மல்டி பருப்பு சாம்பார்
தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப், ஏதாவது ஒரு காய் (நறுக்கியது) – ஒரு கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, தக்காளி – 2, வெங்காயம் – 1, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – கால் டீஸ்பூன், பெருங்காயம் – தேவையான அளவு, உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா – ஒன்றரை டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும்… துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பாதி பதத்தில் வெந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்கறி சேர்த்துக் குழைய வேகவிடவும். பிறகு, புளிக் கரைசல் விட்டுக் கலந்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும். பெருங்காயம், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி இறக்கவும்.
இந்த சாம்பார்… சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது.