வெண்ணிற வாழ்க்கை 
கவலையின்றி சுத்தி திரிந்தாள் பட்டாம்பூச்சி பெண்ணொருத்தி 
கனவுகள் கூட வண்ணமயமாக மலர்ந்தது கல்யாண வயதை அடைந்த ,அவளையொட்டி ... 
உற்றார் உறவினர் கூடி பஞ்சாங்கம் தான் பார்த்து பத்து பொருத்தமும் கச்சிதமென... பெண்ணவளின் வதுவை கோலம் காண நாள் குறித்து வாக்கு சொன்னார் பேர் பெற்ற சோதிடர்.. 
அடர் சிவப்பு கூறை உடுத்தி  தலை எல்லாம் கனகாம்பரமாக.. 
மஞ்சள் பூசிய முகமும்..செம்மை பூசிய கன்னங்களுடன் 
வண்ணமயமாக கண்ணாளனின் கரம் பிடித்தாள்
நாலாம் நாள் சடங்கு முடிஞ்சு ,வண்டியேறி போன 
கணவனவன் உயிரோடு, 
வாழ்வின் வண்ணங்களையும்,
சேர்த்தே காலனவனுக்கு பறிகொடுத்தாள்... 
குடி வெறியில் வண்டி ஒட்டிய கணவன வையல.. 
10 பொருத்தம் பார்த்து வச்ச  சோதிடர வையல.. 
4 நாள் வாழ்ந்த  மருமக ராசி  மகன கொன்றதென ,
மாமியார்காரியும் கத்தி அழுதாள் .. 
25  வருடம்  வளர்த்த உறவினர் கூட 16 ம் நாள்ல சோகத்தை தலை முழுக ..4  நாள் வாழ்ந்த வாழ்வுக்காக காலம் முழுக்க துடக்கு காத்தாள்..
வானவில்லின் அனைத்து  வண்ணங்களில் சேலை உடுத்தி மகிழ்ந்தவளோ   .. 
இன்று வெண்மையினை மட்டுமே சகாயமாக்கிக்கொண்டாள் ..
கரு வண்டுகள் கண்ணானதோ என மை பூசிய பெண்ணவளோ
இன்று தூக்கம் தொலைத்த  இரவுகளால், கருவளையத்தை பூசிக்கொண்டாள் .. 
ஆடை வண்ணத்தில் நெற்றி பொட்டு தேடி  சூடுபவள் ..  
இன்று நெற்றி சுருக்கங்களால் நெற்றியினை நிறைத்திருந்தாள்.. 
ஜிமிக்கி கம்மல் , பூ கம்மல், சங்கிலி கம்மல் என ரகம் ரகமாய் கம்மல் இட்டவள் , இன்று காது துவாரம் தூராமல்  தவிர்க்க வேப்பங்குச்சியை தஞ்சமடைந்தாள்.. 
நெற்றி பொட்டற்ற முகம் பார்க்க பிடிக்காமல் .
கண்ணாடி பார்ப்பதை வெறுப்புடன் நிறுத்தி கொண்டாள்.. 
ஒலி எழுப்பாததெல்லாம் வளையலா???  என அடம் பிடித்து தங்க வளையல் விலக்கி கண்ணாடி வளையல் வாங்குபவள் , 
இன்று வெற்று கைகளே பாரமாக ஏற்றுக்கொண்டாள்..
.. 
உடன் கட்டையினை ஒழித்தோம்... பெண் சுதந்திரம் காத்தோம் என கொக்கரிக்கும் சமூகமே.. 
வண்ணமற்று  வாட்டத்தில் வாழும் இந்த வாழ்வுக்கு, 
உடன்கட்டையே மேல் என.. 
பார்வையிலேயே ,விரக்தியை உமிழ்ந்து  சென்றாள்..
விதைவை கோலம் கொண்ட பெண்ணொருத்தி..