Author Topic: ~ 30 வகை பாசிப்பருப்பு ரெசிப்பி ~  (Read 2347 times)

Offline MysteRy

பருப்பு உருண்டை குழம்பு



தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 பாசிப்பருப்பை ஊற வைத்து, அதனுடன் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, தேவையான உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து, தண்ணீர் விடாமல் நைஸாக அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
இதை வழக்கமாக வைக்கும் சாம்பார் அல்லது மோர்க்குழம்பில் காய்க்குப் பதிலாக சேர்க்கலாம் (இறக்குவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பு சேர்க்க வேண்டும்).

Offline MysteRy

பாசிப்பருப்பு தோசை



தேவையானவை:

பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

Offline MysteRy

பாசிப்பருப்பு பக்கோடா



தேவையானவை:

பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - கால் கப், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு -  தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

எண்ணெய் தவிர  மற்ற எல்லா பொருட்களையும்  ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து, தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

பாசிப்பருப்பு பஜ்ஜி



தேவையானவை:

பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், அரிசி மாவு, மைதா மாவு - தலா அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, ஏதாவது ஒரு காய் (உருளைக்கிழங்கு, வாழைக்காய், பெரிய வெங்காயம், கத்திரிக்காய்) - தேவையான அளவு.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் (எண்ணெய், காய் தவிர)  ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடவும். எண்ணெய் காய்வதற்குள் காயை வில்லைகளாகச் சீவி வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் காய்கறி வில்லையைப் பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும். இருபக்கமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

இனிப்பு தோசை



தேவையானவை:

பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தூளைப் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். நன்றாகக் கரைந்ததும் எடுத்து வடிகட்டவும். வேறொரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவு, அரிசி மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் போட்டுக் கலந்து, வெல்லக் கரை சலை விட்டுத் தோசை மாவு பதத் துக்குக் கரைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து மாவை தோசையாக ஊற்றி, சுற்றிலும் நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும் (தீயைக் குறைத்து வைத்து செய்ய வேண்டும்).

Offline MysteRy

பாசிப்பருப்பு ஓமப்பொடி



தேவையானவை:

பாசிப் பருப்பு மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், ஓமம் - ஒரு டீஸ்பூன் (பொடிக்கவும்), உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத் திரத்தில் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களை யும் சேர்த்துக்  கலந்து, தண்ணீர் சேர்த்துக் கொஞ் சம் தளர்வாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து ஓமப்பொடி அச்சு உள்ள குழலில் மாவைப் போட்டுப் பிழிந்து, நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

பாசிப்பருப்பு தட்டை



தேவையானவை:

பாசிப் பருப்பு மாவு - 3 கப், அரிசி மாவு - ஒரு கப், பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன், ஊற வைத்த கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். மாவை சிறு உருண்டையாக எடுத்து வட்டமாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

பாசிப்பருப்பு மோர்க்களி



தேவையானவை:

பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், புளித்த தயிர் - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 3, நறுக்கிய வெங்காயம் - அரை கப், தண்ணீர் - ஒரு கப், எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவு, புளித்த தயிர், தண்ணீர், உப்பு சேர்த்துக் கட்டி இல்லாமல் கொஞ்சம் நீர்க்கக் கரைக்கவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும். காய்ந்ததும் சீரகத்தைப் சேர்த்து, பொரிந்ததும் உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும். இதனுடன் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கிளறவும். வெங்காயம் வதங்கியவுடன் மாவுக் கரைசலை விட்டு நன்றாகக் கிளறவும் (தீயைக் குறைத்து வைத்துக் கிளறவும்). நன்றாக வெந்தவுடன் இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

ரிப்பன் பக்கோடா



தேவையானவை:

பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், கடலை மாவு - கால் கப், மிளகாய்த்தூள், எள் - தலா அரை டீஸ்பூன், வெண்ணெய் அல்லது காய்ச்சிய எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்கவும். தேவையான தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து,  மாவை ரிப்பன் அச்சு உள்ள குழலில் போட்டுப் பிழிந்து, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

இனிப்பு கொழுக்கட்டை



தேவையானவை:

வறுத்த பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், வெல்லத்தூள் - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், தண்ணீர் - ஒரு கப்.

செய்முறை:

பாத்திரத்தில் வெல்லத்தூள், தண்ணீர் சேர்த்துக் கலக்கி அடுப்பில் வைக்கவும். கரைந்ததும் எடுத்து வடிகட்டி, திரும்பவும் அடுப்பில் வைக்கவும். இதில் தேங்காய்த் துருவலை சேர்க்கவும். கொதி வர ஆரம்பித்ததும் மாவைப் போட்டு கட்டி தட்டாமல் கிளறவும் (தீயைக் குறைத்து வைக்கவும்). வாணலியை மூடி வைக்கவும். இடையிடையே திறந்து நன்கு கிளறி, நெய் விட்டுக் கலந்து அடுப்பை அணைத்துவிடவும். ஐந்து நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பிறகு கொழுக் கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

பாசிப்பருப்பு பர்ஃபி



தேவையானவை:

பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், சர்க்கரை - 3 கப், பால் - 2 கப், நெய் - ஒரு கப், ஃபுட் கலர் - சிறிதளவு.

செய்முறை:

பாசிப்பருப்பு மாவைப் பாலில் கரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் கரைத்த மாவுக் கலவை, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்துக் கலக்கி அடுப்பில் வைக்கவும். நெய்யை விட்டுக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி... ஆறியதும் துண்டுகள் போடவும்.

Offline MysteRy

பாசிப்பருப்பு பிரதமன்



தேவையானவை:

வறுத்த பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், வெல்லத் தூள் - ஒன்றரை கப், தேங்காய் - ஒன்று, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை:

தேங்காயைத் துருவித் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடி கட்டி தனியாக வைக்கவும். இரண்டாம், மூன்றாம் பாலை எடுத்துத் தனியாக வைக்கவும். வெல்லத்துடன் தேவையான தண்ணீர் சேர்த்து காய்ச்சி வடிகட்டவும். மூன்றாம் தடவை எடுத்த பாலில் பாசிப்பருப்பு மாவைப் போட்டுக் கலந்து, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். பாதி கொதிக்கும்போது இரண்டாம் தடவை எடுத்த பாலை விட்டு வேகவிடவும் (தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம்). வெந்ததும் வெல்லக் கரசலை சேர்க்கவும். நன்றாகக் கலந்து சேர்ந்தாற்போல வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். இப்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, முதல் தடவை எடுத்த தேங்காய்ப் பால் விட்டுக் கலக்கினால்... பாசிப்பருப்பு பிரதமன் ரெடி!
விருப்பப்பட்டால், முந்திரிப்பருப்பு / பல்லு பல்லாகக் கீறிய தேங்காயை நெய்யில் வறுத்துப் போடலாம். இதைச்சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்தோ அருந்தலாம்.

Offline MysteRy

பாசிப்பருப்பு சூப்



தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு  கப், சீரகம் - ஒரு  டீஸ்பூன், நறுக்கிய பூண்டு -  ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு -  தேவை யான அளவு.

செய்முறை:

 பாசிப்பருப்புடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, மூன்று விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்து... கரண்டியால் மசித்து வைக்கவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, சீரகத்தை சேர்க்கவும். பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டுப் பற்களை சேர்த்துக் கிளறவும். பூண்டு வதங்கியதும் மசித்த பாசிப்பருப்பைப் சேர்த்து... மிளகுத்தூள், உப்பு போட்டுக் கலக்கவும் (தேவைப்பட்டால் தண்ணீர் விட்டுக் கலக்கலாம்). ஒரு கொதி வந்தவுடன் இறக்கி... கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

Offline MysteRy

குணுக்கு



தேவையானவை:

 பாசிப் பருப்பு மாவு - ஒரு கப், ரவை - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - அரை கப், மிளகாய்த்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும்  ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து, தண்ணீர் விட்டுப் பஜ்ஜி மாவு பதத்துக்குக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து... ஒரு கரண்டியால் மாவை எடுத்து எண்ணயில் விட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

பாசிப்பருப்பு - பைனாப்பிள் கேசரி



தேவையானவை:

பாசிப் பருப்பு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், தண்ணீர் - 2 கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், பைனாப்பிள் துண்டுகள் - அரை கப், பைனாப்பிள் எசென்ஸ் - சில துளிகள், முந்திரிப்பருப்பு - 10.

செய்முறை:

வெறும்   வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும் பாசிப்பருப்பைப் போட்டு வாசனை வரும் வரை சிவக்க வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு ரவை போல உடைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு சூடாக்கி, முந்திரிப்பருப்பைப்  வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.
வாணலியில் தண்ணீர் விட்டு, கொதி வரும்போது பைனாப்பிள் துண்டுகளைப் போடவும். இரண்டு நிமிடத்துக்குப் பிறகு பாசிப்பருப்பு ரவையைப் போட்டுக் கிளறவும். கெட்டியானதும் சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். நன்கு சேர்ந்து வந்தவுடன், மீதி நெய்யையும் விட்டுக் கிளறி, அடுப்பை அணைத்துவிடவும். பைனாப்பிள் எசென்ஸ்,  முந்திரி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.