காய்கறி உப்புமா
தேவையானவை: ரவை – ஒரு கப், தயிர் – முக்கால் கப், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு கலவை – ஒரு கப், தக்காளி – 2, வெங்காயம் – 50 கிராம், பச்சை மிளகாய் (நறுக்கியது) – 2, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, சீரகம் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி போட்டுக் கலந்து, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து அரை பதத்தில் வேக விடவும். இந்தக் காய்கறி கலவையுடன் வறுத்த ரவையைச் சேர்த்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால், தண்ணீர் விட்டு வேக விடவும். இறக்குவதற்கு முன், தயிர் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.
குறிப்பு: அனைத்து சத்துகளும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் டிபன் இது! அதிக கலோரி இல்லாததால் டயட்டுக்கும் சத்துக்கும் உகந்தது.