கதவு தட்டப்படுகிறது
கடவுள் வந்திருக்கிறேனென்ற அறிவிப்போடு....
எழத்திராணியின்றி
நீர் பருகிப்படுத்திருக்குமவன்
நீ
எந்த மதத்தின் கடவுளென்று
எதிர் கேள்வி
கேட்கப்போவதில்லை....
மீண்டுமொரு தட்டப்படுகிறவரை
எழுவதற்கான பிரயத்தனமென்று
எதையுமே செய்யப்போவதுமில்லை...
மறுமுறையும் தட்டாதவன்
கடவுளாக இருக்கப்போவதில்லை...
தட்டப்படுமாவென்று
பார்த்தபடியிருக்கிறான் அவன்
திறக்கப்படுமாவென்று
கவனித்தபடியிருக்கிறான் கடவுள்
மௌனமாயிருக்கிறது கதவு...
கதவுகள் அப்படித்தான் ...
கடவுளேயானாலும்
மூடியவன் திறக்கும்வரை
உண்மை சொல்வதில்லை..