திருமண ரேகை :
திருமண ரேகை புதன் மேட்டில் நேராக வளைவு நெளிவுகளின் குறுக்கு வசத்தில் பளிச்சென்று தெளிவாக காணப்படும் அமைப்பு பெற்றவர்களின் திருமண வாழ்க்கை எல்லா வளங்களும் பொருந்தியதாக சிறப்புடன் இருக்கும். தம்பதியினரிடையே அன்பும் ஒற்றுமையும் எப்போதும் நீடிக்கும். அவர்கள் எதிர்பார்த்தபடி அழகும், லட்சணமும் பொருந்திய வாழ்க்கைத் துணை கிடைக்கும்.
ஆணின் கையில் இரண்டு திருமண ரேகை இருந்தால் இரண்டு தாரமும், மூன்று திருமண ரேகை இருந்தால் மூன்று தாரமும் அமையும். ஒருவரின் கையால் எத்தனை திருமண ரேகைகள் இருக்கிறதோ அத்தனை மனைவிகள் வாய்ப்பர் என்று கைரேகை சாஸ்திரம் கூறுகிறது. உள்ளங்கையில் சுக்கிரம மேடு உருண்டு திரண்டு பருத்து சிவந்து ரோஜா நிறத்துடனும், அழகிய தோற்றத்துடனும் அசுபக் குறிகள் இன்றி, சுத்தமான சுபக்குறிகளுடன் காணப்பட்டால் படித்த பண்புள்ள, உத்தியோகச் சிறப்புடைய செல்வ வளத்துடன் கூடிய மனைவி அமைவாள். இவர்களின் திருமண வாழ்க்கை சுபீட்சமாக இருக்கும். எல்லா சுகங்களும் பெற்ற வாழ்வார்கள். திருமண ரேசை சூரிய மேடு வரை வந்து சூரிய ரேகையில் இணைந்திருந்தால் மனைவியின் உதவியாலும், ஆலோசனையினாலும் பதவி பலமும், புகழும் ஏற்படும்.
திருமண ரேகை சனி மேடு வரை வந்து விதி ரேகையில் இணைந்தால் மனைவி மூலம் பொருள் பதவிகள் துணை ஏற்பட்டு தொழில் வளப்படும். திருமணத் தடைகள் ஆரம்பத்தில் இருந்தாலும் வசதியுள்ள மனைவி வாய்ப்பாள். குருமேட்டில் இதய ரேகை கிளையாக இருந்தால் இரண்டு மனைவிகள் அமைய வாய்ப்புண்டு. குருமேட்டில் பெருக்கல் குறி, சதுரக்குறி இருந்தாலும் மனைவி வகையில் செல்வம் குவியும்.