Author Topic: ~ அதலைக்காய்களின் ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ பயன்கள் !! ~  (Read 927 times)

Offline MysteRy

அதலைக்காய்களின் ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ பயன்கள் !!




நம் நாவில் பட்டவுடன், முதலில் எந்த உணர்ச்சியை நாவிற்கும், மூளைக்கும் உணர்த்துகிறதோ, அந்த உணர்வே நாம் உட்கொள்ளும் பண்டத்தின் சுவையாகும். இவை நாவிற்கு ருசியை தருவதுடன், உண்பதற்கு இனிமையையும், மனதிற்கு மகிழ்ச்சியும், உடலுக்கு ஊட்டத்தையும், நுண்கிருமிகளுக்கு எதிர்ப்பையும் தருபவையே. கசப்பு சுவை, ஜீரணத்தை அதிகப்படுத்தி, உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் நுண்கிருமிகளை வெளியேற்றி, உடல் எரிச்சலை தணித்து, அதிகரித்த ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. அது மட்டுமின்றி, சளி, அஜீரணம் போன்ற நாட்பட்ட தொல்லைகளை நீக்குவதுடன், வாய் மற்றும் உணவுப்பாதைகளிலுள்ள அழுக்குகளையும் கழிவாக வெளியேற்றும் தன்மை உடையன.

இதுபோன்ற கசப்பு தன்மையுடைய, மருந்தாக பயன்படும் உணவு தான் “அதலைக்காய்!’
“மொமார்டிகா டியுபரோசா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட “குக்கர்பிட்டேசியே’ குடும்பத்தை சார்ந்த அதலைக்காயில் கசப்பான கிளைக்கோசைடுகள், மொமார்டிக்கோசைடுகள், இன்சுலினுக்கு இணையான பண்புரதங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

செடி அமைப்பு

அதலைச்செடிகள் பொதுவாகத் தரையில் படர்பவை. சில வேளைகளில் வயல் வரப்புகளில் இவற்றை வளர்க்கும்போது வேறு செடிகளிலோ கொம்புகளிலோ பற்றிப் படர்கின்றன. . மலர்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தில் நுனிவளர் தார் அமைப்பில் (racemose) இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்மலரிலும் இரண்டு மகரந்த உறுப்புகள் இருக்கின்றன. பெண் மலர்த்தார் 28 மி.மீ. நீளத்தில் ஒரே ஒரு மலரைத் தாங்கி நிற்கும். காய்கள் 20-25 மி.மீ. நீளம் வரை இருக்கின்றன. காய்களின் கரும்பச்சை நிறப் புறத்தோலில் எட்டு நுண்ணிய வரைகள் இருக்கும்.விதைகள் நீளவாக்கில் 4.6 மி.மீ. அளவில் முட்டை வடிவில் வழுவழுப்பாகவும் பளிச்சென்றும் இருக்கின்றன.

அதலைக்காய்களின் ஊட்டச்சத்துகள்

கூறு   அதலைக்காய் பாகற்காய்
அண்மைப் பகுதிக்கூறுகள் (100 கிராமில் பகுதி கிராம்)
நீர்ச்சத்து   84.30   83.20
நார்ச்சத்து   6.42   1.70
மாவுச்சத்து   12.60   10.60
புரதம்   2.15   2.10
உணவு ஆற்றல் (கிலோ காலரி/100g)   73.00 60.00
ஊட்டப்பொருள் (100 கிராமில் பகுதி மி.கி.)
கால்சியம்   72.00   23.00
பொட்டாசியம்   500.00   171.00
சோடியம்   40.00   2.40
இரும்பு   1.70   2.00
செப்பு   0.18   0.19
மங்கனீசு   0.32   0.08
துத்தநாகம்   2.82   0.46
பாசுப்பரசு   0.46   38.00
உயிர்ச்சத்து சி   290.00   96.00
β கரோட்டீன்   0.01   126.00

தோட்டக்கலை ஆய்வாளர்களான பார்வதி, குமார் ஆகியோர் அடங்கிய ஆய்வுக்குழுவினர் தங்களது பல்வேறு ஆய்வுகள் வழியாக அதலைக்காய்களின் கூறுகளைப் பிரித்து அவற்றின் விகித அளவுகளை வெளியிட்டுள்ளனர்.இவ்வாராய்ச்சியின் வழியாக அதலைக்காய்களில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், புரதம் போன்றவற்றின் அளவுகள் ஏறத்தாழ கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்காயை முழுவதும் எரித்த சாம்பலைக் கொண்டு இவற்றிலுள்ள வேதிப் பொருட்களின் விகிதத்தையும் அளந்துள்ளனர். இதே முறைகளில் முன்னதாக பாகற்காய்களின் மீது நடத்திய ஆய்வு முடிவுகளையும் ஒப்பீட்டுக்காகத் தந்துள்ளனர்.

மருத்துவத் திறம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் அதலை விளையும் பிற பகுதிகளிலும் நெடுங்காலமாக நீரிழிவு, குடற்புழு போன்றவற்றுக்கான நாட்டுமருந்தாகவும், சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் அதலைக்காய்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.மருந்தாய்வர்கள் இவற்றைக் கொண்டு மாந்தரிலும் பிற விலங்குகளிலும் ஆய்வு செய்துள்ளனர். நீரில் கரைத்த அதலைக்காய்கள் நீரிழிவுக்கு ஆட்பட்ட முயல்களின்குருதியில் இருந்த குளுக்கோசின் அளவைக் குறைப்பதாக அறியப்பட்டுள்ளது.இச்செடிகளின் கிழங்குகளை அரைத்து எத்தனாலில் கரைத்து எலிகளுக்குப்புகட்டியபோது இதயத்தில் குருதிக்குழாய் அடைப்புகளின் போது ஏற்படும் திசு இறப்பைக் குறைப்பதாகவும் அறிந்துள்ளனர். கார்பன் டெட்ரா குளோரைடினாலும்பாராசிட்டமாலினாலும் விளையும் கல்லீரல் பாதிப்பையும் இவை தடுக்க உதவுகின்றன என்று அறியப்பட்டுள்ளது.

இவற்றின் இலைகளில் இருந்து பெறப்பட்ட மருந்து யானைக்கால் நோயைஉண்டாக்கும் கியூலெக்சு வகை கொசுக்களை எதிர்க்கவல்லது என்றும் அறிந்துள்ளனர்

துவரம்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து, குழைய வேகவைத்து கொள்ள வேண்டும். அத்துடன் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிய அதலைக்காய் – 10 கலந்து கொள்ள வேண்டும். பச்சை மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பூண்டு – 1 பல், தக்காளி – 2,சிறிய வெங்காயம் – 5 அனைத்தையும் மைய நசுக்கி, சட்டியில் தேவையான நீர் சேர்த்து நன்கு வேக வைத்து, அத்துடன் பருப்பு மற்றும் “அதலைக்காய்’ கலவையை கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து, இறுதியில் சோம்பு, லவங்கப்பட்டை மற்றும் கறிவேப்பிலையை தாளித்து போட்டு, இறக்கி வைத்து கொள்ள வேண்டும்.

வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதை குடித்து வர வயிற்றில் நுண்புழுக்கள், குடற்கிருமிகள் ஆகியன நீங்கும். சர்க்கரை அளவு மற்றும் கொழுப்புச்சத்து குறையும். நாட்பட்ட புண்கள் ஆறும்.