Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 391  (Read 295 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 391

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Luminous

நிலவே… நான் இன்னும் காத்திருக்கிறேன்

இந்த இரவு
மிக நீளமாக இருக்கிறது, நிலவே…
நீ வானத்தில் மெதுவாக நகர்கிறாய்,
நான் மட்டும்
ஒரே இடத்தில்
உயிரோடு உறைந்திருக்கிறேன்.

அவன் போன நாள்
நான் என் நிழலை
இழந்த நாள்.
அவன் சிரிப்பு இல்லாத
இந்த வீடு
என்னை தினமும்
அன்னியமாக்குகிறது.

போர்க்களத்தில்
அவன் எதிரியை பார்க்கிறான்…
இங்கே
நான் ஒவ்வொரு நிமிஷமும்
என் பயத்தை பார்க்கிறேன்.

ஒரு செய்தி…
ஒரே ஒரு செய்தி…
“உயிரோடு இருக்கிறேன்”
என்ற ஒரு வார்த்தைக்காக
என் உயிர்
எத்தனை இரவுகளை
தாண்டிவிட்டது தெரியுமா?

நிலவே…
நீ எல்லா வீட்டுக்கும்
ஒளி தருகிறாய்.
என் வீட்டுக்கு மட்டும்
ஏன் இப்படிப்
பார்வை தவிர்க்கிறாய்?

அவன் இல்லாமல்
என் கைகள் நடுங்குகின்றன.
அவன் இல்லாமல்
என் இதயம்
ஒவ்வொரு துடிப்பையும்
வலியோடு செய்கிறது.

தேநீர் கையில் எடுத்தால்
அவன் நினைவு.
காற்று வந்தால்
அவன் சுவாசம்.
தூக்கம் வந்தால்
அவன் முகம்.
தூக்கம் போனால்
அவன் இல்லாமை.

நிலவே…
நீ தேய்கிறாய்,
ஆனால் மீண்டும் வளர்கிறாய்.
நான் மட்டும்
ஒவ்வொரு நாளும்
உள்ளுக்குள்
சிறிது சிறிதாக
சாகிறேன்.

அவன் திரும்பி வந்தால் ....
இந்தக் கண்ணீர் எல்லாம்
புன்னகையாய் மாறும்.
இந்த உடல்
மீண்டும்
பெண்ணாகும்.

அவன் வராவிட்டாலும் ....
கேள் நிலவே…
என் வலி
தேசத்தை வெறுக்காது.
அவன் ரத்தத்தில் இருந்த
தேசப்பற்று
என் வயிற்றில் வளரும்
இந்தக் குழந்தையில்
மீண்டும் பிறக்கும்.

நாளை
அவன் போலவே
என் மகனும்
தேசத்தின் அழைப்புக்கு
போனால்,
அன்று நான் அழுவேன்…
ஆனால் தடுக்க மாட்டேன்.

ஏனெனில்
ஒரு பெண்ணின் இதயம்
உடைந்தாலும்,
ஒரு தாயின் மனம்
தேசத்துக்கு முன்
மடங்காது.

நிலவே…
நீ வானத்துக்காக
ஒளிர்கிறாய்.
நான்
இந்த நாட்டுக்காக
உயிரோடு எரிகிறேன்.
LUMINOUS 👨‍✈️💜🤰🌚

Offline Clown King

கார் மேகங்கள் வானம் முழுதும் கம்பளம் விரிக்க
அதில் வைரங்களை தெளித்தது போல நட்சத்திரங்கள் ஜொலி ஜொலிக்க
நடுவில் தேவதையாய் இராகதிராய் நீ மின்ன உன் பொலிவிற்கும் ஈடேது உண்டு

நீயும் துணை இல்லாமல் தனித்து நிற்கின்றாய்
அதேபோல் நானும் உன்னைப் பார்த்து ஆறுதல் கொண்டு உன் அழகை ரசித்து கொண்டிருக்கின்றேன்

நீ தனித்து இருப்பதை பார்த்த பின்பு தான் தனிமை மனிதனுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் பொருந்தும் என்று ஆம் நாம் இருவரும் கடவுளின் படைப்பு தானே
எனக்காவது நீ இருக்கின்றாய்
உனது  அழகை பார்த்துக் கொண்டே எனது தனிமையின் வலியை போக்கிக் கொள்வேன்
நீயோ பாவம் என்னைப் பார்க்கின்றாயா உன்னால் பார்க்க முடியுமா உனது என்ன குமரல்களை
.தனித்துக் கொள்ளத்தான் முடியுமா

உன்னால் முடிந்தது எல்லாம் மற்றவரை இன்புற்று இருக்கவே
உனது குளிர்ச்சியான கதிர் அலைவு கலை கொடுக்க முடியும் நீ இன்புற்று இருக்க ஏதேனும் ஏற்க முடியுமா

தனிமை ஒற்றை பதம்  எத்தனை வலிகள் அத்தனை வலிகளையும். சகித்துக் கொண்டு நீயும் மிளிர தானே செய்கின்றாய் இது நீ பக்குவப்பட்டதின் அடையாளமோ

உன் முன்னால் அமைதியாக அமர்ந்திருந்தாலும் எனது என்ன ஓட்டங்கள் எனையும் தாண்டி செல்கின்றதே தனிமையில் விட்டு சென்ற அவனை நினைத்து நினைத்து ஏங்கிக் கொண்டு அல்லவா இருக்கின்றது எனது இதயமும்

எனது தனிமை போகுமா இல்லை
உனைத் தோழியாக்கிக் கொண்டு நீண்டு தான் செல்லுமா காத்திருக்கின்றேன் அவன் வரவுக்காக .....






Offline Yazhini

தொலையாத கனவாய்
தொலைதூர நிலவாய்
சில உறவுகளும்
அதன் நினைவுகளும்...

இருளில் ஒளி தந்து
மீண்டும் இருளில் உரல விடும்...
மின்மினியின் ஒளி போல
சிறுபொழுது ஒளியைப் பரப்பும்...

தேடாத போது அமுதளித்து
தேடும் போது நஞ்சை பரிசளிக்கும்...
மாயம் நிறைந்த உறவு
மனக்காயத்தை ஏற்படுத்திக் கொண்டே மருந்தளிக்கும்...

தேடிராத அன்பை பொழிந்து
அடிமைப் படுத்தியபின் புறந்தள்ளும்...
மனதிடத்தையும் சிறிது அசைத்து
அதில் ஆனந்தம் கொள்ளும்...

சுதந்திர காற்றையும் கொஞ்சம்
சிறைப் பிடித்து அக்களிக்கும்...
தான் என்ற அகந்தையை
அழித்து அதில் பரவசம் கொள்ளும்...

தன்னிறைவு கொள்ளா இச்சைகளை
வேரோடு பிடிங்கி எறியும்...
உருண்டோடும் திங்களையும் உலவும் திங்களையும்
எள்ளி நகையாடும்...

சிறு புன்னகையில் அரும்பி
உரையாடலில் மலர்ந்து மணம் பரப்பும்...
வீசும் மணத்தில் மனதை
பேதலிக்க செய்து ரசிக்கும்...

நிலையற்ற பிடிமானத்தைத் தந்து
தளர்ந்து சரிவதையே எதிர் நோக்கும்
இறுதியில் தீரா தனிமையை
பரிசளித்து பரிகாசிக்கும்

தொலையாத கனவாய்
தொலைதூர நிலவாய்
சில உறவுகளும்
அதன் நினைவுகளும்...

இருளில் ஒளி தந்து
மீண்டும் இருளில் உரல விடும்...
மின்மினியின் ஒளி போல
சிறுபொழுது மட்டும் ஒளியைப் பரப்பும்...
« Last Edit: December 16, 2025, 03:05:39 AM by Yazhini »

Offline gab

இரவின் மடியில்
மௌனத்தின் மொழியைத் தழுவி,
நிலவொளியின் வனப்பில்
மிதந்திருந்தாள் அந்த மங்கை.

பொலிவுடன் ஜொலித்த நிலவு,
அவள் வெளிர் முக அழகை
நினைவூட்டியது…

காற்றின் சலசலப்பே
அவள் சிந்தனையை கலைக்குமோ என
மென்மையான ஸ்பரிசமாய்
தீண்டிச் சென்றது.

இரவின் காரிருளைத் துடைத்து,
ஒளியால் அரவணைக்கும்
பால் நிலவின் குளிர்ந்த உள்ளம்
கொண்டவள் அவள்.

நிலவின் கறைகள் போல,
அவள் மனதிலும்
சில காயவடுக்கள் உண்டு…
ஆனாலும் ஒளிர்வதை
அவள் ஒருநாளும்
நிறுத்தியதே இல்லை.

எத்தனை நட்சத்திரக் கூட்டங்களுக்கு
நடுவே இருந்தாலும்,
வானத்தின் வட்டப் பொட்டு போல
தனித்து தெரிவாள்
அத்தனை கூட்டத்திலும்.

எத்தனை இடர்கள் வந்தாலும்
அவைகளை சமாளிக்க எனது
இடக்கையே போதுமென்ற உறுதி கொண்டு,
ஆரவாரம் இல்லாத வெற்றித்திருமகளாய்
உலா வருபவள் அவள்

எத்தனை நாள் இந்த வெண்ணிலவு
தனிமையில் வாடிக் கிடக்கிறதோ என,
தேநீர் கோப்பையில் எஞ்சிய
வெப்பம் போல
மௌன மொழி பேசிக்கொண்டிருந்தாள்.

தினம் அவள் வருகைக்காக
எத்தனையோ காத்திருப்புகள்,
தேய்ந்தாலும் தேடச் செய்யும்
அந்த வெண்ணிலவு போலத்தான்
இந்த பெண்நிலவும்.

தனிமையின் தோழியாக,
காத்திருக்கும் தரைநிலாவை
விட்டு விலக மனமில்லாமல்
அலைபாய்ந்து கொண்டிருக்கிறது
 வானில் அந்த வெண்ணிலா.


பின்குறிப்பு :

என்னடா இது உருட்டு பலமா இருக்கே
யாரா இருக்கும்னு தானே யோசிக்கிறீங்க?
 
ஆமாங்க ...நீங்க நினைக்கிறது சரிதான்!!!
 
MIND VOICE :
ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும் 
பூசாத மாதிரியும் இருக்கனும்
பாக்க பளீர்னு இருக்கணும்


Offline Thenmozhi

கார்மேகங்கள் விலக,
கோடி விண்மீன்கள் நடுவே
தவழ்ந்து வரும் வெண்ணிலாவே!

தொலைதூரத்தில் உன் புன்னகை ஒளிவீசி
இரவின் இளவரசியாய் அலங்கரிக்கின்றாய்!
மாடியில் இருப்பவனையும்,
குடிசையில் இருப்பவனையும்
இரசிக்க வைத்து மகிழ்விக்கின்றாய்!

குழந்தைக்கு சோறு ஊட்ட,
காதல் மொழி பேச,
கூட்டாஞ்சோறு உண்டு மகிழ
எம்முடன் இருக்கும் தேவதை நீ
வெண்ணிலாவே!

நிலாவே உன் ஒளியில் கல்வி கற்ற மகான்கள் ஏராளம்!
நிலாவே கொஞ்சம் நில் !
உன்னை வர்ணிக்கும் போது
உன்னை விட பேரழகி தென்படுகிறாளே
என் கண்களில்!

நிலவின் ஒளி முகத்தில் பிரகாசிக்க,
கார்மேக கூந்தல் காற்றில் அசைய,
வெண்ணிற ஆடை அணிந்து  சமாதான ஒளி விளக்காய்,
அஞ்ஞான இருளை நீக்கி மெஞ்ஞான ஒளியை தேடி,
கரங்களில் நூல் ஏந்தி கல்வியறிவு இயற்றுகின்றாய் பெண்ணே!

விளக்கின் ஒளியில் கல்வி பயில தொடங்கினாய்
மின்சாரம் இல்லாத காலத்தில் பெண்ணே!
அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?
என்று கூறியதை முறியடித்து விட்டாய் பெண்ணே!
விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை
சாதித்துக் கொண்டு தான் இருக்கின்றாய் பெண்ணே!

அமைதியான மனசு வேண்டும் என்று தான்
நிலாவை தேடி மாடி வந்தாயோ?
அவள் உன் கூடவே உலா வருவாள் நிழலாய் அன்புத் தோழியாய்!

புத்துணர்ச்சி தரும் தேநீரை அருந்தி விடு!
புத்தகத்தில் கற்ற அறிவினை மெருகூட்டிடு!
புது உலகம் படைத்து விடு!-பெண்ணே!

விளக்கு தன்னை அர்ப்பணித்து
ஒளி தருவது போல் உதவுவோம் மற்றவர்களுக்கு!

விண்மீன்கள் தொலைவில் இருந்து
ஒளிர்வது போல் நேசிப்போம் நம் உறவுகளை!
விண்ணில் வெண்ணிலா பிரகாசிப்பது போல்
சாதிப்போம் வாழ்வில்!



« Last Edit: December 16, 2025, 05:50:07 PM by Thenmozhi »

Offline Minaaz

நிலா ஒளியில் நிமிர்ந்து நிற்கும் அழகில் நீந்தும் பதுமை அவள்..
அவளைப் பாடுவதா??!!
அவளின் அழகை உருவகப்படுத்தும்
நிலாவப்பாடுவதா!!??..

கண்ணைக் கவரும் கண்மணியோ 
எத்துனை கனங்களை சுமந்தவளோ!??
தாகித்து தலை நிமிர்ந்து நிலவோடு நியாயம் பாடுகிறாள்...!?

நீந்தும் நிலவின் கதிரில்
அருகிருக்கும் அனல் விளக்குகளும்
தலை கவிழ்ந்து வெட்கத்தோடு மாது அவளின் அருகிருந்திற்று....

வலைந்தோடும் அருவியைப் போல்
அழகிய கார் குழலோடு காத்திருக்கும்
அழகிய சிலையாய் அவளின் ஏக்கத்தில்
தனிமையின் தாக்கங்கள் தலை தூக்கியிருக்கிறது..

நிலாவை தன் துணையாய்
தன் காவலாய் நம்பும் அவள்
என்னதான் தூது அனுப்புகிறாள்!??
என்ற எண்ணங்களும் என்னில் எழாமல் இல்லை..

இரவின் அழகும்
பெண்மையின் புனிதமும்
ஒத்துதலாய் ஒன்றாய் அடங்கியிருக்கும் அற்புதம்..

எதைத்தான் சொல்வது
நானும் தனிமையை தனதாக்கி
அண்ட வெளியில் உலாவும் வெள்ளைப் பந்துக் கோலத்துக்காய்
காத்திருந்து தன் அவலத்தை கொட்டித் தீர்த்தவள் தானே!!??

நிலவு நிலைமை அறிந்தது என்னவோ
அவள் மௌனத்தின் மொழி மட்டும் தான்…
சொல்ல நினைத்த வலிகள்
கண்ணீராய் கரைந்து
ஒளிக்குள் ஒளிந்தன…

தனிமை கூட அவளை
அரவணைக்க மறந்து
அவள் அருகே உறைந்து நின்றது…
காத்திருப்பு ஒரு பழக்கமாய்
நம்பிக்கை ஒரு சுமையாய்
நெஞ்சில் அடங்கியது…
நிலாவிடம் தூது அனுப்பியவள்
பதில் வராத இரவுகளை
எண்ணிக் கொண்டே முதிர்ந்தாள்…

அழகு இருந்தும்
ஆறுதல் இல்லாத
ஒரு பெண்ணின் இரவு அது… 🌑💔

Offline SweeTie


இதோ வந்துவிட்டேனடி 
மென்திரையை  விலக்கி எட்டிப்பார்க்கிறேன்
அவள் கண்கள் வைரம்போல் மின்ன
காத்திருக்கிறாள் என் தோழி
காத்திருப்பில்தான்  எவ்வளவு மகிழ்ச்சி

ஆயிரம் மின்மினிகள் நடுவே
மகாராணிபோல்   பிரகாசிப்பவள்  நான்
ஒளிவிளக்கில் பளிங்குச்சிலையாக அவள்
விண்ணிலே நானும்  மண்ணிலே அவளும்
எப்படி  தோழிகள் ஆனோம் தெரியாது
புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று
 
தினம் தினம்   பேசுகிறோம் 
அவள் உள்ளத்தே  வழிந்தோடும்
காதல் உணர்ச்சிகளை 
ஒளியாமல்   மறைக்காமல்
தேனீரை ருசித்து  அருந்தியபடியே
என்னிடம் கொட்டி தீர்க்கிறாள்

மானசீகமான காதலில்  ஒழிவேது
கண்கள்   விடும்  தூதுகளில்  மறைவேது
இடம் மாறும் மூச்சுக்காற்றுகளில் 
இனம் புரியாத   உணர்ச்சிகளில்
ஊறித் தவிக்கும்  காதல்  இதயங்கள் 
 
சித்திரை மாதத்தில் குயில் பாடுவதும்
மார்கழி மாதத்தில் குளிரில் நடுங்குவதும்
இயற்கையின்  காதல்   
காணுகையில்   நாணத்தில் மூழ்குவதும் 
காணாதவேளை   தேடித்  தவிப்பதும் 
இளம் பெண்ணின்  காதல்

மாலைவேளை  இயற்கையின் மௌனம்
சுகமான   தனிமையில் மீட்டும் நினைவுகள்
வந்து போகும்  சிறு சிறு சண்டைகள்
தொடரும்  ஊடலும்  கூடலும்
காதலுக்கே உரித்தான  மீட்டல்கள்
காலத்தால் மாறாத காதல் பண்புகள்

மேகவண்ணன்  மெல்லிய வஸ்திரத்தால்
என்னை தொட்டுச்செல்கையில்  எனக்குள்ளும்
காதல் தோன்றாமல் இல்லை 
நானும்  ஒரு பெண்தானே! 
காதல்   பெண்மையின் சுகமல்லவா ?
வெட்கித்துப்போகிறேன்  நான்
நிலா நீயுமா ? கேட்கிறாள் என்  தோழி
 

Offline Shreya

தனிமையின் மொழி..!

இந்தத் தனிமை எனக்கு பரிசா?
இல்லை தண்டனையா?
சலனமற்ற இந்த இரவோ
ஆயிரம் ரகசியங்களுடன்
என் மனதைப் போல..!

மேனி சிலிர்க்கும் தென்றல் காற்று
அவன் வருகைக்காகக்
காத்திருக்கும் மௌனங்களில்
தேநீரின் ஆவியாய்
என் இறுதி சுவாசமாய் அவன்..!

நிலவே உன்னைப் போல
என் வாழ்விலும்
நிறைவு இல்லையோ?
நீயாவது சொல்
அவன் வருகிறானென்று..!

நான் கண்ட கனவுகள் யாவும்
நட்சத்திரங்கள் வந்து போவது போல்
மறைந்தனவோ இல்லை
கானல் நீராய் கரைந்தனவோ..!

எல்லோரும் உறங்கும் இந்த வேளையில்
என் பழைய நினைவுகள் மட்டும்
சத்தமின்றி சண்டையிட்டு
மொத்தமாய் கொள்கிறதே..!

அவன் தந்த அன்பின் சுவடுகள்
அவன் வராத இரவுகளிலும்
மனதில் தழும்பாய் பதிந்து
மறக்க மனம் மறுக்கின்றதே..!

இரவு விலகி
பொழுதே விடிந்தாலும்
அவன் நினைவுகள் மட்டும்
என்னுள்ளிருந்து விலகவே இல்லை..!

அவன் நினைவால் வாழ்பவளை
அதை அழிக்கும் சக்தி
காலத்திற்கும் கூட  இல்லை
நிலவே நானோ இங்கு அழுகிறேன்
நீயோ அங்கு சிரிக்கிறாய்
என் ஏக்கம் ஒருபோதும் தீராதென..!

மௌனம் என்பது
ஒசையற்ற மரணமோ
உருகி காதலித்த என் மனதில்
அவனால் எழும் வினாக்கள்
எங்கே போனான் ?
என் மௌனத்தின் மொழியானவன்..!

நிலவே நீ தேய்பிறையாய் தேய்ந்தாலும்
வளர்பிறையாய் மீண்டும் வளர்கிறாய்   
ஆனால் என்னவனின்
வருகைக்காகக் காத்திருக்கும்
இந்த பேதையின் வலிகள் எல்லாம்
இரவில் எழும் வானவில்லாய்
என் இரவுகளோடு மட்டுமே
மௌன மொழி பேசுகிறது..!
« Last Edit: December 16, 2025, 11:50:00 AM by Shreya »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Total likes: 4111
  • Total likes: 4111
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
தினந்தோறும் இரவில்
யாருக்காக எரிகின்றனவோ
வானின் விளக்கு

வான் தேவதையின்
உள்ளத்தின் ஆழத்தில்
சாம்பலாகாமல்
புகைந்து கொண்டிருக்கும்
ஒரு காதல் கனல் போல

அதை யாரும்
எடுத்துக்கொள்ளவும் முடியாது
மாற்றிக் கொடுக்கவும் முடியாது
அது அப்படியே இருக்க வேண்டும்
மௌனமாக,தனிமையாக,
உண்மையாக.

என் பல இரவுகளை
அமைதியாக கடக்க
உதவியிருக்கிறாய்

நீ என்னுடையதாக
இல்லை என்று தெரிந்தும்
உன்னை நேசிப்பதை
நான் நிறுத்தவில்லை.
ஏனெனில்

காதல் என்பது
உரிமை கோருவது அல்ல,
உள்ளுக்குள்
மௌனமாக
எரிந்துகொண்டிருப்பதுதான்.

நான் உன்னை
நேசித்த உண்மை
முழுநிலவே
உன்னை போல
முழுமையானது .


****Joker***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline சாக்ரடீஸ்


நிலவே

இன்றிரவு
உன் வெளிச்சம்
என் ஜன்னலுக்குள் அல்ல
என் உள்ளுக்குள் விழுகிறது.

ஒருகாலத்தில்
யாரோ ஒருவன்
என் மௌனத்துக்கு
அர்த்தம் கொடுத்தான்
இப்போது
அந்த அர்த்தங்களை
நானே மறுபடியும்
எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

பேசப்படாத வார்த்தைகள்
என் நெஞ்சில்
அழுகி போவதற்கு முன்
உன்னிடம் ஒப்படைக்கிறேன்
நீ கேட்பாயா ?
எதிர் கேள்வி கேட்காமல் ?
அமைதியாய்
என் குரலை சுமப்பாயா?

அவன் குரல்
என் இரவுகளை அழகாக்கியது
அவன் இல்லாத
இந்த இரவுகள்
என்னை எனக்கே
திருப்பித் தருகின்றது.

"Saptiya"
"Enna pandra"
“good night”
என்ற
சிறு விசாரிப்புகள்
என்னைக் காப்பாற்றும் என்று
நம்பிய காலம் போய்
இப்போது
அது எல்லாம் இல்லை
என்று ஆன பிறகு
ஒரு நிம்மதிப் பெருமூச்சே
போதுமானதாகி விட்டது.

அவன் நினைவுகள் தினம்தோறும்
என்னைத் தேடி வரும்
ஆனால்
நான் இனி அவற்றின்
சிந்தனை வலையில்
சிக்கிக் கொள்ள மாட்டேன்

அவனுக்காக காத்திருந்த
என் இதயம்
இப்போது
என் பெயரை
முதன்முறையாக சரியாக
உச்சரிக்கக் கற்றுக்கொண்டது.

நிலவே
இப்போது நான் கேட்பது
துணை அல்ல
குறைந்தபட்சம்
என்னையே இழக்காத
ஒரு தெளிவு.

நிலவே
பலரின் கவிதைகளுக்கான
முதல் வரி நீ

அதுபோல் நான்
என் சான்றோர்க்கு
எடுத்துக்காட்டாக
மாறிக் கொண்டிருக்கும்
ஒரு அமைதியான
முயற்சி இது

இந்த இரவின் நடுவில்
உன்னைப் பார்த்தபடி
என் பயணத்தை
நானே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

நிலவே
என்னுள் காதல்
இன்னும் இருக்கிறது
ஆனால் அது
யாரையும் தேடாது
யாராலும் நிரப்ப முடியாது.

அந்தக் காதல்
என்னை நானே
மெதுவாக அணைத்துக் கொள்ளும்
ஒரு அமைதி.

இது முடிவு அல்ல
இது என்னை நான்
மீண்டும் சந்திக்கும்
ஒரு தொடக்கம்

Offline VenMaThI



வளரும் குழந்தையாய் - முகம் மலரும் மழலையாய்....
காண்போரின் புன்முறுவளுக்கு காரணமாய்....
கண்ணீரை மறந்து கனவுலகில் -  என்றும்
பறக்க உதவும் சிறகாய்..

வளர்ந்தாலும் தேய்ந்தாலும் அழகாய்...
கவி பாட துடிக்கும் பல கவிஞர்களின் கருத்தாய்.....
ஈடற்ற பெண்மைக்கு ஈடான உவமையாய்....
அடுத்தவரின் இருளை போக்கும் வெளிச்சமாய்....

என்றுமே வானில் உலாவரும் வெண்ணிலவே... என் முழுமதியே....
உவமையாய் உருவகமாய் உன்னை
பாடிப்பாடி சலித்த போதும். மீண்டும்
பாடத்தூண்டும் பால்நிலவே...

எத்தனை வரிகளடி உனைப்பாட
எத்தனை வார்த்தைகளடி உனை வர்ணிக்க
எத்தனை கவிஞரடி உனைப்புகழ...
உம்மை பாடாத கவிஞனுமில்லை
உன்னை பாடாதவன் கவிஞனே இல்லை...

பலரின் உறக்கமற்ற இரவுகளின்
உற்ற துணை நீ.
தேடும்போது வானில் தோன்றும்
வெண்ணிற சிற்பம் நீ...

முகிலின் இடையில் ஒளிந்து விளையாடும்
மழலையின் வடிவமும் நீ...
உணவருந்த மறுக்கும் மழலையின்
விலைமதிப்பில்லா பொம்மையும் நீ..

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகமதில்
வாழ்வும் தாழ்வும் வாழ்க்கையின் இயல்பே என்பதையும்
கொடுப்பதால் குறைவதில்லை -குறைந்தே போனாலும்
 மீண்டும் முழுமை பெறவேண்டும் என்பதையும் உணர்த்த
உனையன்றி யாருண்டு இவ்வுலகில்...

பிறந்த குழந்தை முதல் - நரைமுடி கண்டு கிழப்பருவமெய்தும் காலம்வரை
தன்னிலை மறந்து உம்மை ரசிக்கச்செய்யும்
மாயக்காரியே...
என்னையும் மயக்கிவிட்டாய்
உன் அழகில் மயங்கவிட்டாய்....

பலரது மதியில் நிறைந்த வெண்மதியே
உனைக்கண்ட இச்சிறு நொடியில்
எனையும் கவி படைக்கச்செய்துவிட்டாய்
என் கவிதையின் கருத்தாயும் அமைந்துவிட்டாய்......


« Last Edit: December 17, 2025, 03:37:34 PM by VenMaThI »