Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 404  (Read 155 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 404

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Oonjal

  • Newbie
  • *
  • Posts: 36
  • Total likes: 152
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum

     விடியல் தேடி
தூரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள்
அருகில் ஒரு சிறு ஓடை
ஓடும்நீரின் மெல்லிய சத்தம்
நிழல் தரும் மரத்தடி
குளிர்காற்று தரும் சிலிர்ப்பு
எரியும் நெருப்பு தரும் கதகதப்பு
வானில் மிதந்த முழு நிலவு
தனிமையில் இனிமை
காலம் அப்படியே
நின்று விடாதா...

இந்த அமைதி என் ஆயுள் முழுமையும்
நீடிக்காதா என்று ஏங்குகிறது மனம் !
ஓடும் நீரின் சலசலப்பில் கரைகிறது உள்ளத்தின் பாரமனைத்தும்

பகல் பொழுதின் இரைச்சல்கள் ஓய்ந்து
இரவின் தனிமையில் பேசுகிறது
மனம் மௌனமாய்..
கூட்டத்தில் இருப்பதைவிட
இயற்கையோடு தனித்திருப்பது
ஒரு சுகமான அனுபவம்..

காற்றின் மென்மையான வருடல்
நினைவூட்டியது கடந்த காலத்தை
நீரில் தெரிந்த நிலவின் பிரதிபலிப்பு
என் வாழ்க்கையை போலவே தோன்றியது!

அந்த இரவில் நான்
உணர்ந்தது ஒன்றுதான்
தனிமை என்பது வெறுமை அல்ல
நம்மை நாமே சந்திக்கும்
ஒரு அழகான நேரம் !

நிலா சாட்சியாக என்
கனவுகளோடும்
நினைவுகளோடும்
பேசிக்கொண்டிருந்தேன்
நீண்ட நேரம் ...
 
விடியல் வரும்வரை
அந்த அமைதியான இரவு என்
தோழனாக இருந்தது.
நிலா மட்டும் என் மனதின்
ரகசியங்களை மௌனமாக
கேட்டுக் கொண்டிருந்தது!

நிலவு மெதுவாக
மேகங்களோடு பயணித்தது
நானும் என் கனவுகளோடு
பயணித்தேன்..
ஒரு நாள் இந்த
தனிமையும் முடியும்
இந்த காத்திருப்புக்கு
விடியல் வரும் என்ற
நம்பிக்கையுடன்...

நட்சத்திரங்கள் ஆயிரம் இருந்தாலும்
சில நேரங்களில் மனம் தேடுவது
நிலவை போல நமக்கான
ஒரு உறவைத்தான்...
அது அருகில் இல்லையென்றால்
உலகமே வெறுமையாய்
தெரிகிறது..
அந்த நிலா  சாட்சியாக
அந்த மரம்போல் நம்பிக்கையாக
நான் இன்னும்
காத்திருக்கிறேன் என்னை
புரிந்து கொள்ளும்
ஒரு இதயத்தின் வருகைக்காக..

Offline Rahmathulla



இயற்கையே நீயும் எனக்கொரு தாய் தானே

இறைவன் அற்புத படைப்பில் எனக்கொரு இன்னொரு தாய் இயற்கை அன்னையே...

 நிலவு வானில் மின்னும் இரவில் நதியின் அருகில் நான் தனித்திருக்கிறேன்..
 நதியின் அலைகள்  பேசும் மொழி கேட்டு
என் தாயின் மடி தேடும் சேயாய் நிற்கிறேன்..


நீயும் என் தாய் தானே!!!
 வான்  தாயே வெண்ணிலவே!!
விழிகளில் கருணை சுமந்தவேளே. உன் ஒளி பட்டு நதி மின்னுகையில்.
என் தாய் முகம் நினைவில் மின்னுதே...

இரவின் குளிரில் நடுங்கும் போது இதமாய் போர்த்தும் போர்வை நீ... வான் தாயே  நீ எனக்கொரு  இன்னொரு தாய் தானே..
 
பௌர்ணமி இரவில்  முழுதாய் சிரித்து புன்னகை செய்யும் நிலவு என்னும் என் தாய் முகமே..

ஓடும் நதியே ஓயாத தாயே.. உன் சலசலப்பு என் செவிகளில் தாயின் தாலாட்டாய் ஒலி க்கிறது. நதியே உன்
அலைக்கரங்கள்  என் பாதம் தொட்டு ஆறுதல் சொல்லி அரவனைக்கிறது. கரையோரம் அமர்ந்த  என்னை கடந்து போகவிடவில்லை நீ.. ஒவ்வொரு அலையிலும் நான் இருக்கிறேன் என்கிறாய் என் தாயின் முகம் கொண்ட நதியே...

இயற்கை காற்று மெல்ல வந்து என் காதோடு ஏதோ சொல்கிறது வார்தை இல்லாமல்.

மரங்களின் அசைவு என்னை தாலாட்டுகிறது கைகளை ஆட்டி தலையை அசைத்து.
என் மனம் அந்த நிமிடம் நிறைவான அமைதியில் மூழ்குகிறதது...

என் நிழல் என் பக்கத்தில் அமர்ந்திருக்கிறது கருப்பாய், நீளமாய், மௌனமாய்..
நான் சிரித்தால் அதுவும் சிரிக்கிறது நான் அழுதால் அதுவும் நீள்கிறது.
உலகம் விட்டுச் சென்றாலும் நிழல் விட்டுச் செல்வதில்லை.
இயற்கையும் அப்படித்தான்..

 பூமித்தாயே அழகாய் இருக்கும் புல்வெளி பச்சைபாய் இரவுநேரத்தில் பனித்துளிகள் பணிவோடு அமர்த்திருக்கும் அந்த பனித்துளிகளை ரசிக்க வைத்ததும் நீயே..

நிலவே நதியே மரமே காற்றே
நீங்கள் எல்லாம் வேறு வேறு இல்லை
இயற்கை என்ற ஒரு தாயின்
ஈரமான வடிவங்கள் நீங்கள்

உன்னை பிரிந்து நான் இல்லை
என்னை மறந்து நீ இல்லை
தாயும் சேயும் போலவே
நாம் இருவரும் ஒன்றே தானே

இந்த இரவில் இந்த நதிக்கரையில்
இதயம் நிறைந்து சொல்கிறேன்
இயற்கையே நீயும் எனக்கொரு தாய் தானே
இதைவிட வேறு என்ன  வேண்டும்..

TQ
Priyamudan

Offline Thenmozhi

  " வேலையில்லா பட்டதாரி நான் "

என் நெற்றி வியர்க்கவில்லை!
ஆனால் இரத்தம் கொதிக்கிறது!
படித்த வேலை செய்ய வ‌ழி
இல்லை  இங்கே எனக்கு!
பிடித்த வேலை எங்கே கிடைக்கும்?

வாங்கிய பட்டங்கள் எல்லாம்
முடங்கி கிடக்கின்றன கோப்புகளுக்குள்
எந்த பயனும் இன்றி இப்போ !
எங்களை படிக்க வைத்த பெற்றோருக்கு
நான் கொடுத்தது கண்ணீரை மட்டுமே !

வருமானம் இல்லை எ‌ன்று வந்த
உறவுகள் எ‌ல்லா‌ம் விலகி செல்ல
படி‌த்து வி‌ட்டு வெட்டியா இருக்கிறான்
என்று தினம் தின‌ம் கூறு‌ம் அப்பா !
பட்டினியா வேலை தேட செல்லாதே
பசியாறி போய் வா‌‌ எ‌ன்று
கூறு‌ம் என் அம்மா !
கிடைக்கிற வேலைக்கு போகலாம் தானே
என கூறும் அண்ணா !

கோடி கனவுகளை சுமந்து நான்
பட்டங்களின் கோப்பை கையில் ஏந்தி
அப்பாவின் மோட்டார் சைக்கிளில்
வேலை தேடிய பயண‌ம் ....
போனது என் நேரமும்  பெட்ரோலும் தான் !

எத்தனை பட்டங்கள் இருந்தும்
திறமை இருந்தும் வேலை என்னை கண்டுக்கவில்லையே ?
பணமும் சிபாரிசும் தானே வேலை பெறுவதில் செல்வாக்கு இங்கே !
அப்போ நான் படி‌த்த படிப்பு ,திறமைக்கு
ம‌தி‌ப்பு இல்லையா இ‌ங்கே?

நேர்காணல் முடிந்ததும்
என் ந‌ல்ல செய்திக்கு காத்திருக்கும்
அம்மா, அப்பா ,அண்ணாக்கு
என்ன ப‌தி‌ல் கூறுவேன்?
வேலையின்றி வாழும் வாழ்க்கை
என‌க்கு பிடிக்கவில்லை
எல்லோரும் இருந்தும் தனிமையை
உணர்கிறேன் நான் !
என் மனதை சந்தோஷப்படுத்த
இயற்கையாலும், இசையாலும் 
மட்டுமே முடியும் !

அடர்ந்து விரிந்த தலவிருட்சம் !
இருள் சூழ்ந்த நீல வானில்
மின்னும் பல கோடி விண்மீன்கள் !
நட்சத்திரங்கள் நடுவே
நடுநிசியின் ராணி முழுமதி !
நிலவின் ஒளியில் படித்த
நா‌ட்க‌ள் எத்தனையோ
இப்போ பட்டங்கள் வைத்து
காத்திருக்கேன் வெண்ணிலா ஒளியில் !

நிலவின் விம்பம் ஓடை நீரில்
விழும் அழகு வர்ணிக்க முடியாது வார்த்தைகளால்.....
இந்த நிலவின்  விம்பம்
புலப்படுத்துகிறது என் வாழ்க்கை
எ‌தி‌ர்‌ காலத்தில் மாறும் எ‌ன்று !

ஓடை நீர் ஓரத்தல் அடுக்கப்பட்ட கற்களின் ஏறுவரிசை போல் என் வாழ்க்கையும் முன்னேறி செ‌ல்லு‌ம் ...
ப‌ச்சை பசேல் புற்களை போல்
பசுமை ஆகும் என் வாழ்க்கை !

விளக்கு ஒளியில்
க‌ல்வி கற்ற எனக்கு
விறகு எரியும் நெருப்பில்
இருந்து வரு‌ம்தீ போல்
என் வாழக்கை
ஒளிமயமாக மாறும்!
என் அரு‌கி‌ல் தரையில்
இருந்து எழும்பும் புகை போல்
நானும் வான‌ளாவி பெருமை சேர்ப்பேன் !

இந்த இருக்கையில்  அமர்ந்து 
நான் இரசித்த காட்சி
என் மனதில் தோன்றிய
கனவு காட்சி நிஜம் ஆகும்
சீக்கிரம்..
தேடி ஓடுகிறேன்
புதையலை தேடி அல்ல
விடியலை தேடி!

விடிகின்ற வேளையில்
அடி வானில் ஒரு விடிவெள்ளி
கொடிகட்டும் நாளை எனக்கு
நான் படி‌த்த படிப்புக்கேற்ற
வேலை கிடை‌க்கு‌ம்
பிடி‌த்த வேலை பார்ப்பேன் என்று!

« Last Edit: Today at 11:09:22 AM by Thenmozhi »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1283
  • Total likes: 4441
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
நிலா,
இன்று அழகாக வானத்தில் மலர்ந்த பூ போல காட்சியளிக்க 
அதன் வெண்மையான ஒளி
பூமியின் மேல் சிந்திய பால்நதிபோல் பரவியிருந்தது. 

அந்த ஒளியின் நடுவே,
தனிமையைத் தோளில் சுமந்தபடி ஒருவன்
அமைதியைத் தேடி அமர்ந்திருக்க

காற்று அவன் முகத்தை வருடியது; ஆனால் 
அது அவள் விரல்களின் மென்மையை நினைவூட்டியது. 
மரங்களின் நிழல் அவன் பாதையில் விழுந்தது, ஆனால் 
அது அவள் கூந்தலின் கருமையை நினைவூட்டியது. 
நிலா அவன் மேல் ஒளி வீசியது; ஆனால் 
அது அவள் சிரிப்பின் வெளிச்சத்துக்கு ஈடாகவில்லை 

எங்கே இருக்கிறாய்?" என்று அவன் வானத்தைக் கேட்டான். 
வானம் பதில் சொல்லவில்லை; ஆனால் 
ஒரு மேகம் மெதுவாக நகர்ந்தது. 
அவன் மனதில் மறைந்திருந்த நினைவுகளைப் போல. 

அவளை முதன் முதலாக கண்ட அந்த மாலை, 
இதயத்தில் காதல் மலர்ந்த வேளை 
அவள் பேசிய வார்த்தைகள் கவிதையாக இனித்தன 
அவள் சிரித்த ஒவ்வொரு கணமும் இசையாக ஒலித்தன 
இன்று அவள் அருகில் இல்லை. ஆனால்
அவள் இல்லாத இடங்களெல்லாம்
அவள் நினைவுகளால் நிரம்பியிருந்தன.
கைகோர்த்து பகிர்ந்த கனவுகள் எல்லாமே
அவன் மனதில் மீண்டும் உயிர்பெற்றன. 

நிலவின் ஒளியில் ஒரு ஏரிக்கரையில் அமர்ந்திருக்க
நீரின் மேல் மிதந்த நிலாவை பார்த்தான். 
அதன் நடுக்கத்தில் தனது மனதின் அலைகளை கண்டான். 
ஒரு சிறிய கல்லை நீரில் எறிந்தான்,
வட்டங்களாகப் பரவிய அலைகள்
அவள் நினைவுகள் போல் முடிவில்லாமல் விரிந்தன. 

காதல் என்றால் என்ன?" என்று ஒருநாள் அவள் கேட்டிருந்தாள். 
அப்போது அவன் பதில் சொல்லவில்லை. 
இன்று தெரிகிறது
காதல் என்பது அருகில் இருப்பது மட்டும் அல்ல, 
தொலைவில் இருந்தாலும் ஒருவரின் நினைவில் வாழ்வது என 

இரவு மேலும் நீண்டது
நட்சத்திரங்கள் வானில் அமைதியாக எரிந்தன. 
அவன் கண்களில் கண்ணீர் துளிகள் பிறந்தன, ஆனால் 
அவை துக்கத்தின் துளிகள் அல்ல. 
அவளை நேசித்த நாட்களின் அழகான சாட்சிகள். 

நிலா மெதுவாக மேற்கே நகர்ந்தது. 
விடியல் தொலைவில் விழித்துக்கொண்டது. 
அவன் எழுந்து நின்றான்.

அமைதியைத் தேடி வந்தவன், 
அமைதியையே தன்னுள் கண்டுகொண்டான். ஏனெனில் 
சில காதல்கள் சேர்வதில் முழுமை பெறுவதில்லை, 
நினைவுகளில் வாழ்ந்தபடியே நித்தியமாக மலர்கின்றன.

அந்த நிலா ஒளி நிறைந்த இரவில் 
அவன் தனியாக இல்லை. 
அவள் அருகில் இல்லாவிட்டாலும்,
அவள் நினைவு அவன் நெஞ்சில் ஒரு அழியாத நிலாவாக 
என்றென்றும் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது....



***Joker***


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1964
  • Total likes: 6122
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
ஆள விடுங்கடா சாமி...

அழகாப் பிறந்தது என் தப்பா...?
நீங்களே சொல்லுங்க
இது நியாயமா மக்களே...?

எங்கப் போனாலும்
பொண்ணுங்க கூட்டம்...
என் பின்னாடியே சுத்துறாங்க...
என்னா ஆட்டம்...

"அடடா... அந்தப் பையன் செமையா இருக்கான்..."னு
அங்க ஒரு குரூப்பு லுக்கு  விடுது...

"இவனைக் கட்டுறவ குடுத்து வச்சவப்பா..."னு
இந்தப்பக்கம் ஒரு குரூப்பு பேசுது...

தாங்க முடியலடா சாமி...
இந்த லவ் டார்ச்சர்
நாளுக்கு நாள் கூடுது...

இங்க நமக்கு பாதுகாப்பு
இல்லன்னு நெனச்சேன்...
பைக்கை ஸ்டார்ட் பண்ணி
வேகமா கிளம்பினேன்...

யாருமே இல்லாத
இந்தக் காட்டுக்குள்ள வந்தேன்...
நிம்மதியைத் தேடி
தனிமையில நின்றேன்...

அப்பாடா...
இங்க யாரும் இல்ல...
கொஞ்ச நேரம் ஜாலியா
ரிலாக்ஸ் பண்ணலாம்...

நெருப்பைப் பத்தவச்சு...
பெஞ்சுல சாஞ்சு...
நிம்மதியா ஒரு தூக்கம்
போடலாம்னு  நெனச்சா...

வச்சான் பாரு ஆப்பு...

அங்க இருக்குற ஒரு காட்டுவாசிப் பொண்ணு...
நான் தூங்குற அழக பாத்துட்டு...

"ஐ லவ் யூ..."ன்னு பின்னாடியே ஓடி வர்றா...
காதல் சொல்லி என் பின்னாலே சுத்தி வர்றா...

ஆள விடுங்கடா சாமி...
எங்கிட்டுத்தான் போறது 
இப்ப நான்..?

நிம்மதியா இருக்கக்கூட
விடமாட்டேங்குறாங்களே...
போற இடமெல்லாம்
காதலோட துரத்துறாங்களே...

அழகா பிறந்தது ஒரு குத்தமாயா...?
இல்ல
இதுதான் என் தலையெழுத்தா..?

என்னை ஏன் இப்படி
லவ் டார்ச்சர் பண்றீங்க...?
கொஞ்சம் ஆள  விடுங்கடா சாமி...
நானும் நிம்மதியா இருப்பேனே...

இப்படிக்கு
ஸ்நேக் பாபு சங்கத் தலைவர்

Offline TiNu


இன்று எனக்கு முக்கியமான நாள்
========================

பச்சை வண்ண.. ஓர் அடர்ந்த காடு,..
அந்த காட்டின் நடுவே ஓர்  ஓடை.
நீரோடையின் கரையில் ஓர் மரம்...
அதன் கீழே... அழகான ஓர் இருக்கை..
இருக்கையின் முன்னே நெருப்பு...

ஓடை நீரின் ஓசை.. அந்த இரவின்..
அமைதியை லேசாக தாலாட்டியது..
வான்மகளின் நெற்றியில் இட்ட பொட்டு..
ஓடை நீரில்... அழகாய் ஜொலித்தது... - காற்றில் அசைந்த... 
மர இலைகளும் அழகாய்  நடனமாடியது..

ஒவொன்றையும் ரசித்து ரசித்து...  எனக்கும்
நேரம் போவதே தெரியாமல் காத்திருந்தேன்..
அவன், எப்போது வருவான்.. எப்படி வருவான்..
ஒவ்வொரு முறை அவன் இங்கு வரும் போதும் ...
எனக்கு பிடித்த... நீல நிற உடையில் வருவானா?. .
இல்லை வேறு நிற உடை தரித்து வருவானா ?

ஏன்.. இன்னும் அவனை காணவில்லை....
நேரம் செல்ல செல்ல என் மனம் துடித்தது..
பதற்றத்தின் உச்சியில்.. இங்கும் அங்குமாக
பதறிய மனதுடன்..அலைந்து கொண்டிருந்தேன்..
இன்று எனக்கு மிக மிக முக்கியமான நாள்..

பல நாட்கள்,
இதே இடத்தில தான் பேசி இருக்கின்றோம்....
எங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கணும்..
எப்படி எப்படி எல்லாம் வாழவேண்டும்ன்னு..
சின்ன சின்ன விஷயங்கள் கூட...யோசித்து...
பல தீர்மானங்கள் எடுத்து இருக்கின்றோம்...

இன்றும்,..
அவன் ... கண்டிப்பாக வருவான்... என்ற
நம்பிக்கையில் நானும் காத்துநின்றேன்...
தூரத்தில் இருசக்கர வாகனத்தின்..
ஓசை மெல்ல ரீங்காரம் எழுப்ப..
சற்றேனே நிமிர்ந்து பார்த்தேன்..
அதோ... அவன் வந்துவிட்டான்..

என் கடந்த கால நினைவுகளையும்
கற்பனைகளையும் ஓரம் கட்டிவிட்டு..
அவனுக்காக எழுந்து நின்றேன்... அவன்
முகம் பார்த்து... என் மனம்..துள்ளியது...
என்னவன் என்னை இன்னும் மறக்கவில்லை...

எனக்கோ மகிழ்ச்சி.. அதே நீல நிற சட்டை..
எனக்கு பிடித்தது போல.. தாடிகள் இல்லா முகம்..
இன்னும் அப்படியே இருக்கின்றன.. - ஆனால்
அவன் முகத்தில் மட்டும் சோகம்..
அது மட்டும் எனக்கு பிடிக்கவில்லை...

அந்த இருக்கையில் மெதுவாக அமர்ந்தான். -பின்.. .
கண்களை மூடியவாறு.. வானத்தை நோக்கினான்.
அவன்முகம் பார்த்த எனக்கோ பேரானந்தம்.. - நானும்
என்னவன் அருகே.. மெதுவாக மிதந்தேன்...
வெண்ணிற புகையாய்...உடலற்ற உயிராய்..

ஆம்... இன்று.. என்னுடைய நினைவேந்தல் நாள்...
 
« Last Edit: Today at 01:50:18 AM by TiNu »

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 359
  • Total likes: 1489
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
முழு நிலவொளியில் உன்னை கண்டேன்
பிரகசிப்பது நிலவா என்னவனா..
என்று விடை அறியாது
திகைத்து நின்றேன்...

நீயோ இயற்கை அழகில்
தன்னையே மறந்து காற்றோடு உரையாட
உன்மீது பட்ட காற்றை சிறிது
பொறாமையுடன் சுவாசித்துக் கொள்கிறேன்

உன் வாசம் என் சுவாசத்தில் கலக்க
உன்னை என்வசம் ஆக்கி கொண்ட
பிரமையை உணர்த்தேன் மகிழ்ந்தேன்
பிரம்பையை விட்டு அகல மறுத்தேன்

உன்னை நெருங்க என்
நாணமோ தடை விதிக்க..
நீயோ நெருப்பில் இதமாக
குளிர்க்காய்ந்துக் கொண்டு இருக்கிறாய்...

கண்களை மூடி எதை சிந்திக்கிறாய்
உன் நினைவுகளில் நான்
சிறிதேனும் இருப்பேனா இல்லை
பார்த்த தடம்கூட இன்றி மறைவேனா

பெண்களும் ஆண்கள் அறியாமல்
அவர்களை ரசிப்பது உண்டு...
உன்னை பிறர் ரசிக்கும்போது மட்டும்
என்னுள் அதீத பொறாமை ஊற்றெடுபதேனோ ?

என்னவனே உன் தோள்களில்
சாய்ந்து காலந்தோறும் உரையாட வேண்டும்
நேரம் அறியாவண்ணம் உன்னுள்
மோகித்து கிடக்க வேண்டும்...
உன்னோடு கலந்து விட வேண்டும் ❤️ ❤️ ❤️
« Last Edit: Today at 05:33:14 PM by Yazhini »

Online Luminous

சுமைகளோடு பறக்கும் சிறகுகள்

இன்றிரவு இந்த ஊரின் கடைசி இரவு...
இந்த ஆலமர நிழலில், இந்த ஏரிக்கரையின் அமைதியில், இந்த நிலவொளியின் சாட்சியாக, என் மனதில் புதைந்து கிடந்த ஆயிரம் வார்த்தைகளை உன்னிடம் சொல்ல வந்திருக்கிறேன் நிலவே...
நாளை காலை, இந்த மண்ணை விட்டு விமானத்தின் சாளரத்தில் இருந்து சிறிது சிறிதாக மறையும் என் ஊரை பார்த்தபடி, நான் ஒரு வெளிநாட்டு பயணத்தை தொடங்கப் போகிறேன்...

ஆசைக்காக அல்ல... ஆடம்பரத்திற்காக அல்ல...
அம்மாவின் மருந்துச் செலவிற்காக...
தங்கையின் திருமணத்திற்காக வாங்கிய கடன்களின் வட்டிக்காக...
நாளை எழும்பப் போகும் எங்கள் வீட்டின் சுவர்களுக்காக...
இன்னும் பிறக்காத என் குழந்தையின் எதிர்காலத்திற்காக...
சின்ன வயதிலேயே அப்பா சென்றுவிட்டார்...
அவரின் தோளில் இருந்த பொறுப்புகளை எல்லாம் என் தோளில் சுமந்து நிற்கும் ஒரு சாதாரண மகன் நான்...

ஆனால்...
"நான் களைத்துவிட்டேன்" என்று சொல்லும் உரிமை கூட எனக்கு கிடைக்கவில்லை...
ஏனென்றால்...
இந்த வீட்டின் நம்பிக்கை என் சம்பளத்தில் தான் இருக்கிறது...
அம்மாவை நினைத்தால் மனம் உடைகிறது நிலவே...
நான் வெளியூர் செல்லும் நாளை நினைத்து அவள் சிரிக்கிறாள்...
ஆனால் அந்த சிரிப்பின் பின்னால் எத்தனை கண்ணீர் இருக்கிறது என்று நானும் அறிவேன்... நீயும் அறிவாய்...
"நல்லா சாப்பிடுப்பா..." என்று சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு தாயின் பயம் ஒளிந்திருக்கிறது...

என் மனைவி...
திருமணம் முடிந்து சில மாதங்களே ஆனது...
இப்போது அவள் கருவுற்றிருக்கிறாள்...
அவளின் அருகில் அமர்ந்து அவளின் கனவுகளை கேட்க வேண்டிய நேரத்தில்,
அவள் கைகளை பிடித்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நேரத்தில்,
அவள் சிரிப்பின் காரணமாக நான் இருக்க வேண்டிய நேரத்தில்,
நான் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருக்கப் போகிறேன்...
என் குழந்தை பிறக்கும் போது அதன் முதல் அழுகையை நான் கேட்க முடியாமல் போகலாம்...
அதன் முதல் நடை... அதன் முதல் வார்த்தை...
அனைத்தையும் தொலைபேசியின் சிறிய திரையில் தான் பார்க்க நேரிடலாம்...
ஆனால்...
இரண்டு வருடங்கள் கழித்து நான் திரும்பி வரும்போது,
"அப்பா..." என்று ஓடிவந்து என்னை கட்டிப்பிடிக்கும் அந்த ஒரு நொடியுக்காக,
இந்த இரண்டு வருடங்களின் தனிமையை நான் வாங்கிக் கொள்கிறேன்...

என் நண்பர்கள்...
என் கஷ்டத்தில் என் பக்கத்தில் நின்றவர்கள்...
என் சிரிப்பையும், என் தோல்விகளையும், என் கனவுகளையும் அறிந்தவர்கள்...
அவர்களையும் விட்டு செல்கிறேன்...

உலகம் சொல்வது...
"ஆண் என்றால் பலசாலி..."
ஆனால் உண்மையில்...
அவன் தினமும் உடைகிறான்...
அம்மாவை நினைத்து உடைகிறான்...
மனைவியை நினைத்து உடைகிறான்...
குழந்தையை நினைத்து உடைகிறான்...
நண்பர்களை நினைத்து உடைகிறான்...
ஆனால்...
அந்த உடைந்த சத்தத்தை யாரும் கேட்காதபடி சிரித்துக் கொண்டே வாழ்கிறான்...

உடம்பு சரியில்லாத நாளிலும்,
மருத்துவமனையின் நாற்காலியில் அமர்ந்தபடி,
"நான் நல்லா இருக்கேன் அம்மா..." என்று பொய் சொல்லும் மனிதன்...
பண்டிகை நாளில் அறை மூலையில் தனியாக அமர்ந்து,
குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை வீடியோ அழைப்பில் பார்த்து சிரிக்கும் மனிதன்...

உணவு சாப்பிட மனமில்லாத நாளிலும்,
"சாப்பிட்டாச்சு..." என்று சொல்லும் மனிதன்...
அவன் ஒரு வெளிநாட்டு தொழிலாளி மட்டும் அல்ல...
ஒரு குடும்பத்தின் மௌனமான தியாகம்...

நிலவே...
இன்று என் மனம் கனமாக இருக்கிறது...
ஆனால் நான் அழவில்லை...
ஏனென்றால்...
என் கண்ணீரை விட என் குடும்பத்தின் எதிர்காலம் பெரியது...
என் ஆசைகளை விட அவர்களின் சந்தோஷம் பெரியது...
நாளை நான் செல்கிறேன்...
பணத்திற்காக அல்ல...
என் குடும்பம் நிம்மதியாக சிரிக்க வேண்டும் என்பதற்காக...
என் அம்மாவின் முகத்தில் கவலை குறைய வேண்டும் என்பதற்காக...
என் மனைவியும் குழந்தையும் எதற்கும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக...

எனவே நிலவே...
இன்றிரவு உன்னிடம் விடைபெறுகிறேன்...
இந்த ஊரின் வானத்தில் உன்னை கடைசியாக பார்த்துக்கொள்கிறேன்...
இரண்டு வருடங்கள் கழித்து...
மீண்டும் இதே இடத்தில்,
இதே நிலவொளியில்,
என் கடன்கள் குறைந்திருக்கும்...
என் கனவுகள் நிறைவேறியிருக்கும்...
என் குழந்தை "அப்பா" என்று அழைக்கும்...
அந்த நாளில் மீண்டும் வந்து உன்னிடம் பேசுவேன்...

அதுவரை...
"சென்று வருகிறேன் நிலவே..."
ஒரு ஆணின் கண்ணீரை
உன் ஒளியில் மறைத்து வைத்து கொள்...
அவன் திரும்பி வரும் வரை...

Luminous 😇💜💚💛🧡💯🔥
« Last Edit: Today at 07:12:19 PM by Luminous »