கேள்வியாக நிற்கும் அண்ணன்–தங்கை
ஒரு அண்ணன்…
ஒரு தங்கை…
இன்னும் உலகம் என்னவென்று
முழுசாக அறியாத
சின்னச் சின்ன பிஞ்சுகள்.
அவர்களுக்கான உலகம்
புத்தகம் இல்லை.
பள்ளி இல்லை.
அப்பாவும் அம்மாவும் தான்.
அந்த அப்பாவும் அம்மாவும்
காதலித்தவர்கள்.
வேறு மதம்…
ஆனால்
ஒரே மனிதம்.
இரண்டு வீடுகள்
ஒப்புதல் சொல்லவில்லை.
“நம்மால் மாற்ற முடியாத விஷயம்” என்று
மௌனமாகத் தள்ளிவிட்டு,
ஊரைவிட்டு ஒதுங்கி,
யாருக்கும் இடையூறு இல்லாமல்,அவர்கள்
அமைதியைத் தேடி
வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால்…
அமைதி சிலருக்கு
பொறுக்கவில்லை.
அரசியலுக்காக,
அதிகாரத்துக்காக,
மதத்தின் பெயரை
ஆயுதமாக மாற்றிய
சில குள்ள நரிகள்
அந்த வீட்டை ஆடின.
ஒரு இரவு…இருள்,கத்தல்கள்,ரத்தம்
இரு உயிர்கள் அணைந்தன.
அப்போது
ஒரு கேள்வி எழுந்தது.
மதம் காப்பாற்றப்பட்டதா?
ஜாதி உயர்ந்ததா?
இல்லை…
ஒரு அண்ணனும்
ஒரு தங்கையும் மட்டும்
அநாதைகளானார்கள்.
அந்த நாளிலிருந்து
அந்த அண்ணன், தங்கை
தெருவின் ஓரத்தில்
மனிதர்களை நோக்கி
கேள்வியாக
உட்கார்ந்திருந்தார்கள்.
“எதற்கு எங்கள் அப்பா அம்மா சாகணும்?”
பதில் இல்லை.
அமைதி மட்டும்.
ஒரு நாள் மழை.
சிக்னலில் நின்றிருந்த கார்கள்.
அந்த தங்கை
தன் அண்ணனின் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டு
ஓரமாய் நின்றாள்.
ஒரு கார் நின்றது.
உள்ளிருந்து
ஒரு அம்மா
தன் குழந்தையை
மார்போடு அணைத்துக் கொண்டிருந்தாள்.
அந்த காட்சியைப் பார்த்த
இந்தச் சின்னத் தங்கை
மழையில் நனைந்த
கண்களோடு
மெதுவாக சொன்னாள்
“நம்ம அம்மாவும்
நம்மள இப்படித்தான் பிடிப்பாங்க…மழை வரும்போது.”
தங்கை கேட்டாள்,
“அம்மா எங்க?”
அவன் பதில் சொல்லவில்லை.
அண்ணன்
தன் கையில் இருந்த
குட்டி குட்டி ரேகைகளை
அமைதியாகப் பார்த்தான்.
அந்த ரேகைகளில்
அப்பாவின் விரல்கள் மட்டும் இல்லை…
அவன் தூக்கிய நாட்கள் இருந்தது.
அம்மாவின் அரவணைப்பு மட்டும் இல்லை…
அவள் துடைத்த கண்ணீர் இருந்தது.
அந்த கைகளில்
ஒரு வீடு இருந்தது.
ஒரு உலகம் இருந்தது.
ஆனால்…
இப்போ
அந்த உலகம்
ஒரு மதத்தின் பெயரில்
மண்ணுக்குள் தள்ளப்பட்ட
மௌனக் கதையாக
மாறிப் போயிருந்தது.
அவர்கள் சாகவில்லை…
அவர்கள் சாகடிக்கப்பட்டார்கள்.
யாரால்?
மதத்தால்?
ஜாதியால்?
அரசியலால்?
இல்லை…
மனிதத்தை விட
அடையாளத்தை
பெரிதாக்கிய
மனங்களால்.
எப்போது மாறும் இந்த நிலை?
யார் மாற்றுவது?
நான் நினைத்தால் மாறுமா?
நீ நினைத்தால் மாறுமா?
ஒருவேளை…
அந்த மழையில்
எதையும் கேட்காமல் நின்ற அண்ணன், தங்கையின்
கண்களில் ஒரு நிமிடம்
நம் பார்வை
தடுமாறினால் போதும்…
நம் மனசுக்குள்ள
ஒளிந்து கிடக்கும்
மதமும்,
ஜாதியும்,
அடையாளங்களும்
மௌனமாக
உதிர ஆரம்பிக்கும்.
நாம் நினைத்தால்தான்......
அன்று முதல்
மதம் ஒரு அடையாளமாக
இருக்கும்.
மனிதம் மட்டும்
முதன்மையாக.
LUMINOUS 😇💜✌🙏💐