ஆறு வருஷம் தவமிருந்தேன்,
அரசாள நீ பொறந்த.
மா தவத்தால பொறந்ததால,
மாதவன்னு பேரு வெச்சேன்.
தகப்பனே தெரியாம,
தனியாத்தான் நீ வளந்த.
தாயான எனக்குள்ள,
உசுராத்தான் நீ நொழஞ்ச.
சிப்பிக்குள் முத்தாக என்
கருவறையில் நீ உதிச்ச,
அனாதையா இருந்தவளுக்கு
அரவணைப்பா நீ சிரிச்ச.
எந்த திசை போனாலும்
நிலவைப்போல நீ ஜோலிச்ச,
ஊருமக்கா எல்லோரையும்
உன் சிரிப்பால நீ கவுத்த.
ஒரு நிமிஷம் பிரிஞ்சாலும்
யுகமாத்தான் எனக்கிருக்க,
எனப்பிரிஞ்சு பட்டணம் போய்
கம்ப்யூட்டர் நீ படிச்ச.
உனக்கிருக்கும் திறமைக்கு
வெளிநாடு நீ போக
மனசார அனுப்பி வெச்சேன்,
....................................................
என் மகனே..............................
...................................................
பொணமாத்தான் திரும்பி வந்த.
பூப் போல மனசுனக்கு உன்ன
பூகம்பம் விழுங்கியதோ.
கல் நெஞ்சுக் கடவுளவன்
எனை விட்டு உன்னை எடுத்தானே.
சோறூட்ட நா வேணும்,
தலை துவட்ட நா வேணும்,
எனை அங்கு காணாமல்,
துயரேதும் உண்டோடா.
மனச்சார செத்துட்டேன்,
ஒரு நாழி பொறுத்துக்கோ
துணைக்கங்கு நா வாரேன்,
..... என் உசுரே....