அழகான என் கிராமம்,
அன்பான என் அன்னைமடி
எப்பொழுதும் மனப்பரப்பில்
தவழும் என் ஞாபகங்கள்
மயிலிறகாய் வருடும்
மழலை பருவ நினைவுகள்
நினைவுகளைக் கூட
மீட்ட முடியா நிகழ்காலம்
திரும்பிப்பார்க்க நேருகின்ற
தருணங்களில்-வாழ்க்கை
இனிதாகத்தான் இருக்கும்
நிகழ்காலம் மட்டும் தான்
எரிதணலாய் தகிக்கும்
பயணமது புறப்பட்ட பின்னும்
கையசைத்து வழியனுப்ப மனமின்றி
தவிக்கும் காதலியாய்
என் கடந்த கால நினைவுகள்
சுழலும் மின் விசிறியாய்
கழியும் என் வாழ்க்கை
அம்மிக்கல்லாய்
அடிக்கடி
வருடப்படும் நினைவுகள்
காலத்தின் சுழற்சியில்
நதியாய் என் வாழ்க்கை
எங்கே போகும்?
எப்போது முடியும்?
எதுவுமே நானறியேன்..
எட்டுத் திசைகளில்
எந்தத்திசையில் என் பயணம்?
தென்படும் என் திசைகளில
எனக்கான எதிர்காலம் எங்கே?
எப்படியிருக்கும்
வாழ்க்கைப் பயணத்தில்
என் நாளைய பொழுது
எனக்குள்
ஆயிரம் வினாக்கள்
விடை தரத்தான்
யாருமில்லை இங்கு