Author Topic: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~  (Read 3836 times)

Offline MysteRy

30 வகை சட்னி - துவையல் --



''சூடான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ளம் செய்து... அதில் பூண்டு ரசத்தை விட்டு சாப்பிட்டால்... ஆஹா, தேவாமிர்தம்!'' என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்கள், இந்த எலெக்ட்ரானிக் யுகத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை எல்லாம் திருப்தி செய்ய உதவுவதோடு... டிபனுக்கு தொட்டுக்கொள்ள வித்தியாசமான சட்னிகளை வழங்கவும் '30 வகை சட்னி - துவையல் ரெசிபி’களுடன் களம் இறங்கும் சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்,



''சுவையில் அசத்தும் இந்த ரெசிபிகளை... ஜீரண சக்தியை அதிகரிக்கும், நினைவாற்றலை வளர்க்கும், சத்துக்கள்மிக்க பொருட்களையும் சேர்த்து தயாரித்துள்ளேன்'' என்கிறார் உற்சாகம் பொங்க! 
குறிப்பு: காரம் குறைவாக இருப்பதை விரும்புபவர்கள், மிளகாயின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப குறைத்துக் கொள்ளலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #1 on: July 14, 2013, 02:52:03 PM »
பச்சைப்பயறு துவையல்

தேவையானவை: பச்சைப்பயறு - அரை கப், பூண்டு - ஒரு பல், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, புளி - கோலி அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வெறும் வாணலியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்துக் கொள்ளவும். ஆறியபின், பயறு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #2 on: July 14, 2013, 02:54:26 PM »
எள் துவையல்

தேவையானவை: கறுப்பு எள் - அரை கப், பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, புளி - கோலி அளவு, உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வெறும் வாணலியை சூடாக்கி எள்ளை வறுத்துக் கொள்ளவும். உப்பு தவிர மற்ற பொருட்களையும் வெறும் வாணலியில் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
எள், இரும்புச்சத்து மிக்கது.

Offline MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #3 on: July 14, 2013, 02:56:16 PM »
வல்லாரை சட்னி

தேவையானவை: வல்லாரைக்கீரை - அரை கட்டு, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல்,  - கால் கப், பச்சை மிளகாய் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.
குறிப்பு: வல்லாரைக் கீரை மூளையை சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை வளர்க்கும். வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.

Offline MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #4 on: July 14, 2013, 02:58:03 PM »
சீரக துவையல்

தேவையானவை: சீரகம் - கால் கப், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), சின்ன வெங்காயம் - 5, புளி - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 5, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை வதக்கவும். ஆறவிட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். விருப்பப்பட்டால், எண்ணெயில் சிறிதளவு கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம்.
இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #5 on: July 14, 2013, 03:02:46 PM »
பீர்க்கங்காய் தோல் துவையல்

தேவையானவை: பீர்க்கங்காய் தோல் - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - கோலி அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
விருப்பப்பட்டால் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து துவையலுடன் சேர்க்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #6 on: July 14, 2013, 03:04:31 PM »
வல்லாரை துவையல்

தேவையானவை: வல்லாரைக்கீரை - ஒரு கப், பூண்டு - 2 பல், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 5, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி... வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி... உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: ஞாபக சக்தி, உடல் வலிமை, மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும். புளி சேர்க்காமல் இதை சமைக்க வேண்டும். அப்போதுதான் இதன் முழு பலனும் கிட்டும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #7 on: July 14, 2013, 03:06:04 PM »
பிரண்டை துவையல்

தேவையானவை: நார் நீக்கி, துண்டுகளாக்கிய பிரண்டை - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, புளி - கோலி அளவு, பூண்டு - 2 பல், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்து (உப்பு நீங்கலாக) வதக்கவும். ஆறவிட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
பிரண்டை எலும்புக்கு பலம் தரும். பசியின்மை, வாய்க்கசப்பு போக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #8 on: July 14, 2013, 03:07:59 PM »
புளி துவையல்

தேவையானவை: புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), கறிவேப்பிலை - கால் கப், தனியா - 2 டேபிள்ஸ்பூன், கருப்பட்டி - சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தனியா மூன்றையும் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு புளி, கருப்பட்டி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். மீதமுள்ள நல்லெண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கினால்... புளிப்பு, காரம், இனிப்புச் சுவையுடன் வித்தியாசமான துவையல் தயார்!

Offline MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #9 on: July 14, 2013, 03:09:52 PM »
கத்திரி துவையல்

தேவையானவை: பெரிய கத்தரிக்காய் - ஒன்று, புளி - கோலி அளவு, காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பூண்டு - 2 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: கத்திரிக்காயின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி, தணலில் சுட்டு தோல் உரித்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, புளி ஆகியவற்றை வதக்கி, ஆறியதும் கத்திரிக்காயை சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும் (மையாக அரைக்க வேண்டாம்). நல்லெண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #10 on: July 14, 2013, 03:11:49 PM »
பருப்பு துவையல்

தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, தேங்காய் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பூண்டு - 2 பல், புளி - கோலி அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வெறும் வாணலியை சூடாக்கி... கடலைப்பருப்பு, துவரம்பருப்பை சிவக்க வறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு ஆகியவற்றை வறுத்து... பருப்புகள், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
ரசம் சாதத்துக்கு இந்த பருப்பு துவையல் சரியான ஜோடி.

Offline MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #11 on: July 14, 2013, 03:14:47 PM »
வேப்பம்பூ துவையல்

தேவையானவை: வேப்பம்பூ - 2 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், புளி - கோலி அளவு, காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), வெல்லம் - சிறிய துண்டு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வாணலியில் நெய் விட்டு, வேப்பம்பூவை சிவக்க வறுக்கவும் இதனுடன் உளுத்தம்பருப்பு, புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். இதில் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். கடைசியாக வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
வேப்பம்பூ, வயிற்றில் பூச்சித் தொல்லை ஏற்படுவதை தடுக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #12 on: July 14, 2013, 03:16:45 PM »
கொள்ளு துவையல்

தேவையானவை: கொள்ளு - அரை கப், பூண்டு - 2 பல், புளி - கோலி அளவு, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: சுத்தம் செய்த கொள்ளு, மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் (உப்பு தவிர) வெறும் வாணலியில் வறுத்து பின்னர் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து எடுத்தால்... கொள்ளு துவையல் தயார்.
கொள்ளு, கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.

Offline MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #13 on: July 14, 2013, 03:18:25 PM »
வதக்கிய தேங்காய் துவையல்

தேவையானவை: தேங்காய் துருவல் - அரை கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு - ஒரு பல், புளி - கோலி அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை. 



செய்முறை: தேங்காய் துருவலை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வறுத்து வைக்கவும். சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புளி, பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளித்து, அதில் அரைத்த விழுதை சேர்த்து சுருள வதக்கவும்.
இந்த துவையலை சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம். தேங்காயை வதக்கி இருப்பதால், பயணத்தின்போது எடுத்துச் செல்லவும் ஏற்றது.

Offline MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #14 on: July 14, 2013, 03:21:25 PM »
கதம்பத் துவையல்

தேவையானவை: தேங்காய் துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 3,  பூண்டு - 2 பல், சின்ன வெங்காயம் - 5, புளி - சிறிதளவு, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. 



செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி, உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, விழுதாக அரைக்கவும்.
கஞ்சி, மோர் சாதத்துக்கு ஏற்ற துவையல் இது.