Author Topic: ~ 30 வகை பாசிப்பருப்பு ரெசிப்பி ~  (Read 2345 times)

Online MysteRy





உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத சத்துக்களில் மிக முக்கியமானது புரோட்டீன் எனப்படும் புரதச்சத்து. புரதச்சத்தை வாரி வழங்கும் அட்சயப்பாத்திரமாக விளங்குபவை பருப்புகள். புரதச்சத்துடன் விட்டமின்கள், கால்சியம், நார்ச்சத்து நிரம்பியிருக்கும் பாசிப்பருப்பை `ஆரோக்கியத்தின் தூதுவன்’ என்றே அழைக்கலாம். இது உஷ்ணக் கோளாறுகளில் இருந்து நிவாரணம் அளிப்பதுடன், எடை அதிகரிக்காமல் இருக்கவும் உறுதுணை புரியும்.

அதேசமயம், வெறுமனே பருப்பு, கூட்டு என்று செய்து பரிமாறினால், அனைவரும் விரும்பி சாப்பிட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். இதையெல்லாம் கருத்தில்கொண்டு, பாசிப்பருப்பில் டோக்ளா, பர்ஃபி, சூப், புட்டு, இடியாப்பம், பிரதமன் என்று விதம்விதமாக தயாரித்து, `30 வகை பாசிப்பருப்பு ரெசிப்பி’களை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் பிருந்தா ரமணி, ``ஹேவ் எ ஹேப்பி அண்ட் ஹெல்த்தி ஃபேமிலி’’ என மனதார வாழ்த்துகிறார்.

Online MysteRy

பாசிப்பருப்பு டோக்ளா



தேவையானவை:

பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை, கேரட் துருவல், தேங்காய்த் துருவல், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்),  எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், சமையல் சோடா, உப்பு சேர்த்துக் கலந்து, தயிர் விட்டு இட்லி மாவு பதத்துக்குக் கலக்கவும் (தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்). கலந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, இதில் சேர்க்கவும். மேலாக தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, கேரட் துருவல் தூவி, சிறு துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும்.

Online MysteRy

பாசிப்பருப்பு வெஜ் ஊத்தப்பம்



தேவையானவை:

பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு - அரை கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், ஏதேனும் ஒரு கீரை (நறுக்கியது) - அரை கப், பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், கீரை சேர்த்து வதக்கி, கொஞ்சம் உப்பு போட்டுக் கிளறவும். நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும்.
ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவு, கோதுமை மாவு, கடலை மாவு சேர்த்துக் கிளறி... இதனுடன் வதக்கி வைத்த வெஜிடபிள் கலவையை  சேர்த்துக் கலக்கவும். பிறகு, உப்பு சரிபார்த்து... தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை கரண்டியால் எடுத்து சற்றே மெல்லிய ஊத்தப்பங்களாக ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.

Online MysteRy

உப்புமா கொழுக்கட்டை



தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி (ரவை போல உடைக்கவும்) - அரை கப், தண்ணீர் - ஒன்றரை கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, இஞ்சி - சிறு துண்டு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஊறவைத்த கடலைப்பருப்பை சேர்க்கவும். இதனுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, பெருங்காயத்தூளையும் சேர்த்துக் கிளறவும். வதங்கியவுடன், ஊறவைத்த பாசிப்பருப்பைப் போட்டுக் கிளறவும். பின்னர் தண்ணீரை விட்டு வேகவிடவும். முக்கால் பதம் வெந்தவுடன் பச்சரிசி ரவை, உப்பு சேர்த்துக் கிளறவும். தீயைக் குறைத்து வைத்து, வாணலியை மூடி வைக்கவும். ரவை வெந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிடவும். தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறி மூடிவைக்கவும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெந்த உப்புமாவை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும். ஆறியதும் உப்புமாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

Online MysteRy

பாசிப்பருப்பு அல்வா



தேவையானவை:

பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், ஜவ்வரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு கப், சர்க்கரை - 2 கப், சிவப்பு ஃபுட் கலர் - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - சிறிதளவு.

செய்முறை:

பாசிப்பருப்பு மாவு, ஜவ்வரிசி மாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கரைக்கவும். அடி கனமான வாணலியில் மாவுக் கரைசல், சர்க்கரை, ஃபுட் கலர் போட்டுக் கலந்து அடுப்பில் வைத்து,  நன்றாகக் கிளறிவிடவும். நெய்யை விட்டுக்கொண்டே மேலும் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்துவிடவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும். மேலாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பைப் பதித்து வைத்தால்... பாசிப்பருப்பு அல்வா ரெடி! இதை துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.

Online MysteRy

பாசிப்பருப்பு இட்லி



தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தயிர் - அரை கப், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பைத் தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். கடுகு, பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாயை எண்ணெயில் தாளித்து அரைத்த பாசிப்பருப்புடன் சேர்க்கவும். இதனுடன் சமையல் சோடா, தயிர், தேங்காய்த் துருவல், உப்பு ஆகிய வற்றை சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

Online MysteRy

கோசுமல்லி



தேவையானவை:

பாசிப் பருப்பு - அரை கப்,  துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், சிறிய எலுமிச்சைப் பழம் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 பாசிப்பருப்பைத் தண்ணீர் விட்டுக் களைந்து, பிறகு, தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு, பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் போடவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சித் துருவல், கேரட் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும்.  இதில் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: மாங்காய், வெள்ளரிக்காயையும் பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கலாம்.

Online MysteRy

தால் கிரேவி



தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பூண்டு - 6 பற்கள், எண்ணெய் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பைக் கழுவி குக்கரில் போட்டு, இரண்டு கப் தண்ணீர், மஞ்சள்தூள், கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை அதனுடன் சேர்த்து, குக்கரை மூடி, மூன்று விசில் விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... சீரகம், தட்டிய பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பொரிந்ததும் வேகவைத்த பருப்பை சேர்க்கவும். பின்னர் தேவையான உப்பை சேர்த்துக் கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

Online MysteRy

பாசிப்பருப்பு போளி



தேவையானவை:

மைதா மாவு - ஒரு கப், பாசிப்பருப்பு, வெல்லத்தூள் - தலா முக்கால் கப், தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு சேர்த்துக் கலந்து தண்ணீர் விட்டுச் சற்றுத் தளர்வாகப் பிசையவும். இதன் மேல் நல்லெண்ணெயைத் தடவி... இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பாசிப்பருப்பை குழைய வேகவிட்டு எடுக்கவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து... வேகவைத்த பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லத்தூள் போட்டுக் கிளறவும். நன்றாக சுருள வரும்போது ஏலக்காய்த்தூள், நெய் விட்டுக் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாழை இலை அல்லது பால் கவரின் மீது சிறிது எண்ணெயைத் தடவவும். பிசைந்து வைத்த மாவிலிருந்து சிறு எலுமிச்சைப் பழ அளவு எடுத்து, அதன் மீது வைத்து கை விரல்களால் அழுத்தம் கொடுத்துச் சின்ன வட்டமாகப் பரப்பி... நடுவில் பூரண உருண்டையை வைத்து மூடி, திரும்பவும் கை விரல்களால் அழுத்திப் பெரிதாக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, செய்து வைத்திருக்கும் போளியைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

Online MysteRy

பாசிப்பருப்பு புட்டு



தேவையானவை:

வறுத்த பாசிப்பருப்பு - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வறுத்த பாசிப்பருப்பை போட்டு தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் உதிர்த்து வைக்கவும்.
அடி கனமான வாணலியில் வெல்லத்தூளைப் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் நன்றாகக் கரைந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். வெல்லக்கரைசலை வடிகட்டி, மீண்டும் வாணலியில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். ஒரு கம்பி பாகு பதம் வந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள பாசிப்பருப்பு மாவை சேர்த்துக் கிளறவும். மாவு, பாகோடு சேர்ந்து, நன்றாகக் கெட்டியானவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை இதனுடன்  கலந்தால்...  சத்தான, சுவையான பாசிப்பருப்பு புட்டு ரெடி.

Online MysteRy

முள்ளு முறுக்கு



தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், சீரகம் அல்லது எள் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை தண்ணீர் விட்டுக் குழைய வேக வைக்கவும். இதனுடன் அரிசி மாவு, சீரகம் (அ) எள், வெண்ணெய், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து தேவையான தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... முள்ளு முறுக்கு அச்சு உள்ள குழலில் மாவைப் போட்டுப் பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

Online MysteRy

பாசிப்பருப்பு இடியாப்பம்



தேவையானவை:

வறுத்த பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், வறுத்த கோதுமை மாவு - கால் கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கொடுக்கப் பட்டுள்ள அனைத்துப்பொருட் களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து, தேவையான தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
பிறகு கலந்த சாதங்கள் செய் வது போல, தேங்காய் இடியாப்பம், லெமன் இடியாப்பம் என்று செய்யலாம். இனிப்பு சேர்த்து இனிப்பு இடியாப்பமாகவும் செய்து பரிமாறலாம்.

Online MysteRy

பாசிப்பருப்பு வடை



தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பைத் தண்ணீர் விட்டு ஊறவைத்து, தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் உப்பு சேர்த்துக் கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன் பச்சரிசி மாவு, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிற மாகப் பொரித்து எடுக்கவும்.

Online MysteRy

பாம்பே சட்னி



தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, காய்ந்த மிளகாய் - 3, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பைத் தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய், தேவையான உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கிளறவும். இதனுடன் கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் கிளறவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பு விழுதை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கலந்து கொதிக்க வைக்கவும். நன்றாக வெந்தவுடன் இறக்கி... மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

Online MysteRy

பாசிப்பருப்பு போண்டா



தேவையானவை:

பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், உளுந்து மாவு - கால் கப், ரவை - 2 டேபிள்ஸ்பூன், புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு, தயிர் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

எண்ணெயைத் தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்).  வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவைச் சிறு உருண்டைகளாக எடுத்துப் போட்டு... பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:

மாவைக் கொஞ்சம் தளர்வாகப் பிசைந்துகொள்ள வேண்டும்.