கனமாய், காதலாய், வலியாய்
சினமாய், மணமாய், காமமாய்
கலந்தடிக்கும் உணர்வுகளோடு
உனக்கான எழுத்துகளைத் தேடுகிறேன்
எண்ணத்தின் இண்டு இடுக்குகளில்
சிக்கிக் தவிக்கும் எழுத்துகளை
மீட்டெடுத்து வருகிறேன் உன்போல்
அழகாய் ஒரு வாக்கியம் எழுத
இலகுவாய் கோர்த்தெடுக்கிறேன்
மிகக் கச்சிதமாய் சில நேரங்களில்
இணைய மறுக்கின்றன சிலமுறை
என்னதான் போராடினாலும்
எப்படியோ எழுதி முடிக்கிறேன் உனக்காக
எனக்குப் பிடித்த ஒரு கவிதையை,
கால் கடுக்க நடந்த கடும் வெயிலில்
கண்ட வேம்பு நிழலின் சுகமாய்
உன்னிடம் வாசிக்க ஓடோடி வந்து
உன்முகம் பார்க்கும் போது ஏனோ
உதிர்ந்து போகிறது ஒவ்வொரு எழுத்தும்
எனக்காய் கவிதை சிந்தும் உன் புன்னகைக்கு முன்
எழுதியது ஈரோடு கதிர்