பாச மலர்!!
உன் விரல் பிடித்து பள்ளி சென்ற
காலம் இன்றும் நினைவிருக்கிறது..
வீட்டுக்கு வந்ததும் ரிமோட்டிற்காக நாம்
செய்த யுத்தங்களும், கோபத்தில் நான்
கடித்த உன் கையில் பதிந்த பற்களின் தடமும்,
அதற்காக அம்மாவிடம் நான் வாங்கிய
அடிகளும்—இன்று இனிக்கும் நினைவுகள்!!
கடைக்குச் செல்லச் சொன்னால் நீ அசையமாட்டாய்;
உன் வேலையையும் நானே செய்தபோது பொங்கிய
ஆத்திரம், உன் மௌனமான பாசத்தை
உணர்ந்தபோது கரைந்து போனது.
நண்பர்களுக்கெல்லாம் நீ “ஹிட்லர்”!
என் முதல் காதலை நீ மிரட்டி முடித்தபோது
கோபம் வந்தாலும், அதன் பின்னால்
இருந்த உன் அக்கறையை உணர்ந்தேன்!!
கல்லூரி செல்லும் வழியில் பிரேக் ஒயர் அறுந்தபோது,
வெறும் கையால் அதைப் பிடித்து விபத்தில் இருந்து
நம்மை மீட்ட உன் சமயோசித புத்தியைக்
கண்டு மிரண்டு போனேன்..
என்னை கிண்டல் செய்தவனைத் தேடிச் சென்று நீ கொடுத்த பதிலடியில்தான், "அண்ணா" என்ற சொல்லின் பலம் புரிந்தது!!
அம்மா உனக்கு ஊட்டி விட்டபோது பொறாமைப்பட்டு
நானும் சண்டையிட்டிருக்கிறேன்,
“அவன் மட்டும் தான் உனக்கு புள்ளையா?” என்று..
தெருவே கைதட்டிய உன் முதல் நடனமும்,
என் உடையைச் சரி செய்த உன் தகப்பன்
அக்கறையும் என் பெருமிதங்கள்!!
நீ வாங்கித் தந்த அந்த 1100 மொபைலும்,
செக் செய்த உன் பயமும்,
அக்கா திருமண மேடையில் நீ பாடிய அந்த
நொடிகளும் என் வாழ்வின் அழகான பக்கங்கள்!!
இன்றும் உன் நினைவுகளைத் தாங்கியபடி
என் அலமாரியில் இருக்கிறது நீ தந்த முதல் புடவை!
விபத்தில் கை ஒடிந்து வந்த உன்னை வண்டியில்
வைத்து அழைத்துச் சென்றபோது,
“தங்கச்சி நல்லா ஓட்டுறியே” என நீ சொன்ன
அந்த ஒற்றைப் பாராட்டு இன்றும் என் நினைவில்!!
பழைய பிளாக் காரில் பயணித்த அதே சுகம்
இன்றும் உன் புதிய காரில் மாறவே இல்லை..
சின்னச் சண்டையில் நீ என்னைப் புரியவில்லை
என்ற ஆதங்கத்தில் உயிரை விடத் துணிந்தேனே..
அது உன்மேல் இருந்த கோபமல்ல, உன்
அன்பு குறைந்துவிடுமோ என்ற பயம்!!
முதன்முதலில் உன்னைப் பிரிந்தபோது, உன் கண்களில்
வழிந்த கண்ணீரில் என் உயிர் பிரிந்தது..
இன்று நாம் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில்
இருந்தாலும், உன் மார்பில் சாய்ந்து அழுது
தீர்க்கத் துடிக்கிறது என் இதயம்!!
எத்தனை காலமானாலும் உன் தங்கை
என்றும் உன் அன்புக்காக ஏங்கும் அந்தச்
சின்னப் பெண் தான்!!!