முதலில் தாய்க்கும் அடுத்து தந்தைக்கும் உபகாரம் செய்வார்
பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யும் உபகாரத்தில் சமநிலையை தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இஸ்லாம் இருவருக்கும் ஏற்றவாறும் தாய்க்கெனத் தனியாகவும் தந்தைக்கெனத் தனியாகவும் அழகிய வழிகாட்டுதல்களை அளித்திருக்கிறது.
தன்னிடம் ஜிஹாது செய்வதற்கான அனுமதி கேட்டவரிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உன் பெற்றோரில் இருவராவது உயிருடன் இருக்கிறாரா? என்று கேட்டதிலிருந்து "அவ்விருவரும் சமமாக கவனிக்கத் தகுந்தவர்களே; இருவருக்குமே உபகாரம் செய்வது கடமை' என தெரியவருகிறது.
அவ்வாறே அஸ்மா (ரழி) அவர்களை இணைவைக்கும் தாயுடன் இணக்கமாக இருக்க நபி (ஸல்) உத்தரவிட்டதையும் கண்டோம். நபி (ஸல்) அவர்களிடம் இருவர் "இறைத்தூதரே! நான் அழகிய முறையில் நடந்துகொள்ள மிகவும் தகுதியானவர் யார்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ""உமது தாய்'' என்றார்கள். "பிறகு யார்'' என்று கேட்டார். "உமது தாய்'' என்றார்கள். "பிறகு யார்'' என்று கேட்டார். "உமது தந்தை'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இந்த நபிமொழிகளில் நபி (ஸல்) அவர்கள் தந்தைக்கு உபகாரம் செய்வதைவிட தாயின் உபகாரத்திற்கு முதன்மை அளித்துள்ளார்கள். இதையே நபி (ஸல்) அவர்களுக்குப்பின் நபித்தோழர்களும் வலியுறுத்தினார்கள்.
தலைசிறந்த மேதையான இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் தாய்க்கு உபகாரம் செய்வதை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யும் நற்செயலாகக் கருதினார்கள். அவர்களிடம் இரு மனிதர், "நான் ஒரு பெண்ணை மணமுடிக்க விரும்பினேன், அவள் மறுத்து விட்டாள். மற்றொருவர் விரும்பியபோது அவள் சம்மதித்து விட்டாள். இதனால் ரோஷம் கொண்ட நான் அவளைக் கொலை செய்துவிட்டேன். எனக்கு எதேனும் பரிகாரம் உண்டா?'' என்று கேட்டார். இப்னு அப்பாஸ் (ரழி) "உமக்கு தாய் இருக்கிறார?'' என்று கேட்டார்கள். அவர் "இல்லை'' என்றார். "அல்லாஹ்விடம் தெªபா செய்து, முடிந்தளவு அல்லாஹ்வின் நெருக்கத்தை தேடிக்கொள்'' என்றார்கள்.
இதை அறிவித்த அதா இப்னு யஸார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் "ஏன் அவரது தாய் உயிருடன் இருக்கிறாரா என வினவினீர்கள்?'' என்று கேட்டேன். அவர்கள் "அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக ஆவதற்கு தாய்க்கு உபகாரம் செய்வதைவிட சிறந்த அமல் எதையும் நான் அறியவில்லை.'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது அல் அதபுல் முஃப்ரத் என்ற நூலில் "தந்தைக்கு உபகாரம் செய்வது' என்ற தலைப்பைவிட "தாய்க்கு உபகாரம் செய்வது' என்ற தலைப்பை முற்படுத்தி நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை உறுதிபடுத்தினார்கள்.
அல்குர்அன் மக்களின் இதயங்களில் பெற்றோருக்கு உபகாரம் செய்யும் உணர்வை வளர்க்கிறது. அதிலும் குறிப்பாக தாய்க்கு உபகாரம் செய்யவேண்டுமென்று வலியுறுத்துகிறது. கர்ப்பம், பாலூட்டல் என்ற இந்த இரண்டு நிலைகளும் அவளது வாழ்வின் மிகச்சிரமமான காலகட்டமாக இருப்பதால் தாயின் அந்தஸ்தை முன்னிலைப்படுத்தி அவளிடம் மிக மென்மையாக நடந்து கொள்ளுமாறு உத்தரவிடுகிறது.
தமது தாய் தந்தை(க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகு இரண்டு வருடங்களுக்குப் பின்னரே அவனுக்குப்பால் மறக்கடித்தாள். (ஆகவே மனிதனே!) எனக்கும் உனது தாய் தந்தைக்கும் நன்றி செலுத்தி வா. (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (அல்குர்அன் 31:14)
எத்தனை அற்புதமான போதனை! மனித நேயத்தின் எத்தகு அபூர்வமான கண்ணோட்டம்! (நீ எனக்கும் உனது தாய் தந்தைக்கும் நன்றி செலுத்திவா) மகன் பெற்றோருக்கு செய்யவேண்டிய நன்றியை அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய நன்றியின் தொடர்ச்சியாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நன்றி, நற்செயல்கள் அனைத்திலும் தலையாயதாகும். இந்த மார்க்கம் பெற்றோருக்கு எவ்வளவு உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது என்பதைப் பாருங்கள்!
பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வசதிகள் ஏற்பட்டு, செல்வச் செழிப்பும் உண்டாகி, அழகிய மனைவியும் அன்பு குழந்தையும் அவனை அதிகம் கவர்ந்து, பெற்றோருக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்திலிருந்து அவனை விலக்கிவிடலாம். தந்தையையும் அவர் அவனுக்காகச் செய்த செலவுகளையும் மறந்து, அவருக்கு உதவி செய்யாமல் கரங்களை மடக்கிக்கொண்டவன் அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகிறான்.
ஆனால் உண்மை முஸ்லிம் இது அனைத்திலிருந்தும் விலகி இருப்பார். ஏனெனில், அவர் எல்லாக் காலங்களிலும் ஞானமிக்க, இஸ்லாமின் உயரிய கண்ணோட்டத்தை கொண்டிருப்பவர். அவர் நபி (ஸல்) அவர்கள் கூறிய "நீயும், உனது செல்வங்களும் உனது தந்தைக்குரியது' (முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபூதாவூத்) என்ற உயரிய வழிகாட்டுதலை அறிந்திருப்பார்.
இந்த நபிமொழி முஸ்லிமின் இதயத்தில் பதிந்து, பெற்றோருடன் தாராளமாக நடந்துகொள்ள அவரை தூண்டுகிறது. அதனால் அவர் செலவு செய்யாமல் கையை சுருக்கிக்கொண்டு தந்தைக்கு நோவினை தருவதிலிருந்தும், தந்தையை சிரமப்படுத்துவதிலிருந்தும் விலகி இருப்பார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதுபோல அவர் தன்னையும் தனது செல்வங்களையும் தந்தைக்கு உரிமையாக்கி விடுவார்.
பெற்றோரின் நண்பர்களுக்கும் உபகாரம் செய்வார்
பெற்றோருக்கு உபகாரம் செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அவர்களால் நேசிக்கப்பட்டவர்களிடமும் தூய்மையான அன்பை வெளிப்படுத்த வேண்டுமென மார்க்கம் கட்டளையிடுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""உபகாரத்திலெல்லாம் மிகப்பெரிய உபகாரம் ஒருவர் தமது தந்தையின் நேசத்திற்குரியவரையும் நேசிப்பதாகும்.'' மற்றோர் அறிவிப்பில், "நிச்சயமாக உபகாரத்திலெல்லாம் மிகப்பெரிய உபகாரம் ஒருவர் தமது தந்தை நேசித்தவரை, தந்தையின் மரணத்திற்குப் பிறகும் நேசிப்பது'' என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் தமது தந்தை உமர் (ரழி) அவர்களுடைய தோழர் இருவரை சந்திக்க நேரிட்டது. அவருக்கு அதிக மரியாதையும் உபகாரமும் செய்தார்கள். இப்னு உமர் (ரழி) அவர்களிடம் உடனிருந்தவர் இம்மனிதருக்கு இரண்டு திர்ஹ்ம் கொடுத்திருந்தால் போதுமாகாதா? என்று கேட்டார். இப்னு உமர் (ரழி) அவர்கள் ""உன் தந்தையின் நண்பர்களை பேணிக்கொள்; அவர்களது உறவை துண்டித்து விடாதே; அப்படி துண்டித்தால் அல்லாஹ் உனது பிரகாசத்தை அணைத்துவிடுவான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
இரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! எனது பெற்றோர்களுக்குரிய உபகாரங்களில் அவர்கள் மரணமடைந்த பிறகும் நான் அவர்களுக்கு செய்யவேண்டிய உபகாரம் எதேனு மிருக்கிறதா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "ஆம்! நான்கு விஷயங்கள் உள்ளன. 1) அவர்களுக்கு துஆ செய்வது அவ்விருவருக்காகவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவது 2) அவர்கள் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுவது 3) அவர்களது நண்பர்களை கண்ணியப்படுத்துவது 4) இரத்த பந்துக்களுடன் இணைந்திருத்தல். இரத்த பந்தம் என்ற உறவுமுறை அவ்விருவரின் மூலமே தவிர எற்பட முடியாது'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)
பெற்றோருக்கு கண்ணியம், உபகாரம், நேசம் கொள்வதின் உன்னதமான அம்சம் என்னவெனில் பிள்ளைகள் தமது பெற்றோர்கள் இருக்கும்போதும் இறந்த பின்னும் அவர்களுடைய தோழர்களுடன் இணைந்திருக்கவேண்டும் என்பதுதான். உண்மை முஸ்லிம் அவ்விருவரின் தோழர்களோடு தோழமையையும் அன்பையும் எல்லா நிலையிலும் உறுதிப்படுத்திக் கொள்வார். பெற்றோரின் மரணத்திற்குப் பின்னும் அவர்களின் பழமையான நட்பை மறந்து விடமாட்டார். தனது அன்பிற்குரிய பெற்றோர் அமைத்துக் கொண்ட நட்பை துண்டித்து விடமாட்டார். இவ்வாறான மனிதநேய வெளிப்பாடுகளும் தூய நேசமும் வாழ்வை அழகுபடுத்தி மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. இவையனைத்தும் இவ்வுலகில் உண்மையான முஸ்லிம்களால் மட்டுமே எற்படும் நன்மையாகும்.
மேற்கத்திய நாடுகளில் குழந்தைகள் வளர்ந்து சுயமாக இயங்க ஆரம்பித்துவிட்டால் தங்களது பெற்றோரிடமிருந்து பிரிந்து, பிள்ளை என்ற உறவை முற்றிலும் சிதைத்து விடுகின்றனர். அதன் பிறகு அவர்களுக்கு பெற்றோருடன் சந்திப்பே எற்படுவதில்லை. அவர்களிடையே அன்பும், பாசமும் காணப்படுவதில்லை. அவர்கள் தனிப்பாதைகளை அமைத்துக் கொள்கின்றனர். வயது முதிர்ந்து பலவீனமடைந்துவிட்டபின் தம் மக்களிடம் உபகாரம், அன்பு போன்ற எவ்விதமான நற்பண்புகளையும் பெற்றோர்கள் எதிர்பார்க்க முடியாது. ஆனால் பெற்றோர்களோ இதே மக்களுக்காக வாழ்நாள் முழுவதிலும் தங்களது ஆற்றல்களை செலவு செய்தார்கள்.
மேற்கத்திய நாடுகளில் மக்கள் தமது பெற்றோருக்கு செய்யும் வேதனையும், கடினசித்தத்துடன் நடந்துகொள்ளும் மனிதத் தன்மையற்ற செயல்பாடுகள் எங்கே! முஸ்லிம் தனது பெற்றோர் மீது காட்டும் பாசமும் உபகாரமும், இன்னும் அவர்களது மரணத்திற்குப் பின்னும் அவர்களுடைய உறவினர் மீதும் காட்டும் அன்பும் பரிவும் எங்கே! இவ்விரண்டிற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடுகள் உள்ளன! ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் தனித்தன்மை வாய்ந்த தெளிவான இலக்கைக் கொண்ட இஸ்லாம் மட்டுமே மனிதநேயத்தை உறுதிப்படுத்தி, மனிதகுலத்தை கண்ணியப்படுத்த முடியும். இந்த இலக்கை வேறெந்த சட்ட அமைப்பும் நெருங்க முடியாது.
பெற்றோருக்கு உபகாரம் செய்யும் முறை
பெற்றோருக்கு உபகாரம் செய்வதை கடமையாகக் கொண்ட முஸ்லிம் மிக அழகிய முறையில் கெªரவத்துடன் அவர்களை அரவணைத்துக் கொள்ளவேண்டும். அவரிடம் பெற்றோர் வந்தால் எழுந்து நிற்க வேண்டும். அவர்களது கரங்களைப் பற்றி முத்தமிட வேண்டும். அவ்விருவருக்கும் மரியாதை செய்யும் விதமாக அவர்களுக்கு முன் மிக மென்மையாகப் பேசவேண்டும். புஜங்களைத் தாழ்த்தி இனிமையாகவும் மரியாதையுடனும் உரையாட வேண்டும். அவர்களுடன் பேசும்போது உள்ளத்தில் காயத்தை உண்டாக்கும் கடுமையான வார்த்தைகளை எந்நிலையிலும் பேசிடக்கூடாது. அவர்களது கெªரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் அவர்களது முன்னிலையில் செய்திடக்கூடாது. எப்போதும் பின்வரும் வசனத்தை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.
(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடம் முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம். அவர்களை (நிந்தனையாகச்) "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக (வும் அன்பாக)வுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து போஷித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)
சில சமயங்களில் பெற்றோர் நேர்வழியிலிருந்து விலகியிருக்கலாம். இவ்வாறான சூழ்நிலையிலும் உபகாரியான முஸ்லிம் தனது பெற்றோரிடம் மென்மையாகவும் கண்ணியமாகவும் நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் நிலைத்திருக்கும் தவறான கொள்கையிலிருந்து அவர்களை அகற்றுவதற்காக கடினமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மென்மையாக நடந்துகொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் அவர்களது கவனம் சத்திய மார்க்கத்தின்பால் திரும்புவதற்குக் காரணமாக அமையும். பலமான ஆதாரங்களின் மூலமாக, நுட்பமாகவும் அறிவுப்பூர்வமாகவும் அவர்களை திருப்திபடுத்தி, நேர்வழியின்பால் திருப்ப முயற்சித்துக் கொண்டே இருக்கவேண்டும்.
முஸ்லிம் தனது பெற்றோர் இணை வைப்பவர்களாக இருப்பினும் அவர்களுடன் நல்லுறவைப் பேணவேண்டும். இணைவைத்தல் என்பது மகத்தான குற்றம் என்பதை உறுதிகொள்வதுடன் அவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்திட வேண்டும்.
தமது தாய் தந்தைக்கு நன்றி செய்வதுபற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள் (அகவே, மனிதனே!) நீ எனக்கும் உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்திவா. (முடிவில் நீ), என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது.
எனினும் (இறைவன் என்று) நீ அறியாததை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம். ஆயினும் இவ்வுலகத்தில் (நன்மையான காரியங்களில்) நீ அவ்விருவருடனும் அன்புடன் ஒத்துவாழ். (எவ்விஷயத்திலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியை நீ பின்பற்றி நடந்துவா. பின்னர் நீங்கள் (யாவரும் என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கின்றது. நீங்கள் செய்துகொண்டிருந்த வைகளைப் பற்றி (அது சமயம்) நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன். (அல்குர்அன் 31:14,15)
தாய் தந்தையர் மனித உறவுகளில் மிக நெருக்கமானவர்கள், நேசிக்கப்படுவதற்கு முதல் தகுதி பெற்றவர்கள். எனினும் அவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கொள்கைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்குப் பிறகுதான். அவர்கள் இணைவைப்பவர்களாக இருந்து மகனையும் அதற்குத் தூண்டினால் அவர்களுக்கு கட்டுப்படக்கூடாது. ஏனெனில் "படைத்தவனுக்கு முரணாக படைப்பினங்களுக்கு வழிப்படுதல்' என்பது இஸ்லாமில் இல்லை. கொள்கை கோட்பாடு என்பது மற்றெந்த உறவுகளை விடவும் உயர்ந்தது. கொள்கை சார்ந்த கட்டளை ஏனைய கட்டளைகளைவிட மேலானதாகும். இருப்பினும் பெற்றோருக்கு செய்யும் உதவியும், உபகாரமும், பராமரிப்பும் பிள்ளைகளிடமிருந்து தடையின்றி தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.
உண்மை முஸ்லிம் எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து, பெற்றோருக்கு உபகாரம் செய்து, இயன்றளவு அவர்களுக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும். அவர்களுக்கு உபகாரமாகவும், மரியாதையுடனும் நடந்துகொள்வதுடன் சிறந்த உணவு, அடை, இருப்பிடம் போன்ற ஏற்பாடுகளையும் செய்து தரவேண்டும். வாழும் சூழலுக்கும், சமூகச் சூழலுக்கும் ஏற்றவகையில் மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக அழகிய வார்த்தைகளை உபயோகிப்பதும், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களை முன்னோக்குவதும், அவர்கள் செய்த உபகாரத்தை எண்ணி உள்ளத்தால் அவர்களை நேசிப்பதும் மிக முக்கியமானதாகும்.
உண்மை முஸ்லிம் பெற்றோருக்குச் செய்யவேண்டிய உபகாரங்கள் அவர்களுடைய மரணத்துடன் நின்றுவிடாது. மாறாக அவர்களுக்காக தர்மம் செய்வதாலும், அதிகமதிகம் துஆச் செய்வதாலும் அவர்களது மரணத்திற்குப் பிறகும் முஸ்லிமான பிள்ளையின் உபகாரம் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.
அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து போஷித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும், அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:24)
அவை பெற்றோருக்கு உபகாரம் செய்வது பற்றிய இஸ்லாமின் வழிகாட்டுதலாகும். இதன் அடிப்படையில் செயல்படுபவரே நேர்வழி பெற்றவராவார். உலகாதாய வாழ்வில் மூழ்கி, நவீன அநாகரீகத்தால் கண் குருடாகிவிட்ட முஸ்லிம்கள் இத்தகைய நேர்வழியைப் பின்பற்றுகிறார்களா? இன்றைய நமது வாழ்வில் மனைவியும் மக்களும்தான் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளார்கள். இவர்களுக்குப் பிறகுதான் பெற்றோர்களுக்கு உதவிகிட்டுகிறது. பிள்ளைகள் இறையச்சமுடைய நல்லோர்களாக இல்லையென்றால் அப்பிள்ளைகள் மூலம் சிறிதளவு உதவி, உபகாரம்கூட அப்பெற்றோருக்கு கிடைப்பது அரிதாகி விடுகிறது.
நவீன நாகரீகம் என்ற மேற்கத்திய சமூக அமைப்பு பெரும்பாலான முஸ்லிம்களின் இதயங்களை ஆக்கிரமித்துள்ளது. அவர்கள் பெற்றோரைப் பேணுவதிலும், முதுமையில் அவர்களைக் காப்பதிலும் எவ்விதப் பலனும் இல்லையென நினைக்கிறார்கள். இவ்வாறான சிந்தனையுடைய சமூகத்தைச் சார்ந்தவன் தனது மனைவி மக்களைப் பற்றி மட்டுமே கவலை கொள்வான். அதற்கு அப்பால் அவன் சிந்திக்கவும் மாட்டான். அவனை பெற்றெடுத்து வளர்த்தவர்களை நேசத்துடனும் நீதத்துடனும் அணுகமாட்டான்.
ஆனால் அவனது பெற்றோர்களோ அவனை வளர்ப்பதற்காக பல இரவுகள் தூங்காமல் கழித்திருப்பார்கள். வாழ்வை எதிர்கொள்ள அவனைத் தயார் செய்வதில் தங்களது அநேக செல்வங்களை இழந்திருப்பார்கள். அவர்கள் மூலம் அவன் அழகிய வீடு, பெருமைமிகு ஆடைகள், உயர்தர உணவுகள், சுகமான வாகனம் போன்ற வசதிகளை அடைந்து கொண்டபின் அவனது உள்ளம் மனைவி, மக்களிடம் சென்று விடுகிறது. தனது வளங்கள் அனைத்துக்கும் காரணமான பெற்றோரின் பங்கை மறந்துவிடுகிறான். அம்முதியவர்கள் நேசம் மிகுந்த தனது மகனின் கரங்களை பற்றிக்கொள்ளத் துடிக்கிறார்கள். ஆனால் அவனோ பலவீனமான தனது பெற்றோரை உதறித் தள்ளுகிறான்.
பெற்றோருக்கு உபகாரம் செய்வது என்பது கருணையுடன் அவர்களை நோக்குவது, திறந்த மனதுடன் செலவிடுவது, ஆதரவான அழகிய வார்த்தைகளால் உரையாடுவது, மற்றும் நேசம் மிகுந்த புன்னகையாகும். இவைதான் முஸ்லிமின் இயற்கைப் பண்புகளாகும். இவற்றை பெற்றோரிடம் வெளிப்படுத்துவது முஸ்லிமின் கடமையாகும்.
எவ்வளவுதான் வாழ்க்கை சிரமமானாலும், எவ்வளவுதான் வசதி ஏற்பட்டாலும் எவ்வளவுதான் அந்நியக்கலாச்சாரங்கள் ஊடுருவினாலும் முஸ்லிம்கள் இப்பண்புகளை கடைப்பிடிக்கத் தவறக்கூடாது. இந்த நற்குணங்கள் உள்ளங்கள் கல்லாகாமல் பாதுகாக்கின்றன. தற்பெருமை கொண்ட நடத்தையிலிருந்து காப்பாற்றுகின்றன. மனிதநேயம், நன்றி அறிதல் போன்ற தூய அடிப்படைக்கு வழிவகுக்கின்றன. இப்பண்புகளே முஸ்லிம்களுக்கு சுவன வாயில்களைத் திறந்து கொடுக்கின்றன. இப்பண்பில்லாதவர்கள் சுயநலம், செய்நன்றி மறத்தல் என்ற அழிவில் வீழ்ந்து விடுகின்றனர்.