Author Topic: Naan paditha kadhaigal  (Read 5923 times)

Offline kanmani

Naan paditha kadhaigal
« on: October 29, 2012, 06:27:04 PM »
மனம் - சிறுகதை


மருத்துவ மனைக்கு வந்ததிலிருந்தே கவனித்துக்கொண்டிருந்தான் சுரேஷ்... அந்த சிறுவன் அழுகையே ஒரு வித்தியாசமாக இருந்தது.. சற்று சிணுங்கல் கலந்த அழுகை...


அது ஒரு சாதாரண மருத்துவமனை.. முன் பக்கம் ஒரு பெஞ்ச் போடப்பட்டிருந்தது.. அதில் வரிசையாக நோயாளிகள் அமர்ந்திருந்தனர். எஞ்சியவர்கள் நின்றுக்கொண்டும், சிலர் கீழேயும் அவர்கள் வசதிக்கு தக்கவாறு அமர்ந்திருந்தனர்.

நேற்றிலிருந்தே சுரேஷின் மகளுக்கு சற்றுக் காய்ச்சலும், சளியும் இருந்தது. சளியால் அதிகம் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தாதால் இன்று அந்த சுமாரான மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தான்..

அங்கு வரிசையில் திரண்டிருந்த நோயாளிகளைக் கண்டதும் சற்றே எரிச்சலுற்றான்...

நோயாளிகளின் வரிசையில் நிற்கப் பிடிக்காமல் சற்றே தள்ளியே நின்றான்.

இந்த மாதிரி சமயங்களில், இப்படிப்பட்ட சுமாரன மருத்துவமனைக்கு வருவது அவனுக்குப் பிடிக்காது. இருந்தாலும் அந்த டாக்டர் கைராசிக்காரர் என்று மனைவி வற்புறுத்தி கூட்டி வந்திருந்தாள்.

மீண்டும் அந்த சிறுவனின் சிணுங்கல் கலந்த அந்த அழுகை சத்தம் அவனுக்கு எரிச்சல் ஏற்படுத்தியிருக்கவேண்டும்.. சற்றே உள்ளே எட்டிப் பார்த்தான்.. அந்த சிறுவன் அவனது தாயின் தோள் மீது சாய்ந்திருந்தான்..

அவர்களைப் பார்த்தால் பணக்காரக் குடும்பம்போல் தெரிந்தது.
'ச்சே.. இவர்கள் வேறா? ' இன்னும் எத்தனை நேரம் காத்திருப்பது?' என்று மனதுக்குள் சலித்துக்கொண்டான். அதாவது பணக்காரர்கள் என்றாலே இவனுக்கு சற்று எரிச்சல் கலந்து கோபம் வரும்.. நிறைய அனுபவப்பட்டிருக்கிறான். இந்த நேரத்தில் மருத்துவமனையில் இத்தகைய செல்வந்தர்களை கண்ட போது அவனுக்கு மேலும் சங்கடத்தை கொடுத்தது. கூடவே கோபமும்..!

இப்படித்தான் கடந்த முறை வந்தபோது கூட ஒரு பணக்கார குடும்பம் முதலில் வைத்தியம் பார்த்த பிறகுதான் அவனை அனுமதித்தார்கள்... அவர்கள் நிறைய நேரம் மருத்துவரிடம் ஆலோசனைப்பெற்றதால் அவனுக்குள் டென்ஷனை ஏற்படுத்திய அத்தருணத்தை நினைத்துக்கொண்டான்..இத்தகைய நிகழ்வுகளால் தான் பணக்காரர்களின் மீது அவனுக்கு ஒரு கெட்ட அபிப்ராயம் வந்திருந்தது. அதுவே அவனுக்கு மேலும் எரிச்சலையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

இவர்களும் இப்படித்தான் இருப்பார்களோ? என்று எண்ணிக்கொண்டான். அதிக பணம் கொடுத்து டோக்கன் போடாமலேயே கூட முதலில் டாக்டரை பார்க்க சென்றுவிடுகிறார்கள். மருத்துவரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. காரணம் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட மக்கள் மத்தியில் மருத்துவரும் விதி விலக்கா என்ன?

மருத்துவமனையில் கூட பணம் உள்ளவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும்தான் முதலிடம் கொடுக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டான். ஆனால் அதை தன் மனத்துக்குள்ளேயே அடக்கிக்கொண்டான். எப்படியும் குழந்தைக்கு வைத்தியம் பார்த்தாக வேண்டுமே!

அவர்களது பக்கத்தில் டிப்டாப்பாக(TipTop) ஒருவர் நின்றிருந்தார்.. அவர் சிறுவனின் தந்தையாக இருக்க வேண்டும்.

மருத்துவர் வந்ததும் எல்லோரும் டோக்கன் எண் வரிசைப்படி மருத்துவம் பெற்று சென்றார்கள்..

இன்னும் ஒரு சில பேர்கள் தான் இருந்தார்கள்.. அவனது முறை வந்தது.. அவர்களுக்கு முன்னால் அந்த பணக்கார குடும்பம்..

மிக அருகே பார்க்கும் போதுதான் அந்த சிறுவனை நன்றாக கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுவனைப் பார்த்தால் மனநிலை சரியில்லாதவனைப் போலிருந்தது. அவனது பெற்றோரையும் அவனையும் மாறி மாறி பார்த்தான் சுரேஷ். அச்சிறுவனுக்கும் அவனுடைய பெற்றோருக்கும் எந்தவித சம்பந்தமுமே இல்லாமல் இருப்பதாக தோன்றியது அவனுக்கு. உருவ ஒற்றுமையிலோ, அல்லது மரபு சார்ந்த பழக்கங்களிலோ முற்றிலும் அச்சிறுவன் வேறுபட்டிருப்பதாய் எண்ணினான்.


இவர்கள் உள்ளே சென்றால் இன்னும் எத்தனை நேரம் காத்திருப்பது கடவுளே ?  மனம் கடுத்தது. வெளியில் காட்டிக்கொள்ளாமல் நின்றான். அவனது மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட சிறுவனின் தாய் அவனைப் பார்த்து இலேசாக புன்னகைத்தாள்..

'நீங்க முதல்ல போய் பார்த்துட்டு வந்துடுங்களேன்..!'

 சினேகமாய் கூறினாள். பக்கத்திலிருந்தவரும் ஆமோதிப்பாய் தலையசைத்தார்.

'இல்ல நீங்க போய் பார்த்துடுங்க..' இது சுரேஷ்.

"நானும் முதல்ல இருந்தே உங்கள கவனிச்சுட்டு வர்றேன்..நீங்க குழந்தையை வச்சுட்டு ரொம்பவும் சிரமப்படற மாதிரி தெரியுது. அதனால் நீங்க முதல் பார்த்துடுங்க." என்று சொல்லி அவனுக்கு வழியை விட்டாள்.

'நன்றிங்க'

சொல்லிவிட்டு உள்ளே சென்றான் சுரேஷ். 'இப்போவாவது வழியை விட்டார்களே.. சீக்கிரம் வீடு போய் சேரலாம் என்று எண்ணி உள்ளே நுழைந்து மருத்துவரிடம் மருத்துவம் பார்த்துக்கொண்டு வெளியில் வந்தான்.

தேவையான மருந்துகளை மெடிக்கலில் வாங்கிக்கொண்டிருக்கும்போது , அவர்களும் அங்கே வந்திருந்தார்கள்.

அருகே சென்றவன், தனது சந்தேகத்தை கேட்டே விட்டான்.

'சார் கேட்கறேன்னு தப்பா நினைச்சுக்க கூடாது''

'சொல்லுங்க' புன்னகைத்தார் பணக்காரர்.

அந்த சிறுவன் மறுபடியும் ஒரு வித்தியாசமான குரல் எழுப்பிக்கொண்டிருந்தான். வாயில் ஒழுகிய சலவாயை கைக்குட்டைக்கொண்டு ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தாள் அப்பெண்.

'இது உங்களோட குழந்தையா?' சந்தேகமாய் மீண்டும் கேட்டான்.

'ம்'

'உங்க சொந்தக் குழந்தையா?'

'ஆமாம் சார்' புன்னைகைத்தவாறே மருந்துப்பையை வாங்கிக்கொண்டு காரில் ஏறி புறப்பட்டனர் அவர்கள்.

'தம்பி!' என்றார் மருந்துக் கடைக்காரர்.

'சொல்லுங்க' என்றான்.. சுரேஷ்.

'நீங்க அவர்கிட்ட கேட்டதுக்கு நான் பதில் சொல்றேன்.  உண்மையிலேயே அது அவர்கள் குழந்தையில்லை தம்பீ..! அவர்கள் அந்தக் குழைந்தையை தத்தெடுத்து வளர்க்கிறாங்க.. இந்த உண்மையை யாரிடமும் எப்போதும் அவர்கள் சொன்னதில்லை. எவ்வளவு பெரிய மனசு அவங்களுக்கு..! அவங்க எப்பவும் நல்லா இருக்கணும் தம்பீ..! அவங்க செய்யற எந்த ஒரு நல்ல காரியத்தையும் வெளியில் சொல்லிக்கிட மாட்டாங்க.. அதான் அவங்களோட பெருந்தன்மை.'

என்றபோது சுரேஷிற்குள் ஏதோ நெருட, பணக்காரர்களைப் பற்றிய தனது எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. உலகத்தில் மனிதர்கள் அனைவரும் நல்ல குணங்களை கொண்டவர்கள்தான். சந்தர்பமும் சூழ்நிலையும் அவர்களை கெட்டவர்கள் என்றும், நல்லவர்கள் என்றும் பிரித்து வகைப்படுத்திவிட்டது. இதன் அடிப்படையில் பணக்காரர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் நல்ல மனசு உண்டு என்பதை நன்றாக புரிந்து கொண்டான். யாரோ ஒருவர் விதிவிலக்காக இருக்கக்கூடும். அதற்காக ஒட்டு மொத்த பணக்காரர்களையும் தவறாக நினைக்கக்கூடாது என்பதை உணர்ந்தான். அவனது மனம் இலேசாகி இருந்தது.. அதை ஆமோதிப்பது போல அவனது குழந்தையும் அவனைப் பார்த்து புன்னகை செய்து, பிஞ்சு விரல்களால் அவனது முகத்தை வருடிகொண்டிருந்தது.

.. oru valaithalathil naan paditha kadhai

Offline kanmani

Re: Naan paditha kadhaigal
« Reply #1 on: October 29, 2012, 06:31:11 PM »
“ஓநாய்” என்று கத்திய சிறுவன்

ஒரு ஊரில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். தினமும் தன்னுடைய ஆடுகளை கிராமத்திலிருந்து தொலைவில் கொண்டு போய் மேய்த்து விட்டு அவன் வீடு திரும்புவான்.  ஒரு நாள் தன்னுடைய கிராமத்தவர்களை ஒரு தந்திரத்தால் ஏமாற்ற வேண்டும் என்று அவன் நினைதான்.  அதனால் தன்னுடைய கிராமத்திற்கு வேகமாக ஓடிய அவன் தன்னுடைய பலங்கொண்ட மட்டும் கத்தினான்.

“ஓநாய்! ஓநாய்! என்னுடைய ஆடுகளை ஓநாய்கள் கொன்று தின்கின்றன.  எல்லோரும் வந்து காப்பாறுங்கள்!” என்று கத்தினான்.


அவனுடைய அலறலைக் கேட்ட கிராம மக்கள் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளை விட்டு விட்டு அவனுடைய ஆடுகளைக் காப்பாற்றுவதற்காக ஓடி வந்தார்கள்.  ஆடுகள் இருந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது அந்தச்சிறுவன் பலமாக சிரித்தான்.  அங்கு ஓநாய்கள் இல்லை.

மற்றொரு நாளும் அவன் அதே போல் ஓநாய் வந்து விட்டது என்று பொய் கூறினான்.  இப்பொழுதும் கிராம மக்கள் அவனுக்கு உதவி செய்வதற்காக ஓடி வந்தார்கள்.  இந்த முறை அவனுடைய சிரிபொலியால் பூமி அதிர்ந்தது.

இதன் பிறகு ஒரு நாள் உண்மையாகவே ஒரு ஓநாய் ஆட்டுக் குட்டிகளை அடித்துத் தின்னத் தொடங்கியது.  சிறுவனுக்கு பயம் வந்துவிட்டது.  கிராம மக்களிடம் உதவி கேட்டு ஓடினான். “ஓநாய்! ஓநாய்! ஓநாய் ஆட்டு மந்தையில் புகுந்து விட்டது. காப்பாற்றுங்கள்!” என்று கத்தினான். 

இப்பொழுது அவனது கூச்சலை யாரும் பொருட்படுத்தவில்லை.  அவனுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.  எப்பொழுதும் போல அவன் பொய் சொல்கிறான் என்று அனைவரும் நினைத்தனர்.  அந்த சிறுவனின் ஆடுகள் அனைத்தையும் ஓநாய் தின்று விட்டது.

நீதி: பொய் சொன்னால் இதுதான் நடக்கும். பொய் சொல்பவர்கள் உண்மையே சொன்னாலும் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.

Offline kanmani

Re: Naan paditha kadhaigal
« Reply #2 on: October 30, 2012, 09:42:55 AM »
திறமையை திருட முடியாது

ஒரு நாள் ஜென் துறவி தன் நண்பரிடம் பேசிக் கொண்டே, காட்டு வழியாக நடந்து கொண்டிருந்தார். அப்போது நடந்து செல்லும் போது, ஒரு மரத்தில் தேன் கூடு இருந்தது. அந்த தேன் கூட்டிலிருந்து தேனை இரண்டு பேர் எடுத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் துறவின் நண்பர் துறவியிடம் "தேனீ தன் கடின உழைப்பினால் தேனை சேகரித்து வருகிறது. ஆனால் அதை மனிதர்களான நாம் திருடிவிடுகிறோமே, அதற்காக அது எவ்வளவு வருத்தப்படும்" என்று கூறினார்.

அதற்கு அந்த துறவி தன் நண்பரிடம் "கண்டிப்பாக அந்த தேனீ வருந்தாது" என்று சொன்னார். "அது எப்படி வருந்தாது என்று சொல்கிறீர்கள்" என்று கேட்டார். "ஏனென்றால், மனிதர்களால் அந்த தேனை மட்டும் தான் திருட முடியும். ஆனால் அந்த தேனை உருவாக்கும் கலையை எப்போதும் திருட முடியாது" என்று கூறினார்.

ஆகவே நாம் ஒருவரின் உழைப்பை வேண்டுமானால் திருட முடியுமே தவிர, ஒருவரது திறமையை திருட முடியாது என்பதை, இந்த கதை நன்கு சொல்கிறது.

Offline kanmani

Re: Naan paditha kadhaigal
« Reply #3 on: October 30, 2012, 09:47:37 AM »
கோபம் வேண்டாமே!!!

ஜென் துறவி ஒருவர் எப்போதுமே கோபப்படாமல், நீண்ட நாட்களாக, உடலில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார். அப்போது ஒருவர் வந்து அவரிடம், "நீங்கள் கோபப்பாமல் இருக்க காரணம் என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த குரு "எனக்கு சிறு வயதிலிருந்தே படகில் பயணம் செய்வது என்றால் மிகவும் பிடித்திருந்தது. அதனால் நான் தினமும் அருகிலிருக்கும் ஏரிக்கு சென்று, படகிலேயே நீண்ட நேரம் இருப்பேன். மேலும் படகிலேயே தான் தியானம் செய்வேன்.

ஒரு நாள் அதேப் போன்று படகில் அமைதியாக தியானம் செய்து கொண்டிருக்கையில், ஒரு காலிப் படகு வந்து என் படகை இடித்தது. அதனால் நான் யாரோ கவனக்குறைவால் என் படகை இடித்துவிட்டார்கள் என்று நினைத்து, கண்களைத் திறந்து திட்டுவதற்கு முற்பட்டேன். ஆனால் என்னை இடித்த படகோ காலியாக இருந்தது. அதனால் நான் காலிப் படகிடம் கோபத்தை காண்பிப்பது முட்டாள் தனம் என்று எண்ணி அன்றிருந்து என் கோபத்தை விட்டுவிட்டேன்.

அன்று முதல் என்னை எவர் என்ன தான் திட்டினாலும், அவமானப்படுத்தினாலும், கோபப்படாமல், அப்போது நான் அந்த காலிப்படகை நினைத்து அமைதியாக சென்று விடுவேன். சொல்லப்போனால் அந்த காலிப்படகு எனக்கு ஒரு நல்ல பாடத்தை புரிய வைத்தது." என்று கூறினார்.
« Last Edit: October 30, 2012, 09:49:33 AM by kanmani »

Offline kanmani

Re: Naan paditha kadhaigal
« Reply #4 on: October 30, 2012, 09:52:53 AM »
உண்மையான நல்ல வாழ்க்கை...

ஜென் துறவி தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவர்களிடம் "ஒருவருடைய நல்ல வாழ்க்கையின் ஆயுட்காலம் என்ன?" என்று கேட்டார். அதற்கு சீடர்களுள் ஒருவன் "வேறு எத்தனை நூறு வயது தான்" என்று கூறினான். குருவோ, "இல்லை" என்றார்.

"அப்படியெனில், 90 வயது" என்று மற்றவன் கூறினான். அதற்கும் "இல்லை" என்று குரு கூறினார். அப்படியே சீடர்கள், 80? 70? என்று சொல்ல, அதற்கும் மறுத்தார். பின் அவர்கள் பொறுமையிழந்து "வேறு என்னவென்று நீங்களே சொல்லுங்கள்" என்று கூறினர்.

அதற்கு குரு "ஒரு வினாடி தான்" என்று கூறினார். "அது எப்படி ஒரு வினாடியில் நல்ல வாழ்க்கையை வாழ்ந்ததாக சொல்ல முடியும்?" என்று அனைவரும் கேட்டனர். பின் குரு "நல்ல வாழ்க்கை என்பது ஒரு வினாடியில் தான் தெரியும். எப்படியெனில் ஒவ்வொரு வினாடியையும், வாழ்க்கையின் தொடக்கமாக நினைக்க வேண்டும். மேலும் அதையே முடிவு என்றும் நினைக்க வேண்டும். அதிலும் அந்த வினாடியில் எந்த ஒரு பழையதையோ அல்லது வருங்காலத்தையோ நினைத்து வாழக்கூடாது. ஒரு வினாடி பிறக்கிறதென்றால், அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அது தான் உண்மையான நல்ல வாழ்க்கை" என்று சீடர்களுக்கு சொல்லி, உண்மையான வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிய வைத்தார்.

Offline kanmani

Re: Naan paditha kadhaigal
« Reply #5 on: October 30, 2012, 10:49:41 AM »
சிந்திக்க வைத்த சிறுகதை

ஏய்.. புள்ளைய சீக்கிரம் கிளப்பி விடடி.. நேரம் ஆயிட்டு.. ராவுத்தர் கடையில முட்டாயி, சீனி சர்க்கரை எல்லாம் வாங்கிட்டுப் போகனும்.. என்று அவசரப்படுத்தினான் ஓடையன்.


இந்தாளு ஒரு கூறுகெட்டது.. கடைசி நேரத்துலதான் கெடந்து பறக்கும், புள்ள மொத மொதலா பள்ளிக்கொடம் போவப்போவுது.. கொஞ்சம் நல்லபடியா அனுப்ப வேணாம்.. நம்ம பொளப்புதான் நாயிப் பொளப்பவிட கேவலமாப் போச்சு. கண்ணு, நீனாலும் படிச்சு பெரிய ஆளா வரணும்.. முழுக்கால் ட்ரவுசர் போட்டுக்கிட்டு பெரிய பெரிய பொஸ்தக மெல்லாம் தூக்கிக்கிட்டுப் போவணும், செருப்புப் போட்டுத் தெருவுல நடக்கணும். செய்வியா கண்ணு.. என்றாள் செவனம்மா.


அப்பாவும் பிள்ளையுமாய் பள்ளிக்கூடம் கிளம்பினர். பள்ளிக்கூடம் நுழைந்தவுடன்.. ஏல அந்தாள கண்ணாடி போட்டுக்கிட்டு ஒக்காந்துருக்காருல அவருதான் பெரிய சாரு.. அவரப் பாத்ததும் வணக்கம் போடணும் என்றான்.


சார்.. வணக்கம் சார். வாப்பா ஓடையா.. என்ன இந்தப் பக்கம், இது யாரு ஓம்பையனா என்று சார் கேட்டவுடன்.. ஆமாம் சார் என் பயதான் ஒன்னாவதுல பேரு சேர்க்கணும்.. அதான் அழச்சிட்டு வந்தேன்.


அப்படியா.. நல்லது, டேய் தம்பி வலது கையால காத தொடு, சரி ஸ்பெசல் கலரு வாங்கி எல்லா சாருக்கும் கொடுத்துரு. இருபத்தஞ்சு ரூபா பீஸ் கட்டணும். பேரு எழுதின பிறகு, அந்த கேசவன் வாத்தியாரு க்ளாசுல ஒக்கார வச்சிடு. சரி பேரு என்ன சொல்லு.


பேர் சொன்னான்


தூக்கிவாரிப் போட்டது..! என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்க.. பள்ளிக்கூடமுனா என்னனாலும் செய்யலாம் என்கிற திமிரா.. இதுமாதிரி பேர் வச்சா நாங்கெல்லாம் எப்படிக் கூப்புடறது.. இப்படியெல்லாம் சேர்க்கக் கூடாது.


இல்லைங்கய்யா.. பேரு வைக்கிறது எங்களோட சொதந்தரம். எங்களுக்குப் புடிச்ச பேர்தான் நாங்க வைக்கமுடியும். நீங்க சேர்க்கலைன்னா, நான் கோர்ட்டு, கேசுன்னு போக வேண்டி வரும். இல்லேன்னா எங்க பிரச்சினையைப் பேசுறதுக்கும் கட்சி, தலைவரு இருக்காங்க என்றான் ஓடையன்.


சரி கொஞ்ச நேரம் வெளில இரு என்று சொல்லிவிட்டு பிரெசிடெண்டுக்குப் போன் பண்ணி வரச் சொன்னார். அவரு சொன்னாத்தான் இவன் அடங்குவான்.. அந்தாளு வரட்டும்.


பிரெசிடெண்ட் வந்தவுடன், தலைமையாசிரியர் அவரிடம் தனியாகப் பேசினார். இப்படியெல்லாம் பேரு வெச்சா, வாத்தியாருங்க எப்படி அவனக் கூப்பிடுவாங்க.. சரி வாத்தியார விடுங்க.. நீங்களுந்தான் எப்படிக் கூப்புடுவிங்க. நான் எவ்வளவோ சொல்லியும் ஓடையன் பிடிவாதமா இருக்கான். கட்சி, கூட்டம் அது இதுன்னு போறாங்கள்ல, அந்த மெதப்புதான், என்றார் தலைமையாசிரியர்.


சரி.. சரி நான் ஓடையன் கிட்ட பேசுறேன் என்றார்.


என்னப்பா ஓடையா.. நாகரிகமான பேரெல்லாம் எவ்வளவோ இருக்கு.. ஒனக்குத் தெரியலன்னா நான் ஒரு நல்ல பேரா வைக்கிறேன். அத விட்டுட்டு.. ஏன் இப்படிப் பிடிவாதமா இருக்கே.. பேருல என்னப்பா இருக்கு என்றார் பிரெசிடெண்ட்.


பேருல என்ன இருக்கு.. அப்படின்னு இப்பச் சொல்றீங்க. பேருலதான் எல்லாம் இருக்கு.. அப்படின்னு எனக்கு உணர்த்தியதே ஒங்கப்பாதான். எங்காளுவ, பேருலனாலும் சாமி இருக்கட்டும்ன்னு கந்தசாமி, ரெங்கசாமின்னு பேரு வப்பாங்க.. ஆனா நீங்க எங்க பேருல உள்ள சாமிய எடுத்துட்டு கந்தன், ரெங்கன்னுதான் கூப்பிடுவிங்க


அவ்வளவு ஏன்.. எனக்கு ராஜதுரைன்னுதான் பேரு வச்சாங்க. ஒங்கப்பா பேரு ராஜதுரைன்னு இருந்ததால எனக்கு அந்தப் பேர வைக்கக்கூடாதுன்னு எங்கப்பாவ அடிச்சாங்க. ஊருக் கூட்டம் போட்டு எங்கப்பாவுக்கு அவதாரம் போட்டீங்க. ஓடக்கரை வயலில் கள எடுக்கும்போது நான் பொறந்ததுனால, எனக்கு ஓடையன்ங்கிற பேருதான் பொருத்தமா இருக்குமுன்னு வெச்சீங்க. இது எங்க அப்பா காலம் இல்ல.. எங்களோட காலம். நீங்க செஞ்ச ஒன்னுஒன்னுக்கும் பதில் சொல்லித்தான் ஆகனும், நான் சொன்ன பேர வச்சி எம் புள்ளையை நீங்க சேர்க்கலைன்னா.. இங்க பேரு சேர்க்க முடியாதுன்னு எழுதிக் கொடுங்க.. நான் எங்க பேசணுமோ அங்கே பேசிக்குறேன் என்றான் ஒடையன்


தலைமையாசிரியரும் பிரெசிடெண்ட்டும் விக்கித்து நின்றனர்.


தலைமையாசிரியர் தொண்டையைச் செருமிக்கொண்டு சொன்னார். சரி.. அந்த கேசவன் வாத்தியாரு க்ளாசுல போய் உக்கார வெச்சுட்டுப் போ என்றார்.


ஓடையன் பையன வகுப்புல விட்டுட்டு வரும்போது கேசவன் வாத்தியார் அட்டென்டன்ஸ் எடுக்க ஆரம்பித்தார்... ஓடையன் நின்னு நிதானமா ஒரு வெற்றி மெதப்போடு கேசவன் வாத்தியார் குரல காது கொடுத்துக் கேட்டார். கேசவன் வாத்தியார் அட்டென்டன்ஸ்ல உள்ள கடைசிப் பெயரைக் கூப்பிட்டார்.


"கும்பிடுறேன் சாமி"


உள்ளேன் அய்யா


****************

இந்தக் கதையை படித்ததும் எனக்கு சிரிப்புத்தான் வந்தது... இயலாமையை எப்படியெல்லாம் மாற்றி தனது ஏக்கத்தை மாற்றிக்கொள்கிறான் பாருங்கள் இந்த கதையின் மாந்தராகிய தகப்பன். இந்தக் காலத்திலும் இப்படியொரு கதையா? படிக்கவும் சுவையாகவும், சுவராசியமாகவும் இருந்தது. கதையின் உட்கருத்தை மனதை வருடிச் சென்றது.  உங்களுக்கு எப்படி? பின்னூட்டத்துல சொல்லுங்க..!!!