சாத்தானுக்கான புன்னகைகள்
எல்லாவற்றையும் விலக்கிய
சாத்தானை அந்த இரவில்
சந்தித்தேன்
அடுத்த கோப்பையை
பருகுவதற்கு முன்பான
இடைவெளியில்
புகை கமற
புன்னகைப்பதைத் தவிர
எனக்கு வேறு வழியிருக்கவில்லை.
என்
அதி உன்னதங்கள் குறித்த
பகடிகளைப் பகிர்ந்தான்
புன்னகைப்பதைத் தவிர
எனக்கு வேறு வழியிருக்கவில்லை
காலக்கெடு முடிந்துவிட்டிருந்த
என் தத்துவங்கள்
குப்பைக்குப் போகவேண்டியவை என்றான்
புன்னகைப்பதைத் தவிர
எனக்கு வேறு வழியிருக்கவில்லை
நீர்த்துப்போன என் கனவுகளை
விலக்கிவைப்பது நல்லது என்றான்
புன்னகைப்பதைத் தவிர
எனக்கு வேறு வழியிருக்கவில்லை
எல்லாம் முடிந்து
கிளம்பும்போது
நான் வாழ்ந்து கொண்டிருப்பது
வேறுபெயர்களில் அவன் பிம்பங்களைத்தான்
என்பதைச் சொன்னேன்
புன்னகைப்பதைத் தவிர
அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை.