Author Topic: ~ 30 வகை வாழை சமையல்! ~  (Read 2353 times)

Offline MysteRy

~ 30 வகை வாழை சமையல்! ~
« on: July 20, 2014, 11:18:35 AM »


''வீட்டில் ஒரு வாழைக்கன்று வைத்தால் போதும்... நம் பரம்பரைக்கே அது பலன் தரும்'' என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இலை, பூ, காய், பழம், தண்டு என்று அனைத்துமே சமையலுக்குப் பயன்படும் தாவரம் என்றால் அது வாழைதான்.



வாழையை வைத்து சாம்பார், கூட்டு, பொரியல், வறுவல், வடை, பாயசம், சூப், அவியல், பச்சடி, கஸ்டர்ட் என ஒரு விருந்தே தயாரித்துவிடலாம். இப்படி, சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்ட வாழையில் 30 வகை ரெசிப்பிகளை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி,
''வாழைக்காய், பூ, தண்டு ஆகியவற்றை நறுக்கியதும் மோர், மஞ்சள்தூள் சேர்த்து வைத்தால், சமைப்பதற்குள் கறுத்துவிடாமல் இருக்கும். வாழை இலையில் தொடர்ந்து உணவு அருந்தினால், கண்களுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் உதவும்'' என்று 'டிப்ஸ்’களையும் அள்ளித் தருகிறார்.

Offline MysteRy

Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #1 on: July 20, 2014, 11:20:11 AM »
வாழைப்பூ பொரிச்சக் குழம்பு



தேவையானவை:
நரம்பு நீக்கி சுத்தம் செய்யப்பட்ட வாழைப்பூ - ஒரு கப், பயத்தம்பருப்பு - 50 கிராம், சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,  எண்ணெய் - ஒரு டீஸ்பூன், வெங்காய வடகம், மோர் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள: துருவிய தேங்காய் - கால் கப், சீரகம் - அரை டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 4 இதழ்கள்.

செய்முறை:
பயத்தம்பருப்பை குழைய வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். வாழைப்பூவை நறுக்கி, சிறிதளவு மோர், உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து வேகவிடவும். பிறகு, வேக வைத்த பயத்தம்பருப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து, எல்லாமாகச் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, வெங்காய வடகத்தை எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #2 on: July 20, 2014, 11:22:00 AM »
வாழைப்பூ - முருங்கைக் கீரை பொரியல்



தேவையானவை:
நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், முருங்கைக்கீரை - அரை கப், உதிர் உதிராக வேகவைத்த பயத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், மோர் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க:
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வாழைப்பூவை மோர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து உதிர் உதிராக வேகவைக்கவும். முருங்கைக்கீரையை தனியாக வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெந்த வாழைப்பூ, முருங்கைக்கீரை சேர்த்து, வேகவைத்த பயத்தம்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #3 on: July 20, 2014, 11:23:28 AM »
வாழைப்பூ அடை



தேவையானவை:
நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், புழுங்கல் அரிசி - 2 கப், துவரம்பருப்பு - 6 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 3 டேபிள்ஸ்பூன்,  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5,  கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 8 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
அரிசியையும் பருப்புகளையும் ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து... காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலையை தாளித்து மாவில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழையையும் சேர்க்கவும். 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் வாழைப்பூவை வதக்கி, அதையும் மாவுடன் சேர்க்கவும்.  தோசைக்கல்லில்  இரண்டு கரண்டி மாவை ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் ஊற்றி, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவி, வேகவிட்டு எடுக்கவும்.
இந்த அடையை வெண்ணெய் தொட்டுச் சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #4 on: July 20, 2014, 11:24:41 AM »
வாழைக்காய் - பனீர் புட்டு



தேவையானவை:
பெரிய வாழைக்காய் - ஒன்று, பனீர் (துருவியது) - கால் கப், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, பூண்டு - 3 பல், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாழைக்காயை தோலுடன் 3 துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவைத்து, தோலை உரித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, வேகவைத்த வாழைக்காயை கேரட் துருவியில் துருவி சேர்த்து மேலும் வதக்கி, துருவிய பனீரையும் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சைச் சாறு பிழிந்து, நன்கு கலந்துவிடவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #5 on: July 20, 2014, 11:25:46 AM »
வாழைக்காய் எரிசேரி



தேவையானவை:
வாழைக்காய் - ஒன்று, சேனைக்கிழங்கு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 3, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், துருவிய தேங்காய் - கால் கப், தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. 

செய்முறை:
பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி, நறுக்கிய  வாழைக்காய், சேனைக்கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பாதியளவு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து, வெந்துகொண்டிருக்கும் காய்களுடன் சேர்க்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, மீதம் இருக்கும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி, வெந்த காய்களில் சேர்த்துப் புரட்டி இறக்கவும்.
கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு இந்த எரிசேரி.

Offline MysteRy

Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #6 on: July 20, 2014, 11:26:49 AM »
வாழைப்பூ வடை



தேவையானவை:
பொட்டுக்கடலை - 2 கப், மெல்லியதாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, சோம்பு - அரை டீஸ்பூன். பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய புதினா, கொத்தமல்லி - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைக்கவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் அதில் சேர்க்கவும். (இதில் உள்ள நீரே போதுமானது. தேவைப் பட்டால், சிறிதளவு நீர் சேர்க்கலாம்). வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #7 on: July 20, 2014, 11:28:05 AM »
வாழைக்காய் - வெங்காயம் - தக்காளி பொரியல்



தேவையானவை:
வாழைக்காய் - ஒன்று, நறுக்கிய வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று (நறுக்கவும்), பூண்டு - 3 பல், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வாழைக்காய், பூண்டு சேர்த்து வதக்கி... உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடிவைக்கவும் (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்). 5 நிமிடத்தில் வெந்துவிடும். பிறகு இறக்கி, நறுக்கிய கறிவேப் பிலை, கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #8 on: July 20, 2014, 11:29:27 AM »
வாழைக்காய் உசிலி



தேவையானவை:
வாழைக்காய் - ஒன்று, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் - ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. 
ஊறவைத்து அரைக்க: துவரம்பருப்பு - 6 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பயத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3.

செய்முறை:

வாழைக்காயை மெல்லியதாக நறுக்கவும். பருப்புகளை மிளகாயுடன் சேர்த்து 40 நிமிடம் ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். சற்று ஆறிய பிறகு மிக்ஸியில் ஒரு சுற்று லேசாக சுற்றினால் ஒரே அளவாக இருக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வாழைக்காயையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து, லேசாகத் தண்ணீர் தெளித்து மூடி வைத்தால் 5 நிமிடத்தில் வெந்துவிடும் (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்). பிறகு, தயார் செய்து வைத்துள்ள பருப்புக் கலவையைச் சேர்த்து, இரண்டு புரட்டு புரட்டி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #9 on: July 20, 2014, 11:30:42 AM »
வாழைக்காய் கொத்சு



தேவையானவை:
வாழைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, புளி - நெல்லிக்காய் அளவு, இஞ்சி - சிறிதளவு, வேகவைத்த பயத்தம்பருப்பு - 6 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க: எண்ணெய் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், தனியா - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை வதக்கி, மிகவும் பொடியாக நறுக்கிய வாழைக்காயை சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, காய் வெந்த உடன்,  வேகவைத்த பயத்தம்பருப்பைச் சேர்த்து, எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
இந்த  கொத்சு... இட்லி, தோசை, உப்புமாவுக்கு ஏற்ற சைட் டிஷ்.

Offline MysteRy

Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #10 on: July 20, 2014, 11:32:33 AM »
வாழைக்காய்  அவியல்



தேவையானவை:
நீளவாக்கில் நறுக்கிய வாழைக்காய்  - ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கேரட், பீன்ஸ், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், தயிர் - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள: தேங்காய்த் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - 4.

செய்முறை:
காய்கறிகளை நீர் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேக விடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தயிர், தேங்காய் எண்     ணெய் சேர்த்து இறக்கி  னால்... வாழைக்காய் அவியல் தயார்!

Offline MysteRy

Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #11 on: July 20, 2014, 11:33:47 AM »
வாழைக்காய் சாம்பார்



தேவையானவை:
வாழைக்காய் - ஒன்று, சின்ன வெங்காயம் - 6, வேகவைத்த துவரம்பருப்பு - கால் கப், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
புளியைக் கரைத்து கடாயில் விட்டு உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, சேர்த்து, ஒரு கொதி வரும்போது... சின்ன வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய வாழைக்காயை எண்ணெயில் வதக்கி சேர்க்கவும். காய் வெந்ததும், வெந்த துவரம்பருப்பைச் சேர்த்து மீண்டும் இரண்டு கொதி வந்ததும் இறக்கி... கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #12 on: July 20, 2014, 11:35:04 AM »
வாழைக்காய் - வற்றல்கள் காரக்குழம்பு



தேவையானவை:
வாழைக்காய் - ஒன்று, சுண்டைக்காய் வற்றல் - 3 டீஸ்பூன், மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, குழம்பு மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, பூண்டு - 8 பல், தேங்காய்த் துருவல் - கால் கப், சமையல் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வெங்காய வடகம் (சிறியது) - ஒன்று.

செய்முறை:
தேங்காய் துருவலை சிறிதளவு நீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து  கொதிக்கவிடவும். வாழைக்காயை நறுக்கி எண்ணெயில் வதக்கி, பூண்டு சேர்த்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். காய் பாதி வெந்ததும், வற்றல்களை வறுத்துச் சேர்க்கவும். குழம்பு சேர்ந்து வந்ததும் தேங்காய் விழுதை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து, தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #13 on: July 20, 2014, 11:36:22 AM »
வாழைக்காய் - பனீர் துவட்டல்



தேவையானவை:
நறுக்கிய வாழைக்காய் (ஸ்வீட் கார்ன் அளவுக்கே நறுக்கவும்) - ஒரு கப், ஸ்வீட் கார்ன், நறுக்கிய பனீர் (இரண்டும் சேர்த்து) - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன்,  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப்பொடிக்க: காய்ந்த மிளகாய் - 3, தனியா - 3 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, மிக்ஸியில் சற்றுக் கொரகொரப்பாகப் பொடித்து வைக்கவும். வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய வாழைக்காயை வதக்கி, பனீரையும் சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, 3 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கி, எல்லாமாகச் சேர்த்து வெந்ததும், வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து, நன்றாக புரட்டி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #14 on: July 20, 2014, 11:37:36 AM »
வாழைக்காய்  பஜ்ஜி



தேவையானவை:
வாழைக்காய் - 2, கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப்,  எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,     மஞ்சள் பொடி, பெருங்காயம் - சிட்டிகை, சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், தனி மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பேக்கிங் பவுடர் - சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாழைக்காயை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். அனைத்துப் பொருட்களையும் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொண்டு, நறுக்கிய வாழைக்காயை தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.