சாவுக்கும் வாழ்வுக்கும் - இடை
சதுரங்கம் ஆடுகிற
பூவுக்கு புரியாத - பெரும்
புதிராஎன் காதல்
பாட்டுக்கு சொல்தந்து - என்
பார்வைக்கு உயிர்தந்து
தீட்டுகிற எழுத்துகளில் - நீ
தீராமல் இருக்கின்றாய்
பொன்னாடிச் சிலைப்போல - உன்
பொலிவான நினைவுகள்
வினாடிச் செடியில் - வந்து
விண்மீனாய் பூக்கிறது
சின்னஇதழ் விரித்து - நீ
சிரிக்கின்ற பொழுதில்விழும்
கன்னக்குழியில் குதித்து - ஒரு
கடவுள்நிலைக் அடைகின்றேன்
காணாதக் கனவுவந்து - என்
கண்ணிமையில் இறங்கிநின்று
நானாக இருந்தஎனை - உன்
நாணத்தில் கரைக்கின்றேன்
முன்னெழிலின் முற்றுகையில் - என்
முழுதவமும் முறித்துவிட்ட
பின்விழைவின் காரணமாய் - உன்
பெயரையே முணுமுணுத்தேன்
காதல்நாடி வந்து - இதயத்தின்
கரை உடைக்க
காதல்நாடி ஒன்று - என்
கண்ணீராய் வழிகிறது
ஈரநெருப்பால் உன்றன் - வெறும்
இதழ்கள் எரித்தாலும்
மாறவிருப்பம் இன்றி - மனம்
மரணம் போலாகிறது