பிட்சை வரங்கேட்டேன் தாயிடம்
இச்சையுடன் என்கனவில் வந்தாளே!
லச்சையுடன் அவள்முன் பணிந்து
அச்சமுடன் வரமொன்றுக் கேட்டேனே!
நுட்பமுடன் என்மனக் கருத்தறிந்த
தட்சன்மகள் தாட்சியாயினி முறுவலிக்க
"குப்பைத் தொட்டி"யாய் நான்மாற
சப்பை வரத்தில் சலிப்புற்றாளே!
ஏனிந்த ஏமாறும் எள்ளினகைக்
கனியும் வரமெனக் கேட்டாளே?
நானிந்த உலகில் நாணிக்
குனியும் காட்சியினை விரும்பாமலே!
வாழும் காலமிது கலியுகமடா
வாழும் காலனின் காலமடா
தாழும் கேவலம் உனக்கேனடா
வீழும் மனிதருக்காய் வீழாதே?
தாயின் கேள்விக்கணைத் தாக்கிட
நாயின் கடையேனும் கலங்காமல்
தாயிடம் கேட்டவரம் தயங்காமல்
தாவென தாள்பணிந்து சரணடைந்தேனே!
குப்பைத் தொட்டி வரத்திலே
சப்புக் கொட்டும் சபலமேனடா?
இப்புவி இன்பமும் பல இருக்க
அப்புவி அமுதமும் வேண்டாமோ?
அன்னையே!அகில நாயகியே!
உன்னையே தொழு மெனக்கு
பின்னை என்று சொல்லாமல்
உன்னிய வரமே வேண்டுமே!
தேக்கிய நோக்கம் கக்கிடு
பாக்கிய வரமதைத் தருவேன்
நோக்கிய எண்ணம் விளம்பிடு
ஊக்கிய உன்வரம் உனக்களிப்பனே!
மானிட வாழ்வில் மானுடமில்லை
தானுயர தகாதன செய்யும்
கூன்னிமிர குப்பைக் கூளங்களை
நான்பெற அவர்நிலை உயருமே!
சத்திய உலகில் சாதிக்க
நிததிய விரதம் நிலைக்கணுமே!
முத்தியக் கலியில் சாதிக்க
சுத்தமொரு வினாழிகை போதுமே!
இருபத்தி நான்கு நொடித்துளி
விருப்பத்தில் இருந்தால் வருகின்ற
கருப்பைப் பிறவிக் கழியுமே
மறுப்பும் உண்டோ மங்கலமே?
அலையும் அன்பர்கள் அந்தொரு
நாழிகைக்கு ஒதுக்கல் நடக்குமோ?
உலைக்குள் நெருப்பென ஓடிடும்
நிலையில் சாத்தியமோ சத்தியமே!
புத்திளம் மக்களின் மன்க்களை
வித்துக்களை வீசிடும் இடமே
இத்தொட்டி! கைத்தட்டி அவருக்கு
அத்தொட்டி அளிக்குமே தூய்மையினை!
தூய்மையில் நிலைக்கும் மனதில்
தாயுமை நினைத்தொரு வினாழிகை
ஆய்வினை நடத்தத் தியான
வாய்வினை அடக்கக் கொடுப்பேனே!
சித்தனும் புத்தனும் சாதிக்காத
வித்தகம் புரிந்திட விழையும்
பித்தனே! எத்தனை முயலினும்
உத்தம உன்னெண்ணம் ஈடுறுமோ?
உன்மனக் குறையும் நீங்கிட
உன்மன வரத்தினை தந்திட்டேன்
என்மனக் கருத்தில் காண்பது
உன்மன விருப்பம் வீணே!
- Dhanalaksmanan