கண்களால் கேட்டாள்
காளைப் பருவத்தின் கல்வி காலம்
பள்ளியில் பலகலையும் உண்டு
விளையாட்டில் திறமை
ஒழுக்கத்தில் மேன்மை
கல்வியில் முதன்மை
பண்பில்ச் சிறப்பும் கண்டிட...
கண்டவள் கொண்டாள் காதல் என்மேல்
தவறென்ன உண்டு?
நம் சமூகத்தில் சாதியும் மதமும்
உண்டு வளர்ந்தால் எப்படி சரியாகும் காதல்!
கொண்ட காதல் நெஞ்சில் வளர
அன்பால் நிலைத்தாள் மாதரசி
பதுமை நிறை குணவதியாய்
குடிபுகுந்தாள் இதயமதில்
மதங்கள் எமை பிரித்து வைக்க
வீட்டுக்காவல் மேலோங்க வதையுண்டோம்!
கொண்ட அன்பால் துவண்ட வேளை
காணமுடியா கவலையால் கொண்டகோவம்...
காணாமலே ஒதுங்கி நின்று கோதை விடு
தூதனைத்தும் கோவம்கொண்டு புறக்கணித்து!
கொடுத்தவலி கொடிது.. கொடிது கொடிது!
அதனினும் கொடிதாய் கொடுத்தாள் - என் சொல்வேன்!
எம்தேசமதில் குண்டு மழைக்காலம்
பயணமானாள் போலும் பள்ளிக்கு -
வீட்டுச் சிறை உடைத்து!
காண்கின்றேன் புன்னகைத்து கடந்து போக
கடக்க விட்டு மெல்லத் தொடர்கிறோம்!
ஆகாய இரும்பு கழுகு பேரிரச்சலோடு
உலோகக் குண்டை அனல்மழையாக்கி கக்குகிறது!
நிற்போர் நடப்போர் சக்கரங்களில் போவோர்
விழுந்து படுக்க, விரைகின்றேன் சென்றவளிடம்!
ஆகாய இரும்பு கழுகு அள்ளிவந்த அடைமழையில்
சிலபெரும் துளிகள் வீழ்ந்திட்டதோ! ஐயோ.....!
வீழ்ந்து கிடக்கின்றாள் துளிர்த்தகொடி
வெண்நிறப் பள்ளியாடை குருதியால் தோய்த்ததுபோல்!
சற்றுமுன் கண்டேனே கண்களால் உணவூட்டி போக...
ஆவிதுடிக்க தளிர்மேனி தாவி அணைத்து
செய்வதறியாது நானணைக்க மார்போடு!
அறுந்த குரல்வளையால் மொழிமாய...
தலைவெட்டிய சாவல் உடல் துடிப்பதுபோல்-
துடிக்கையிலும்!
தன்கரத்தால் என்கரம் பிடித்து
தன் இடப்புற மார்பிலே என் கரம் அழுத்தி
கண்களால் கேட்டாள் என் அன்பு பொய்யா என்று?
வாயால் பேச உடலில் யீவன் முழுதாய்
இல்லை கண்களால் கேட்டாள்!
பதில் சொல்லுமுன் வெறித்த கண்கள்
விழித்தே இருக்க கண்மூடினாள் கண்முன்னே.
கண்ணீரை நிறுத்தவோ
நினைவை இழக்கவோ இயலவில்லை!
இதயம் துடிக்கும்வரை வலியும்
கண்கள் உள்ளவரை அழுகையும் வரமானது!
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே