தீபாவளியன்று ஏகப்பட்ட பட்சனங்களை செய்து, வயிறு புடைக்க சாப்பிட்டு முடித்த பின்னர் பட்டாசையம் கொளுத்தி கொண்டாடியாயிற்று. அடுத்து முக்கியமான ஒரு மேட்டர் உள்ளது. அதுதான் தீபாவளி லேகியம்.
சாப்பிட்ட இனிப்புகள் ஜீரணமாகி வயிறு பத்திரமாக இருக்க வேண்டுமல்லவா, அதற்குத்தான் இந்த தீபாவளி லேகியம்.
தீபாவளி லேகியம் என்றதும் பயந்து போய் விட வேண்டாம். சாதாரண இஞ்சி கஷாயம்தான் இது.
தீபாவளி லேகியம் தயாரிக்க தேவையான பொருட்கள்..
இளம் இஞ்சி - ஒரு பெரிய துண்டு.
மல்லி விதைகள் - 1 கப்.
ஜீரகம் - அரை கப்.
நெய் - 3 தேக்கரண்டி
வெல்லம் - 1 கப்.
செய்முறை:
கொத்தமல்லி விதைகளையும், ஜீராவையும், அரை குவளை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில், இந்த பேஸ்ட்டை கலந்து நன்கு நைசாக வருமாறு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் வெல்லத்தை சேர்க்க வேண்டும். சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு மெதுவாக நெய்யை கலந்து அப்படியே கலக்கி வரவும். இந்தக் கலவையில் உள்ள நீர் அனைத்தும் ஆவியாகி, அப்படியே இறுக்கமான பேஸ்ட் ஆக மாறி விடும். இதுதான் தீபாவளி லேகியம் அல்லது தீபாவளி மருந்து.
தீபாவளி பலகாரம் சாப்பிட்டு முடித்ததும் இந்த தீபாவளி மருந்தை உட்கொண்டால் வயிறு கெடாது, ஜீரணப் பிரச்சினை வராது.
தித்திப்பான தீபாவளிக்கு இந்த கஷாயம் அவசியம் தேவை. மறந்துடாம தயாரிச்சுடுங்க.