//ஒருகைவளை பூண்டபெண்கள் ஒருகைவளை பூணமறந்
தோடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்
இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடை தொடுவார்பின்
இந்தவுடை ரவிக்கையெனச் சந்தமுலைக் கிடுவார்
கருதுமனம் புறம்போக ஒருகண்ணுக்கு மெயெடுத்த
கையுமா ஒருகணிட்ட மையுமாய் வருவார்
//
நண்பன் ஒருவன் மூலம் மேலுள்ள இந்த வரிகள் வாசிக்க கிடைத்தது, வெறுமனே இந்த வரிகளை வாசித்த தருணங்களில் இந்த பாடல் எந்த இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது, எந்த தருணத்திற்காக எழுதப்பட்டது என்று எனக்கு தெரியாது, அதனால் இந்த பாட்டின் மேலான என் புரிதல்கள் தவறாக அமைந்துவிட்டது..
மது உண்ட ஒரு நங்கையின் நடவடிக்கையாகவே இதனை நான் புரிந்து கொண்டேன்..
சமீபத்தில் ProjetMadurai தளத்தில் திருக்குற்றாலக் குறசஞ்சி படிக்க கிடைதது.. திருகூடராசப்ப கவிராயரால் எழுதுப்பட்ட நாடக கவியம்.. கம்பனுக்கு பிறகு திருகூடராசப்பன் என்று சொன்னால் மிகையில்லை என்று தோன்றுகிறது அந்த அளவுக்கு அழகிய சொல்நடை, தெளிவான உவமைநயம், காட்சி விவிரிப்பு என்று தமிழையாளும் செங்கோலாக தன் எழுதுகோலை மாற்றிக் கொண்டிருக்கிறான்..
குறவஞ்சி என்றதும் பள்ளி காலத்தில் படித்த குறத்திப்பாட்டும், சந்த தாலையாட்டமும் தான் ஞாபகம் வரும், ஆனால் கவிராயன் கண்ணிகளை பின்னுவதிலும் விருத்தங்களை வனைப்பதிலும் சலைக்காமல் விளையாடி இருக்கிறான் எனபதும் உண்மை..
அதுமட்டுமல்ல, கவிராயர் திரிகூட நாதனை, வசந்த வல்லியை, குற்றாலமலையை குறவஞ்சியை என யாரையும் பாரபட்சம் பாராமல் சிறப்பாய் விவரித்து வர்ணித்து வனப்புடன் பாடியிருக்கிறார்..
அப்புரம் என்னை கர்வந்த இலக்கிய நங்கைகளின் வரிசையில் இப்ப வசந்தவல்லியும் வந்து சேர்ந்துட்டாள்..
கவிராயர் வசந்த வல்லியை வர்ணித்த வர்ணிப்பில், அவள் அழகு திறத்தில், இளமை வளத்தில், செய்கை நலத்தில், என் மனம் லயித்து மயங்கிவிட்டது, அவள் மீதுண்ட அந்த மையலை எண்ணிப்பார்க்கையில் எனக்குள் ஒரு மூலையில் "காதல் என்பதா காமம் என்பதா, இரண்டின் மத்தியில், இன்னொரு உணர்ச்சியா" எனும் வைரமுத்துவின் வரிகள் நுண்ணோசையில் ஒலிக்கிறது..
இப்பேர்ப்பட்ட வசந்த வல்லி காவியத்தில் அறிமுகமாவதற்கு முந்தைய பாடலில் இடம் பெற்றிருக்கும் கண்ணிகள்தான் மேலுள்ள கண்ணிகள்..
திரிகூட நாதர் உலாவரும் சிறப்பையும் அழகையும், அவரை கண்டு மயங்கும் நங்கைகளின் நளினத்தையும் 12 கண்ணிகளில் பாடி இருக்கிறார் கவிராயர்..
மேலுள்ள நான்குவரிகளுக்கு மாத்திரம் விளக்கம் பகிர்ந்து முழுப்பாடலையும் தங்களை சுவைக்கவிடாத சுயநலக்காரனாக விருப்பமில்லாததால், 12 கண்ணிகளின் விளக்கங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
திரிகூட நாதர் உலா வருகையில் அவரின் அழகின் மையலுற்ற நங்கைகள் பின் வருமாறு சொல்கிறார்கள்..
(1) ஒருமானைப் பிடித்துவந்த பெருமானைத் தொடர்ந்துவரும்
ஒருகோடி மான்கள்போல் வருகோடி மடவார்
திருக்குற்றால நாதர் ஒருகையில் மானை பற்றியவாறு தேரில் நின்றிருக்கிறார், அந்த தேரை சுற்றியும் பின் தொடர்ந்து மங்கையர்கள் வலம் வருகின்றனர், அந்த மங்கையர்கள் மான்களை ஒத்தவர்களாக இருக்கின்றனர்.. அவன் கைப்பற்றிய மான் ஒன்றுதான் கைப்பற்றாத மான் ஒரு கோடி என்றவாறும்.. தன்னை கைப்பற்ற மாட்டானா என்று ஏங்கி மயங்கி பின் தொடரும் மான்கள் மங்கையர் என்றவாறு உரைக்கிறான்..
(2) புரிநூலின் மார்பனிவன் அயனென்பார் அயனாகில்
பொங்கரவ மேதுதனிச் சங்கமேது என்பார்
அப்படி மயங்கிய பெண்கள் இவர் உண்மையில் திரிகூடநாதர்தானா இல்லை பிரம்மன என்றும் வியக்கிறார்கள் அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களும் அழகே, முப்புரி நூலை தன் செறிந்த மார்பிலே புனைத்திருக்கிறானே அதனால் இவர் பிரம்மனோ என்று சிலர்வியக்க, அடி இவர் பிரம்மன் இல்லை, திரிகூட நாதனே என்று சிலர்விளக்குகிறார்கள் பின்வருமாறு, பிரம்மன் என்றால் கழுத்தில் பாம்பணி ஏது, கதுகளில் சங்காலான குண்டலமேது, அதனால் இவர் அயனில்லை என்கிறார்கள்..
(3) விரிகருணை மாலென்பார் மாலாகில் விழியின்மேல்
விழியுண்டோ முடியின்மேல் முடியுண்டோ என்பார்
இன்னும் சில பெண்டீர் இவர் மிகு அருள் கொண்ட திருமாலோ என்பார்கள், அதற்கு சிலர் இவர் திருமால் இல்லையடி, திருமாலானால் நெற்றி விழியேது, சடைமுடித்தான் ஏது என்பார்கள்..
(4) இருபாலு நான்முகனுந் திருமாலும் வருகையால்
ஈசனிவன் திரிகூட ராசனே என்பார்.
அயனுமில்லை, மாலுமில்லை என்பது உண்மைதான் ஏனெனில் இவரின் வலம் இடமாகிய இருப்பக்கங்களிலும் நான்முகமும் திருமாலும்தான் நின்றிருக்கிறார்கள், அதனால் அவர்கள் நடுவில் வீற்றிருக்கும் அவன் திரிகூடநாதன் தான் என்பார்கள்..
காதல் மயக்கத்தில் பக்கத்தில் இருப்பவரையும் மறுந்துவிடுவார்கள், பக்கத்தில் இருப்பவரும் மரைந்துவிடுவார்கள் என்பதை எவ்வளவு அழகாய் கவிராயர் காட்சிப்படுத்துகிறார் பாருங்கள்..
(5) ஒருகைவளை பூண்டபெண்கள் ஒருகைவளை பூணமறந்
தோடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்
(இங்கிருந்துதான் நண்பர் கொடுத்தப்பாடல் ஆரம்பமாகிரது)..
இவ்வாறான அழகு பூண்டு, பவனியோடு வரும் மங்கையரை மயக்கி வரும் திருக்குற்றால நாதன், தம்முடைய வீதிக்கு வந்துவிட்டார் என்றறிந்த பெண்கள், அவன் மீதுள்ள மயக்கத்தால் அவசர அவசரமாய், ஓடிவருகிறார்கள், ஒருகையில் வளையல் பூண்டும் மறுகை வளையல் பூண மறந்தும், அவர்களின் அந்த நிலையை கண்டு நகைப்பர்கள் முன் நாணி வெட்கி விழி கவிழ்வர்..
(6) இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடை தொடுவார்பின்
இந்தவுடை ரவிக்கையெனச் சந்தமுலைக் கிடுவார்.
இன்னும் சிலர் அவன் மீதுண்ட மயக்கத்தில், ரவிக்கையை இடை கச்சென எண்ணி இடையில் சூடுவர், பிறகு உணர்வு திரும்ப, ஒரு சட்டு சிரிப்போடு, இது ரவிக்கை என்றுணர்ந்து மர்ப்பில் சூடிக் கொள்வர்..
(7) கருதுமனம் புறம்போக ஒருகண்ணுக்கு மையெடுத்த
கையுமா ஒருகணிட்ட மையுமாய் வருவார்
அவனையே எண்ணிய மனம் தம்மைவிட்டு நீங்கி அவனிடம் போக, இன்னும் சிலர் ஒரு கண்ணுக்கு மை தீட்டிக் கொண்டு, மறுக்கண்ணுக்கு மை தீட்ட எடுத்த கையோடு அப்படியே அவனை காண வருவர்..
(

நிருபனிவன் நன்னகரத் தெருவிலே நெடுநேரம்
நில்லானோ ஒருவசனஞ் சொல்லானோ என்பார்
இந்த குற்றால மலையின் அரசனான இவன் அப்படியே நம் வீதியிலேயே நின்றுவிட மாட்டானோ, மயக்கும் வார்த்தைகளையும் மையல் சொற்களையும் நம்மிடம் பேசமாட்டனோ என்றும் ஏங்குவர்..
(9) மெய்வளையு மறுவுடைய தெய்வநா யகன்முடித்த
வெண்மதியும் விளங்குதெங்கள் பெண்மதிபோல் என்பார்
வளைந்த மெய்யுடைய வெண்மதி அதாவது முன்றாம் பிறை, எங்கள் பெண்மதி போல் விளங்குகிறது என்பார்கள்.. இங்கே அவர் சொல்வலத்தை ஆளுமையை கவனிக்க வேண்டும், மதி - நிலா, மதி - அறிவு, மனம்.. வெண்மதி - வெண்ணிலா, பெண்மதி - பெண்மனம்..
வெண்மதி போன்ற பெண்மனம், கூனல் பிறைப் போல சுருங்கி சுணக்கம் கொண்டதாம் காதலை வார்த்துவிட்டு நில்லாமல் போன நாயகனின் செயலால்..
கம்பனிக்கு பின் கவிராயன் என்று சொல்வது மிகையில்லை தானே.. ..
அடுத்த வரியை பாருங்கள், நான் சொன்னது சரியே என்று அவன் நிறுப்பித்திருப்பான்..
(10) பைவளைத்துக் கிடக்குமிவன் மெய்வளையும் பாம்புகட்குப்
பசியாதோ தென்றலைத்தான் புசியாதோ என்பார்
பெருகும் நச்சு கொண்டும் அவன் கழுத்தில் சுற்றி இருக்கும் பாம்பானது, நாங்கள் உற்ற காதலை மேலும் பெருக செய்து எங்களை வாட்டும் இந்த தென்றலை புசிக்காதோ என்று எண்ணுவர்.. "தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு" கவியரன் கூட பாடியிருக்கிறான், "மாலைதன் வேதனை கூட்டுதடி. காதல்தன் வேலையை காட்டுதடி" என்று மேத்தா பாடினார்..
மாலையும் தென்றலும் மையலை வார்க்கும் மன்மத பொழுதோ என்றி சிந்திக்கையில், தென்றலை பற்றிய சின்ன துணுக்கு கிடைக்கிறது (நம் மன்ற தென்றலை பற்றிய துணுக்கல்ல அது ).. தென்றல் மன்மதனின் வாகனம், அந்த தென்றல் மீதேறிவந்துதான் மன்மதன் அவர்களை வாட்டுகிறான் அதனால் அந்த தென்றலை நீ புசிப்பாயாக என்று சொல்கிறார்கள்..
அதுமட்டுமல்ல, பாம்பு காற்றை உண்ணும் என்பதை காளமேகன் கூட ஒரு சிலேடையில் கூறியிருக்கிறான், எலுமிச்சைக்கும் பாம்புக்குமான சிலேடையில்..
உப்பும்மேல் ஆடும் - என்று கூறுகிறான்..
அதாவது எலுமிச்சை மீது உப்பு தூவி ஊறவைப்பர் என்றும்/ பாம்பு காற்றை உன்று உப்பும் என்றும் பாடுகிறான்..
இதை காண்கையில் பாம்பு காற்றை உண்ணும் என்று நம் புலவர்கள் நம்பியிருக்கிறார்கள் என்பது புரிகிறது, இதற்கு விஞ்ஞானம் என்ன விளக்கம் அளிக்கிறது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..
(11) இவ்வளைக்கை தோளழுந்த இவன்மார்பி லழுந்தாமல்
என்னமுலை நமக்கெழுந்த வன்னமுலை என்பார்
அழகிய வளையல்களை அணிந்த கையும், நம் தோள்களும், இவன் மார்பில் அழுந்த்தாதோ அப்படி இவன் மார்ப்பில் அழுந்ததா நம் வன்ன முலைகள்தான்(வன்ன -வண்ணம் என்பதற்கு இணையாக கையாண்டிருக்கிறான்).. வன்னமுலைகள் என்பதில் இருந்து இன்னொரு விடயம் புரிகிறது, இவனை பார்த்து மயங்கியது கன்னியர் மட்டுமல்லர், கல்யாணமான பெண்களும் கூட என்பதும்.. வண்ணம் பூண்ட முலைகள் என்பது மார்ப்பில் தொய்யில் உற்றவர்கள் என்பதை உணர்த்துகிறது, ஆகையால் அவர்கள் கல்யாணமானவர்கள் என்பதை உணர முடிகிறது..
சரி அவன் என்ன சொல்ல வருகிறான் என்றால், அவன் மார்ப்பில் அழுந்தா இந்த முலைகளும் என்ன முலைகள் என்று தம் அங்கங்களை அவர்களே சலித்துக் கொள்வது போலுள்ளது.. இதை தழுவி கவியரசர் "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல" என்று பாடி இருப்பார், வைரமுத்து "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" என்று வழி மொழிந்திருப்பார்.. இதில் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், மூவரும் பெண்கள் பாடுவதாகவே பாடி இருக்கிறார்கள்.. பெண்களின் ஏக்கம் உண்மையில் இவ்வாறுதான் இருக்குமோ என்று கொஞ்சம் யோசிக்க தோன்றுகிறது..
(தில் விவேக் மாதிரி, பெண்களின் மனசை புரிஞ்சுக்கிட்டு ஒரு மெகா தொடர் எடுக்கும் எண்ணமில்லாததால் இந்த ஆராய்ச்சியை அப்படியே கைவிட்டுவிட்டு அடுத்த வரிக்கு நகர்கிறேன்.. )
(12) மைவளையும் குழல்சோரக் கைவளைகொண் டானிதென்ன
மாயமோ சடைதரித்த ஞாயமோ என்பார்
அவள் பார்த்த ஒரு பார்வையே நோய் தந்துவிட்டது, மறுப்பார்வை சிந்தினால் என்றால் அந்நோய்க்கு மறுந்தாகிவிடும் அந்த பார்வை என்று வள்ளுவனை ஏங்க வைத்த பெண்மையை, இங்கு கவிராயர் திரிகூட நாதனை கண்டு ஏங்க வைக்கிறார்..
தன்னழகின் மீது கர்வமுடைய ஒரு பெண்ணுக்கே உரிய திறத்தில் துவங்குகிறார், அந்த கார்மேகமும் கண்டும் வெட்கி கவிழும் அடர்த்தியும் கருமையும் கொண்டது என் கூந்தல், அந்த கூந்தல் இவன் பாலுண்ட காதலாய் முடிச்சில் நில்லாமல் அவிழ்ந்து கொள்கிறது, சங்க புலவர்கள் பசலை படர கைவளை நெகிழ்ந்தது என்று மாத்திரமே பாடினர், கவிராயர் ஒருபடி மேல் சென்று கைவளை நெகிழ்ந்தது மட்டுமல்ல கூந்தலும் சரிந்தது என்று கூறிருக்கிறார்.. காதலால் முடிச்சவிழ்க்குமா கூந்தல் என்றால் கண்டிப்பாய் வாய்பில்லை, ஆனால் திரிகூட நாதர் மீதுள்ள வயத்தில், அந்த பெண்கள் கூந்தலுக்கும் இடும் முடிச்சை கூட வலுவானதாய் இடவில்லை என்றும், கூந்தலை இறுகி முடிய வலுவற்று இளைத்துவிட்டார்கள் என்றும் சொல்ல முனைக்கிறான்..
வெறும் குற்றால நாதன் பவனி வருதலில் மாத்திரமே அழகு நயம் இவ்வளவு படிந்திருக்குமாயின், முழு குற்றால பதிகத்திலும் எவ்வளவு அழகு பொதிந்திருக்கும், வாய்ப்பு கிடைத்தால், குறவஞ்சி இலக்கியத்தை ஒரு முறையேனும் வாசியுங்கள்..
வசந்த வல்லியை சந்திக்க நேர்கையில் என் காதலையும் அவளுக்கு சொல்லிவிடுங்கள்..
தொடரும்..