தன்கையே தனக்குதவி
அனுபவத்தில் அறிந்தேன்
தன்னந்தனியனாய் உலகில்
தவிக்கிறேன் நான்
துடைத்துவிட யாருமின்றி
கன்னங்களில் வழியும் கண்ணீர்
அனைத்துக் கொள்ள ஆறுதலின்றி
விம்மித் தணியும் இதயம்
ஆறுதல் வார்த்தைகளுக்காய்
நெடுநாளாய் ஏங்கும் செவிகள்
யார் யாரோ செய்த துரோகம்
கவிழ்ந்தது நான் மட்டும்தானே
உதவிய நண்பர்கள் எல்லாம்
துரோகிகளாய் ஆனது என்னே
முட்கள் நிறைந்த புதராய்
சொற்கள் குத்தியது
துரோகங்களின் அடியில்
சுக்குநூறாய் இதயம் உடைந்தது
பலநாட்களாய் உணவின்றி
பசிகிடந்த சிறுத்தையாய்
குதறக் காத்திருந்த எதிரிகள்
குட்டி முயலாய் அஞ்சி
ஓடி நான் வந்தேன்
குற்றமற்ற மனிதர்களென்று
இங்கு யாருமி்ல்லை
நன்றி கெட்ட உலகோர்
இன்றளவும் அதை உணரவில்லை
கட்டிய கோட்டைகள்
மூழ்கிய கப்பலாய்
கனவுகள் கலைந்தது
வானத்து மேகங்களாய்
நினைவுகள் எல்லாம் வலியாய்
தவித்து அழுகிறேன்
தனிமையாய் இங்கே
அலையில்லாமல் கடல் இல்லை
மனதில் வலியில்லாமல்
வாழ்க்கையும் இல்லை
உணர்ந்தேன் நானின்று
துரோகங்கள் மட்டும்
மறக்காது எனக்கு
வலிகளை மறந்திடுவேன்
ஆனால் வடுக்களை மறவேன்
வீழ்ந்துவிட்டாலும் நான்
எழுந்திருப்பேன்
மீண்டுமொரு நாளில்
ஓர்மமாய் உழைத்து
நேர்மையாய் வெல்வேன்
எள்ளி நகையாடியோரை
தள்ளிவைத்து
வெற்றி மாலைகள் நான்சூடிட
ஒருநாள் வரும் மீண்டும்
அன்றே என் வாழ்வின் திருநாள்