90's கிட்ஸ்களின் மாய உலகம் !
வசந்த காலக் கண்விழிப்பு,
சிட்டுக்குருவியும் பின்வாங்கும்,
யார் முதலில் விழிக்கிறோம்
என்று போட்டியில்
ஜோல்னா பையில் கனவுகளைத் தூக்கி,  
பள்ளி வாசல் நோக்கி நடந்தோம்,  
புத்தகங்களை அல்ல,  
பசுமை நாட்களை மனதில் சுமந்தோம்.  
“Durrrrrrrr” என்று வாயால் 
வண்டியின் சத்தம்,  
தெருத் திருப்பங்களில் பைக் ஓட்டுவோம்,  
காற்றை அள்ளி, பறந்த பிள்ளைகளாய்,  
சுதந்திரமாய் சுற்றி திரிந்தோம்.  
மொபைல் இல்லை, டேப்லெட் இல்லை,  
பசியை மறந்து மைதானத்தில்,  
நேரம் கரைய விளையாடினோம்,  
மண்ணின் வாசனையோடு வாழ்ந்தோம்.  
விளையாட்டுக்குப் பின் அடி பம்பில்,  
தண்ணீரை இன்பப் பானமாய் குடித்தோம்,  
குளிர்ந்த அந்த நீர்த்துளிகளில்,  
தாகம் மட்டுமல்ல, மகிழ்ச்சியும் கரைந்தது.  
காமம் தெரியாத பேச்சுகளில்,  
முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்கும் என  
நம்பி சிரித்த நாங்கள்,  
அறியாமையில் இன்பம் கண்டோம்.  
Masha and Bear, Coco Melon இல்லாத காலம்,  
சினிமா மயக்கம் தெரியாத வயது,  
டாப் 10 நிகழ்ச்சியில் மூழ்கினோம்,  
பெப்சி உங்கள் சாய்ஸில் ஆனந்தித்தோம்,  
மெட்டி ஒலியில் குடும்பம் தேடினோம்.  
Pizza, Burger தெரியாத வயதில்,  
ஒரு லாலிப்பாப் கேட்டு,  
அம்மாவின் கோபத்தை வாங்கினோம்,  
அந்த அடிகளும் இன்று முத்தமாய் நினைவாகும்.  
தவறு செய்தால் சாமி கண்ணைக் குத்துவான்,  
சாப்பாடு மிச்சமிட்டால் பூச்சாண்டி பிடிக்கும்,  
இந்தக் கதைகளை நம்பி நடுங்கினோம்,  
பயத்தில் கூட இனிமை கண்டோம்.  
நினைவுகள் அலை மோதும் கடலாக,  
பிறந்ததில் இருந்து ஒவ்வொரு நாளும்  
ரசித்து, ருசித்து வாழ்ந்தோம்.  
90's kid களின் உலகம்,  
மறக்க முடியாத பொற்காலம்!  
எளிய வாழ்வு, இனிய சிரிப்பு,
அந்த மாய உலகம் மீண்டும் வருமா?  
ஒருமுறை வந்து மனதைத் தொட்டது,  
என்றும் இதயத்தில் இனிக்கும் பொக்கிஷம் !