மழைக்காலம் அல்லது குளிர் காலம் வந்தாலே, உடல் சற்று களைப்புடன் எப்போதும் சோம்பேறித்தனமாகவே இருக்கும். அந்த நேரத்தில் நன்கு தூங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றும். அவ்வாறு தூங்கிக் கொண்டே இருந்தால், அனைத்தும் நம்மிடம் தானாக வந்துவிடுமா என்ன? எனவே அப்போது மனதை சோம்பேறித்தனத்துடன் வைக்காமல், அந்த நேரம் சூடாக டீ-யையோ அல்லது காரமாக ஏதேனும் ஸ்நாக்ஸையோ சாப்பிடலாம்.
அதிலும் மழை வந்தால், வெளியே சென்று எதையும் வாங்கி வர முடியாது. ஆகவே இந்த நேரம் வீட்டிலேயே பஜ்ஜி, வடை, போண்டா போன்றவற்றை செய்து சாப்பிடுவதோடு, நமது இந்தியாவின் பல இடங்களில் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடும் டீ-யில் பல வகைகள் உள்ளன. மேலும் டீ-யில் பல வித்தியாசமான சுவைகள் உள்ளன. அவற்றை என்னவென்று தெரிந்து கொண்டு, அந்த டீ-யில் உங்களுக்குப் பிடித்ததை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடலாம்.
இப்போது அந்த டீ வகைகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, உங்களுக்கு பிடித்ததை செய்து குடித்து மகிழுங்களேன்...
இஞ்சி டீ
டீ-யில் சிறந்த டீ என்னவென்றால் அது இஞ்சி டீ தான். இந்த டீ சளி மற்றும் தொண்டை வலிக்கு மிகவும் சிறந்தது. ஆகவே இந்த டீ-யை மழை நேரத்தில் வீட்டில் போட்டு குடித்தால், சுவையாக இருப்பதோடு, உடலில் இருக்கும் நோயும் குணமாகும்.
மசாலா டீ
உடல் மற்றும் மனம் சற்று தளர்ந்து இருக்கும் போது, உற்சாகமூட்டுவதற்கு சற்று சூடாக, காரமாக ஒரு டீ-யை போட்டு குடித்தால், நன்றாக இருக்கும். அதற்கு மசாலா டீ தான் சிறந்தது. ஏனெனில் இதில் ஏலக்காய், கிராம்பு, மிளகு மற்றும் பட்டை போன்ற பொருட்கள் உள்ளது. அதனால் தான், அதனை குடித்தால், விரைவில் உடல் உற்சாகமடைகிறது
ப்ளாக் டீ
நிறைய மக்கள் பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பார்கள். இந்த வகையான டீ-க்கு தான் ப்ளாக் டீ (Black Tea) என்று பெயர். இந்த டீ குடித்தால், எந்த ஒரு பக்கவிளைவும் இருக்காது. அதிலும் இந்த டீ-யை மழை காலத்தில் வீட்டில் போட்டு ஸ்நாக்ஸ் உடன் சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும்.
சைனீஸ் டீ
பொதுவாக டீ-யானது சைனாவில் தான் முதலில் உருவானது. இந்த டீ-யில் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, அத்துடன் தேயிலையை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதில் சர்க்கரையை சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் உடல் புத்துணர்ச்சியடைதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
எலுமிச்சை டீ
மழை அல்லது குளிர் காலம் என்றாலே தூக்கம் நன்கு வரும். உடலே சோம்பேறித்தனத்துடன் இருக்கும். இதற்காக எப்போதுமே தூங்கிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே அந்த நேரம் வீட்டில் எலுமிச்சை இருந்தால், அதனை வைத்து டீ போட்டு, சிறிது தேன் சேர்த்து குடித்தால், உடல் மற்றும் மனதிற்கு ஒரு ரீசார்ஜ் செய்தது போல் இருக்கும்.
வெல்லம் டீ
இது ஒரு பஞ்சாபி டீ. இந்த டீ-யின் ஸ்பெஷல் என்னவென்றால், சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்துவது தான். மேலும் இந்த டீ-யில் பாலுடன், வெல்லத்தை சேர்ப்பதால், டீ-யானது சற்று அடர்த்தியாக இருக்கும்.