Author Topic: சளைத்தவள் அல்ல  (Read 601 times)

Offline Global Angel

சளைத்தவள் அல்ல
« on: September 28, 2012, 05:33:46 PM »
நீளமாய் ஒரு நீல வானம் 
அதில் பஞ்சன்ன குவியலாய்
அங்கொன்றும் இங்கொன்றும்
அசைந்தோடும் வெண் மேகம் யாரை தேடுதோ ..
வான் நீலமா அன்றில்
வான் வர்ணம் தன்னுள் கொண்ட
கடல் நீலமா எது நீலம் என
எழுந்தாடும் விடையற்ற வினாக் கோலம் ...
ஒன்றன் பின் ஒன்றாய்
வெண்ணுரை தள்ள
காதலியை பின் தொடரும் காதலனாய்
வேற்றுமை தெரியாத வெள்ளலைகள்
வேகமாய் வந்து வெறும் தரையை தொடும் போதெல்லாம்
முடிவில்லாத அதன் கரை காதலும்
முயற்சி தேயாத அதன் முயல்வுகளும்
முழுவதாய் நெஞ்சில் படியுமா ...?

கடல் கரை நுழைந்தாடும்
கன்னியர் தம்
மனம் நுழைந்தாட விளைந்து
கரை தாண்ட முயலும் காளை
கரை சேர்வானா ...?
எதிர் விளைவாய்
ஏக்கத்தை பரிசளிக்கும்
உடலோடு ஓட்டும் நனைந்த ஆடையும்
உப்பு காற்று உரச உல்லாசமாய்
கட்டவிழ்ந்து ஆடும்
கரு நிற கூந்தல் மங்கையரும்
கல கலத்து சிரிக்கும் சத்தம்
கடலின் நிசப்தத்தை களங்கம் செய்வதால் தானோ
கரை மீது அலைகள் காட்டு தனமாய் மோத விளைகின்றன ..?

கடலில் இறங்கி கயல் பிடிக்கும் காளைக்கு
கன்னியர் கயல் விழிக்குள்
தூண்டில் இலாமலே  துவண்டு சிக்கியது
துன்பத்தில் முடிமா .. இன்பத்தில் தொடங்குமா ?

நாலனாக்கு முறுக்கு விக்கும்
நடை தளர்ந்த சிறுவன் பசிக்கு
நாலு முறுக்கு வாங்கி தர
நல் இதயம் ஏதும் இரங்குமா...?

முகம் திருப்பும் காதலிக்கு
முழுதாய் அவளை நம்பவைக்க
முனைந்து  செய்த சத்தியங்கள்
காற்றோடு கலக்குமா ..?

எண்ணிலடங்கா எண்ண வினாக்கள்
எழுந்து நிழலாட ...
நீர் குடையும் என் ஆசை
வெறும் விழி குடைந்தாட
விலகி செல்கிறது ..
யார் சொனார் ...?
கடலும் அலையும் கலங்கும் மனதுக்கு
அமைதியை தருவதாய் ....?
விடை இல்லாத கேள்விகளை
விகுதியாய் மட்டுமே விட்டு செல்கிறது
இந்த கடலும் அலையும் அதன் களிப்புகளும் ..
நாளையும் வருவேன்
நாளை மறுநாளும் வருவேன்
நான் இருக்கும் வரை வருவேன்
அலையே உனக்கு நான் சற்றும் சளைத்தவள் அல்ல ....