Author Topic: ரோஜாப்பூ வாடினாலும் சூப்பரா பயன்படுத்தலாம்!!!  (Read 5606 times)

Offline kanmani

அனைவருக்கும் பிடித்த பூக்களில் ரோஜாப்பூவும் ஒன்று. அதிலும் இந்த பூவை காதலின் அடையாளம் என்றும் சொல்லலாம். இத்தகைய ரோஜா பூ இல்லாத வீடுகளை பார்க்கவே முடியாது. மேலும் இந்த பூ கிடைக்காத இடங்களை காணவே முடியாது. மேலும் வீட்டில் உள்ள பூ ஜாடிகளில் விதவிதமான பூக்களை வைத்தாலும், ரோஜாப்பூவை போல் எதுவும் வராது. ஏனெனில் அந்த பூவை வைத்து வீட்டை அலங்கரித்தால், சற்று கூடுதலான அழகைத் தரும். அதிலும் சிவப்பு ரோஜா என்றால் சொல்லவே வேண்டாம். அதன் மணமும் அவ்வளவு அருமையானதாக இருக்கும்.


அவ்வாறு வீட்டில் பூ ஜாடிகளில் வைக்கும் ரோஜாப்பூவை எப்போதும் புதிதானது போல் வைத்துக் கொள்வது என்பது கடினமான விஷயம். ஆகவே தினமும் அந்த ஜாடியில் புதிதான பூவை வைக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த செயலை வேண்டுமென்றால், ஒரு வாரம் முதல் மாதம் வரை செய்வோம். அதற்கு மேல் சோம்பேறித்தனத்தால், அதை தினமும் மாற்ற முடியாமல் போகும். ஆகவே அந்த நேரத்தில் வாடிப் போன ரோஜா இதழ்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!

* வாடிப் போன ரோஜா இதழ்களை வீட்டில் உள்ள டேபிளின் நடுவில் வட்டமாக அலங்கரித்து வைக்கலாம் அல்லது கண்ணாடி பௌலை அலங்கரிக்கலாம்.

* இல்லையென்றால் ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்து, அந்த நீரை வீட்டில் ஸ்ப்ரே போல் தெளிக்கலாம்.

* ஒரு கண்ணாடி குடுவையை எடுத்துக் கொண்டு, அதில் வாடிப்போன ரோஜா இதழ்களை நிரப்பி, வீட்டில் ஷோக்கேஸில் வைக்கலாம். இதனால் ஷோப்கேஸ் பார்க்க அழகாக இருக்கும்.

* ஒரு கண்ணாடி ஜாடியில் வாடிய ரோஜாப்பூ, ஹெர்ப்ஸ், சில காரமான பொருட்கள், நட்ஸான ஏலக்காய், சந்தனக்கட்டை, ரோஸ்மேரி, பழங்களின் தோல்களான எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் ஏதேனும் வாசனை திரவியங்களை சேர்த்து மூடி, குலுக்கி, அதனை ஒரு சிறு கண்ணாடி பாத்திரத்தில் அதனை கொஞ்சம் போட்டு, ஒவ்வோரு அறையிலும் டேபிளின் மீதோ அல்லது அறையின் மூலையிலோ வைக்கலாம். இதனால் அந்த அறை நன்கு வாசனையாக இருக்கும்.

* வீட்டில் சுவற்றில் மாட்டி தொங்கவிடப்படும், போட்டோ ப்ரேமின் முனைகளில் இந்த ரோஜாப்பூவின் இதழ்களை வைத்து ஒட்டி, அலங்கரிக்கலாம்.

* ரோஜாப்பூ மணம் மனதை நன்கு குளிர்விப்பதால், அதனை படுக்கை அறையில் மெத்தைக்கு அருகில் உள்ள டேபிளில் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு வைக்கலாம். இதனால் படுக்கை அறை அழகாக காட்சியளிக்கும்.

ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்து வீட்டை ரோஜாப்பூக்களின் இதழ்களால் அலங்கரித்து, அதன் நறுமணத்தை சுவாசித்து மகிழுங்கள். வேறு எப்படியெல்லாம் வாடிய ரோஜாப்பூக்களை பயன்படுத்தலாம் என்று நீங்களும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.