Author Topic: இறகைப்போலே  (Read 5379 times)

Offline Gotham

இறகைப்போலே
« on: October 29, 2012, 09:01:48 PM »

இன்றோடு இருவாரமாயிற்று டென்மார்க் வந்து. பெரிதாய் ஜிமெயிலில் மெசேஜ் மட்டும் பலமாய்! ‘மார்க் இன் டென்மார்க்’. ஆன்லைன் வந்த நண்பர் கேட்டார். ‘ஜெஸ்ஸிய பாத்துட்டீங்களா?’ ‘என்னத்த சொல்ல.. ஒன்றா இரண்டா.. ஏகப்பட்ட ஜெஸ்ஸிகள் இருக்காங்க’. ‘அப்போ எல்லாத்தையும் கரெக்ட் பண்ணிட வேண்டியது தானே’. ‘அந்த திறமை இருந்தா நான் ஏன் உங்க கூட சாட் பண்ணிட்டு இருக்கப் போறேன்.’ அவ்ளோ தான். ஆள் தலைமறைவானார்.

வெளியே நல்ல குளிர். வெள்ளிக்கிழமை வேற. மணி எட்டுக்கும் மேலாயிருந்தது. போன வாரம் இந்நேரம் நண்பர்கள் இருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை இந்தியா போய்விட்டார்கள். நான் இன்னும் இருவாரம் ஓட்ட வேண்டும். கஷ்டம் தான். வேலையும் அதிகமில்லை. ‘சனியும் ஞாயிறும் என்ன சமைக்கலாம்..?’ மனது வெறுமையாயிருக்க வெளியில் கிளம்பினேன். தலைக்கு குல்லாயும் கைகளுக்கு உறைகளும். அதையும் மீறி வேகமாய் அடித்த குளிர் காற்று சிலீரென்று உள்ளுக்குள் ஊடுருவியது. வழுக்கிய ரோடுகளில் கஷ்டப்பட்டு அடிமேல் அடி வைத்து பஸ் ஸ்டாப் வந்தேன். எட்டு நாற்பத்தியைந்துக்கு தான் பேருந்து. குளிரில் நடுங்கியவாறே நிற்க இரு டென்மார்க் அழகிகள் பஸ் ஸ்டாப்பிற்கு வந்தனர். டானிஷ் மொழியில் வழவழவென்று பேச அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போதும் போல் சரியான நேரத்திற்கு பஸ் வர ஏறினேன். அட்டையில் பஞ்ச் செய்துவிட்டு குல்லாயை கழற்றி வெளியே வேடிக்கைப் பார்க்கலானேன்.

இருவார நினைவுகள். புது நாட்டுக்கு வந்தது போல் தோன்றவே இல்லை. ஏதோ நீண்ட நாளாய் இங்கேயே இருப்பது போல நட்பான மக்கள். போலீஸை ஒருமுறை கூட கண்டதில்லை. ஆனால் தனிமை ரொம்பவே உறுத்தியது.

சிட்டி செண்டரில் இறங்கி ஜெர்கின் பாக்கெட்டில் கைகளை நுழைத்தவாறே நடந்தேன். ஆறுமணிக்கே பல கடைகள் மூடிவிடும். வெள்ளியாதலால் தெருவோரங்களில் கடை விரித்திருந்தனர். என்ன வாங்குவது? சும்மா வேடிக்கைப் பார்த்தவாறே நடக்கலானேன். நான்கு தெரு நடந்த்தும் கால்கள் வலித்தது. அப்போது தான் அந்த இடம் கண்ணில் பட்டது. ’10 க்ரோனர் பப்’. உண்மையான பேர் என்னவென்று தெரியாது. ஆனால் அங்கே தான் 10 க்ரோனருக்கு ஒரு பீர் கிடைக்குமென்பதால் அந்த பேர். எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். போனவாரம் நண்பர்களுடன் இங்கே வந்து கூத்தடித்தது நினைவுக்கு வந்தது. அதை அசைப்போட்டுக் கொண்டே வாயிலை நோக்கி நடந்தேன்.

உள்ளே நுழைந்ததும் காதை கிழிக்கும் ராக் இசை. நிறைய கூட்டம். ஆங்காங்கே வயசு வித்தியாசமில்லாமல் பால் வித்தியாசமில்லாமல் மக்கள் போதை ஏற்றிக் கொண்டிருந்தனர். கண்கள் தன்னிச்சையாய் அவரைத் தேடியது. அவர் அங்கு வேலை பார்க்கும் தமிழர். ஆஜானுபாகுவாய் ஸ்டைலாய் இருப்பார். போன முறை வந்த போது சந்தித்தேன். நகைச்சுவையாக பேசுவார். இப்போதும் என்னைப் பார்த்தவுடன் புன்னகைத்தார், அடையாளம் கண்டுகொண்டேன் என்பதைப் போல. ‘எப்படி இருக்கீங்க? அவங்கல்லாம் ஊருக்குப் போயிட்டாங்களா?’ கேட்டுக் கொண்டே பீர் பாட்டிலைத் திறந்தார். ‘நல்லா இருக்கேன்.. அவங்க போயிட்டாங்க.’ 10 க்ரோனரை கொடுத்து பாட்டிலை வாங்கினேன்.

அப்போ ‘ஊய்ய்ய்…’ என்று ஒரு சத்தம் அந்த இசையையும் மீறி கேட்ட்து. திரும்பினால் ஒரு பெண், இந்திய பெண் போலிருந்தாள், உற்சாகமாய் சிரித்துக் கொண்டிருந்தாள். என் பார்வையை கவனித்தவாறே, ‘நம்ம நாட்டு பொண்ணு தான். இங்க இருக்கிற யுனிவர்சிட்டியில இரண்டு வருஷமா படிக்குது. அப்பப்போ ப்ரண்ட்ஸோட வரும். ஒருவிதத்துல நம்ம ஊர் பொண்ணுங்க இவ்ளோ சுதந்திரமா இருக்கறத பாக்கும் போது ஒரு பக்கம் சந்தோஷமா தான் இருக்கு.’ அவர் சிந்தனையை வியந்து உதட்டில் சிரிப்பை தவழ விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ‘தனிமை நம்மை கொல்வதற்கு முன்னாடி அதை நாம கொல்லணும்.’

ஓரமாய் இருந்த ஒரு இடத்தில் போய் நின்று கொண்டேன். அங்கிருந்து அந்த பெண் தெரிந்தாள். அவள் சிரிப்பும் அவளது சில்மிஷமான முக சேஷ்டைகளும் அழகு. ஏற்கனவே பார்த்தவுடன் போதை தரும் கண்களுக்கு இந்த போதையோ இன்னும் கவர்ச்சியை கொடுத்தது. இன்னொரு டானிஷ் பெண்ணுடன் வந்திருந்தாள். சற்று நேரத்தில் அவளுக்கு அருகில் இடம் காலியாக எங்கிருந்து தான் தைரியம் வந்த்தோ அவளருக்கே சென்று ஆங்கிலத்தில் ‘இங்கே உட்காரலாமா?’ என்றேன்.

சட்டென திரும்பி ‘ஷ்யூர்’ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அப்புறம் தான் ஏதோ நினைத்தது போல் அந்த இருட்டில் என் முகத்தை உற்று நோக்கினாள்.

“சவுத் இண்டியன்?”

என் முகம் பிரகாசமானது. பாட்டிலை சூப்பிக் கொண்டே
தலையாட்டினேன்.

“ஹாய். ஐம் விநோ. விநோதினி.” தமிழோ?? “திஸ் இஸ் மை ப்ரண்ட் ஜெனி..” அவளுடனும் டானிஷ்காரியுடனும் கைகுலுக்கினேன். “ஐம் மதி..”

அவள் முகத்தை சுருக்கியதில் அவள் புருவங்கள் நெரிந்தன. துணிந்து கேட்டேன் “ஆர் யூ தமிழ்?”

“ஆமாம்..”

“ஓ.. கூல். மீ டூ..” அப்போது தான் அந்த அபத்தத்தை உணர்ந்தேன். தமிழில் அளித்த பதிலுக்கு ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன்.

“எந்த ஊர்?”

“டெல்லி. அப்பா பொறந்து வளர்ந்த்தெல்லாம் திருச்சி.” பீர் வாடை கூட சுகந்தமாய் இருந்தது.

“திருச்சியா.. சூப்பர். எனக்கும் அந்த ஊர் தான்.”

அவள் தோழி பக்கத்திலிருந்த மற்றொரு டானிஷ் காரனுடன் பேச ஆரம்பித்துவிட்டாள். ஏனோ ஊருக்குக் கிளம்பும் முன் அம்மாவுடன் பேசியது நினைவுக்கு வந்தது.

“அம்மா.. கிளம்பறேன்.”

“சரிப்பா.. பத்திரமா போயிட்டு வா. ஹூம். அதுக்குள்ளேயாவ்து பொண்ணு கிடைக்குதானு பாப்போம்.”

“இவ்ளோ நாளா கிடைக்கல. இப்போ மட்டும் கிடைச்சுடுமாக்கும்.”

“சும்மா நெகட்டிவாவே பேசாத. எப்போதும் பாஸிடிவ்வா பேசு..”

“அது ஒன்னு தான் கொறச்சல். பாருங்க. டென்மார்க்கிலேயே ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.”

“அதாச்சும் செய். எனக்கும் தேடி அலுத்துப் போச்சு. பாக்கறது தான் பாக்கற. தமிழ் பேசற பொண்ணா பாரு.”

“ஐய… ஆசைய பாரு. நீ வேணா டானிஷ் கத்துக்கோ..!”

“அது சரி… முதல்ல ஒரு பொண்ண புடி. அப்புறம் யார் என்ன கத்துக்கலாம்னு பேசலாம்”

சட்டென நினைவுகள் அறுபட முகத்தில் புன்னகை. யாரோ உலுக்க திடுக்கிட்டு திரும்பினேன். விநோ தான். விநோதமான பெண்.

“ஹே.. என்ன ஆச்சு? அப்படியே ஆஃப் ஆயிட்டீங்க?”

“ம்ம்.. ஒன்னுமில்லை” முதல் முறை ஒரு பெண்ணுடன் தமிழ் பெண்ணுடன் வெளிநாட்டு பப்பில் தண்ணியடித்துக் கொண்டிருக்கிறேன். சிரிப்பாய் வந்தது. ‘இந்த அளவுக்கு பெண்கள் துணிந்து வெளியில் வர முன்னேறி இருக்கிறார்களே. அதை நினைக்கவே சந்தோஷமாய் இருந்தது. அளவோடு இருக்கும் வரை எதுவுமே தப்பில்லை.’ போதை லேசாய் தலையில் ஏற ஆரம்பிக்க மனம் தத்துபித்தென்று நினைக்க ஆரம்பித்தது.

“அப்புறம் சொல்லுங்க. என்ன விஷயமா இங்க வந்திருக்கீங்க?”

உற்சாகமாய் சொல்ல ஆரம்பித்தேன். என் வேலையைப் பற்றி சொல்வதென்றால் எனக்கு பயம். ஆயிரம் கேள்வி வரும். ஒவ்வொன்னா விளக்கணும். இடையில் பாட்டில் தீர்ந்திருக்க போய் இரண்டு பாட்டில்கள் வாங்கி வந்தேன். அந்த தமிழர் சில்மிஷமாய் புன்னகைத்தார். பதிலுக்கு புன்னகையை உதிர்த்து இடத்திற்கு வந்தேன். அவள் தோழி நன்றாக போதையேறி போயிருந்தாள்.
மறுபடியும் பேச ஆரம்பித்தேன்.

“…இதாங்க என் வேலை.”

“ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும் போல. நானும் பேசாம உங்க ஏரியாவுக்கே வேலைக்கு வந்துடலாம்.”

“தாராளமா வாங்க.. அப்புறம் தாங்க்ஸ்..”

“எதுக்கு..?”

“என் வேலையை உடனே புரிஞ்சுக்கிட்டதுக்கு. நிறைய பேருக்கு புரிய வைக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியதாயிருக்கும்.”

மெல்லியதான வெளிச்சத்தில் அவள் உதடுகளில் தோன்றிய நெளிவுகள் ஏன்னவோ செய்தன. அவள் இரண்டாம் ஆண்டு முதுகலை படித்துக் கொண்டிருக்கிறாள். இங்க வந்து தான் ப்ப் வருவதெல்லாம். அதுவும் எப்போதாவது ப்ரண்டுக்கு கம்பெனி கொடுக்க. அதுவும் பீர் மட்டும் தான். கேட்காமலேயே நிறைய கதைகள் சொன்னாள்.

இன்னும் இரண்டு பீர்கள் உள்ளே சென்றிருக்க வானத்தில் பறப்பது போல் இருந்தது. அவளுடன் கைகோர்த்துக் கொண்டு தோள்களில் இறக்கைகள் முளைத்திருக்க வெள்ளை உடைகளில் பறந்து கொண்டிருந்தோம். சிரிக்கையில் பளீரிடும் வெள்ளைப் பற்களின் முன் முத்துக்கள் தோற்றுவிடும். கொஞ்சம் கொஞ்சமாக அவள் கண்கள் சொருக ஆரம்பித்தது. போதும் என்று தோன்றியது. இதற்கிடையில் அவள் தோழி போதை அதிகமானதால் வீட்டிற்கு செல்வதாக சென்றுவிட்டாள்.

மணி பன்னிரண்டை தாண்டியிருந்தது. எல்லோரும் ஆட ஆரம்பித்துவிட்டனர். இனியும் இருக்க வேண்டாம் என்றெண்ணி

“சரி.. விநோ. கிளம்பலாம்.”

“ஓ. ஷ்யூர். ஒரு சின்ன ஹெல்ப். உங்ககிட்ட பேசிட்டே இருந்ததால இன்னிக்கு கொஞ்சம் அதிகமாயிடுச்சு. இஃப் யூ டோண்ட் மைண்ட் கொஞ்சம் வீடு வரைக்கு வந்து விடறீங்களா?”

அவள் ஊருக்கு வெளியே யுனிவர்சிட்டி அருகில் ஒரு அபார்ட்மெண்ட் எடுத்து தங்கியிருப்பதாய் சொல்லியிருந்தாள். மனதுக்குள் சீட்டியடித்தபடி தலை சற்றே கனமாய் இருக்க அவளுடன் வெளியே வந்து நடக்க ஆரம்பித்தேன். வழியில் இருந்த பர்கர்கிங்கில் எனக்கும் அவளுக்கும் சிக்கன் பர்கர் வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். இதற்கிடையில் அவளுக்கு போதை நன்றாக தலைக்கேறி விட்டிருந்தது. கண்கள் சொருக என் தோளில் தலையை சாய்த்தவாறே நடக்க ஆரம்பித்தாள். ஜிவ்வென்றிருந்தது. அவளின் பெர்ஃப்யூம் வேறு ஆளைத் தூக்குவது போல். ‘நாளை கண்டிப்பாய் இவளை சந்திக்க வேண்டும் தெளிவாய் இருக்கும் போது. பாய் ப்ரண்ட்டும் இருக்கற மாதிரி தெரியல.’ போதையிலும் சிந்தித்தது குரங்கு மனது. ‘இவள் தானோ என் ஜெஸ்ஸி. இன்னும் இரு வாரம் இருக்கு. அதற்குள் அவளோட விருப்பத்த தெரிஞ்சுக்கலாம். ஓக்கே மட்டும் சொன்னான்னா.. அம்மா… உனக்கொரு மருமக கிடைச்சுட்டா…’ குளிரில் கத்தத் தோன்றியது.

பஸ் வந்ததும் ஏறி அமர்ந்தோம். பக்கத்தில் உட்கார்ந்தவாறே தலையை தோளில் சாய்த்தாள். இன்னும் கண்கள் சொருகியிருந்தது. திடீரென்று எழுந்து கண்கள் விழித்து ஏதோ சொல்ல வாயைத் திறப்பாள். வார்த்தை வெளிவராது. திரும்பவும் சாய்ந்து கொள்வாள். இப்படியே பல தடவை செல்ல அவள் வீடு இருக்கும் நிறுத்தம் வந்த்து. கைகளில் பர்கர் பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டு அவளை தாங்கியவாறே அவள் வீட்டை நோக்கி நடந்தேன். மனம் கன்னாபின்னாவென்று குழம்பிக் கிடந்த்து. ‘இறகைப் போலே அலைகிறேனே உந்தன் பேச்சைக் கேட்கையிலே…’ நாளை கண்டிப்பாய் இவளுடன் பேச வேண்டும். என்ன நினைக்கிறாளென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

வீடும் வந்தது. அபார்ட்மெண்ட் வாசலில் அவளிடம் பர்கரை கொடுக்கும் போதும் வாயைத் திறந்து ஏதோ சொல்ல வந்தாள். ‘ஒன்றும் சொல்ல வேண்டாம்’ என்று புன்னகையுடன் தலையாட்டிவிட்டு நாளை சந்திப்பதாய் சைகையிலேயே சொல்ல தலையாட்டினாள்.

மனம் நிறைய கனவுகளோடும் கற்பனைகளோடும் திரும்ப நடக்கையில் அவள் உரத்த குரலில் சொன்னது கேட்டது. சண்டாளி! அதை சொல்ல மட்டும் அவளுக்கு எப்படி தெம்பு வந்ததோ?? இல்லை நான் போன பிறகாவது கத்தி சொல்லியிருக்கக்கூடாதா… ஒரு நாளாவது சந்தோஷமாய் இருந்திருப்பேனே..

“தாங்க்ஸ்ண்ணா….”

பாவி…!! கனவு காண வச்சுட்டு… வெளிநாட்டுக்கு என்ன… நிலாவுக்கே போனாலும் தமிழ் பொண்ணுங்க மட்டும் மாறவே மாட்டாங்க சார்…!!!!
« Last Edit: October 29, 2012, 09:03:24 PM by Gotham »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இறகைப்போலே
« Reply #1 on: October 29, 2012, 10:26:57 PM »
பாவி…!! கனவு காண வச்சுட்டு… வெளிநாட்டுக்கு என்ன… நிலாவுக்கே போனாலும் தமிழ் பொண்ணுங்க மட்டும் மாறவே மாட்டாங்க சார்…!!!!


 :D :D :D :D :D niceeeeeeeeeee


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Gotham

Re: இறகைப்போலே
« Reply #2 on: October 29, 2012, 11:09:20 PM »
Thx shruthi!