மனிதன் தனித்து வாழமுடியாது.
அவனுக்கு உடல்பசி மட்டுமல்ல மனப்பசிகளும் உண்டு.
அதனால் அவனுக்கு உணவு உடை உறையுள் என்ற அடிபடை தேவைகள் மட்டுமல்ல, கலை இலக்கியம் பொழுதுபோக்கு ஆன்மீகம் என்று எத்தனையோ தேவைகள்.
இவற்றை எல்லாம் மனிதன் தானே செய்து கொள்ள முடியாது.
நாம் உண்ணும் சோறு அது ஆயிரம் கணக்கான மனிதர்களின் வியர்வை.
நாம் உடுத்தும் உடை பலரது கைவண்ணம்.
நாம் இருக்கும் வீடு அது பலரது உழைப்பின் பலன்.
நாம் உண்ணும் உணவை நமே தான் தயாரிக்க வேண்டுமென்றால்
நம் வாய்க்கரிசியை கூட நம்மால் அடைய முடியாது.
நம் உடையை நாமே தான் தயாரிக்க வேண்டுமென்றால் நம் சவ கோடித்துணியை கூட நம்மால் தயாரிக்க முடியாது.
நம் வீட்டை நாமே கட்டிக்கொள்ள வேண்டுமென்றால் அந்த வீடே நமக்கு கல்லறை ஆகிவிடும்.
இதை தெரிந்து கொண்டதால்தான் மனிதன் சமூகம் என்று ஒரு அமைப்பை உருவாக்கினான்.
'உனக்கு நான் உதவுகிறேன், எனக்கு நீ உதவு',என்ற அறிவார்ந்த ஒப்பந்தம் தான் சமூக அமைப்பின் அடிப்படை.
சமூகம் என்ற அமைப்பு ஏற்பட்ட பின்னால் தான் மனிதன் நாகரீக படிகளில் வேகமாக ஏறினான்.
மனிதன் எழுத்தை போன்றவன்.அவன் மற்ற எழுத்துக்களுடன் ஒன்று சேர்த்து அச்சிகோர்க்கப்படும் போது தான் வாக்கியமாக முழுமை பெறுகிறான்.
தனி மனிதன் நீர்துளி போன்றவன். அவன் மற்ற நீர்துளிகளுடன் சேர்ந்த பிறகு தான் சமுத்திரமாக சக்தி பெறுகிறான்.
நாம் இந்த உலகத்துக்கு வருவதற்கு முன்னமே நமக்கு வேண்டியதெல்லாம் கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கிறது சமூகம்.
சமூகம் என்று ஒன்று இல்லாவிட்டால் நாமும் நமது ஆதி மூதாதையரை போல இலை தளைகளைக் கட்டிக்கொண்டு திரிந்திருப்போம்.பசிக்கும் போதெல்லாம் காட்டில் மான்களை துரத்தி களைத்துப் போயிருப்போம்.
இன்று நான் அனுபவிக்கும் ஒவ்வொரு வசதிகளும் நம் முன்னோர் விதை நட்டு வியர்வை பாய்ச்சி வளர்த்த சமூகம் என்ற மரத்தின் கனிகளே.
நாம் ஒவ்வொருவரும் சமூகத்துக்கு கடன்பட்டிருக்கிறோம்.சமூகத்திடம் இருந்து பெறுகிற நாம் அதற்கு கொடுக்கவும் கடமைபட்டிருக்கிறோம்.
நதி தன் நீரை தானே குடிப்பதில்லை
மரம் தன் கனிகளை தானே உண்ணுவதில்லை.
மலர் தன் தேனை தானே சுவைப்பதில்லை.
மனிதன் மட்டுமே தன்னுடையதை தானே அனுபவிக்க நினைக்கிறான்.
ஒருவருக்கொருவர் உதவி வாழ்வது தான் சமுதாயம்.
மனிதன் அடையும் அனைத்துமே சமூகத்தில் இருந்தே பெறுகிறான்.சமூகத்திடம் பெற்றதை சமூகத்திற்கு திருப்பித் தரவும் கடமைப்பட்டிருக்கிறான்.
கடனை எப்படி திருப்பித் தருவது?
நீங்கள் எந்த வேலை செய்தாலும் அது சமூகத்துக்கு பயன் படுகிறதா என சிந்தித்துப் பாருங்கள்.
பயன்படக்கூடியது என்றால் செய்யுங்கள். இதனால் நீங்கள் கடனை திருப்பி கொடுத்தவர்கள் ஆவீர்கள்.
நீங்கள் பிறருக்கு கொடுப்பது வேறொரு வடிவில் நிச்சயம் உங்களை வந்தடையும்.