"உதவும் கரங்கள் குடை பேசுகிறேன்...."
இங்கிலாந்து நாட்டில் ஓர் அற்புதமான கட்டடம் தான் எனது பிறப்பிடம்!
இயந்திரம் மூலம் எலும்புகளாக கம்பிகளும்,என் தோலாக கறுப்பு துணியினால் போர்த்தி வடிவமைக்கப்பட்டேன்!-என்
இரும்புக் கால்கள் தான் மானிடன் கரம் பற்றும் உன்னத அங்கம்!
இணைபிரியாத நண்பர்களாக பல வண்ணங்களில் ஜொலித்தவாறு வண்டியில் ஏற்றப்பட்டோம்!
எமது வருகைக்காக காத்திருந்தார்கள் வர்த்தகர்கள்!
எங்களை பணம் கொடுத்து வாங்கி,பத்திரமாய் கண்ணாடி அலமாரிகளில் அடுக்கி வைத்தார்கள்!
என் கறுப்பு அழகில் மயங்கிய தேவதை என்னை அவள் வீட்டுக்கு அழைத்தாள்!
எல்லையற்ற மகிழ்ச்சியுடனும், என் நண்பர்களை பிரியும் துக்கத்துடனும் சென்றேன்!
அவள் என்னை செல்லமாக " குடை" என அழைத்து ,வீட்டில் உள்ள எல்லோருக்கும் காண்பித்து மகிழ்ந்தாள்!
அந்த அரக்கி அடுத்த நாளே என்னை ஒரு மூலையில் போட்டுவிட்டு,வேலைக்குப் போக தயாரானாள்!
அங்குமிங்குமாக என் மனம் அலை பாய்ந்தது!
அழுதேன் என் தனிமையை எண்ணி!
முழங்கியது இடி,வானம் இருண்டு மழை சோ....எனப் பொழிந்தது!
முணு முணுத்தவாறே "என் குடை எங்கே?"ஓடி வருகிறாள் அந்த அரக்கி!
முழித்தவாறே அவளுடன் பயணிக்கத் தொடங்கினேன்!
முதன் முதலாக என் மேனியில் பட்டுத் தெறித்தன முத்தான மழைத்துளிகள்!
முற்றுமுழுதாக நான் நனைந்து என் தேவதையை காப்பாற்றினேன்!
என் மேனியில் பட்டு வழிந்தோடும் மழைநீரை இரசித்தேன்!
எட்டி வானத்தைப் பார்க்கும் போது ஏழு வர்ணங்களில் வானவில்லை இரசித்தேன்!
எட்டுத்திசையிலும் எல்லோர் கைகளிலும் என் நண்பர்களைப் பார்த்து இரசித்தேன்!
என் காதுகளில் ஒலித்த வானிலை அறிக்கை " தொடர்ந்து கனமழை" என்பதை இரசித்தேன்!
என்னை இனி தேவதை தனிமையில் விட்டுச்செல்ல மாட்டாள் என மகிழ்ச்சியில் சிரித்தேன்!
என் அன்புத் தோழன் மழை ,ஏனென்றால் அவன் வரும்போது தான் சந்தோசமாக நான் வெளியில் நடமாடுவேன்!
என் தோழன் சிலவேளை என்மீது கோபம் கொள்வான் ,சீக்கிரமாக கடலை அடைய நான் தடுக்கிறேன் என்று!
என் எலும்புகளை உடைத்தெறிவான் கூடா நட்பு புயலுடன் சேர்ந்து!
கடவுள் முதல் காதலர்கள் வரை..
மன்னர் முதல் மகளீர் வரை..
குழந்தை முதல் முதியவர் வரை..
சிறு வர்த்தகத்திற்கு கூரையாக ..
வீடு இல்லாதவனுக்கு புகலிடமாக
வெயில்,மழை இரண்டிலும் காப்பாற்றுவது
"குடை "நாங்கள் தானே !
என் படைப்பின் அர்த்தம் புரிந்து பெருமிதம் கொள்கிறேன்!
என்னை விரித்து பயன்படுத்தும் போது என்னை நேசியுங்கள்!
எனக்குள்ளும் ஒரு அழகிய ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது....
என்னை உடைத்து எறியாதீர்கள்....ஏனெனில் உதவும் கரங்கள் நாங்கள்...