கவலைகள் என்ன
கைவிரல் நகமா
உதிராமல் போவதற்கு
அவை
நம் ஆடையின்
தூசுகளே
தட்டி விட்டால்
உதிர்ந்து விடும்
மூலையில் அமர்ந்து
கவலையெனும்
முகமூடிக்குள் முகத்தை
புதைத்துக் கொண்டால்
பகல் கூட
இரவாகத்தான் தெரியும்
அழுது கொண்டே
வாழ்வதை விட
சிரித்துக் கொண்டே
சாவது சுகமானது
விளக்கு
வீட்டில் எரிவதைக் காட்டிலும்
உன் இதயத்தில்
எரியட்டும்
பிறகு பார்
இருட்டும் உன்
பாதங்களை வணங்கி
வழிகாட்டும்
சோகப்பட்டவன்
வீணையக் கூட
விறகாக்கி விடுகிறான்
மகிழ்ச்சியில் இருப்பவனோ
மண்பானையையும்
வாத்தியமாக
வாசித்துக் காட்டுகிறான்
நேற்று என்பது
சருகு
தூக்கி எறி
நாளை என்பது
அரும்பு
மலருவதற்கு முன்பு
மடிவதும் உண்டு
கனவுகளை கலை
இன்று என்பதோ
பூத்துக் குலுங்கும்
புஸ்பங்கள்
பொழுதை வீணாக்காமல்
பூவை ரசி
தேனை ருசி