தேங்காய்ப் பால்க் கறி
தேவையான பொருட்கள்.
பீர்க்கங்காய் - 1
உருளைக்கிழங்கு -1
சின்ன வெங்காயம் - 10 அல்லது பெரியவெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேற்பிலை- 2 இலைகள்.
ரம்பை இலை – 1 துண்டு
தேங்காய் கட்டிப்பால்- 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
தேசிச்சாறு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - (விரும்பினால்) சிறிதளவு.
செய்முறை –
காயிலுள்ள உயர்ந்த கருக்குகளை சீவி எறிந்து விடுங்கள்.
மேல் தோலை சற்று ஆழமாக சிறிது சதையுடன் சீவி எடுங்கள்(வறை செய்வதற்கு).
உட்பகுதியை எடுத்து துண்டங்களாக வெட்டி வையுங்கள்.
உருளைக்கிழங்கை சிறிய துண்டங்களாக வெட்டி சிறிது நீர் விட்டு உப்புப் போட்டு அவிய விடுங்கள்.
முக்கால் பாகம் வெந்ததும் பீர்க்கங்காய் துண்டுகள்,பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் அவியவிடுங்கள்.
அவிந்ததும் வெட்டிவைத்த வெங்காயம், ரம்பை, கறிவேற்பிலை, தேங்காய்பால் விட்டு சிறிது உப்பு சேர்த்து ஓரு கொதிவர இறக்கிவிடுங்கள்.
எலுமிச்சம் சாறுவிட்டு பிரட்டி எடுத்து வையுங்கள். தேங்காய் பால் வாசத்துடன் எலுமிச்சை வாசமும் சேர்ந்து மணம் கமழும்.
( சாதம், இடியப்பத்துக்கு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். )
வறை (பொரியல்)
தேவையான பொருட்கள்.
வெட்டி வைத்த மேல்தோற் பகுதி.
செத்தல் மிளகாய் - 1
வெங்காயம் - ¼
தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி.
மிளகாய் பொடி – ¼ தேக்கரண்டி.
சீரகப் பொடி - ¼ தேக்கரண்டி.
பூண்டு விழுது – சிறிதளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணைய் - 2 தேக்கரண்டி
கடுகு – சிறிதளவு
உழுத்தம்பருப்பு – சிறிதளவு
கறிவேற்பிலை – சிறிதளவு
செய்முறை –
தோலைக் கழுவி மிகவும் மெல்லிய குறுனல்களாக (பொடியாக) வெட்டிவையுங்கள்.
செத்தல்,வெங்காயம் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
எண்ணையில் கடுகு, உழுத்தம் பருப்பு, செத்தல் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேற்பிலை சேர்த்துக் கிளறுங்கள்.
பொடியாக வெட்டிய காயை கொட்டி உப்பு,மிளகாய் பொடி ,சீரகப்பொடி போட்டுக்கிளறி விடுங்கள்.
அவிவதற்கு சிறிது நீர் தெளித்து அவியவிடுங்கள்.
அவிந்தபின் (கரண்டியால் காயை அமர்த்திப்பார்த்தால் காய் அவிந்தது தெரியும்) தேங்காய் துருவல் கலந்து ஒருநிமிடம் வறுத்து எடுத்து வையுங்கள்.
வறையின் வாசத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குப் பசி வந்துவிடும்.
( காரம் விரும்பாதவர்கள், சிறுவர்களுக்கு மிளகாய் பொடிக்குப் பதில் மஞ்சள் பொடி சேர்த்து வறை செய்யலாம் )