Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 372  (Read 3771 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 372

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 427
  • Total likes: 1972
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


அரச மர நிழலுல எங்க அய்யாரு
அரசியலும் அனுபவமும் பேசித்தீர்த்த நேரத்துல
என் ஜோடி பசங்களோட கில்லியும் பம்பரமும்
அசராமல் ஆடித்தீர்த்த காலமது....

ஆத்துல தண்ணி மொண்டு துணி தொவைக்க
எங்க அப்பத்தா தான் போகையில...
அந்த மணல் மேட்டுல நொண்டி விளையாடி
அக்காக்களுடன் சேர்ந்து நானும்
அலங்காரம் செய்து மகிழ்ந்த காலமது...

அஞ்சு கல்லும் பல்லாங்குழியும்
பரமபதமும் கண்ணாமூச்சியும் என...
அன்றைய விளையாட்டுகள் -  எங்கள் உடலை மட்டுமல்ல
உள்ளத்தையும் ஆரோக்கியமாக்கியது...

ஆண் பெண் என்ற பாகுபாட்டின்றி
ஜாதி மத பேதமின்றி
கைகோர்த்து அனைவரும் சமமாய்
கள்ளங்கபடமின்றி சிரித்து விளையாடிய காலமது...

அய்யா உன்ற பள்ளிக்கூடத்துல தான்
எங்க பாப்பாவும் படிக்குது
போக வர சித்த பாத்துக்கோய்யா என
ஊரானூட்டு பிள்ளை அனைத்தும் தன் பிள்ளையாய் பெற்றோர் பாவித்த காலமது...

கனவிலும் கூட எண்ணிப்பார்க்காத மாறுதல்கள்
வீட்டை விட்டு வெளியே வர மறுக்கும் குழந்தைகள்...
மண்ணில் விளையாட பிள்ளைகளை
விட மறுக்கும் பெற்றோர்கள்...
அரவணைக்க அய்யாரும் அப்பத்தாவும் இல்லாத தனிக்குடித்தன வாழ்க்கை...

அவசர நிலையில் கூட - அண்டை வீட்டில்
குழந்தையை விட யோசிக்கும் அவல நிலை..
பால்மணம்மாறா பிள்ளையின் மனதில் கூட
Good touch bad touch புகட்ட வேண்டிய கட்டாய நிலை....

அசுர வேகத்தில் வளரும் குழந்தையின் அறிவை
அணை போட்டுத்தடுக்கும் ஆன்லைன் games um
அஞ்சு நிமிஷம் குழந்தைகளுடன் பேசி சிரிக்க நேரமில்லா
பெற்றோரின் வேலை கலாச்சாரமும்..

வயதிற்கு மிஞ்சிய விஷயங்களை
தெரிந்துகொள்ள இடம் கொடுக்கும் ஊடகங்களும்
நல்லதிது கெட்டதிது என நீதிக்கதைகள் கூறி
சோரூட்ட அப்பத்தாக்கள் இல்லாத பிள்ளைகளின் தனிமை நிலைகளும்...

என்று மாறும் இந்த நிலைகள் எல்லாம்??
அனைவரும் ஒன்றென்றெண்ணி
ஆடிப்பாடி மகிழும் அந்த வசந்த காலம்....
இதோ மாறியது என்றாகுமோ????..அல்ல
விடையில்லா கேள்வியாய்த்தான் போகுமோ???

« Last Edit: May 25, 2025, 10:49:02 PM by VenMaThI »

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1042
  • Total likes: 1836
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
மணலில் சிந்திய சிரிப்புகள்!!!

குட்டி குட்டி காலடிகள்,
ஓடி திரிந்த நாட்கள்...
மண்ணுக்குள் பதிந்த பாதங்கள்,ஓடி ஒளிந்தோம் மரக்கன்று பின்...

வட்டமாய் நின்று கைப்பிடித்து வளர்ந்த நட்பு, வானத்திலே மழை வர சொல்லி ஆடிய  நாட்கள்....

பூக்கள் போல சிரித்த முகங்கள்,பூமியின் மேல் பதிய வைத்த கதைகள்....

மண்ணில் விழுந்தபோது, கைதட்டி சிரித்தோம்... மறந்துவிட்டோம் "வலி" என்னும் வார்த்தையை...

இன்று வாழ்கையில் கோடி பொருள்,
அன்று ஒரு பந்து போதும் முகத்தில் சிரிப்பை காண...

சுண்ணாம்பு சுவரில் கை ரேகைகளும் கவிதை தான்...
தரையில் வரைந்த ஒரு வட்டத்தில்,
தரணியே நம் விளையாட்டு மைதானம்!

"வா விளையாடலாம்"!!! என்ற சொல் வாழ்க்கையின் முதல் கவிதையாக இருந்தது அந்த நாட்களில்...

நாளையை பற்றி மறந்து இன்றை நேசித்த காலங்கள், அதுவே கடைசியோ???ஒரு கல், ஒரு குச்சி அதுவே எங்கள் விளையாட்டின் பொக்கிஷம்...

வாடாத நினைவுகள்...இன்று வரை அழிக்கப்படாத ஓவியம்!!!
« Last Edit: May 26, 2025, 06:47:06 PM by Lakshya »

Offline Thenmozhi

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 597
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


மனித வாழ்க்கையின் முதன்மையான முக்கிய பருவம் குழந்தை பருவமே,
மனதில் கள்ளக்கபடம் அற்ற பருவம் அதுவே,
மனதில் பட்டாம்பூச்சி பறக்கும் காலமும் அதுவே,
மறக்க முடியாத பருவமும் அதுவே.

எந்த எதிர்பார்ப்பையும் கொண்டிராத உறவு தான் நட்பு,
எது நடந்தாலும் நம் கூட நிற்கும் உறவு தான் நட்பு.
என் குழந்தை பருவ நண்பர்களின் அழகான நினைவுகள்,
என் மனதில் ஆழமாக பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது.
பகிர்கிறேன், கவி வடிவில்:

புன்னகையுடன் கைகள் கோர்க்கப்பட்டன,
புரியாத பருவமான குழந்தை பருவத்தில்.
புதிது புதிதாக கண்டுபிடிப்போம் விளையாட்டுகள்,
புது யுகம் படைப்போம் என்ற எண்ணத்தில்.
பட்டம் ஏற்றி பறக்க விட்டு,
பாரதூரம் போகும் என்று,
பார்த்திருப்போம் வேடிக்கையாக,
பரிதாபமாக பட்டம் விட்ட இடத்திலேயே விழுந்ததை எண்ணி மகிழ்வோம்.

பந்து அடிப்போம், “பாலா, ஓடி வா!” என்று,
பாய்ந்து பாய்ந்து பந்தடித்து மகிழ்ந்தோம்.
சண்டைகள், சச்சரவுகள் உலாவினாலும்,
சமாதானமாய் போயிடுவோம் இறுதியில், நண்பர்கள் என்ற உறுதியில்.

கண்ணாமூச்சி, கபடி,
திருடன்-பொலிஸ் என்று,
எண்ணில் அடங்கா விளையாட்டுக்கள் விளையாடி மகிழ்ந்தோம், நண்பர்களாக.
கூட்டாஞ்சோறு ஆக்கி, கூடி உண்டு மகிழ்ந்த காலம் அது அல்லவா?

திருட்டுத்தனமாய் இனிப்புகளை உண்டு,
திருந்தாத பிள்ளைகள் என,
திட்டுகள் பல விருதுகளாய் பெற்றும்,
தித்திப்பாக குறும்புகள் செய்து,
திமிராக நடந்து சென்ற நினைவுகள்,
என் மனதில் நீங்காத நினைவுகளில்.
அன்று நாம் நண்பர்களாய் கோர்த்த கரங்கள்,
இன்று உறுதி அதிகரித்தே நிற்கிறது.

விடிகின்ற வேளையில், அடி வானில் ஒரு விடிவெள்ளி,
கொடிகட்டும் இறுதி வரை,
நம் நட்பு கைகள் கோர்த்து தொடரும் என்று.
« Last Edit: May 26, 2025, 07:41:22 PM by Thenmozhi »

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 311
  • Total likes: 1232
  • Karma: +0/-0
  • 🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
    • Google
பிஞ்சு உள்ளங்களின் உலகம்தான்
எத்துனை அழகானது !
சிரிப்பு அழுகை சண்டை
என உணர்வுகளின் கூடாரம் அது.

விளையாட்டில் சலிக்காத பொழுதுகள்
கைக்கோர்த்து விளையாடுகையில் விரியும் உலகம்
இங்கே கடிகாரம் சுழலாது
அவர்களின் சிறு பிரபஞ்சமே சுழலும்.

சுட்டெரிக்கும் வெயிலும் சுடுவதில்லை
கொட்டும் மழையும் குளிர்வதில்லை
வெயிலும் மழையும் விளையாட்டின் அங்கம்.
இங்கு கூர்மையான கற்கள்கூட
காலை குத்துவதில்லை.

புளியங்காயும் காக்காகடி மாங்காயும்
பசித்தீர்க்கும் பண்டங்கள்.
அடிக்குழாய், கிணறு, ஓடை
தாகத்தைத் தீர்க்கும் நண்பர்கள்.
விளையாடுகையில் படும் காயங்கள்
வீரத்தைப் பறைசாற்றும் சின்னங்கள்.

விளையாடுகையில்...
புல்வெளியில் புள்ளினங்களாக
தாவிகுதிக்கும் மானினங்களாக
சிரிக்கும் மத்தாப்புகளாக
சேட்டைகளில் வானரமாக
உவகைக்கொள்ளும் குழந்தை மனது...


( அகவை விளையாட்டுக்கு
 தேவை இல்லை 🥳🥳🥳 )
« Last Edit: May 26, 2025, 06:55:16 AM by Yazhini »

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1264
  • Total likes: 1097
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
கூடி விளையாண்டால் கோடி நன்மை
என்பது போல் ஒன்று கூடி விளையாடி
ஒற்றுமையும்
வேற்றுமை பாரமால்
கைகோர்த்து விளையாடி ஒற்றுமை
மகத்துவத்தை உணர்ந்தோம்

கூடி விளையாட்டினால் நண்பர்கள்
பலர் பெற்று இணைந்து விளையாடி
நண்பர்களுடன் உறவு கொள்ளும்
முறையை வளர்த்தோம்

ஒன்று கூடி விளையாடி மற்றவர்களுடன் பழகும் பண்பையும்
சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து பண்பையும் வளர்த்தோம்

ஒன்று கூடி விளையாடி மகிழ்ச்சி என்னும் புத்துணர்ச்சி கண்டு
மனத்தினால் மகிழ்ச்சி பெருகி
மன அழுத்தத்தை குறைத்து
சோகத்தை போக்கிக் கொண்டோம்

சகத்தோழர்களுடன் சண்டையிட்டு
அடுத்த கணமே பகைமை பாரமால்
சமாதானமாகி வேற்றுமையிலும்
ஒற்றுமை கண்டோம்

மாலையில் பள்ளி மாணவர்களுடன்
பாட புத்தக சுமை தூக்கி எறிவது போல கூடி விளையாடி மன சுமை
போக்கி நண்பர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்

நொங்கு வண்டி செய்து தெருதெருவாய் சுற்றி வந்தோம்
பணை ஓலையில் காத்தாடி செய்து
காற்றில் பறக்க விட்டு மகிழ்ந்தோம்
ஓட்டப்பந்தய விளையாட்டில் ஓடி
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டோம்
கூட்டாஞ்சோறு விளையாட்டில்
பகிர்ந்து உண்ண கற்றுக் கொண்டோம்


Offline Titus

இனிய குழந்தைப் பருவம் சில நேரங்கள்
நினைவுகளில் விழும் வெள்ளம் போலவே,
பூக்கள் வாசிக்கும் காலை நேரம்,
பிள்ளைகளின் சிரிப்பில் மின்னும் அன்பு.

மண் தொடும் கைகள் தரும் ஆறுதல்,
சின்ன கனவுகளால் நிறைந்த உலகம்,
அப்பாவின் கதைகளில் கழியும் நேரம்,
அம்மாவின் நேசம் தோளில் ஆடும் சுகம்.

வீட்டுவாசலில் கற்கள் கட்டி விளையாடி,
சிரிப்பும் மண்ணோடு இணைந்து சிதறும்.
சொல்லில் வெளிப்படாத பெரும் பாசம்,
சாப்பாட்டின் சுவை மறந்தாலும்
அதிலுள்ள பாசம் மாறாவில்லை.

புத்தகம் திறக்கையில் புதிய உலகம் விரியும்,
பம்பரம் சுழன்று, எண்ணங்கள் நடக்கும்,
தடுக்கி விழுந்தாலும் வரும் சிரிப்பு,
வெற்றி தோல்வி எனும் இரு தோழர்களும், விளையாட்டில் நம் மனத்தை வலுப்படுத்துகின்றன.

கயிறு ஓட்டலில் கால்கள் வானம் தொடும்,
காகித கப்பலில் கனவுகள் நீந்தும்,
பனங்கிழங்கு தேடி காட்டுப் பாதையில்,
அந்த இனிய நாட்கள் மனதில் நிற்கும்,
இனிமையான நினைவுகள் நிறைந்த காலம்.

மறக்கவே முடியாத சில பக்கங்கள் – என் குழந்தைப்பருவம்,
மண் மணத்தில் மூடியது, சிரிப்போடு நடந்த பயணம்.
அம்மாவின் கையில் இருந்த உலகம்,
அப்பாவின் வார்த்தையில் இருந்த நம்பிக்கை.
வலி வந்தாலும் கனவுகள் சாயவில்லை,
அந்த நாட்கள் இன்றும் என் மனம் தாங்கும் கவிதை   
« Last Edit: May 27, 2025, 07:56:47 PM by Titus »

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 246
  • Total likes: 825
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
25 வருஷம் கழிச்சு ஊர்ல ஒரு தேர் திருவிழா..

சொக்கோலேட்டும் சென்ட் போத்தலும் சூட்கேச அடைக்க.. எண்ணற்ற கனவோடு தாயகத்த நோக்கி 1 மாச விடுமுறை பயணம்.. பழைய நாட்களை ஒருக்கா மீண்டும் வாழ்ந்து பார்க்க..

சண் ஸ்க்ரீன் லோஷனைபோட்டுகொண்டு போங்கோ எண்டு மனிசி கத்த.. அடி போடி சித்திரை வெயில் குளிச்ச உடம்பேண்டு .. வீறாப்பா பொய் வேர்குருவோடு வீடு வந்தனான் .. நன்றி 25 வருஷ லண்டன் வாசத்துக்கு..

ஓடி ஆடி விளையாடிய வேப்பமரத்தடி இன்று சுப்பண்ட சூப்பர்மார்கெட் ஆ மாறி போக .. நிழல் தந்த மரத்த வெட்டிப்போட்டு .. AC போடுறான் கடை முழுக்க..

செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் வேணுமெண்டு மனிசி சொல்லி விட.. செக்கெங்க இப்ப இருக்குது பூரா இடமும் machine தான் எண்டு நமட்டு சிரிப்பு சிரிக்கறானுவ மருமக்கள்..

தாகம் தீர்த்த கோவில் கிணறு இப்ப பாழுங்கினாராகி போக.. போத்தலடைச்ச தண்ணிய லிட்டர் 20 ரூபா குடுத்து வேண்டி போகுதுங்கள் சனங்கள்…

தட்டி வண்டி. மாட்டு வண்டில் பார்க்க மனசு ஏங்க.. அருங்காட்சியகத்துல மட்டுமே காட்சி பொருளாக கிடந்தன.. கவனமா கைபேசியில் படமெடுத்து வச்சான்.. புளுகி தள்ளிய பிள்ளைகளுக்கு காட்ட..

கலையான கமலாவும் இப்ப கனடா வாசி ஆகி போனாளாம்.. பக்கத்துக்கு வீடு குழப்படி பரமன் இப்ப பெரியாஸ்பத்திரி டாக்குத்தராம்.. மரத்தடி விளையாட்டு நண்பர்களை மீண்டும் ஒரு முறை பார்க்க துடிச்சது மனசு..

மனம் ஏனோ 25 வருஷ மாற்றத்தை ஏற்க மறுத்து முரண்டு பிடிக்க .. ஏக்கத்துடனும் சொந்தங்காரங்கள்ட விருந்தோடயும் ஓடி கழிஞ்சது 1  மாசு விடுமுறை..

சொந்த ஊரே அந்நியமாக தெரிய.. பழைய நாட்களை எண்ணி மனசு ஏங்க.. பெருத்த மூச்சோடும்.. கனத்த மனசோடும்.. flight ஏறும் நாளை எண்ணி .. மிளகா தூளும் , வேப்பம்பூ வடகமும் சேர்க்க தொடங்கினேன்..
« Last Edit: May 26, 2025, 12:26:28 AM by Madhurangi »

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1902
  • Total likes: 5922
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀

90's கிட்ஸ்களின் மாய உலகம் !

வசந்த காலக் கண்விழிப்பு,
சிட்டுக்குருவியும் பின்வாங்கும்,
யார் முதலில் விழிக்கிறோம்
என்று போட்டியில்

ஜோல்னா பையில் கனவுகளைத் தூக்கி, 
பள்ளி வாசல் நோக்கி நடந்தோம், 
புத்தகங்களை அல்ல, 
பசுமை நாட்களை மனதில் சுமந்தோம். 

“Durrrrrrrr” என்று வாயால்
வண்டியின் சத்தம், 
தெருத் திருப்பங்களில் பைக் ஓட்டுவோம், 
காற்றை அள்ளி, பறந்த பிள்ளைகளாய், 
சுதந்திரமாய் சுற்றி திரிந்தோம். 

மொபைல் இல்லை, டேப்லெட் இல்லை, 
பசியை மறந்து மைதானத்தில், 
நேரம் கரைய விளையாடினோம், 
மண்ணின் வாசனையோடு வாழ்ந்தோம். 

விளையாட்டுக்குப் பின் அடி பம்பில், 
தண்ணீரை இன்பப் பானமாய் குடித்தோம், 
குளிர்ந்த அந்த நீர்த்துளிகளில், 
தாகம் மட்டுமல்ல, மகிழ்ச்சியும் கரைந்தது. 

காமம் தெரியாத பேச்சுகளில், 
முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்கும் என 
நம்பி சிரித்த நாங்கள், 
அறியாமையில் இன்பம் கண்டோம். 

Masha and Bear, Coco Melon இல்லாத காலம், 
சினிமா மயக்கம் தெரியாத வயது, 
டாப் 10 நிகழ்ச்சியில் மூழ்கினோம், 
பெப்சி உங்கள் சாய்ஸில் ஆனந்தித்தோம், 
மெட்டி ஒலியில் குடும்பம் தேடினோம். 

Pizza, Burger தெரியாத வயதில், 
ஒரு லாலிப்பாப் கேட்டு, 
அம்மாவின் கோபத்தை வாங்கினோம், 
அந்த அடிகளும் இன்று முத்தமாய் நினைவாகும். 

தவறு செய்தால் சாமி கண்ணைக் குத்துவான், 
சாப்பாடு மிச்சமிட்டால் பூச்சாண்டி பிடிக்கும், 
இந்தக் கதைகளை நம்பி நடுங்கினோம், 
பயத்தில் கூட இனிமை கண்டோம். 

நினைவுகள் அலை மோதும் கடலாக, 
பிறந்ததில் இருந்து ஒவ்வொரு நாளும் 
ரசித்து, ருசித்து வாழ்ந்தோம். 
90's kid களின் உலகம், 
மறக்க முடியாத பொற்காலம்! 

எளிய வாழ்வு, இனிய சிரிப்பு,
அந்த மாய உலகம் மீண்டும் வருமா? 
ஒருமுறை வந்து மனதைத் தொட்டது, 
என்றும் இதயத்தில் இனிக்கும் பொக்கிஷம் !
« Last Edit: May 26, 2025, 11:15:26 AM by சாக்ரடீஸ் »