Author Topic: ~ பாப்கார்ன் உருவான வரலாறு !!! ~  (Read 3357 times)

Offline MysteRy

பாப்கார்ன் உருவான வரலாறு !!!




இன்று நாம் திரைப்படம் பார்க்கும்போது சுவாரஸ்யமாக கொறித்துத் தின்னும் பாப்கார்ன் எப்போது பிறந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சொன்னால் நம்புவதற்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆம், பாப்கார்னின் வயது சுமார் 6 ஆயிரம் ஆண்டுகள். மெக்சிகோ மக்கள்தான் இந்த சூப்பர் நொறுக்கித் தீனியை கண்டுபிடித்தவர்கள். நியூ மெக்சிகோவில் உள்ள வவ்வால் குகையில் இருந்து 5600 ஆண்டுகள் பழமையான பாப்கார்னை 1948ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.

மெக்சிகோவில் கி.பி 300ஆம் ஆண்டைச் சேர்ந்த ஈமக்கலன் ஒன்று கிடைத்திருக்கிறது. சோளக் கடவுள் பாப்கார்ன் போன்ற தலை அலங்காரத்துடன் உள்ள காட்சி இதில் இடம்பெற்றிருக்கிறது. அப்படியே மெக்சிகோவில் இருந்து சீனா, சுமத்திரா, இந்தியா என பாப்கார்ன் உலகம் முழுவதும் பரவிவிட்டது.

கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவுகளை அடைந்தபோது, அவரது குழுவினரிடம் அங்கிருந்த பழங்குடியினர் பாப்கார்ன் விற்றிருக்கிறார்கள். பழங்காலத்தில் பாப்கார்ன் உணவுப் பொருளாக மட்டுமின்றி அலங்காரத்திற்கும் பயன்பட்டிருக்கிறது. செழிப்புக் கடவுள், மழைக் கடவுள் போன்றவர்களின் நகைகளில் பாப்கார்னைப் பதித்து அலங்கரித்திருக்கிறார்கள். மக்களும் பாப்கார்னைக் கொண்டு தங்களை அலங்கரித்துக் கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில் சூடான கல்லின் மீதும், சுடு மணலிலும் சோளத்தைப் போட்டு பாப்கார்ன் தயாரித்திருக்கிறார்கள்.

1890களில் அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் திவாலான வங்கி உரிமையாளர் ஒருவர் பாப்கார்ன் மெஷின் ஒன்றை வாங்கி, தியேட்டர் ஒன்றின் அருகே கடை போட்டார். அதில் கிடைத்த வருவாயில் அவர் தாம் இழந்த மூன்று பண்ணைகளை மீண்டும் வாங்கி விட்டாராம். அந்தளவுக்கு பாப்கார்னுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்திருக்கிறது. அந்த வரவேற்பு இன்று வரை தொடர்கிறது.