விதி உந்தன் அடியில் தோழா!
முடியும் முடியும் என்றிரு தோழா - எதுவும்
முடியும் விடாதே முயன்றால் தோழா
விடியும் விடியும் ஓர்நாள் விடியும் - தோழா
விழவிழ எழுந்தால் உன்னால் முடியும்!
இடியும் மழையும் இணைந்தே வரினும் - உன்
இதயம் மட்டும் இரும்பா கட்டும்
குழிதேடி ஓடும் தண்ணீர் போல - உன்
குறியொன்றாய் என்றும் இருக்கட்டும் தோழா!!
ஒன்றே நினைவு அது வென்றிடும் கனவு
என்றே இருந்திடு அதில் வெறியாய் இருந்திடு
கொன்றிடு வேண்டா எண்ணத்தை தோழா - என்றும்
எண்ணிடு உன் கொள்கைக் கேற்றதை தோழா!!
பழிப்பவன் அரமென உனை தீட்டிடு அதிலே
வலிமை உரத்தை நெஞ்சில் ஏற்றிடு தோழா
உளி கண்டு நீயும் களிகொள்ளு தோழா - அதனால்
பொலிவாய் நீதான் அழகு சிலையாய் தோழா!
புலரும் பொழுதில் ஒவ்வொரு நொடியும்
உயர்ந்திட நீயும் முயன்றிடு தோழா - கண்
அயர்ந்திட நீயும் மறந்திடு தோழா - உன்
காரியமதிலே கண்ணாய் இருந்திடு தோழா!!
கதிரவன் கூட உனைக்கண்டு வியப்பான்
இரவும் பகலும் உன்புகழ் ஒளிர்வதைக் கண்டு - எல்லாம்
விதி என்ற சொல்லை வென்றவனென்று - அந்த
விதி கூட உந்தன் துதிபாடும் தோழா!!!
written by sme one