உனைக் காண்கையில்
நானெண்ணியதை போன்றெந்த மாறுதலும் நிகழ்ந்ததில்லை
எல்லாமும் அவையவையாகவே இருந்தன
எனைத்தவிர்த்து..
பேசி உன்னோடு போக்கிய பொழுதுகளினூடே
அலுப்பும், சலிப்பும், மௌனமும் குறுக்கிடாமல் இல்லை..
நீ அருகிருந்த தருணங்களிலும்
மற்ற பெண்கள் மேல் பார்வை படராமலிருந்ததில்லை..
முகில் மூடிய மழைகால வானமோ
ஆலமரத்தில் பூக்கும் குயில் பாட்டோ
ஒரு கவிதை புத்தகமோ
உன் நினைவுகளையும் மீறி
என் தனிமைகளை ஆக்ரமிக்காமல் இருந்ததில்லை..
உன்னைவிடவும் அதிகமாய் சிலவற்றை
நான் நேசிக்காமலில்லை
என்றாலும்
எனை ஈர்க்கும் யாவற்றையும் விட
உன் மீதொரு நிரந்தரமான பிடிப்பு
எனக்கில்லாமலும் இல்லை..