Author Topic: ~ 30 வகை சுண்டல் - ஸ்வீட் - பாயசம்! ~  (Read 1615 times)

Offline MysteRy

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்



தேவையானவை:
வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, பெருங்காயம் - தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை:
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... வெந்த கொண்டைக்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
« Last Edit: September 11, 2014, 11:13:32 AM by MysteRy »

Offline MysteRy

காராமணி - தேங்காய் சுண்டல்



தேவையானவை:
காராமணி - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (கீறிக்கொள்ளவும்), கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
காராமணியை 8 மணி நேரம் ஊறவிட்டு, சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து, பச்சை மிளகாய், கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். வேகவைத்த காராமணி, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மேலும் வதக்கி எடுக்கவும்.

Offline MysteRy

பருப்பு பாயசம்



தேவையானவை:
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், பொடித்த வெல்லம் - அரை கப், நெய் - 2 டீஸ்பூன், பால் - 2 கப், முந்திரி - 8 (நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து, மசித்துக்கொள்ளவும். நீரில் வெல்லத்தைக் கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும் வடிகட்டவும். பாலை நன்கு காய்ச்சி, அதில் மசித்த பருப்பு விழுது, வெல்லக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வறுத்துப் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

ஆப்பிள் பாயசம்



தேவையானவை:
ஆப்பிள் - 2 (மீடியம் சைஸ் - தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்கவும்), பால் - 4 கப், சர்க்கரை - ஒரு கப், கோவா - கால் கப் (உதிர்த்துக் கொள்ளவும்),  நெய் - 2 டேபிள்ஸ்பூன், மில்க்மெய்ட் - கால் கப், முந்திரி - 8 (சிறிதளவு நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடித்தது), வெனிலா எசன்ஸ் -  ஒரு துளி.

செய்முறை:
வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய ஆப்பிளை லேசாக வதக்கி வைக்கவும். பாலை நன்கு காய்ச்சி அதனுடன் உதிர்த்த கோவா, மில்க்மெய்ட், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து மேலும் கொதிக்கவிட்டு... பொடித்த முந்திரி, வெனிலா எசன்ஸ் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

சிவப்பு அவல் பாயசம்



தேவையானவை:
சிவப்பு அவல் - ஒரு கப், பால் - 2 கப், முந்திரி - 8 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்), சர்க்கரை - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள்  - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
வாணலியில் நெய் விட்டு சிவப்பு அவலை லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி அதில் பொடித்த அவல், முந்திரி விழுது சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டு, சற்று கெட்டியானதும் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு கிளறு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

நெல்லிக்காய் பாயசம்



தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் - 6, பால் - 2 கப், சர்க்கரை - அரை கப், முந்திரி, பாதாம் - தலா 8 (ஊறவைத்து விழுதாக அரைக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பச்சைக் கற்பூரம் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, தேன் - கால் கப்.

செய்முறை:
நெல்லிக்காயை வேகவிட்டு, கொட்டை நீக்கி, மிகவும் பொடியாக நறுக்கவும். இதை தேனுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பாலை நன்கு காய்ச்சி, அதில் முந்திரி - பாதாம் விழுது, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த தும் தேனில் ஊறவைத்த நெல்லிக் காயை சேர்த்து, ஒரு கிளறு கிளறி, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற் பூரம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

நேந்திரம் பழ இனிப்பு



தேவையானவை:
கெட்டியான நேந்திரம் பழம் - 2 (நீளவாக்கில் சற்று கனமாக நறுக்கவும்), மைதா மாவு - ஒரு கப், தேங்காய்ப் பால் - அரை கப், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, யெல்லோ ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.

செய்முறை:
எண்ணெய், பழத்துண்டுகள் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் தேவையான தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பழத் துண்டுகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

அன்னாசி கேசரி



தேவையானவை:
அன்னாசிப் பழம் - ஒரு சிறு துண்டு, (தோல், முள் நீக்கி, மிகவும் பொடியாக நறுக்கவும்), ரவை - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 கப், பால் - ஒரு கப், முந்திரி - 8 (நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்), யெல்லோ ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், அன்னாசி எசன்ஸ் - ஒரு டீஸ்பூன். 

செய்முறை:
பொடியாக நறுக்கிய அன்னாசி துண்டுகளுடன் சர்க்கரையைக் கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். ரவையை கொஞ்சம் நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். வாணலியில் பால், 2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, யெல்லோ ஃபுட் கலரை சேர்க்கவும். நன்கு கொதித்ததும் வறுத்த ரவையைச் சேர்த்து, கட்டித் தட்டாமல் நன்கு கிளறி, அடுப்பை 'சிம்'மில் வைத்து வேகவிடவும். வெந்ததும் அன்னாசி - சர்க்கரை கலவையை சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும். கலவை சற்று கெட்டியானதும், பொடித்த முந்திரி, அன்னாசி எசன்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

Offline MysteRy

பூவன் பழ பணியாரம்



தேவையானவை:
கனிந்த பூவன் வாழைப்பழம் - 3 (துண்டு செய்து மிக்ஸியில் அடிக்கவும்), கோதுமை மாவு - அரை கப், அரிசி மாவு - ஒன்றரை கப், வெல்லம் - 2 கப், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன் (சிறிதளவு நெய்யில் வறுத்துக்கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

செய்முறை:
கோதுமை மாவு, அரிசி மாவை ஒன்றாகக் கலக்கவும். மிக்ஸியில் அடித்த பூவன் பழம், வறுத்த தேங்காய் இரண்டையும் மாவில் சேர்க்கவும். வெல்லத்தில் அரை கப் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்து, கொதிக்கவிட்டு வடிகட்டி சூடாக மாவில் ஊற்றவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சமையல் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். நெய், எண்ணெயைக் கலந்துகொள்ளவும். குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து, நெய் - எண்ணெய் கலவையை விட்டு, கொஞ்சம் மாவு  ஊற்றி வேகவிட்டு, திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

Offline MysteRy

குலாப் ஜாமூன்



தேவையானவை:
சர்க்கரை சேர்க்காத கோவா - அரை கிலோ, மைதா மாவு - ஒரு கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, நெய் - பொரிக்கத் தேவையான அளவு, சர்க்கரை - 4 கப், ரோஸ் எசன்ஸ் - ஒரு துளி.

செய்முறை:
சர்க்கரை சேர்க்காத கோவா, மைதா மாவு, சமையல் சோடா மூன்றையும் சேர்த்து அழுந்தப் பிசைந்து, ஈரப்பதம் போகாமல் அரை மணி நேரம் மூடி வைக்கவும். நெய்யை மிதமாக சூடாக்கி, பிசைந்து வைத்துள்ள கலவையைச் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சர்க்கரையுடன் 2 கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பிசுக்கு பதம் வந்ததும் கீழே இறக்கி, அழுக்கு போக வடிகட்டவும். ரோஸ் எசன்ஸ், பொரித்து வைத்துள்ள ஜாமூன் உருண்டைகளை சர்க்கரைப் பாகில் சேர்க்கவும். 2 மணி நேரம் ஊறிய பின், சூப்பர் சுவையில் இருக்கும்.

Offline MysteRy

புழுங்கல் அரிசி வெல்ல கேசரி



தேவையானவை:
புழுங்கல் அரிசி, பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முந்திரி - 8 (சிறிதளவு நெய்யில் வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:
வாணலியில் புழுங்கல் அரிசியை பொரி மாதிரி நன்றாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். வெல்லத்துடன் நீர் சேர்த்து சூடாக்கி, வடிகட்டவும். வடிகட்டிய வெல்லத்துடன் 3 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் மிக்ஸியில் அரைத்த அரிசி மாவை சேர்த்துக் கிளறவும். அரிசி மாவு நன்கு வெந்ததும் நெய், ஏலக்காய்த்தூள், பொடித்த முந்திரி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

பஞ்சாப் கோதுமை அல்வா



தேவையானவை:
பஞ்சாப் கோதுமை - ஒரு கப், சர்க்கரை - 2 கப், நெய் - 150 கிராம், முந்திரி - 8 (சிறிதளவு நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 50 கிராம்.

செய்முறை:
பஞ்சாப் கோதுமையை 4 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். ஊறிய கோதுமையை ரவை போல அரைத்துக்கொள்ளவும் (அரைத்த விழுது இட்லி மாவு பதத்தில் இருப்பது அவசியம்). வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த கோதுமை விழுது சேர்த்து நன்கு கிளறவும். மாவு வெந்த பிறகு சர்க்கரை, 100 கிராம் நெய் சேர்த்துக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வந்த பின் ஏலக்காய்த்தூள், முந்திரி, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

ரவா பர்ஃபி



தேவையானவை:
ரவை - கால் கிலோ, சர்க்கரை - 100 கிராம், முந்திரி - 12 (மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.

செய்முறை:
ரவையை நெய்யில் வறுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். இதனுடன் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்துகொள்ளவும். வாணலியில் சர்க்கரையுடன் சிறிது நீர் சேர்த்து பாகு காய்ச்சி... ரவை கலவையை அதில் சேர்த்து நன்கு கிளறவும் (அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறவும்). திரண்டு வரும் சமயம் நெய் தடவிய தட்டில் பரப்பி தட்டிவிடவும். ஆறியதும், கத்தியால் கீறி சிறு துண்டுகள் போடவும்.

Offline MysteRy

தேங்காய் பர்ஃபி



தேவையானவை:
தேங்காய் - ஒன்று, சர்க்கரை - 200 கிராம், நெய் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை:
தேங்காயை வெள்ளைப் பூவாகத் துருவிக்கொள்ளவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து தேங்காய்த் துருவலை லேசாக வதக்கிக்கொள்ளவும். சர்க்கரையில் மூழ்கும் அளவு நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். முற்றிய பதம் வந்ததும் (பாகை உருட்டி நீரில் போட்டால் கரையக் கூடாது) வதக்கிய தேங்காய்த் துருவலை சேர்த்து நன்றாக கிளறவும். நன்கு நுரைத்து கெட்டியாக வரும் சமயம் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

Offline MysteRy

தால் பர்ஃபி



தேவையானவை:
உளுத்தம்பருப்பு - முக்கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், முந்திரிப்பருப்பு - 10, பொடித்த வெல்லம் - ஒரு கப், நெய் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:
உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, முந்திரிப்பருப்பை தனித்தனியே வாசம் வரும் வரை சிவக்க வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். பொடித்த வெல்லத்தில் சிறிதளவு நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டவும். மிக்ஸியில் அரைத்த மாவுடன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இதனுடன் சூடான நெய், வெல்லக் கரைசலை சிறிது சிறிதாக சேர்த்து உருண்டை பிடிக்கும் பதம் வரும் வரை கலந்து, சின்ன அச்சுகளில் மாவை அடைத்து பர்ஃபி செய்யவும். அல்லது, கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடவும்.