பிரபலமான பல்துறை மருத்துவமனை அது
நிறைமாத கர்ப்பிணி அடிவயிறு தாங்கி நகர்கிறாள்
ஒரு முதியவர் முனகிக் கொண்டிருக்கிறார்
ஒரு குழந்தை வீறிட்டழுகிறது
மருத்துவமனையின் “ட” வடிவ சுவரின்
ஒரு பக்கம் அவன், மறுபக்கம் அவள்
அருகருகே கைகள் இருந்தும்
இதயங்கள் தொடமுடியாத தூரத்தில்...
உடையும், அணிந்திருக்கும் நகையும்
பாதம் பதித்திருக்கும் காலணியும்
வைத்திருக்கும் பையும் அவர்களின்
பணக்காரத்தனத்தினை பட்டியலிடுகிறது...
அவள் அடிக்கடி கண் சுருக்குவதிலும்
பல் கடிப்பதிலும், தலையை சுவற்றில் சாய்ப்பதிலும்
வேதனையை துல்லியத்திற்கும் சற்று மேலாக
வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்...
அவன் அடிக்கடி அதிரும் அலைபேசிக்கு
நீளமாய் சிரித்து பேசுவதிலும்
கடந்து செல்லும் பெண்களை கவனிப்பதிலும்
இவளின் வலியை முற்றிலும் மறந்திருக்கிறான்...
வாழ்க்கை தண்டவாளமாய் நீண்டிருக்கிறது
இருபக்கமும் உறுதியான பிடிமானத்தோடு
இணையாக போய்க்கொண்டே
இணையும் புள்ளி தெரியாமல்...