Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 390  (Read 104 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 390

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline சாக்ரடீஸ்


இரவு முழுக்க தூங்க
முடியாமல் தவிக்கின்றேன்


என் கண்ணீர் 
தலையணையை நனைத்து
நான் செய்த பாவத்தை
எண்ணி எண்ணி
நெஞ்சு துண்டாகிறது.

அவளோ பாவம்
எத்தனை சுமை தாங்குவாள்?
எத்தனை இன்னல்களைத் சந்திப்பாள்?

நான் அவள் ரணங்களுக்கு
மருந்தாக வந்தவன்
என்று நினைத்தேன்
ஆனால்
தீராத காயத்தை தந்து
திசை தெரியாமல் நிற்கிறேன்

என் கொடுமைகளுக்கு
அவள் திருப்பித் தந்தது
பரிசுத்தமான அன்பு மட்டுமே
எந்த ஒரு எதிர்பார்ப்பும்
இல்லாத அந்த அன்பு
என்னை இரவு முழுவதும்
உயிரோடு சுட்டெரிக்கின்றது

இரவு முழுக்க தூங்க
முடியாமல் தவிக்கின்றேன்


விழிகள் மூடினால்
அவள் கண்ணீர் கடல் அலைகள்
என்னை இழுத்துச் செல்கிறது.
ஒவ்வொரு அலையும்
என் பாவத்தை அடித்துச் செல்ல
நான் மூழ்கி மூழ்கி மீள்கிறேன்.

என்ன கைமாறு செய்வேன் நான்?
என் பாவங்கள் இப்பிறவியில் அழியாதவை

ஆகவே…

இரவு முழுக்க தூங்க
முடியாமல் தவிக்கின்றேன்


அவள் கண்ணீரில் மூழ்கி
பாவம் தொலைந்து போகும் வரை
இந்த இருளோடு போராடுவேன்.

அவள் மன்னிக்காவிட்டாலும்
அவள் அன்பு என்னை மன்னிக்கும்
அதுவே போதும்...
அதுவே போதும்...


Offline KS Saravanan

அவளின் கண்கள்..!

ஆதவன் மறையும் நேரம்
வானம் மெல்ல குளிரும் தருணம்
மங்கையவள் மதியழகில் மயங்கி
மணாளன் மதிமயக்கம் கொண்டேன்..!

நிலவை காணவில்லை
இவள் ஒளியில் மறைந்ததேனோ
இரவில் ஒரு சூரியனாய்
கண்கள் கூச வைக்கிறாள்..!

ஆதவனும் விடைபெற்று செல்ல
என் நிழலும் எனை விட்டு விலக
அவள் கண்களின் ஒளி இருளை நீக்க
என் கண்களோ அவளிடம் கைதாகி
பதில் ஏதும் பேசாமல் மனம்
அவளை நோக்கி செல்கிறதே..!

வானத்து ரதியோ இவள்
பூமியின் தேவதையோ
இல்லை சுவர் இல்லா ஓவியமா
மின்னலாய் அவளின் பார்வை
வானவில் வர்ணமாக
நட்சத்திரங்களாய் மின்னுகிறாள்..!

அவள் கண்களின் மௌனமோ
ஆயிரம் வார்த்தைகள் பேசுதே
கடைக்கண் பார்வையால்
பாற்கடலும் பொங்குமே
அமுதம் அள்ளி தந்திட்டு
ஆனந்தமாய் இருக்குமே..!

நோக்குவர்மம் பயின்றவளாய்
மனதை அவள் வசமாக்கினால்
அவளின் நெற்றி பொட்டு மத்தியில்
என்னை கட்டி போட்டு வைக்கிறாள்..!

வில்லேந்திய புருவமோ
கண்களில் அம்பெய்தி நிற்குதே
கேடயம் ஏதும் இல்லாமல் நான்
வீழ்த்துவிட நினைக்கிறேன்..!

சத்தம் ஏதும் இல்லாமல்
நித்தம் என்னை கொள்கிறாள்
மடிந்து விழ எண்ணியே
மீண்டும் அவளை காண்கிறேன்
மூச்சி காற்றாய் மிதக்கிறேன்
அவள் நினைவை தாங்கியே
மறுஜென்மம் வேண்டுமே
மீண்டும் அவளால் வீழ்ந்திடவே..!

Offline Agalya

அவனின் அவள்

எங்கிருந்து ஆரம்பித்தது
எப்படி இது பயணித்தது?

இப்பொழுது எங்கு வந்து
 நிற்கிறது என்பது இன்றுவரை
 நான் கண்டறிய முடியாத கேள்விக்குறியாக உள்ளது

ஆனால்  என்னால் உணர முடிந்தது ஒன்றே ஒன்று தான்
 நான் மேகமாய்
மிதந்து கொண்டிருக்கிறேன்
 உன்னை பார்த்த அந்த
 நொடியில் இருந்து

ஏன் ?எதற்கு ? எப்படி ?
ஒருவேளை என் தாயின்
 கண்ணில் இருக்கும் 
ஈர்ப்பு சக்தியைப்போல்
 உன் கண் இருப்பதனாலா ?

அல்லது மற்றவர் போல் அல்லாமல்
 உன் கண்கள் என்னிடம் பேசிய
அந்த ரகசிய மொழியினாலா ?

எதில் வீழ்ந்தேன் ?
எப்படி வீழ்ந்தேன் ? என்பதை
கண்டறிவதற்காக ஒவ்வொரு முறையும்

 உன் கண்ணை பார்க்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் விழுகிறேன்.

மஸ்காரா ,ஐஷாடோ
ஐலைனர், லென்ஸ் இத்தனை
ஒப்பனைகள் செய்து கொள்ளும் பெண்களுக்கு மத்தியில்

கண்மய்யை மட்டும் பூசி
அந்த முட்ட கண்ணை
உருட்டி உருட்டி
வசீகரிக்கிறாயே...

திரைப்பட வசனங்களில்
"கண்கள் பேசும்"
என்ற வசனங்கள் வரும் போது எல்லாம்

 கண்கள் எப்படி பேசும்- என்று
நினைத்த ஆசாமி தான் நான்.

ஆனால் இன்றோ
 கண்கள் பேசும் மொழிக்கு
வல்லமை அதிகம் என்பதை
 ஒவ்வொரு நொடியும்
அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்..

என் கோபக்காரியே
உன் உதட்டில் இருந்து
எத்தனை கோபமான சொற்கள் வந்தாலும்
உன் கண்களில் தெரியும்
அன்பையும் காதலையும் பற்றி கொண்டு
தான் உன்னோடு வாழ்கிறேனடி..

உன் கண் அசைவுகளில் இருக்கும்
பேரன்பின் சமுத்திரத்தில்
விழுந்த நான் எழ முடியாமல்
மீண்டும் மீண்டும் ஆழம் செல்கிறேன்
உன் காதல் பார்வையில் இருக்கும்
முத்துக்களை தேடி
என் கண்ணழகியே!

Offline Shreya

ஏக்கத்தின் ஆழ்கடல்..!

எங்கே நாம் வாழ்ந்த அந்த நாட்கள்..?
என் கண்கள் இன்னும் உன்னைத் தேடி தத்தளிக்க
ஆனால் நீயோ கானல் நீராய் கரைந்து
எந்த திசையில் பறந்தாயோ..!

என் சுவாசமாய் நீ இருந்தாயே
இன்று என்னைத் தவிக்க விட்டு
எங்கே செல்கிறாய் தெரியவில்லை
ஒருமுறை என் கையைப் பிடித்து
உன்னிடம் இழுத்துக் கொள்..!

நீ இல்லா இத்தவிப்பில்
நான் வாழ்வதென்றால்
அது நான் கொண்ட காதலின்
ஆழத்தைப் பேசாதோ..!

நான் இங்கே கரையாய் காத்திருக்க
நீ அலைகடல் சிரிப்பாய் தொடுகிறாய்
என் முழு உலகமுமே சிதறிப் போக
பிரதிபலிப்புகளில் எல்லாம் நீயே..!

என் காதலின் அனல் கூட
உன்னை எரிக்காமல் இருப்பதேன்
இன்னும் புரியவில்லை
உன்னை மனதிலிருந்து தள்ளி விட
முயன்றும் முடியாமல்
நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்..!

நீருக்கு மேலாக நான்
நீரின் ஆழத்தில்
உடைந்த கப்பலாய் அல்ல
மிதக்கும் கவிதையாய்
உன்னால் வாழ்கிறேன்
உன்னில் கரைகிறேன்..!

என் முழு உலகமுமே
என் கண்களுக்குள் உருகி நிற்கிறது
இந்த ஏக்கம் உன்னிடம் சேரும் வரையில்
நான் தொடர்ந்து மிதந்து கொண்டே இருப்பேன்..!
« Last Edit: December 08, 2025, 10:25:26 PM by Shreya »

Offline Luminous

🌿 இயற்கை அன்னையின் மனக் குரல்🤱 🔥🌊☀️

மனிதர்களே…
என் மடியில் உங்களை நட்டதும்🌳,
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும்
அன்போடு தழுவியும்
நான் தாயாகத் தாங்கினேன்.

ஆனால் இன்று
உங்களிடமிருந்தே வந்த காயங்களை
தாங்க முடியாமல் துடிக்கிறேன்😔.

நிலத்தைப் பார்த்து,
“ஏன் பசுமை குறைந்தது?” என்று நீங்கள் கேட்கிறீர்…
ஆனால் நச்சுக் கழிவுகளை
என் நெஞ்சில் புதைத்தது யார்?🤔
என் பச்சை மேனியை
கரும்புள்ளிகளாக்கியது யார்?🤔

காற்றை நேசித்தவர்கள்
இன்று அதையே
“சுவாசிக்க முடியவில்லை” என்று குறை கூறுகிறீர்.🤨
ஆனால் தொழிற்சாலைகளின் கரும்புகையை
வானோடு கலப்பித்தது யார்?🤔
வீட்டிலும், வீதியிலும்
புகைநீரை மட்டுமே
பரிசாக விட்டதார்?🤔

என் நீரைக் குடித்ததே
உங்கள் உயிர்.
ஆனால் இன்று
அதே நீரைக் குடிக்க
பயம் அதிகம்.
என் ஆறுகளையும்🏞, ஏரிகளையும்
கழிவாக மாற்றினது
என் பிள்ளைகள்தான்
இந்த வேதனை
என் உள்ளத்தை ஊறடிக்கிறது😔.

இந்த நிலைமையில்
நீங்கள் கேட்கிறீர்:
“இந்த நாடு எப்படி வளம்பெறும்?”
“மக்கள் எப்படி நிம்மதியாக வாழ்வார்கள்?”
“பொருளாதாரம் எப்படி உயர்வடையும்?”🤨

மக்களே…
ஒரு தாயின் உடல்
காயங்களால் நிரம்பியிருக்கும்போது
அவளுடைய பிள்ளைகள்
ஆரோக்கியமாக இருப்பார்களா?🤔

அதேபோல
என்னை அழித்துக் கொண்டு
வளர்ச்சி தேடுவது
மூலமற்ற 🌵மரத்தின் நிழலைத் தேடுவது போல்.

ஒரு நாடு பெருமை பெறுவது
அணைக்கட்டுகள், சாலைகள், கட்டடங்கள்
மட்டுமே அல்ல…
அதற்கு மேல்
சுத்தமான காற்று,
தூய்மையான நீர்,💧
பாசத்துடன் பசுமை தரும் நிலம்.
இவை இல்லையேல்
நாடு எத்தனை கோடி ரூபாய் சம்பாதித்தாலும்
அது செழிப்பு அல்ல சுமையே.

அடுத்த தலைமுறையைப் பார்த்து
உங்கள் அன்பு
நல்ல கல்வி,
நல்ல ஒழுக்கம்,
நல்ல எதிர்காலம்
இவை அனைத்தையும் அவர்கள் பெறட்டும் என்று விரும்புகிறீர்.

ஆனால்
இந்த ஆசியுடன் சேர்த்து
இயற்கையின் பாதுகாப்பையும்
அவர்களுக்கு அளிக்க வேண்டிய கடமை
உங்களுக்கே உரியது.

ஒரு நல்ல பெற்றோர்
செல்வம் சேர்த்துவைத்தது போல
சுத்தமான நிலம், தூய்மையான நீர்,
பருகத்தக்க காற்று
இவற்றையும் சேமித்து வைக்க வேண்டும்.

அல்லையெனில்
நான் அல்ல
நீங்களே பள்ளத்தாக்கில் விழுவீர்.🏟

நான் இயற்கை அன்னை🏞🏝.
உங்கள் தவறுகளைப் பார்த்து
என் உள்ளம் எழும் துன்பம்😔
சொல்ல முடியாதது.

ஆனால்
இன்னும் தாமதமாகவில்லை
ஒவ்வொரு குடிமகனும்
“நான் காப்பேன்” என்ற ஒரே எண்ணம் கொண்டால்
என் காயங்கள் ஆறும்.
உங்கள் எதிர்காலம் வளரும்.
நாடு மறுபடியும் செழிக்கும்.

என்றாலும்
இறுதியில் நான் சொல்லுவது ஒன்றே
என்னைப் (இயற்கை அன்னை) காப்பது
உங்களைப் காப்பதற்கே சமம்.💗💯👍
 LUMINOUS 😇

Offline Thenmozhi

     "  இனியனும் இனியாளும் "

இயற்கை அழகும் ,செல்வச் செழிப்பும் மிக்கது சுட்டி கிராமம் !
இளவரசன் இனியனும் ,இளவரசி இனியாவும் வாழும் கிராமம் அது!
இது மனங்கள் ஒரு மனதாகி காதல் வயப்பட்டனர்!
இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் இனிதே நிறைவேறியது!
இல்லற வாழ்க்கை இனிதே சிறக்க ,இரு அருமையான குழந்தைச் செல்வங்களை பெற்றெடுத்தனர்!

இனியன் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்து வந்தான்!
இரவு வேளைகளில் தாமதமாக வரும் கணவனை கண்டித்து வந்தாள் இனியாள்!
இன்பமாய் வாழ்ந்து வந்த குடும்பத்தில் என்ன கண்ணு பட்டதோ ?தெரியவில்லை இனியன் மதுவுக்கு அடிமையானான்!
இல்லறத்தில் சண்டையும் ,சச்சரவும் நிம்மதியற்ற வாழ்க்கையுமாய்!

இனியனின் மதுப்பழக்கத்தினால் சொத்துக்கள் விற்க்கப்பட்டன!
இனியாள் குடும்ப கஷ்டத்தினால் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்!
இனியாள் மீது சந்தேகம் கொண்ட இனியான் வசைச் சொற்கள் பாட ஆரம்பித்தான்!
இனியாள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள் அந்த அருமை செல்வங்களுக்காக!

அன்று ஞாயிற்றுக்கிழமை இனியாள் குங்குமப் பொட்டுடனும் பூவுடனும் புதுப்பொலிவாய் தென்பட்டாள்!
அன்றுதான் அவர்களின் இனிய திருமண நாள்!
அன்று குடும்பத்துடன் விருந்துண்டு மகிழ்ந்தான் இனியான்!
அங்கே ஒரு சத்தம் " டேய் மச்சான் வாடா பார்ட்டிக்கு போகலாம்" !
அவள் அழகிய வதனத்தைப் பார்த்த இனியன் போக மனமின்றி "டேய் மச்சான் இன்னைக்கு வேணாம்டா" !
இடைவிடாது சத்தமிட்ட நண்பனின் தொனியால் வீட்டை விட்டு போக தயாரானன்  இனியன்!
இனியாளிடம் இன்று ஒருமுறை சென்று வருகிறேன் எனக் கூறி விடைபெற்றான்!
இனியாள் அவனை பிரிய மனமின்றி தலையசைத்தாள்!

நண்பர்களாக சேர்ந்து மது அருந்திவிட்டு நீச்சலடிக்க கடற்கரைக்குச் சென்றனர்!
நடுக்கடலில் இருந்து கரையை நோக்கி வந்த பேரலையில் அகப்பட்டான் இனியன்!
நடுக்கடலை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டான் இனியன்!
நண்பர்களால் காப்பாற்ற முடியவில்லை இனியனை!
இனியாளின் கடைசியாக பார்த்த வதனம் அவனின் கண்களில் காட்சியாய் வர கண்ணை மூடுகின்றான் இனியன்!

இனியனின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த இனியாள் ,இமை மூடாமல் திகைத்து நின்றாள்!
இனியாளின் கண்களில் இருந்து கண்ணீர் சொரியாமல் ஏதோ ஒரு சிந்தனையில் இருந்தாள்!
இனியாளின் கனவிலும் நினைவிலும் எப்படி இறந்திருப்பான் தன் காதல் கணவன்!
இனியாள் விதவை ஆகிவிட்டேன்  என்று அழுவதா?குழந்தைகளுக்கு அப்பா எப்படி இறந்தார் என்று சொல்வதா?
எப்படி ஊரார் வன்சொல் கேட்பேன் என்று அழுவதா?
 குழந்தைகளை எப்படி பாதுகாப்பேன் என்று அழுவதா?
அதுதான் எதுவும் சொல்ல முடியாமல் திகைத்து நிற்கின்றாள் இனியாள்!

நண்பர்களே குடி குடியை கெடுக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!
நாசமாகின்றன குடியினால் இனியாள் போல் பல குடும்பங்கள்!








Offline Ninja

நந்தனா,
எதோ ஒரு தெய்வ கணத்தில்
தூரிகையின் தாம்புகளாய்
வடிக்கப் பெற்றிருக்க வேண்டும்
உன் கண்கள்

எனது மதுக்கோப்பைகளையும்
எனது தற்கொலை கடிதங்களையும்
சிறிது தள்ளி வைத்து
அறுபட தயாராயிருக்கும்
இம்மீச்சிறு வாழ்வையும்
பிணைத்திருப்பது
கருணையின் எச்சங்களை
பரிசளிக்கும் உனதிரு கண்கள் தான்
என்பதை அறிவாயல்லவா.

நினைவுகளிலும், நிகழ்வுகளிலும்
பலர் விட்டுச் சென்ற தடங்களில்
தேய்ந்த சருகாய் கிடக்கும் என்னை
சல்லி வேராய்
இறுக பிடித்திருக்கும்
கண்களை சில விநாடிகள் மூடிக்கொள்
நந்தனா,
துளிர்க்கும் விதையென மாறும் விதி
எனக்கு இனி இல்லை.

எல்லாவற்றையும இலகுவாக்கிறது உன் பார்வை
எல்லாவற்றையும் ஒரே தராசில் வைக்கிறது
உன் பார்வை
எல்லாவற்றின் மீதும் பேரன்பை பொழிகிறது உன் பார்வை
அவ்வளவு நல்லவனில்லை நான் நந்தனா,
அவ்வளவு ஆதூரம் இல்லை என் கண்களில்.
விலகி ஓட யத்தனிப்பவனின்
வெற்றிடங்களை
உன் கருணை விழி கொண்டு நிரப்பாதே.
எல்லாவற்றையும் முதலிலிருந்து
துவங்க திராணியற்றவன் நான்.

என்னை மீட்டெடுக்கும் அத்தனை சாத்தியங்களையும்
நிகழ்த்திப் பார்க்காதே
கரையேற தத்தளிக்கும் படகல்ல நான்,
மீண்டெழ விரும்பாத உன் நினைவுகளின் ஆழத்திற்கு,
என்றாவது வரும் உன் கனவுகளின் ஓரத்திற்கு,
எப்பொழுதாவது என் புகைப்படம் பார்க்கும்பொழுது
உன் இதழோர புன்னகைக்குள்
மெல்ல மெல்ல அமிழ்ந்து போகும் சின்னஞ் சிறிய கூழாங்கல் நான்.
உன் கண்களை மூடிக் கொள்
நந்தனா,
எதோ ஒரு தெய்வ கணத்தில்
தூரிகையின் தாம்புகளாய்
வடிக்கப் பெற்றிருக்க வேண்டும்
உன் கண்கள்.



Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1206
  • Total likes: 4060
  • Total likes: 4060
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
உதிர்ந்தது பூவா?
அல்லது
அதன் மேல் விழுந்த நம்பிக்கையா?

ஒரு மென்மையான இதழ்
காலத்தின் விரல்களில் நசுங்கிக்
கீழே விழும் அந்தத் தருணத்தில்
யாரோ சொல்கிறார்கள் —
“பூ உதிர்ந்தது…”
ஆனால் பூ சொல்கிறது —
“புதிய உயிருக்கு நான் விதை ஆயிற்றே!” என

பெண்ணின் வாழ்வும் அப்படித்தான்…
அவள் பார்க்கையில்
ஒரு மெல்லிய புன்னகை துளிர்க்கும்,
ஆனால்

சில நேரங்களில் அவளின் மௌனம்
காற்றின் வேதனைப் போல
சுற்றத்தில் சொல்லாத சுமைகளை
தாங்கிக்கொண்டிருக்கும்

அந்த புன்னகையின் பின்னால்
நிறைந்து கிடக்கும் ஆயிரம் கதைகளை
ஆண்கள் பலரும் கவனிப்பதே இல்லை

அவளின் கண்கள் பேசும் மொழி
மறைந்த பல அர்த்தங்கள் கொண்டவை
அதைத் உணர்ந்த ஆண்கள் சிலர்,
அதில் தஞ்சம் தேடும் ஆண்கள் சிலர்,
அதில் வீழ்ந்து காணாமல் போகும் ஆண்கள் பலர்

அவளின் காதல்
தென்றல் போல உங்கள்
காயங்களை போக்கும்
உள்ளன்போடு அணுகினால்
படர்ந்திடும் வாழ்வில்
ஆலம் விழுதுபோல்

பெண்ணின் வாழ்கையில்
ஆணின் காதல் சில நேரம்
வானில் பறந்துகொண்டிருக்கும் மழை மேகம்போல்
திடீரென வந்து,
துளியாகத் தொடந்து,
சில கணங்களில் நின்றுபோக கூடும்

பெண்
காதலிக்கையில்
ஆண்கள் விழுவது
அவளின் நம்பிக்கையில்,
அவளின் அமைதியில்
அவளின் அன்பில்

அவள் மனம் திறக்கையில்
உலகமே புதியதாய் தோன்றும்;
அவள் மனம் உடைந்தால்
உலகமே உடைந்ததாய் தோன்றும்.

அவளின் காதல்
அது ஒரு துவக்கம்
முடிவில்லா பயணம்

சொல்ல சொல்ல
வார்த்தைகள் குறையும்
உணர்ந்தவர்களின் வாழ்க்கையோ
நிறைவடையும்



****JOKER***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "