Author Topic: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~  (Read 2655 times)

Offline MysteRy



”எங்க பாட்டி  தாத்தா, பெரியம்மா  பெரியப்பா எல்லாம் 60, 70 வயசுலயும் திடகாத்திரமா இருப்பாங்க... அவங்க 'டயர்டா இருக்கு’னு சொல்லிக் கேட்டதே இல்லை'' என்று பலரும் பெருமைப்பட பேசுவதுண்டு. இதெற்கெல்லாம் காரணம், அவர்களின் உடல் உழைப்பும் சரியான உணவு முறையும்தான். 'நம்ம பாரம்பர்ய உணவில் இல்லாத சுவையோ, சத்தோ வேறெங்கேயுமே கிடையாது'' என்று அழுத்தம்திருத்தமாக சொல்லும் சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்... 
கேப்பை, தினை, சோளம், நாட்டுக் காய்கறிகள், வெல்லம், பனங்கல்கண்டு, தேன், அவல் போன்றவற்றைப் பயன்படுத்தி தின்னத் தின்ன தெவிட்டாத சுவையும், அள்ள அள்ளக் குறையாத ஆரோக்கிய பலன்களும் கொண்ட கிராமிய உணவு வகைகளை இங்கே வழங்குகிறார்.



 '’இந்தப் பொங்கல் பண்டிகை சமயத்தில், உங்கள் இல்லத்தில் பொங்கல் பானை மட்டுமல்லா மல்... நேசமும், குதூகலமும் பொங்கி வழியட்டும்' என்று மனம் குளிர வாழ்த்துகிறார் லக்ஷ்மி.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #1 on: January 04, 2015, 01:59:43 PM »
பச்சை மொச்சை காரக்குழம்பு



தேவையானவை:
வேகவைத்த பச்சை மொச்சை  200 கிராம், மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, தக்காளி  4, சின்ன வெங்காயம்  கால் கிலோ, பச்சை மிளகாய்  4, புளிக்கரைசல்  அரை கப், உப்பு  தேவைக்கேற்ப.

வறுத்து அரைக்க:
பூண்டு  4 பல், சோம்பு  அரை டீஸ்பூன், தனியா  ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல்  கால் கப், மிளகு  ஒரு டீஸ்பூன், எண்ணெய்  சிறிதளவு.

தாளிக்க:
கடுகு  அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  2, எண்ணெய்  ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு.

செய்முறை:
கடாய் அல்லது மண்சட்டியில் எண் ணெய் விட்டு, வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, விழுதாக அரைக்கவும். மீண்டும் கடாய் (அ) மண் சட்டியை சூடாக்கி, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளிக்கவும். இதில் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். கொஞ்சம் கொதித்து வருகையில் வேகவைத்த மொச்சையை சேர்க்கவும். நன்கு கொதித்து வரும்போது அரைத்த மசாலா விழுது சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கவும்.
இது சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #2 on: January 04, 2015, 02:04:26 PM »
சேமியா  தேங்காய் இனிப்பு பொங்கல்



தேவையானவை:
வேகவைத்து, நீரை வடித்த சேமியா  ஒரு கப், தேங்காய்த் துருவல்  கால் கப், வெல்லப்பாகு  ஒன்றரை கப், வேகவைத்த பாசிப்பருப்பு  அரை கப், நெய்  150 கிராம், கேசரி பவுடர்  ஒரு சிட்டிகை, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை  தலா 25 கிராம், ஏலக்காய்த்தூள்  சிறிதளவு, ஜாதிக்காய் பொடி  ஒரு சிட்டிகை.

செய்முறை:
சிறிதளவு நெய்யில் தேங்காய்த் துருவலை சிவக்க வறுக்கவும். அதனுடன் வெல்லப்பாகு. வெந்த சேமியா, வேகவைத்த பாசிப்பருப்பு, கேசரி பவுடர் சேர்த்து, நெய் விட்டு நன்கு கிளறி, சற்று தளர இருக்கையில் இறக்கி... வறுத்த முந்திரி  திராட்சை, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, இளம் சூட்டில் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #3 on: January 04, 2015, 02:06:07 PM »
அகத்திக்கீரை பொங்கல்



தேவையானவை:
ஆய்ந்து, அலசி, நறுக்கிய அகத்திக்கீரை  ஒரு கப், பச்சரிசி  200 கிராம், பாசிப்பருப்பு  100 கிராம், பெருங்காயம்  ஒரு சிறிய துண்டு (தூளாக்கவும்), சீரகம், பொடித்த மிளகு  தலா அரை டீஸ்பூன், நெய்  100 கிராம், மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, பாசிப் பருப்பைக் கழுவி மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்க்கவும். இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு என்ற அளவில் நீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும். குக்கரில் நெய்யைக் காயவிட்டு... பொடித்த மிளகு, சீரகம் தாளித்து, அகத்திக்கீரை சேர்த்துக் கிளறி... அரிசி, பருப்பை நீருடன் ஊற்றி குக்கரை மூடி, 4 (அ) 5 விசில் விட்டு இறக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, விருப்பப்பட்டால் மேலும் 2 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி சூடாக பரிமாறவும்.
ஏகாதசி விரதம் முடித்து, துவாதசியன்று சாப்பிடும் உணவில் இது இடம் பெறும். வயிற்றுப்புண், வாய்ப்புண்ணுக்கு சிறந்த நிவாரணி இது.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #4 on: January 04, 2015, 02:07:41 PM »
பனங்கல்கண்டு  ரவை பொங்கல்



தேவையானவை:
வறுத்த ரவை  200 கிராம், பாசிப்பருப்பு  100 கிராம், பனங்கல்கண்டு  400 கிராம், வறுத்த முந்திரி, திராட்சை   தலா 25 கிராம், நெய்  100 கிராம்,  ஏலக்காய்த்தூள்  கால் டீஸ்பூன்.

செய்முறை:
பனங்கல்கண்டில் கால் கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி வைக்கவும். நெய்யில் ரவையை சிவக்க வறுத்து தனியே வைக்கவும். பாசிப்பருப்பை குழைய வேகவிட்டு, வறுத்த ரவை மற்றும் வடிகட்டிய பனங்கல்கண்டு பாகு சேர்க்கவும். வெந்து வருகையில் இறக்கி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி  திராட்சை சேர்க்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #5 on: January 04, 2015, 02:09:37 PM »
சேமியா  மிளகு பொங்கல்



தேவையானவை:
வேகவைத்த சேமியா  ஒரு கப், வேகவைத்த பாசிப்பருப்பு  அரை கப், கட்டிப் பெருங்காயம்  ஒரு சிறிய துண்டு (தூளாக்கவும்), நெய்  100 கிராம், மஞ்சள்தூள்  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு.

தாளிக்க:
முந்திரி  25 கிராம், மிளகு (பொடித்தது), சீரகம்  தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு, துருவிய இஞ்சி  அரை டீஸ்பூன்.

செய்முறை:
 வேகவைத்த பாசிபருப்பு, உப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள், வேகவைத்த சேமியா ஆகியவற்றை வாணலியில் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறி, நெய் விட்டு மேலும் கிளறவும். பிறகு இறக்கி, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்க்கவும். புதினா, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #6 on: January 04, 2015, 02:11:21 PM »
புதினா  மிளகு துவையல்



தேவையானவை:
ஆய்ந்து, அலசிய புதினா  ஒரு கப், மிளகு  2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  2, தோலுடன் கூடிய உடைத்த கறுப்பு உளுந்து  2 டேபிள்ஸ்பூன், பூண்டு  2 பல், புளி  ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி... உப்பு, புளி தவிர மற்ற பொருட்களை சிவக்க வறுக்கவும். இதனுடன் உப்பு, புளி சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
இதை கஞ்சி, சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால், அசத்தலான சுவையில் இருக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #7 on: January 04, 2015, 02:13:22 PM »
சிவப்பு பூசணி துவையல்



தேவையானவை:
சிவப்பு பூசணி  கால் கிலோ (தோல் சீவி, துருவி, வதக்கவும்), தேங்காய்  அரை மூடி (துருவிக்கொள்ளவும்), மஞ்சள்தூள்  சிறிதளவு, புளி  சிறிய எலுமிச்சை அளவு, உப்பு  தேவையான அளவு.

வறுத்துக்கொள்ள:
 உளுத்தம்பருப்பு  2 டேபிள்ஸ்பூன்,  காய்ந்த மிளகாய்  10, பூண்டு   2 பல், எண்ணெய்  ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து... புளி, உப்பு, மஞ்சள்தூள், தேங்காய்த் துருவல், பூசணி துருவல் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்து அரைத்து எடுக்கவும் (சிறிய துண்டு வெல்லம் சேர்த்தும் அரைக்கலாம். பூண்டு தேவை இல்லை என்றால் நீக்கிவிடவும்).

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #8 on: January 04, 2015, 02:15:19 PM »
நாட்டுக்காய் கதம்ப சாம்பார்



தேவையானவை:
கத்திரிக்காய், வாழைக்காய் வெள்ளைப் பூசணி துண்டுகள் (சேர்த்து)  2 கப், தக்காளி  2 (நறுக்கவும்), புளிக்கரைசல்  கால் கப், வேகவைத்த துவரம்பருப்பு   100 கிராம் (மசிக்கவும்), மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி  3 டீஸ்பூன், சின்ன வெங்காயம்  100 கிராம் (நறுக்கவும்), கறிவேப்பிலை  ஒரு ஆர்க்கு, எண்ணெய்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

தாளிக்க:
காய்ந்த மிளகாய்  2, கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயம்  சிறிதளவு, எண்ணெய்  ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
புளிக்கரைசலில் மேலும் அரை கப் நீர் ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய காய்களை சேர்த்து வேகவிடவும். சின்ன வெங்காயம், தக்காளியை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி, வெந்து கொண்டிருக்கும் காயில் சேர்க்கவும். சாம்பார் பொடியையும் சேர்க்கவும். மசித்த துவரம்பருப்பில் சிறிதளவு நீர் விட்டு விளாவி இதில் சேர்த்துக் கொதிக்க விடவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, இதனுடன் சேர்த்து இறக்கி, கறிவேப்பிலையை சேர்க்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #9 on: January 04, 2015, 02:16:54 PM »
இடித்த இஞ்சி ரசம்



தேவையானவை:
நாட்டுத் தக்காளி  2,  இஞ்சி  ஒரு இஞ்ச் அளவு துண்டு, பருப்பு நீர்  2 கப் (50 கிராம் துவரம்பருப்பை வேகவிட்டு, தண்ணீர்விட்டு கரைக்கவும்), மஞ்சள்தூள், புளி  சிறிதளவு, பூண்டு  2 பல், சீரகம்  அரை டீஸ்பூன், மிளகு  ஒரு டீஸ்பூன், பெருங்காயம்  ஒரு சிறுகட்டி (தூளாக்கவும்), கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, கடுகு  சிறிதளவு, நெய்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
தக்காளியை நறுக்கவும். இஞ்சியை இடித்துக் கொள்ளவும். பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை அம்மி (அ) உரலில் நசுக்கிக்கொள்ளவும் (மிக்ஸியிலும் பொடிக்கலாம்). மண்சட்டி அல்லது வாணலியில் நெய்யை சூடாக்கி கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். நறுக்கிய தக்காளி, இடித்த இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து, வதங்கியபின் புளி, உப்பு, பருப்பு நீர் சேர்க்கவும். நசுக்கிய பூண்டு  சீரகம்  மிளகு  சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.
இது இருமலைத் தணிக்க உதவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #10 on: January 04, 2015, 02:18:21 PM »
கேப்பை தோசை



தேவையானவை:
கேப்பை (கேழ்வரகு) மாவு  250 கிராம், அரிசி மாவு  50 கிராம், உளுத்தம்பருப்பு  50 கிராம், பச்சை மிளகாய்  3, சீரகம்  ஒரு டீஸ்பூன், வெங்காயம்  ஒன்று (நறுக்கவும்), கொத்தமல்லித்தழை  கால் கட்டு, எண்ணெய்  50 மில்லி, உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். இதனுடன் கேப்பை மாவு, அரிசி மாவு, சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய  கொத்தமல்லித்தழை, வெங்காயம் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும். 5 (அ) 6 மணி நேரத்துக்குப் பிறகு தோசை சுடவும். 5, 6 மணி நேரம் புளிக்க வைக்க முடியா விட்டால், சிறிதளவு புளித்த மோர் சேர்த்துக் கரைத்து உடனடியாக தோசை வார்க்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #11 on: January 04, 2015, 02:21:32 PM »
தினை  கம்பு அடை



தேவையானவை:
தினை, கம்பு, பச்சரிசி  தலா அரை கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு  தலா கால் கப், காய்ந்த மிளகாய்  10, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்  கால் கப், உப்பு, பெருங்காயம்  தேவையான அளவு, எண்ணெய்  100 மில்லி.

செய்முறை:
தினை கம்பு, அரிசி ஆகியவற்றை மெஷினில் கொடுத்து ரவையாக பொடிக்கவும். இதை உப்பு கலந்த நீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊறவிட்டு மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைக்கவும் இத்துடன் ஊறிய தினை  கம்பு  அரிசி கலவை, நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை அடைகளாக ஊற்றி, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்வும்.
இதை சூடாகத்தான் சாப்பிட வேண்டும். ஆறிவிட்டால் ருசி குறையும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #12 on: January 04, 2015, 02:23:49 PM »
கேப்பை இனிப்பு பணியாரம்



தேவையானவை:
கேப்பை (கேழ்வரகு) மாவு  ஒரு கப், அரிசி மாவு, மைதா மாவு, கோதுமை மாவு  தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, சோடா உப்பு  தலா அரை சிட்டிகை, தேங்காய்த் துருவல்  கால் கப், ஏலக்காய்த்தூள்  சிறிதளவு, கரைத்த வெல்ல நீர்  ஒரு கப் (200 கிராம் வெல்லம் போதுமானது), நெய்  எண்ணெய் கலவை  100 கிராம்.

செய்முறை:
மாவு வகைகளுடன் உப்பு, சோடா உப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, வெல்ல நீர் ஊற்றி இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும். பணியாரக் கல்லில் சிறிதளவு நெய்  எண்ணெய் கலவையை விட்டு, முக்கால் பாகத்துக்கு கரைத்த மாவு நிரப்பி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #13 on: January 04, 2015, 02:25:07 PM »
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல்



தேவையானவை:
தோல் சீவி நறுக்கிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு  கால் கிலோ, பொடித்த வெல்லம்  2 டீஸ்பூன், கடுகு  கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  2, உளுத்தம்பருப்பு  அரை டீஸ்பூன், கறிவேப்பிலை  ஒரு ஆர்க்கு, எண்ணெய்  ஒரு டீஸ்பூன், உப்பு  சிறிதளவு.

செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி, நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிட்டு, நீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெல்லம் சேர்த்து இளகவிடவும். வேகவைத்த வள்ளிக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து நன்கு புரட்டி எடுக்கவும்.
இதை மண்சட்டியில் செய்தால் நீண்ட நேரம் சூடாக இருக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #14 on: January 04, 2015, 02:26:19 PM »
அவல் இனிப்பு பொங்கல்



தேவையானவை:
கெட்டி அவல்   200 கிராம் (10 நிமிடம் ஊறவிடவும்), வேகவைத்த பாசிப்பருப்பு   100 கிராம், பாகு வெல்லம்  250 கிராம் (கரைத்து வடிகட்டவும்), நெய்  100 கிராம், குங்குமப்பூ  சில இதழ்கள், ஏலக்காய்த்தூள்  சிறிதளவு, வறுத்த முந்திரி, திராட்சை, கொப்பரைத் துண்டுகள்  தலா 2 டீஸ்பூன், பச்சைக் கற்பூரம்  ஒரு சிட்டிகை

செய்முறை:
வேகவைத்த பாசிப்பருப்பை அடுப்பில் வைத்து, வெல்லக் கரைசல், நெய் ஊற்றி நன்கு கிளறவும். கெட்டியாகும்போது, ஊறவைத்த அவல் சேர்த்துக் கிளறி இறக்கவும் (அதிக நேரம் கிளற வேண்டாம். அவல் சிதைந்துவிடும்). இதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை, கொப்பரைத் துண்டுகள், ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ சேர்த்துப் பரிமாறவும்.