றல துரத்தியாச்சு, நாணத்தையும் கடிந்து கொண்டாச்சு

அடுத்தது குழப்பம், நான் ஏன் இப்படியெல்லாம் செய்யுறேங்கற குழப்பம், அதுமட்டுமில்லாமல் அவ காதலில் தொலைந்து நெடுந்தூரம் போய்ட்டா என்பதையும் கடைசி இரு வரிகள் உணர்த்துது

மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொள்வதேன்

மயக்கம் கொள்வதேனுத்தான், பல்லவிலயே சொல்லியாச்சே, நாளை இந்த வேளை பார்த்து நு

நாளைக்கு அவன் வந்துடுவான் யோசிக்கும் போதே இன்னைக்கு காதல் மயக்கம் வந்துச்சாம்

அடுத்தது திருக்குற்றால குறவஞ்சியில் இருந்து சில கண்ணிகளை பகுத்தாய்வோம்

தொடரும்
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
//ஒருகைவளை பூண்டபெண்கள் ஒருகைவளை பூணமறந்
தோடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்
இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடை தொடுவார்பின்
இந்தவுடை ரவிக்கையெனச் சந்தமுலைக் கிடுவார்
கருதுமனம் புறம்போக ஒருகண்ணுக்கு மெயெடுத்த
கையுமா ஒருகணிட்ட மையுமாய் வருவார்
//

நண்பன் ஒருவன் மூலம் மேலுள்ள இந்த வரிகள் வாசிக்க கிடைத்தது, வெறுமனே இந்த வரிகளை வாசித்த தருணங்களில் இந்த பாடல் எந்த இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது, எந்த தருணத்திற்காக எழுதப்பட்டது என்று எனக்கு தெரியாது, அதனால் இந்த பாட்டின் மேலான என் புரிதல்கள் தவறாக அமைந்துவிட்டது..

மது உண்ட ஒரு நங்கையின் நடவடிக்கையாகவே இதனை நான் புரிந்து கொண்டேன்..

சமீபத்தில் ProjetMadurai தளத்தில் திருக்குற்றாலக் குறசஞ்சி படிக்க கிடைதது.. திருகூடராசப்ப கவிராயரால் எழுதுப்பட்ட நாடக கவியம்.. கம்பனுக்கு பிறகு திருகூடராசப்பன் என்று சொன்னால் மிகையில்லை என்று தோன்றுகிறது அந்த அளவுக்கு அழகிய சொல்நடை, தெளிவான உவமைநயம், காட்சி விவிரிப்பு என்று தமிழையாளும் செங்கோலாக தன் எழுதுகோலை மாற்றிக் கொண்டிருக்கிறான்..

குறவஞ்சி என்றதும் பள்ளி காலத்தில் படித்த குறத்திப்பாட்டும், சந்த தாலையாட்டமும் தான் ஞாபகம் வரும், ஆனால் கவிராயன் கண்ணிகளை பின்னுவதிலும் விருத்தங்களை வனைப்பதிலும் சலைக்காமல் விளையாடி இருக்கிறான் எனபதும் உண்மை..

அதுமட்டுமல்ல, கவிராயர் திரிகூட நாதனை, வசந்த வல்லியை, குற்றாலமலையை குறவஞ்சியை என யாரையும் பாரபட்சம் பாராமல் சிறப்பாய் விவரித்து வர்ணித்து வனப்புடன் பாடியிருக்கிறார்..

அப்புரம் என்னை கர்வந்த இலக்கிய நங்கைகளின் வரிசையில் இப்ப வசந்தவல்லியும் வந்து சேர்ந்துட்டாள்..

கவிராயர் வசந்த வல்லியை வர்ணித்த வர்ணிப்பில், அவள் அழகு திறத்தில், இளமை வளத்தில், செய்கை நலத்தில், என் மனம் லயித்து மயங்கிவிட்டது, அவள் மீதுண்ட அந்த மையலை எண்ணிப்பார்க்கையில் எனக்குள் ஒரு மூலையில் "காதல் என்பதா காமம் என்பதா, இரண்டின் மத்தியில், இன்னொரு உணர்ச்சியா" எனும் வைரமுத்துவின் வரிகள் நுண்ணோசையில் ஒலிக்கிறது..

இப்பேர்ப்பட்ட வசந்த வல்லி காவியத்தில் அறிமுகமாவதற்கு முந்தைய பாடலில் இடம் பெற்றிருக்கும் கண்ணிகள்தான் மேலுள்ள கண்ணிகள்..

திரிகூட நாதர் உலாவரும் சிறப்பையும் அழகையும், அவரை கண்டு மயங்கும் நங்கைகளின் நளினத்தையும் 12 கண்ணிகளில் பாடி இருக்கிறார் கவிராயர்..

மேலுள்ள நான்குவரிகளுக்கு மாத்திரம் விளக்கம் பகிர்ந்து முழுப்பாடலையும் தங்களை சுவைக்கவிடாத சுயநலக்காரனாக விருப்பமில்லாததால், 12 கண்ணிகளின் விளக்கங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

திரிகூட நாதர் உலா வருகையில் அவரின் அழகின் மையலுற்ற நங்கைகள் பின் வருமாறு சொல்கிறார்கள்..

(1) ஒருமானைப் பிடித்துவந்த பெருமானைத் தொடர்ந்துவரும்
ஒருகோடி மான்கள்போல் வருகோடி மடவார்

திருக்குற்றால நாதர் ஒருகையில் மானை பற்றியவாறு தேரில் நின்றிருக்கிறார், அந்த தேரை சுற்றியும் பின் தொடர்ந்து மங்கையர்கள் வலம் வருகின்றனர், அந்த மங்கையர்கள் மான்களை ஒத்தவர்களாக இருக்கின்றனர்.. அவன் கைப்பற்றிய மான் ஒன்றுதான் கைப்பற்றாத மான் ஒரு கோடி என்றவாறும்.. தன்னை கைப்பற்ற மாட்டானா என்று ஏங்கி மயங்கி பின் தொடரும் மான்கள் மங்கையர் என்றவாறு உரைக்கிறான்..

(2) புரிநூலின் மார்பனிவன் அயனென்பார் அயனாகில்
பொங்கரவ மேதுதனிச் சங்கமேது என்பார்

அப்படி மயங்கிய பெண்கள் இவர் உண்மையில் திரிகூடநாதர்தானா இல்லை பிரம்மன என்றும் வியக்கிறார்கள் அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களும் அழகே, முப்புரி நூலை தன் செறிந்த மார்பிலே புனைத்திருக்கிறானே அதனால் இவர் பிரம்மனோ என்று சிலர்வியக்க, அடி இவர் பிரம்மன் இல்லை, திரிகூட நாதனே என்று சிலர்விளக்குகிறார்கள் பின்வருமாறு, பிரம்மன் என்றால் கழுத்தில் பாம்பணி ஏது, கதுகளில் சங்காலான குண்டலமேது, அதனால் இவர் அயனில்லை என்கிறார்கள்..

(3) விரிகருணை மாலென்பார் மாலாகில் விழியின்மேல்
விழியுண்டோ முடியின்மேல் முடியுண்டோ என்பார்

இன்னும் சில பெண்டீர் இவர் மிகு அருள் கொண்ட திருமாலோ என்பார்கள், அதற்கு சிலர் இவர் திருமால் இல்லையடி, திருமாலானால் நெற்றி விழியேது, சடைமுடித்தான் ஏது என்பார்கள்..

(4) இருபாலு நான்முகனுந் திருமாலும் வருகையால்
ஈசனிவன் திரிகூட ராசனே என்பார்.

அயனுமில்லை, மாலுமில்லை என்பது உண்மைதான் ஏனெனில் இவரின் வலம் இடமாகிய இருப்பக்கங்களிலும் நான்முகமும் திருமாலும்தான் நின்றிருக்கிறார்கள், அதனால் அவர்கள் நடுவில் வீற்றிருக்கும் அவன் திரிகூடநாதன் தான் என்பார்கள்..
காதல் மயக்கத்தில் பக்கத்தில் இருப்பவரையும் மறுந்துவிடுவார்கள், பக்கத்தில் இருப்பவரும் மரைந்துவிடுவார்கள் என்பதை எவ்வளவு அழகாய் கவிராயர் காட்சிப்படுத்துகிறார் பாருங்கள்..

(5) ஒருகைவளை பூண்டபெண்கள் ஒருகைவளை பூணமறந்
தோடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்

(இங்கிருந்துதான் நண்பர் கொடுத்தப்பாடல் ஆரம்பமாகிரது)..

இவ்வாறான அழகு பூண்டு, பவனியோடு வரும் மங்கையரை மயக்கி வரும் திருக்குற்றால நாதன், தம்முடைய வீதிக்கு வந்துவிட்டார் என்றறிந்த பெண்கள், அவன் மீதுள்ள மயக்கத்தால் அவசர அவசரமாய், ஓடிவருகிறார்கள், ஒருகையில் வளையல் பூண்டும் மறுகை வளையல் பூண மறந்தும், அவர்களின் அந்த நிலையை கண்டு நகைப்பர்கள் முன் நாணி வெட்கி விழி கவிழ்வர்..

(6) இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடை தொடுவார்பின்
இந்தவுடை ரவிக்கையெனச் சந்தமுலைக் கிடுவார்.

இன்னும் சிலர் அவன் மீதுண்ட மயக்கத்தில், ரவிக்கையை இடை கச்சென எண்ணி இடையில் சூடுவர், பிறகு உணர்வு திரும்ப, ஒரு சட்டு சிரிப்போடு, இது ரவிக்கை என்றுணர்ந்து மர்ப்பில் சூடிக் கொள்வர்..

(7) கருதுமனம் புறம்போக ஒருகண்ணுக்கு மையெடுத்த
கையுமா ஒருகணிட்ட மையுமாய் வருவார்

அவனையே எண்ணிய மனம் தம்மைவிட்டு நீங்கி அவனிடம் போக, இன்னும் சிலர் ஒரு கண்ணுக்கு மை தீட்டிக் கொண்டு, மறுக்கண்ணுக்கு மை தீட்ட எடுத்த கையோடு அப்படியே அவனை காண வருவர்..

(8) நிருபனிவன் நன்னகரத் தெருவிலே நெடுநேரம்
நில்லானோ ஒருவசனஞ் சொல்லானோ என்பார்

இந்த குற்றால மலையின் அரசனான இவன் அப்படியே நம் வீதியிலேயே நின்றுவிட மாட்டானோ, மயக்கும் வார்த்தைகளையும் மையல் சொற்களையும் நம்மிடம் பேசமாட்டனோ என்றும் ஏங்குவர்..

(9) மெய்வளையு மறுவுடைய தெய்வநா யகன்முடித்த
வெண்மதியும் விளங்குதெங்கள் பெண்மதிபோல் என்பார்

வளைந்த மெய்யுடைய வெண்மதி அதாவது முன்றாம் பிறை, எங்கள் பெண்மதி போல் விளங்குகிறது என்பார்கள்.. இங்கே அவர் சொல்வலத்தை ஆளுமையை கவனிக்க வேண்டும், மதி - நிலா, மதி - அறிவு, மனம்.. வெண்மதி - வெண்ணிலா, பெண்மதி - பெண்மனம்..

வெண்மதி போன்ற பெண்மனம், கூனல் பிறைப் போல சுருங்கி சுணக்கம் கொண்டதாம் காதலை வார்த்துவிட்டு நில்லாமல் போன நாயகனின் செயலால்..

கம்பனிக்கு பின் கவிராயன் என்று சொல்வது மிகையில்லை தானே.. ..

அடுத்த வரியை பாருங்கள், நான் சொன்னது சரியே என்று அவன் நிறுப்பித்திருப்பான்..


(10) பைவளைத்துக் கிடக்குமிவன் மெய்வளையும் பாம்புகட்குப்
பசியாதோ தென்றலைத்தான் புசியாதோ என்பார்

பெருகும் நச்சு கொண்டும் அவன் கழுத்தில் சுற்றி இருக்கும் பாம்பானது, நாங்கள் உற்ற காதலை மேலும் பெருக செய்து எங்களை வாட்டும் இந்த தென்றலை புசிக்காதோ என்று எண்ணுவர்.. "தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு" கவியரன் கூட பாடியிருக்கிறான், "மாலைதன் வேதனை கூட்டுதடி. காதல்தன் வேலையை காட்டுதடி" என்று மேத்தா பாடினார்..

மாலையும் தென்றலும் மையலை வார்க்கும் மன்மத பொழுதோ என்றி சிந்திக்கையில், தென்றலை பற்றிய சின்ன துணுக்கு கிடைக்கிறது (நம் மன்ற தென்றலை பற்றிய துணுக்கல்ல அது ).. தென்றல் மன்மதனின் வாகனம், அந்த தென்றல் மீதேறிவந்துதான் மன்மதன் அவர்களை வாட்டுகிறான் அதனால் அந்த தென்றலை நீ புசிப்பாயாக என்று சொல்கிறார்கள்..

அதுமட்டுமல்ல, பாம்பு காற்றை உண்ணும் என்பதை காளமேகன் கூட ஒரு சிலேடையில் கூறியிருக்கிறான், எலுமிச்சைக்கும் பாம்புக்குமான சிலேடையில்..

உப்பும்மேல் ஆடும் - என்று கூறுகிறான்..

அதாவது எலுமிச்சை மீது உப்பு தூவி ஊறவைப்பர் என்றும்/ பாம்பு காற்றை உன்று உப்பும் என்றும் பாடுகிறான்..

இதை காண்கையில் பாம்பு காற்றை உண்ணும் என்று நம் புலவர்கள் நம்பியிருக்கிறார்கள் என்பது புரிகிறது, இதற்கு விஞ்ஞானம் என்ன விளக்கம் அளிக்கிறது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..

(11) இவ்வளைக்கை தோளழுந்த இவன்மார்பி லழுந்தாமல்
என்னமுலை நமக்கெழுந்த வன்னமுலை என்பார்

அழகிய வளையல்களை அணிந்த கையும், நம் தோள்களும், இவன் மார்பில் அழுந்த்தாதோ அப்படி இவன் மார்ப்பில் அழுந்ததா நம் வன்ன முலைகள்தான்(வன்ன -வண்ணம் என்பதற்கு இணையாக கையாண்டிருக்கிறான்).. வன்னமுலைகள் என்பதில் இருந்து இன்னொரு விடயம் புரிகிறது, இவனை பார்த்து மயங்கியது கன்னியர் மட்டுமல்லர், கல்யாணமான பெண்களும் கூட என்பதும்.. வண்ணம் பூண்ட முலைகள் என்பது மார்ப்பில் தொய்யில் உற்றவர்கள் என்பதை உணர்த்துகிறது, ஆகையால் அவர்கள் கல்யாணமானவர்கள் என்பதை உணர முடிகிறது..

சரி அவன் என்ன சொல்ல வருகிறான் என்றால், அவன் மார்ப்பில் அழுந்தா இந்த முலைகளும் என்ன முலைகள் என்று தம் அங்கங்களை அவர்களே சலித்துக் கொள்வது போலுள்ளது.. இதை தழுவி கவியரசர் "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல" என்று பாடி இருப்பார், வைரமுத்து "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" என்று வழி மொழிந்திருப்பார்.. இதில் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், மூவரும் பெண்கள் பாடுவதாகவே பாடி இருக்கிறார்கள்.. பெண்களின் ஏக்கம் உண்மையில் இவ்வாறுதான் இருக்குமோ என்று கொஞ்சம் யோசிக்க தோன்றுகிறது..

(தில் விவேக் மாதிரி, பெண்களின் மனசை புரிஞ்சுக்கிட்டு ஒரு மெகா தொடர் எடுக்கும் எண்ணமில்லாததால் இந்த ஆராய்ச்சியை அப்படியே கைவிட்டுவிட்டு அடுத்த வரிக்கு நகர்கிறேன்.. )

(12) மைவளையும் குழல்சோரக் கைவளைகொண் டானிதென்ன
மாயமோ சடைதரித்த ஞாயமோ என்பார்

அவள் பார்த்த ஒரு பார்வையே நோய் தந்துவிட்டது, மறுப்பார்வை சிந்தினால் என்றால் அந்நோய்க்கு மறுந்தாகிவிடும் அந்த பார்வை என்று வள்ளுவனை ஏங்க வைத்த பெண்மையை, இங்கு கவிராயர் திரிகூட நாதனை கண்டு ஏங்க வைக்கிறார்..

தன்னழகின் மீது கர்வமுடைய ஒரு பெண்ணுக்கே உரிய திறத்தில் துவங்குகிறார், அந்த கார்மேகமும் கண்டும் வெட்கி கவிழும் அடர்த்தியும் கருமையும் கொண்டது என் கூந்தல், அந்த கூந்தல் இவன் பாலுண்ட காதலாய் முடிச்சில் நில்லாமல் அவிழ்ந்து கொள்கிறது, சங்க புலவர்கள் பசலை படர கைவளை நெகிழ்ந்தது என்று மாத்திரமே பாடினர், கவிராயர் ஒருபடி மேல் சென்று கைவளை நெகிழ்ந்தது மட்டுமல்ல கூந்தலும் சரிந்தது என்று கூறிருக்கிறார்.. காதலால் முடிச்சவிழ்க்குமா கூந்தல் என்றால் கண்டிப்பாய் வாய்பில்லை, ஆனால் திரிகூட நாதர் மீதுள்ள வயத்தில், அந்த பெண்கள் கூந்தலுக்கும் இடும் முடிச்சை கூட வலுவானதாய் இடவில்லை என்றும், கூந்தலை இறுகி முடிய வலுவற்று இளைத்துவிட்டார்கள் என்றும் சொல்ல முனைக்கிறான்..

வெறும் குற்றால நாதன் பவனி வருதலில் மாத்திரமே அழகு நயம் இவ்வளவு படிந்திருக்குமாயின், முழு குற்றால பதிகத்திலும் எவ்வளவு அழகு பொதிந்திருக்கும், வாய்ப்பு கிடைத்தால், குறவஞ்சி இலக்கியத்தை ஒரு முறையேனும் வாசியுங்கள்..

வசந்த வல்லியை சந்திக்க நேர்கையில் என் காதலையும் அவளுக்கு சொல்லிவிடுங்கள்..

தொடரும்..
அன்புடன் ஆதி

Offline Global Angel

ஆதி தங்களின் இந்த கவிதை பற்றிய தொடர் ஆக்கம் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் ஆவலையும் தூண்டுகின்றது ... சுருங்க கூறின் இதன் தொடர் பதிவுகளை மிகவும் ஆவலோடு எதிர் பார்கின்றேன் .. சங்க இலக்கியங்கள் படித்து பார்த்த அனுபவம் உண்டே தவிர அதை அலசி ஆராயும் எண்ணமோ, அன்றி கற்று கொள்ளும் வாய்ப்போ கிடைக்க பெறவில்லை வருத்தமான விஷயம் .... தமிழ் மேல் பற்றுதல் கொண்ட நான் அதை கிடைக்கும் போதெல்லாம் படித்து இன்புற்று வருகின்றேன் ... சங்க இலக்கியங்களின் மொழி நடையும் போக்கும் இபோது புரிந்து கொள்வதென்பது கடினம் ... அதை புரிந்து அதனை தான் திரைப்பட பாடல்களில் எழுதுகின்றார்கள் என இனம் பிரிப்பதும் கடினம் . தங்களின் இந்த தொடர் பதிவின் மூலம் இங்கே இதை படிக்கும் அனைத்து வாசகர்களும் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமையும் ...


சங்க இலக்கியங்களை காட்டி உதாரணங்கள் கூறி இங்கே கதம்பமாக அமைக்க எனக்கு அவளவு திறமை கிடையாது ... கத்து குட்டி என்றே கூறலாம் .. அவை அடக்கம் என்று முடிவு பண்ணி விடாதீர்கள் உண்மை நிலைமை இதுதான் .. இருந்தும் எனக்குள்ளும் சிறு ஆசை தங்களின் பதிவுகளை உல் வாங்கி  சிலவற்றுக்கு பதில் அளிக்கும் வண்ணமாக இபோதுள்ள திரை பாடலில் உள்ள கவி களங்களை ஆராயலாம் என நினைக்கிறன் ... இது தங்களின் பதிவை தழுவிதான் இருக்கும் .. தனியாக என் ஆய்வு இருக்காது .. அவளவு திறமையும் உங்களளவு எனக்கு கிடையாது ...


தங்களின் பதிவில் என் மனதை உரசிய ஒரு வரி

 "பெண்களின் ஏக்கம் உண்மையில் இவ்வாறுதான் இருக்குமோ என்று கொஞ்சம் யோசிக்க தோன்றுகிறது.."

இப்படி கூறி இருந்தீர்கள் ... பெண்கள் எதையும் இலகுவில் வெளியில் சொல்லி விடுவார்கள் ... இதனால்தான் பெண்களை ஓட்டை வாய்கள் என்று சொல்வார்கள் என்று நினைகின்றேன் ... ஆனால் அப்படி பெண்கள் கூற கேட்பது ஆண்களுக்கு நன்கு பிடிக்கும் ...உதாரணமாக .. அண்மையில் வெளிவந்த சிவாஜி பட பாடல் ...

 "அடடடா  குமரியின் வளங்கள்  குழந்தையின் சினுங்கல் முரண்பாட்டு மூட்டை நீ "

இந்த வரிகளினூடு ஆண்கள் பெண்களின் குழந்தை தனமான செயல்களை விரும்புபவர்கள் என்பதை அழகாக சொல்லி இருக்கின்றார் ... இதே இடதில்இன்னும் ஒன்று சொல்ல விரும்புகின்றேன் ..

"பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம் செயல் புயல் நானடி " 

இந்த வரிகளினூடு இரு கருத்துகளை சொல்ல வந்திருக்கிறார் கவிஞர் .. ஒன்று ஆண்கள் எதையும் அவளவு சீக்ரம் சொல்லிவிட மாட்டார்கள்  என்பது , இனோன்று ஆண்கள் தங்களை பெருமையாக எப்பவும் நினைத்து கொள்வார்கள் என்பது ... இதை தன்னம்பிக்கை என்றும எடுத்து கொள்ளலாம் , தம்பட்டம் என்றும் எடுத்து கொள்ளலாம் இல்லையா ...? ஒரு கவிஞனை தவிர பல பொருள் கொள்ள கூடிய வரிகளை சமைப்பது அவளவு எளிதில் மற்றவர்களால் முடியாது இல்லையா ....?

சங்க இலக்கியங்களில் நாயகி காதலினிடம் பேசுவதை விட அவள் தோழியிடம் காதலனை பற்றி அளவளாவுவது  மிகவும் சிறப்பாக இருக்கும் .. படித்த ஞாபகங்கள் உண்டு ..

இத்துடன் இதை முடித்து உங்கள் அடுத்த பதிவில் என் கருத்தினை கவரும் பகுதியோடு உரை உரசல் செய்ய வருகின்றேன் குருவே ...
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
இருபாடல்களின் பகுத்தாய்ந்தோமில்லையா ?

அவை பற்றி மேலும் பிறகு பேசுவோம்

புதுகவிதை என்றால் என்ன ?

புதுகவிதை என்பது யாப்பின்(யாப்பிலக்கண‌ம்) கட்டுக்குள் அடங்காமல் எழுதப்படும் கவிதைகள்

யாப்பின் கட்டுக்குள் எழுதப்படும் போது சீர் அசை தொடை நயம் பா இலக்கணம் எல்லாம் பார்த்து பார்த்து எழுத வேண்டியிருக்கும்

உதாரணமாக‌

வரியுதட்டின் வண்ணமென்னை மயக்கவில்லை - நீ
வார்த்திட்ட பார்வையால்நான் வளைய வில்லை
தரிக்கெட்டு என்னையுன்னில் தொலைக்க வில்லை - சரி
தவறுபாரா மல்காதல் உரைக்க வில்லை
விரிவான உன்னறிவை வியந்து கண்டேன் - நீ
விளக்குகிற அழகுதனில் விருப்பம் கொண்டேன்
பரிவான உன்மனதை பார்த்த பின்பே - என்
பார்வதியாய் ஆகுவாயோ என்று கேட்டேன்

http://www.friendstamilchat.com/forum/index.php?topic=7693.0

மேலுள்ள இந்த கவிதை எண்சீர் விருத்தம் என்று அழைக்கப்படும், எண்சீர் விருத்த்தில் ஒவ்வொரு வரியும் எட்டு சீர்கள் கொண்டதாக இருக்கும், வரியின் நீளம் கருத்தி, ஐந்தாம் சீரை அடுத்த வரியில் எழுதுவார்கள், இப்படி எட்டு சீர்கள் கொண்ட நான்கு வரிகளால் ஆனது ஒரு பாடல் அல்லது விருத்தம்

இந்த பா வகையில் 1,2,5,6 ஆகிய சீர்கள் மூவசை கொண்ட காய் சீராகவும், 3,7 ஆகிய சீர்கள் ஈரசையாகவும், கடைசி யசை நேர் என்றும் முடியும், 4 மற்றும் 8 ஆகிய சீர்கள் ஈரசை சீராகவும்  தேமா பயின்றும் வரும்

முதல் வரியை மட்டும் சீர் பிரித்து காட்டுகிறேன்

வரியுதட்டின் வண்ணமென்னை மயக்க வில்லை நீ
வார்த்திட்ட பார்வையால்நான் வளைய வில்லை

1) வரி|யுதட்|டின் = நிரை நிரை நேர் = கருவிளங்காய்

2) வண்|ணமென்|னை = நேர் நிரை நேர் = கூவிளங்காய்

3) மயக்|க = நிரை நேர் = புரிமா

4) வில்|லை = நேர் நேர் = தேமா

நீ = தனிச்சொல்

5) வார்த்|திட்|ட = நேர் நேர் நேர் = தேமாங்காய்

6) பார்|வையால்|நான் = நேர் நிரை நேர் = கூவிளங்காய்

7) வளை|ய = நிரை நேர் = புளிமா

8) வில்|லை = நேர் நேர் = தேமா

இப்போது சிறு புரிதல் உண்டாகியிருக்கும் என்று நம்புகிறேன், புரியவில்லை என்றால் முன்பு கூறிய இலக்கணத்தை மீண்டும் வாசிக்கவும்

இப்படி வார்த்தைக்கு வார்த்தை இலக்கணம் பார்த்து கருத்தையும் பிறழாமல் சொல்வதே யாப்பின் சவால், ஆனால் இலக்கணத்துக்கான சொல்ல வந்த கருத்தை சில நேரம் சொல்ல தடையாக இருக்கிறது யாப்பு எனும் குற்றச்சாட்டோடு புதுகவிதை கவிஞர்கள் யாப்பை புறக்கணித்து உரை நடைவீச்சோடு கவிதை எழுத ஆரம்பித்தார்கள்

இந்த புதுக்கவிதை வடிவத்திற்கு முதலில் பிள்ளையார்சுழி போட்டவன் எட்டையபுரத்தான் தான், சுதேசிமித்ரன் இதழில் வசன கவிதைகள் எழுதியதோடு நில்லாமல் அவற்றை பற்றி பல கட்டுரைகளையும் எழுதினான் பாரதி

அதற்கு பின் எழுத்து இதழில் நா.பிச்சமூர்த்தி போன்றவர்கள் எழுதினார்கள் ஆனால் அவை அன்று கவிதைகளாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை, எனினும் எழுத்து இதழ் இவர்களுக்கு மிக துணையாக இருந்தது, தற்போது நா.பிச்சமூர்த்தி போன்றவர்கள் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளாக அழைக்கப்படுகிறார்கள், புதுகவிதையின் முன்னோடிகளாக அல்ல, அந்த கதையை பிறகு பார்ப்போம்

பின் நா.காமராசன் தான் புதுகவிதையை முன்னெடுத்து பல கவிதைகளை எழுதினான், நா.காமராசன் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் அரசவை கவிஞராக இருந்தவர், காகித‌ மலர்கள், சாகாராவை தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மஹாலும் சில ரொட்டித்துண்டுகளும் போன்றவை அவரின் மிக முக்கியமான கவிதை தொகுதிகள் எனினும் அவற்றில் வந்த சில கவிதைகள் கவிதைகளா என்னும் கேள்வியை எழுப்பிக் கொண்டிருந்தன, ஆனால் அன்று நா.காமராசன் தைரியமாக எடுத்துவைத்த அடிதான் பிற்காலத்தில் புதுக்கவிதை மரபின் கடைகாலாக அமைந்தது

நா.காமராசனின் காகித மலர்கள் எனும் வார்த்தையே மிக பெரிய கவிதை என்பேன் நான், திருநங்கைகளை அவன் அப்படி அழைந்த்தான் அன்று, அதுவும் எப்படி கடவுளின் கருவரையேறாத காகித மலர்கள் நான் என்று சொன்னான், என்ன ஒரு உவமை பாருங்கள்

நா.காமராசனை பின்பற்றித்தான் வைரமுத்து போன்றவர்கள் எழுதினார்கள், வைரமுத்துவுக்கு இருந்த அரசியில் பின்புலம் நா.காமராசனுக்கு இல்லாமல் போனது துரதிஸ்டமே :(

ரத்த ஓட்டமுள்ள ரோஜா, ரத்த ஓட்டமுள்ள பூ, ரத்த ஓட்டமுள்ள சிலை, ரத்த ஓட்டமுள்ள நிலா என்று வைரமுத்து அடிக்கடி கையாளும் உவமை அவருடையதே அல்ல, அது நா.காமராசனுடையது மார்க்ஸியத்தில் அவன் தீவிரமாக இயங்கி கொண்டிருந்த காலத்தில் ஒரு மாலையில் தேநீர் அருந்த அவர் செம்மண் பாதையில் நடந்து செல்லும் போது அந்த செம்மண் அவனை கவர்ந்து ஒரு கவிதை எழுத வைக்கிறது அப்போது சொல்கிறான் இரத்த ஓட்டமுள்ள மண் என்று, அதை பிற்காலத்தில் வைரமுத்து அதிகமாக பயன்படுத்திக் கொண்டார்

நா.காமராசனுக்கு பின் புதுகவிதையை முன்னெடுத்து சென்றவர்கள் தான் வானம்பாடிகள் என்று தம்மை அழைத்துக் கொண்ட சில கவிஞர்கள், அப்துல் ரஹூமான், மு.மேத்தா, மீரா, ஈரோடு தமிழன்பன், இன்குலாப், சிற்பி போன்றவர்கள் எல்லாம் வானம்பாடி இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான்

திராவிட மேடைகளும் பெரும் துணையாய் அந்த காலத்தில் இருந்ததால், சாமானியர்களிடமும் கவிதையை கொண்டு சேர்ப்பது இவர்களுக்கு எளிமையாய் இருந்தது, எனினும் கவிதைக்கான மொழி கூரிழந்து மழுங்கடிக்கப்பட்டது இந்த காலக்கட்டத்தில் தான், திராவிட மேடைகள் இவர்களை அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டன, இவர்களும் அதற்கேற்ப கவிதை மொழிகளை மாற்றி அதனை மொண்ணையாக்கிவிட்டார்கள்

இந்த காலக்கட்டத்தில் தான் வைரமுத்துவும் இவர்களோடு சேர்ந்து புதுகவிதை தளத்தில் இயங்க ஆரம்பித்தார், எனினும் அவர் இன்றுவரை தீவிரமாய் திரைத்துறையில் இயங்கிவருவதால், தமிழிலக்கிய வரலாறு வைரமுத்துவை கவிஞராக ஏற்றுக் கொள்ளவே இல்லை அவரை வெறும் பாடலாசிரியராகத்தான் கூறுகிறது

பலரையும் புதுகவிதையை திரும்பி பார்க்க வைத்தவர் கவிவேந்தர் மு.மேத்தா தான், இவரின் தேச பிதாவுக்கு ஒரு தெருபாடகனின் அஞ்சலி கவிதை கவிஞர் வாலி போன்றவர்களை புதுக்கவிதைக்கு ஆதரகுரல் கொடுக்க வைத்தது என்றால் மிகையில்லை

அவரின் கவிதைகளில் இருந்து சில வரிகள்

உனது படங்கள்
ஊரெங்கும் ஊர்வலம் போகின்றன‌
நீ
ஏன் நடத்தெருவில் தலைகுனித்த படி
நிற்கிறாய்

******

பேகனின் மரபில் வந்தவர்கள்
எங்கள் மேலாடையையும்
கழட்டிக் கொண்டு போகிறார்கள்

***********

போன்றவரிகள் வீச்சில் பல புதுக்கவிதையிடம் காதல் கொள்ள ஆரம்பித்தார்கள்

காதல் கவிதையை கூட‌

தேசத்தை போல‌
நம் காதலும்
நடுத்தெருவுக்கு வந்துவிட்டது

உன் அம்மா உன்னை அலங்கரிப்பது
அணிகலன்களாலா ?
என் அவஸ்தைகளாலா ?

போன்றவரிகள் சிறப்பானவை

இவையெல்லாம் அவரின் கண்ணீர்ப் பூக்கள் தொகுதியில் இடம்பெற்ற கவிதைகள்

அப்துல் ரஹூமானோ ஒரு படி மேலே சென்று சர்ரியலிசத்தை கையாண்டார்

வண்ணானின் நாக்கு
அழுக்காக்கிய கற்பை
நெருப்பின் நாக்கு
சுத்தமாக்கியது

போன்ற கவிதைகள் அவரின் பால்வீதியில் காண முடியும்

இப்படி வளர்த்தெடுத்த புதுக்கவிதை, தினத்தந்தியின் குடும்ப மலர்போன்ற இதழ்களின் பின்னடைக்களில் இடம் பெருகிற‌

இறைவா!
எனக்கு என்ன நோய் கொடுத்தாலும்
மனநோய்மட்டும் தந்துவிடாதே
என் காதலி அங்கே தான் வசிக்கிறாள்

போன்ற அபத்தமான குப்பைகளால் தன் வரையறைகளை கவிதை இழந்துவிட்டது

இந்த இதழ்கள் அழியாத ஒரு நினைப்பை பலரின் மனதிலும் பதிய வைத்துவிட்டது, அதாவது கவிதை என்பது புரிகிற மாதிரியிருக்க வேண்டும்

மற்ற இலக்கிய வடிவத்துக்கும் கவிதைக்கும் உள்ள சிறப்பே அது சற்று புரியா வகையில் இருப்பதுதான், புரிகிற மாதிரி எழுத வேண்டுமானால் விரிவாய் ஒரு கட்டுரையோ கதையோ எழுதிவிட்டு போய்விடலாமே ஏன் கவிதையாக‌ எழுத வேண்டும்

கவிதை என்பது சுருங்க சொல்லி நிரம்ப புரியவைப்பது

உதாரணமாக‌


சிரிப்புக்கு விழுந்தால்
சிலப்பதிகாரம்
விழுந்ததற்கு சிரித்ததால்
மஹாபாரதம்

மாதவியின் சிரிப்புக்கு கோவலன் விழுந்ததால்தான் சிலப்பதிகாரமே இல்லையா

துரியோதனன் விழுந்ததை கண்டு திரௌபதி சிரித்ததால்தான் அவன் அவளை பழிவாங்க எண்ணி, சமயம் கிடைக்கும் போது துயிலுரிகிறான், அதனால்தான் திரௌபதி துச்சதனன் இரத்ததை என் குழலில் பூசும் வரை குழல் முடியமாட்டேன் என்று சபதம் எடுக்கிறாள், பாரதபோரும் மூள்கிறது இல்லையா


இருவரிகளில் ஒரு காப்பியத்தையே சொல்லிவிட முடிகிறது இல்லையா இதுதான் கவிதையின் பலம்

சென்றவன் உரைத்தான்
தென்னவன் அழைத்தான்
வந்தவள் நின்றாள்
வடிவழகே நீ யார் என்றான்

இது கல்லூரியில் படிக்கையில் பதிணைந்து மதிப்பெண் கேள்வியான சிலப்பதிகார கேள்விக்கு பதிலெழுத நேரமின்மையால் இப்படி எழுதினேன்

தலைவிரி கோலமாய் கண்ணகி போய் பாண்டிய மன்னனின் வாயிலில் நிற்கிறாள், என்ன வேண்டுமென கேட்கிறான் உன் மன்னனை பார்க்க வேண்டும் என்கிறாள், அவன் போய் துர்கை போலவும் காலியை போலவும் தலை குழல் முடியாத பெண் ஒருத்து உம்மை காண வந்திருக்கிறாள் என்று மன்னனிடம் சொல்கிறான், அதற்கு முன் மன்னை வேறு அவன் புகழ்பற்றியெல்லாம் பேசி புகழ வேண்டுமில்லையா, அதற்கு பின் மன்னை அவளை அழைத்துவர சொல்லுவான், அவள் வந்து அவன்முன் நின்று

தேராமன்னா செப்புவது அறியேன் என்று பேச ஆரம்பிப்பா

இதை எல்லாம் எழுத அப்ப நேரமில்லை அதனால் மேலுள்ள நான்கு வரிகளை மட்டும் எழுதினேன்

விடைத்தாள் கொடுக்கும் போது என் தமிழாசிரியை என்னை அழைத்து வகுப்பிற்கே இந்த வரிகளை வாசித்து காண்பித்தார், ஒரே கர ஒலி, பின் இது போன்ற பல கவிதைகள் இவரின் விடைத்தாளில் காண முடிகிறது என்று இன்னும் சில வற்றையும் வாசித்து காண்பித்தார், ஆனாலும் மேலுள்ள நான்கு வரிகள் தான் எனக்கு பல ரசிக நண்பர்களை பெற்றுத்தந்தது

கவிதை என்பது இப்படித்தான் சுருங்க சொல்லி நிரம்ப விளங்க வைப்பதா இருக்கனும், ஒரு விடயத்தை துல்லியமாய் சொல்ல கையாள்கிற வார்த்தைகளும் உவமைகளும் பொருந்தனும்

மனநோய் மட்டும் தந்துவிடாதே
மனதில் அவள் இருப்பதால்

என்று சொல்வதெல்லாம் கவிதையில்லை, இவை போன்றவைகள் செதுக்கப்படாத பாறைகள்

உன் பூவிதழ்
வடித்த தேனை
என் வண்டிதழ்
குடித்தது

பூவிதழ், வண்டிதழ், காதலர்களின் இதழ்களில் ஒன்று பூவாகவும் ஒன்று வண்டாகவும் இருக்கிறது, இருவரும் முத்தமிட்டு கொள்கையில் எச்சில் தேனாகிறது

இதனை கவிதை நேரடியாக சொல்லவில்லை, மறைமுகமாகவே சொல்கிறது இல்லையா

தொடரும்







« Last Edit: August 28, 2012, 12:31:07 AM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
ஆதி தங்களின் இந்த கவிதை பற்றிய தொடர் ஆக்கம் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் ஆவலையும் தூண்டுகின்றது ... சுருங்க கூறின் இதன் தொடர் பதிவுகளை மிகவும் ஆவலோடு எதிர் பார்கின்றேன் .. சங்க இலக்கியங்கள் படித்து பார்த்த அனுபவம் உண்டே தவிர அதை அலசி ஆராயும் எண்ணமோ, அன்றி கற்று கொள்ளும் வாய்ப்போ கிடைக்க பெறவில்லை வருத்தமான விஷயம் .... தமிழ் மேல் பற்றுதல் கொண்ட நான் அதை கிடைக்கும் போதெல்லாம் படித்து இன்புற்று வருகின்றேன் ... சங்க இலக்கியங்களின் மொழி நடையும் போக்கும் இபோது புரிந்து கொள்வதென்பது கடினம் ... அதை புரிந்து அதனை தான் திரைப்பட பாடல்களில் எழுதுகின்றார்கள் என இனம் பிரிப்பதும் கடினம் . தங்களின் இந்த தொடர் பதிவின் மூலம் இங்கே இதை படிக்கும் அனைத்து வாசகர்களும் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமையும் ...


சங்க இலக்கியங்களை காட்டி உதாரணங்கள் கூறி இங்கே கதம்பமாக அமைக்க எனக்கு அவளவு திறமை கிடையாது ... கத்து குட்டி என்றே கூறலாம் .. அவை அடக்கம் என்று முடிவு பண்ணி விடாதீர்கள் உண்மை நிலைமை இதுதான் .. இருந்தும் எனக்குள்ளும் சிறு ஆசை தங்களின் பதிவுகளை உல் வாங்கி  சிலவற்றுக்கு பதில் அளிக்கும் வண்ணமாக இபோதுள்ள திரை பாடலில் உள்ள கவி களங்களை ஆராயலாம் என நினைக்கிறன் ... இது தங்களின் பதிவை தழுவிதான் இருக்கும் .. தனியாக என் ஆய்வு இருக்காது .. அவளவு திறமையும் உங்களளவு எனக்கு கிடையாது ...


தங்களின் பதிவில் என் மனதை உரசிய ஒரு வரி

 "பெண்களின் ஏக்கம் உண்மையில் இவ்வாறுதான் இருக்குமோ என்று கொஞ்சம் யோசிக்க தோன்றுகிறது.."

இப்படி கூறி இருந்தீர்கள் ... பெண்கள் எதையும் இலகுவில் வெளியில் சொல்லி விடுவார்கள் ... இதனால்தான் பெண்களை ஓட்டை வாய்கள் என்று சொல்வார்கள் என்று நினைகின்றேன் ... ஆனால் அப்படி பெண்கள் கூற கேட்பது ஆண்களுக்கு நன்கு பிடிக்கும் ...உதாரணமாக .. அண்மையில் வெளிவந்த சிவாஜி பட பாடல் ...

 "அடடடா  குமரியின் வளங்கள்  குழந்தையின் சினுங்கல் முரண்பாட்டு மூட்டை நீ "

இந்த வரிகளினூடு ஆண்கள் பெண்களின் குழந்தை தனமான செயல்களை விரும்புபவர்கள் என்பதை அழகாக சொல்லி இருக்கின்றார் ... இதே இடதில்இன்னும் ஒன்று சொல்ல விரும்புகின்றேன் ..

"பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம் செயல் புயல் நானடி " 

இந்த வரிகளினூடு இரு கருத்துகளை சொல்ல வந்திருக்கிறார் கவிஞர் .. ஒன்று ஆண்கள் எதையும் அவளவு சீக்ரம் சொல்லிவிட மாட்டார்கள்  என்பது , இனோன்று ஆண்கள் தங்களை பெருமையாக எப்பவும் நினைத்து கொள்வார்கள் என்பது ... இதை தன்னம்பிக்கை என்றும எடுத்து கொள்ளலாம் , தம்பட்டம் என்றும் எடுத்து கொள்ளலாம் இல்லையா ...? ஒரு கவிஞனை தவிர பல பொருள் கொள்ள கூடிய வரிகளை சமைப்பது அவளவு எளிதில் மற்றவர்களால் முடியாது இல்லையா ....?

சங்க இலக்கியங்களில் நாயகி காதலினிடம் பேசுவதை விட அவள் தோழியிடம் காதலனை பற்றி அளவளாவுவது  மிகவும் சிறப்பாக இருக்கும் .. படித்த ஞாபகங்கள் உண்டு ..

இத்துடன் இதை முடித்து உங்கள் அடுத்த பதிவில் என் கருத்தினை கவரும் பகுதியோடு உரை உரசல் செய்ய வருகின்றேன் குருவே ...


உங்கள் பின்னூட்ட ஊக்கம் மகிழ்வை தருகிறது குளோபல் ஏஞ்சல்

சிவாஜி பாடலில் நல்ல விமர்சனம் செய்திருக்குறீர்கள், பெண்களின் குழந்தை தனத்தை ஆண்கள் அதிகம் நேசிக்கவே செய்கிறார்கள் என்பதைவிட அதில் தான் ஆண்கள் உருகி கரைந்துவிடுகிறார்கள் எனலாம்

உங்களின் விமர்சனம் சிறப்பாக இருக்கிறது, அதிக்கம் வாசிப்பு பழக்கம் உடையவர் நீங்கள் என்பதை தங்களின் கவிதைகளை வாசிக்கும் போதே புரிந்து கொண்டேன், எவ்வளவு ரசிக்கிறோமோ, எவ்வளவு வாசிக்கிறோமோ அவ்வளவு எழுத்து திறம் மெருகேறும்

இங்கு யாருமே குரு இல்லைங்க எல்லாரும் மாணவர்கள் தான் இறுதிவரை கற்றுக் கொண்டே இருக்கனும்
அன்புடன் ஆதி

Offline Global Angel

வாய் விட்டே சிரித்து விட்டேன் ... ஹஹஹா 

"இறைவா!
எனக்கு என்ன நோய் கொடுத்தாலும்
மனநோய்மட்டும் தந்துவிடாதே
என் காதலி அங்கே தான் வசிக்கிறாள்"

இதை படித்து ... அனால் என்ன செய்வது இப்படி கூறினால்தான் காதலிகளுக்கு காதல் வரும் நிலைக்கும் என்பது .. பசங்களோட நினைப்பு .. ஆனால் இது போலவும் சமயத்தில் தேவை படுகிறது என்ன பண்றது .. ஹஹஹா கவிதை என்பதற்கு சரியானா விளக்கம் தெரியாமைதான் இது போன்ற வார்த்தைகளும் கவிதை ஆக காரணம் என்று நினைகின்றேன் ..

தங்கள் பதிவில் இருந்து ஒன்றை நான் தெரிந்து கொண்டேன் ... ஒரு கவிதை ஓர் கவிஞன் வெற்றி பெற புலமை மட்டும் போதாது .. பின் புலங்களும் வலுவானதாக அமைய வேண்டும் என்பது .. இது இல்லாமையால் எதனை கவிஞர்கள் வாழ்கையில் தோற்று போய் இருக்கிறார்கள் .. தோற்று கொண்டிருகின்றார்கள் ...

Quote
"உன் பூவிதழ்
வடித்த தேனை
என் வண்டிதழ்
குடித்தது"

பூவிதழ், வண்டிதழ், காதலர்களின் இதழ்களில் ஒன்று பூவாகவும் ஒன்று வண்டாகவும் இருக்கிறது, இருவரும் முத்தமிட்டு கொள்கையில் எச்சில் தேனாகிறது

இதனை கவிதை நேரடியாக சொல்லவில்லை, மறைமுகமாகவே சொல்கிறது இல்லையா...


இதை படித்த போது எனக்கு ஒரு பாடல் ஞாபகம் வருகின்றது .. ரோஜாவை தாலாட்டும் தென்றல் எனும் பாடல்

"இலைகளில்  காதல் கடிதம்

வண்டு எழுதும் பூஞ்சோலை ..

விரல்களில் மேனி முழுதும்

இளமை வரையும் ஓர் கவிதை "

காதலன் காதலியை தீண்டுவதை  என்ன ஒரு உவமான உவமேயம் ... கவிதை என்றே வர்ணித்திருக்கிறார் ... மறைமுகமாக அதன் சுகத்தை புலபடுத்தும்  வார்த்தைகள் ...

"பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு "

இயற்கையான நிகழ்வு காற்றடித்து பூ அசைவது இல்லை வந்தமர்ந்து பூ அசைவது ... இதை ஒரு பெண்ணின் மன நிலையை மிகவும் எளிதான நடையில் எடுத்து கூறி இருக்கிறார் இல்லையா ..


"வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது

உனது கிளையில் பூ ஆவேன்

இலையுதிர் காலம் முழுதும்

மகிழ்ந்து உனக்கு வேராவேன் ..."

இன்பத்தில் உனக்கு சந்தோசத்தை கொடுக்க கூடியவளாக இருப்பேன் .. முதுமையில் உன்னை தாங்கும் துணை ஆவேன் .. என்ன அருமையனா கவித்துவமான தத்ரூபமான வரிகள் ... பெண்களின் அன்பு  ஆசைகளை கூறும் அருமையான வரிகள் ..

"பூவிலே மெத்தைகள் தைப்பேன்

கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்

நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் "

இந்த வரிகளை படிக்கும் போது நியமாகவே எனக்கு சிறிப்பு வரும் ... இதை எழுதியது ஒரு ஆண் கவிஞர் .. ஒரு ஆணின் மன நிலை எப்பொழுதும் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக இல்லை மறை காயாக சொல்லி இருக்கின்றார் ... மிகவும் அருமையான பிடித்த பாடல் வரிகள்


மறைமுகமாக விரகம் தொனிக்கும் கருத்துகளை கூட சுலபமாக எளிய நடையில் அற்புதமாக கூற கூடிய திறமை கவிகளுக்கு மட்டுமே உடமை ..

இதை எல்லாம் கவிதை என்று ஏற்ற சமுகம் தான் .. நீங்கள் சொல்லும் குப்பை என்ற கவிதையையும் ரசிக்கிறது ஹஹஹா ...


ஆதி சகலமும் கற்று தேர்ந்தவன் அல்லன் ஆசான் ... தனக்கு தெரிந்த ஒன்றை பிறர்க்கு கற்று கொடுக்கும் எவனும் ஆசானே ...அந்த வகையில் உங்களிடம் கற்றுக் கொள்கிறேன் ...எனவே நீங்கள் ஆசான்  ...
[/color]
« Last Edit: August 28, 2012, 12:51:44 AM by Global Angel »
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
இதுமட்டுமில்லைங்க‌

ஹைகூ எனும் பெயரில் நிகழ்கிற கவிதை படுகொலைகள் இன்னும் கொடுமையானது

ஏ துடப்பமே
உனக்கு யார் கற்று கொடுத்தது
கூட்டலும் பெறுக்கலும்

****

நிலா என்ன டயட்டில்
இருக்கிறதோ ?
பிறை

ரோஜாவை தாளாட்டும் தென்றல் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல்

உங்கள் விமர்சனத்தை மிக கச்சிதம், பாராட்டுக்கள்

வைரமுத்துவின் பாடல் வரிகள் எப்போதும் கொஞ்சம் விரக ஈயம் பூசியும் இருக்கும்

இந்த பாடலை போல‌

அந்தமழை மொழிகிறது ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

எனும் பாடலும் மிக அற்புதமானவை

அந்தி வானத்தில் பெய்யும் மழையில் அந்தியின் நிறங்கள் தான் தெரியும், ஆனால் இங்கே காதலின் முகம் தெரிகிறது என்கிறார்

அந்த துளிகளின் தெரிகிற சிவப்பில் அவளின் நாண முகத்தை காண்கிறான் கவிஞன்

நாணத்துக்கு வெட்கத்துக்கும் ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு, அதனை கவியரசர் அழகாக ஒரு பாடலில் சொல்லியிருப்பார்

அக்கம் பக்கம் யாருமிருந்தால் வெட்கம் வெட்கம் வெட்கம்
அன்பு உந்தன் அருகிலிருந்தால் நாணம் நாணம் நாணம்

கணவனுடன் மனைவி தனிமையில் இருக்கையில் உதிர்ப்பதே நாணம்

மற்றவர்கள் முன் அவள் உதிர்ப்பது வெட்கம் மட்டும்தான்

அந்த நாணமுகத்தைத்தான் கவிஞன் அந்த துளிகளில் காண்கிறான்
அன்புடன் ஆதி

Offline Global Angel

நன்றி  ஆதி .. ஹஹா  ஆங்கில கலப்பில் தமிழ் தரம் இறங்குகின்றது ... வெட்கம் நாணம் இவற்றுக்கு அருமையான விளக்கம் ... நம்ம பசங்க கூட என்னை அடிகடி கேட்பாங்க .. அரட்டை வளாகத்தில் அடிகடி வெட்கப்படும் சமிலி போடுவேன் ... எல்லர்கிடும் வெட்கம் வருமா என்று ... நான் சொல்லும் ஒரே பதில் ... வெட்கம் வரும் எல்லார் இடத்திலும் .. அவங்க இடத்தில மட்டும் வெக்கம் வராது வேறு என்று சொல்லுவேன் .. விளையாட்டுக்கு சொன்னாலும் .. அது நிஜம் தான் ...தங்களின் விளக்கம் அருமை ... காதலுக்கு விரகம் என்பது சாப்பாட்டுக்கு உப்பு போன்றது ... உப்பிலாத சாப்பாடு எப்டி சுவை குறைவோ .. அது போல்தான் விரகம் இல்லாத காதல் ...


தெய்வீக காதல் என்கிறார்களே அதை பற்றி கவிதை  எதாவது விளக்கம் இருக்கின்றதா ... ?
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
ஹைகூ என்பது ஜப்பானிய கவிதை வடிவம், ஜென் குருக்கள் அந்த கவிதை வடிவத்தை ஜென் நிலையை பதிவு செய்ய, பிறருக்கு எடுத்து செல்ல பயன்படுத்தினார்கள், அப்பேர்ப்பட்ட கவிதை வடிவம் இன்று நம்மவர்கள் கிட்ட பாடாய் படுது

தெய்வீக காதலுக்கு லேலி மஜ்னுவை சொல்லலாம்

மஜ்னு என்றால் பைத்தியம் என்று அர்த்தம்

லேலி என்பவள் வளர்ச்சியற்ற குள்ளமான பெண், அவளைத்தான் மஜ்னு காதலிக்கிறான்

ஒரு நாள் மஜ்னு பாலைவன மணல்பரப்பில் அமர்ந்து மணலில் ஏதையோ தேடிக் கொண்டிருக்கிறான், அவ்வழியே சென்றவர்கள் என்ன தேடுகிறாய் என்று கேட்கிறார்கள், மஜ்னு சொல்கிறான் நான் லேலியை தேடுகிறேன்

காதலியை சுடுமணலிலும் காண முயல்வது, அவளின் ஸ்பரிசமாய் கொதிக்கும் மணலையும் எண்ணுவது, இது மிக எளிதானது கிடையாது

அன்புடன் ஆதி

Offline Global Angel

நான் அந்த காதல் கதை படித்ததில்லை கேள்விபட்டிருக்கிறேன் பெயர்கள் ... நம்மாளுங்க புதுசு புதுசா கண்டு பிடிகுறதா சொல்லி  குளறு படி செய்றது வளமைதனே ....



அவளவு எளிதில்லை என்று சொல்கின்றீர்கள் ஆதி .. நன் சற்று முன் ஓர் காதல் கவிதை படித்தேன் .. அந்த நபர் கூட எறியும் நெருப்பில் காதலியின் நினைவை கொள் / கொள்கிறாரே .. அது தெய்வீக காத்தாலை இருக்கும் என்ன சொல்கிறீர்கள்

Quote
எதைப்பருகி என்காதல்
விரக்தி ஆற்ற,எரி நெருப்பா ?

 :D
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
ha ha ha

அந்த வரிகளில் வேற அர்த்தம் இருக்கு

அதாவது ஐம் பூதங்களில் நெருப்புக்கு ஒரு தனி சிறப்பு உண்டு

நீர், காற்று இவையெல்லாம் நாம் பயன்படுத்துவதால் மாசு படும்

ஆனால் நெருப்பு அப்படியல்ல அது நல்லதையும் எரிக்கும் கெட்டதையும் எரிக்கும், அது எப்பவும் அதுவாகவே இருக்கும் எந்த மாற்றமும் இல்லாமல், அதனாலத்தான் துறவில் காவி உடையை உடுத்தினாங்க

அத்தகைய நெருப்பை நான் பருகினா அது என்னையும் எரிச்சுடுமில்லையா அதுதான் நான் சொல்ல முயன்றது
அன்புடன் ஆதி

Offline Global Angel


அட ஆமாம் .. நெருப்பு .. தனி சிறப்பு ... கற்புடைய பெண்டிர் நெருப்புக்கு சமானம்  என்று சொல்லுவார்கள் இல்லையா ...  உங்கள் அடுத்த தொகுப்பை சீக்கிரம் பதிவிடுங்கள் .. ஹிஹி

                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
அடுத்தது ஹைகூ கவிதைகள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்

இவ்வுலகில் தோன்றிய பல ஆன்மீக தத்துவங்களில் ஜென்னும் ஒன்று..

தாவ் என்னும் மதத்தில் இருந்தே ஜென் தோன்றியதாக கூறுவார்கள்..

தாவ் மனிதனும் இயற்கையும் இணக்கமாக வாழ்வது என்பதே இதன் கருத்து. தாவ் மதத்தை ஆரம்பித்தவர் சாங்லிங் என்பவர்.

ஜென், தாவ் மதத்தில் இருந்து தோன்றியதென்று கூறினாலும்..

தியானம் - தியான் - ஜென் என்னும் ஓஷோ, ஜென் இந்திய ஆன்மீக தத்துவங்களில் இருந்தே பிறந்ததாக கூறுகிறார்..

எனக்கு ஓஷோவின் கருத்தில் உடன்பாடு இல்லை, தியானம் என்பது எல்லா ஆன்மீகவாதிகளுக்கும் பொதுவானது..

இந்திய ஆன்மீக மேதைகளால் கற்பிக்கப்பட்ட குண்டலினி என்பதே முழுதாக இந்தியாவில் தோன்றிய ஒன்றல்ல..

7 குண்டலினிகளில் 2 மட்டுமே நாம் அறிந்தது, மற்ற 5-ல் 2 கிறிஸ்துவர்களிடம் இருந்தும், 3 சூஃபிகளிடம் இருந்தும் பெற்றவை..

அதாவது இந்த தியானம் என்பது இந்தியாவில் மட்டும் தோன்றிய ஒன்றல்ல, அது உலகளாவி பரந்த ஒன்று..

அப்படி இருக்க ஜென் - தியான் என்பதெல்லாம் சொல்வதற்கு அழகாக இருக்குமே அன்றி, ஏற்க கூடியதல்ல..

நம் ஆன்மீகத்திற்கு இருக்க கூடிய பெரும் சிறப்பென்ன வென்றால், தியானத்துக்கென்று நம்மிடம் உபநிஷங்கள் இருக்கின்றன, இவைப் போன்ற நூல்கள் மற்ற மதங்களில் இல்லை..

அஸ தோமா சத் கமய
தம ஸோமா ஜோதிர் கமய
மிருத் யோமா அமிர்தம் கமய
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்

இந்த உபநிஷ மந்திரமானது எல்லா ஆன்மீக கொள்ளைகளுடனும் ஒற்றுப் போகிறது..

அஸ தோமா சத் கமய

பொய்மையில் இருந்து என்னை மெய்மைக்கு அழைத்து செல்வாயாக

தம ஸோமா ஜோதிர் கமய

இருளில் இருந்து என்னை வெளிச்சத்துக்கு அழைத்து செல்வாயாக

மிருத் யோமா அமிர்தம் கமய

மரணத்தில் இருந்து மரணமற்ற நிலைக்கு என்னை அழைத்து செல்வாயாக


இதைத்தான் அனைவரும் தேடுகிறோம்.. இந்த நிலையை அடைய துறவிகள், காடு சென்று தவமிருந்தார்கள் என்கிறோம்..

இதைத்தான் ஜென்னும் தன் மூன்று பண்புகளாக கூறுகிறது. மௌனம், தனிமை, ஏற்புத்தன்னை.

மௌனம் - தவம்

தனிமை - காடு புகல்

ஏற்புத்தன்மை - விழிப்புநிலை

இப்படித்தான் ஓப்பீடு செய்துக் கொள்கிறேன் நான்..

ஏற்புத்தன்மை

இதனை பெரும் ஆன்மீகவாதிகள் எல்லோரும் நமக்கு போதித்திருக்கின்றனர்..

அஸ தோமா சத் கமய இந்த வரிக்கும் ஏற்புத்தன்மைக்கும் ஓற்றுமைகள் உண்டு..

இந்த வாழ்வில் நிகழும் ஒவ்வொன்றும் எனக்கானது, என்னுடையது, நான் சந்திக்க வேண்டியது என்னும் விழிப்பு நிலையை தருவது..

ஒரு இன்பத்தில் இருந்து நம்மால் எப்படி விலகி நிற்க இயலாதோ அவ்வாறே ஒரு துன்பத்தில் இருந்தும் நம்மால் விலகிவிட இயலாது, வாழ்க்கை உனக்கு பரிமாறும் ஒவ்வொன்றையும் ருசி, அது உனக்கானது, எதை நாம் சுவைக்க மறுக்கிறோமோ, அதனை நாம் இழக்கிறோம், அதனால் நாம் இழப்பது வாழ்வையும் தான்..

இதுதான் ஏற்புத்தன்மையின் அடிப்படைத் தத்துவம் என்றாலும், ஏற்புத்தன்மை என்னும் பண்பில் பல உட்பொருள்கள் உண்டு..

அதாவது "நீ நீயாய் இருத்தல்" என்பதும் "நான் நானாய் இருத்தல்" என்பதும் "நாம் நாமாய் இருத்தல்" என்பதும் இந்த ஏற்புத்தன்மையின் உட்பொருளாகும்

புத்தம் என்பது புத்தனாய் வாழ்த்தல் என்பார்கள்..

ஆனால் நான் நானாய் வாழும் பொழுது புத்தனாய் வாழ இயலாதுதானே..

புத்தனை எனக்குள் உயிர்ப்பித்து, புத்தனை எனக்குள் வாழ்வித்தாலும் நானாய் வாழ இயலாதுதானே..

புத்தன் என்பவன் ஒரு வாசல், ஒரு வாசலின் வழியாக நான் உள்ளும் நுழையலாம், வெளியும் போகலாம், உள் நுழைத்தல் என்பது என்னுள் ஆழ்ந்து போதலாகவும், வெளியே செல்வது என்பதை நானல்லாதவைகளில் இருந்து வெளியேறுவதாகவும் கருதுகிறேன்..

என்னுள் ஆழ்ந்து போகும் போதோ, நானல்லாதவைகளில் இருந்து நான் வெளியேறும் போதோ நான் கலப்படமற்ற நானாக இருக்கிறேன்..

நான் நானாகவும், நீ நீயாகவும் இருத்தல் என்பது யாவரும் சமம் என்பதையும் காட்டுக்கிறது..

யாவரும் சமம் எனும் போது, இறைவனும் நாமும் கூட சமம் தானே ?

எங்கும் இறைவன் நிறைந்திருக்கின்றான் என்றால், எங்கும் நானும் நிறைந்திருக்கிறேன் தானே ?

இந்த சிந்தனையோடு இரு கவிதைகளை பார்ப்போம்..

பழைய வீடு
ஊர்ந்து செல்கிறது நத்தை
புத்தனின் முகம்..

----------

பழைய குளம்
குதித்தது தவளை
தண்ணீர் சத்தம்

தொடரும்..
« Last Edit: August 28, 2012, 11:41:17 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline Global Angel


ஐயையோ தலை சுத்துது ... லாஜிக் படிச்சவரா நீங்க தலை சுத்துது போங்க ... ஆமா இந்த கவிதைகளின் சரியான அர்த்தம்தான் என்ன ..?


பழைய வீடு
ஊர்ந்து செல்கிறது நத்தை
புத்தனின் முகம்..

----------

பழைய குளம்
குதித்தது தவளை
தண்ணீர் சத்தம்

??????