விரல் நுனிவரை வழிந்த கவிதையொன்றை
எழுதும் முன் எங்கோ தொலைத்துவிட்டேன்
தொலைத்த கவிதையை அங்கிங்கென
அலைந்து திரிந்து தேடிச்சலித்தும்விட்டேன்
தொட்டிலில் உறக்கத்தில் சிரிக்கும்
உங்கள் பக்கத்து வீட்டு மழலையின்
நெற்றியில் பூத்து நிற்கும்
வியர்வைத் துளிகளுக்குள் இருக்கலாம்
சிறகொடிந்து சிறைப்பட்டு
சில நெல்மணிகளுக்காக
சீட்டெடுக்க மட்டும் விடுதலையாகும்
ஒரு அடிமைக் கிளியிடம் இருக்கலாம்
ஒவ்வொரு சீண்டலுக்கும்
வெட்கப்பூ பூக்கும் உங்கள்
காதலியின் வியர்வையில் கசங்கிய
கைக்குட்டைக்குள் இருக்கலாம்
சமிக்ஞைகளில் சட்டை பிடித்திழுத்து
வறண்ட தலையோடு கை நீட்டும்
அழுக்கு அப்பிய குழந்தையின்
களைத்த கண்களுக்குள் இருக்கலாம்
சடசடவென அடிக்கும் மத்தியான மழைக்கு
அடி மரத்தோரம் அணைந்து கிடக்கும்
சாலையோர இளநீர்க்கடைப் பெண்ணின்
வறண்ட விழிகளில் இருக்கலாம்
இழுத்துச் செருகிய சேலையோடு
பரபரப்பாய் வீதியைத் தட்டியெழுப்பும்
எதிர் வீட்டுப்பெண்ணின்
ஈரக் கொலுசில் இருக்கலாம்
பருவம் தப்பிய மழைக்கு
வாடிய பயிரோடு வதங்கிய மனதோடு
அல்லாடும் விவசாயிகளின்
விலா எலும்புகளில் இருக்கலாம்
அதிசயமாய் எப்போதும்
அழகாய் மட்டும் தெரியும்
இன்னொருவன் மனைவியின்
இடுப்பு மடிப்புகளில் இருக்கலாம்
சமிக்ஞையில் சிவப்பு பூத்தும்
சீறித் தாண்டுபவனின்
முதுகைச் சுட்டெரிக்கும்
உங்கள் விழிகளில் இருக்கலாம்
கரைவேட்டி தரைபுரளத்
தலைவன் புகழ்மட்டும் பாடும்
ஒரு பச்சோந்தியின்
பழைய நிறத்தில் இருக்கலாம்
கொஞ்சம் விசாலமாய்த் தேடிப்பாருங்கள்
கிடைத்தால் எழுதிவிட்டுச் சொல்லுங்கள்
வாசித்து விட்டுப்போகிறேன்
உங்கள் கவிதையாகவே!!!
எழுதியது ஈரோடு கதிர்